சர்வதேச அளவில் கொரொனாவைரஸ் பரவுகையில் தொற்றுநோய் குறித்த அச்சங்கள் அதிகரிக்கின்றன

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் புதிய COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென வேகமாக அதிகரித்து வருவதால், இவ்வாரயிறுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மணி ஒலித்தனர். இந்த நோயாளிகளில் பலருக்கும், கடந்த டிசம்பரில் ஹூபே மாகாண தலைநகரான வூஹானில் இந்த வைரஸ் நோய்தொற்று தொடங்கிய சீனாவுடன் நோய் தொற்று ஏற்படுவதற்கான தொடர்பு எதுவும் இல்லை என்பதன் மீது உலக சுகாதார அமைப்பும் (WHO) மற்றும் ஏனைய முகமைகளும் கவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் விடையிறுப்பாக, உலகளாவிய பங்குச் சந்தைகள் நேற்று தொடங்கிய போதே வீழ்ச்சி அடைந்தன. டோவ் சந்தை நிறைவடைகையில் 1,000 புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகள் சரிந்திருந்தது. நிக்கி 225 ஆரம்பித்த போதே 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. விமானச் சேவை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்த பங்குகளில் உள்ளடங்கி இருந்தன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 55 டாலருக்கும் சற்று அதிகமான விலையுடன் ஏறத்தாழ 5 சதவீதம் சரிந்தது. வைரஸ் பரவுவதன் தாக்கம் குறித்த அச்சத்தால் தூண்டிவிடப்பட்ட இந்த சந்தை கொந்தளிப்பானது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது மற்றும் யூரோ மண்டல வளர்ச்சி 0.1 சதவீதம் மெதுவானது என்ற கசப்பான பொருளாதார செய்தியின் அடித்தளத்தில் நடந்தது.

2019-nCoV வைரஸ் கடந்த காலத்தில் வைரஸ் துறை நிபுணர்கள் கையாண்ட அனுபவங்களையும் விட இன்னும் அதிக மிகவும் சிக்கலான நுண்ணுயிரியாக நிரூபணமாகி உள்ளது. அது ஏன் இந்தளவுக்குத் தீவிர ஒட்டுண்ணியாக உள்ளது என்பதையும், அந்த வைரஸ் காற்றினூடாகவும், குடிநீர் குழாய்கள், மற்றும் காற்று வெளியேறும் பகுதிகள் மூலமாகவும் நகர்ந்து வருகிறதா என்பதையும் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் இன்னமும் முயன்று வருகிறார்கள். 2003 இல் SARS நோய்தொற்று 10 மாதங்களில் 8,000 மக்களைத் தொற்றியது. இதற்கு மாறாக COVID-19 வெறும் இரண்டே மாதங்களில் 80,000 நபர்களைப் பாதித்துள்ளது—பல நோயாளிகள் கண்டறியப்படாமலும் இருக்கக்கூடும்.

SARS இனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு, பாதிக்கப்பவர்களில் 1 இல் இருந்து 2 சதவீதத்திற்கு இடையே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், COVID-19 இனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அந்த 2003 நோய்தொற்றை விட ஏற்கனவே மும்மடங்கு தாண்டிவிட்டது. இந்த வைரஸின் முதிர்வு காலம் சுமார் 14 நாட்களென மதிப்பிடப்படுகிறது என்றாலும், மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரையில் எந்த அறிகுறியும் இல்லாத நோயாளிகள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில், நோயிலிருந்து குணமானவர்களே கூட தொடர்ந்து அந்த வைரஸை ஏந்திச் சென்று பரப்பி வருகிறார்களோ என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.

முன்னொருபோதும் இல்லாத விதத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலமாகவும், கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள் ஹூபேயிலும் அதைச் சுற்றிய மாகாணங்களிலும் அந்த தொற்றுநோயை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது. திங்களன்று, சீனா எங்கிலும் 509 புதிய நோயாளிகள் குறித்து அறிவிக்கப்பட்டது, அவர்களில் 499 பேர் ஹூபேயில் இருப்பவர்கள். சீனப் பெருநிலத்தில் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று வரையில் 77,658 இல் நிற்கிறது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,663 இல் உள்ளது.

ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்தவாறு, சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகளே உலகிற்குத் தயார் ஆவதற்கான சற்று கால அவகாசத்தை வழங்கியிருந்தது. அந்த கால அவகாசமும் முடிந்து விட்டதாக தெரிகிறது, ஏனெனில் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் நோய்தொற்று வேகமாக தீவிரமடைந்து வருகிறது. COVID-19 ஐ ஓர் உலகளாவிய தொற்றுநோயாக WHO இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்து வரவிருக்கும் நாட்களில் அனேகமாக அது அம்முடிவுக்கு வந்துவிடும் என்றே தெரிகிறது.

ஈரானிய நகரமான கொம்மில் (Qom) ஒரு சட்ட வல்லுனரான அஹ்மத் அமிராபாதி ஃபராஹானி COVID-19 வைரஸால் 12 இறந்துவிட்டதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தை மறுத்ததுடன், குறைந்தபட்சம் 50 நபர்களாவது இறந்திருப்பார்கள் என்றும் 250 இக்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த கொம் நகரம் மதரீதியிலான கல்விகளுக்கான ஒரு மையமாக அறியப்படுவதுடன், ஈரான் மற்றும் சுற்றியுள்ள நாடுகள் எங்கிலும் இருந்து பலரும் படிப்புக்காக அங்கே பயணித்து வருகின்றனர். குவைத், பஹ்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் இப்போது நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர், அத்துடன் உயிரிழந்தவர்கள் ஈரான் நகரமான மஸ்ஹத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். இதையடுத்து துரிதமாக அடுத்தடுத்து, துருக்கி, ஈராக் மற்றும் பாகிஸ்தான் அவற்றின் ஈரான் உடனான எல்லைகளை அடைத்துள்ளன.

ஈரானில் மருத்துவக் கவனிப்புத்துறை தொழிலாளர்களை மிகப்பெரும் தொற்றுநோய் அபாயத்திற்கு உட்படுத்தும் விதத்தில், பாதுகாப்புத் துணைக்கருவிகளை அணுவதிலிருந்து அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மிகப்பெரிய அளவில் ஒரு தொற்றுநோயை முகங்கொடுத்து வருகிறது என்ற கூர்மையான யதார்த்தத்தை எதிர்கொள்ள அந்நகர அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் வெகு குறைவாகவே நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சனங்களும் அங்கே உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேசிய தேர்தல்கள் நடந்தன என்றாலும், இந்த ஒட்டுண்ணி குறித்த அச்சத்தால் வாக்குப்பதிவு கணிசமான அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஈரானின் உயர்மட்ட தலைவர் அயெத்துல்லா அலி காமெனி கொரொனாவைரஸ் அச்சுறுத்தல் சம்பந்தமாக வாஷிங்டனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் அதன் அணுசக்தி திட்டம் சம்பந்தமாக வாஷிங்டனின் முடமாக்கும் தடையாணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது, இது அதன் தேசிய சுகாதார அமைப்புமுறை மீது நாசகரமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுச் சுகாதாரத்திற்கான யேல் பயிலகத்தில் சுகாதாரக் கொள்கை மற்றும் பொருளாதாரத்திற்கான உதவி பேராசிரியர் டாக்டர் சென் ஜி குறிப்பிட்டார்: “தசாப்தங்களாக இந்த தடையாணைகள் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையைத் தீவிரப்படுத்தி உள்ளது. அவர்களின் நோய் கண்டறியும் தொழில்நுட்பங்கள் மிகவும் பின்தங்கி உள்ளன. பயணிகளின் பயண விபரங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதில் சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், பரிசோதனை கருவிகளின் துல்லியத்தன்மையைத் தரமுறைப்படுத்த வேண்டும், மனிதாபிமான உதவிகளை ஈரானுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.”

ஆனால் வாஷிங்டனோ தடையாணைகளை இரட்டிப்பாக்குவதன் மூலமாகவும், “மனிதாபிமான ஆதரவுக்கு” பிரதியீடாக அமெரிக்க கட்டளைகளுக்கு ஈரான் அடிபணிய வேண்டுமென கோருவதன் மூலமாகவும் அந்த தொற்றுநோயை இன்னும் அதிகமாக அரசியல்மயப்படுத்தக்கூடும்.

வடக்கு இத்தாலிய பிரதேசங்களான வெனெடோ மற்றும் லாம்பேர்ட் இந்த வைரஸ் இக்கான விளைநிலமாக மாறியுள்ளன, இப்போது 10 நகரங்கள் தனிமைப்படுத்தப்படுதலின் கீழ் வைக்கப்பட்டுள்ளன, 50,000 இக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபத்தி நான்கு மணி நேரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 152 இல் இருந்து 219 இக்கு அதிகரித்தது. மொத்த எண்ணிக்கையை ஆறாக உயர்த்தி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், 26 நோயாளிகள் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற வெனெஸ் திருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதான வர்த்தக மற்றும் பொருளாதார மையமான மிலன் தனிமைப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலின் கீழ் உள்ளது. பதட்டத்தால் விற்பனைகள் பெருவிற்பனை அங்காடிகளினது சாமான் அடுக்குகளைக் காலியாக்கி வருகின்றன. தனிமைப்படுத்தும் நெறிமுறைகளை அமலாக்க அதிகாரிகள் இராணுவத்தை நிலைநிறுத்தி உள்ளனர்.

தென் கொரியா கடந்த சில நாட்களிலேயே 231 புதிய நோயாளிகளைப் பதிவு செய்துள்ளது, இது செவ்வாய்கிழமை வரையில் மொத்த எண்ணிக்கையை 833 ஆக உயர்த்தி உள்ளது. ஜனாதிபதி மூன் ஜே-இன் நாட்டை உயர்ந்தபட்ச எச்சரிக்கையில் நிறுத்தி உள்ளார், இது பாரியளவில் அடைத்து வைப்பதை அமலாக்க அரசங்கத்திற்கு அதிகரித்த பொலிஸ்-அரசு உத்திகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது. ஓர் அவசரக் கூட்டத்தில் மூன் அறிவித்தார்: “வரவிருக்கும் சில நாட்கள் நமக்கு மிகவும் சிரமமாக காலமாக இருக்கும். மத்திய அரசாங்கமும், உள்ளூர் அரசாங்கமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களும், ஒட்டுமொத்த மக்களும் இப்பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமாக ஓர் ஒருங்கிணைந்த விடையிறுப்பைத் தொடுக்க வேண்டும்.”

உலக சுகாதார அமைப்பு, வாரயிறுதி வாக்கில், ஆபிரிக்க ஒன்றியத்துடனும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆபிரிக்க மையங்களுடனும் ஓர் அவசர அமைச்சரவை கூட்டத்தை நடத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் COVID-19 நோய்தொற்றை எதிர்த்து போராட அற்ப தொகையாக 124 மில்லியன் டாலரை ஒதுக்க சூளுரைத்துள்ளது. இதில் பாதி உலகளாவிய தயாரிப்பு வேலைகளுக்கான WHO இன் அழைப்புக்கே சென்றுவிடும்.

சீனாவுடன் நேரடியான பொருளாதார தொடர்புகள் மற்றும் அதிகளவிலான பயணங்களைக் கொண்டுள்ள, பதிமூன்று "முன்னுரிமை நாடுகளை" WHO அடையாளம் கண்டுள்ளது. இவை அனைத்தும் தரங்குறைந்த பொது சுகாதார அமைப்புமுறைகளைக் கொண்டுள்ளன என்பதுடன் குறிப்பாக ஒரு மிகப்பெரும் நோய்தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. உலக சுகாதார அமைப்பு 75 மில்லியன் டாலரை உதவிக்கு வழங்குவதற்காக தயார்நிலைப்படுத்தல் திட்டத்தைத் தொங்கி உள்ளது, அத்துடன் 30,000 பாதுகாப்பு சாதன தொகுப்புகளைக் கப்பலில் அனுப்பி உள்ளது.

COVID-19 நோயாளிகளின் அதிகரிப்புக்குத் தயாராக இருக்க தொடங்குமாறு அமெரிக்கா எங்கிலும் மருத்துவமனைகள் எச்சரித்துள்ளன. "மருத்துவர்கள், அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புமுறைகளுடன் நடத்தப்பட்ட பல்வேறு பேட்டிகளின்படி,” நோய்தொற்று, “அவசர சிகிச்சை அறைகளை நிரப்பிவிடும் மற்றும் சில முக்கிய மருத்துவ பொருட்களை விரைவில் பற்றாக்குறைக்கு உள்ளாக்கக்கூடும்,” என்று CNBC அறிவித்தது.

தொற்றுநோய்கள் உண்டானால் அவற்றை எதிர்த்து போராட உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் எந்தளவுக்கு முற்றிலும் தயாரிப்பின்றி உள்ளன என்பதை இந்த தொற்றுநோய் மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது. ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் இந்த தொற்றுநோய்க்கான அதிகாரிகளின் விடையிறுப்போ எல்லைகளை மூடுவதற்கான முயற்சியாகவும், மக்கள் இயக்கங்களின் மீது எதேச்சதிகார கட்டுப்பாடுகளை விதிப்பதுமாகவே உள்ளது. பல்வேறு ஆராய்ச்சி மையங்களும் மருத்துவ நிறுவனங்களும் COVID-19 இக்கான மருந்துகளை கண்டறியவதை நோக்கி முன்னேறி இருப்பதாக கூறி வருகின்றன என்றாலும், எந்தவொரு தடுப்பு மருந்தையும் மிகப்பெரியளவில் குறைந்தபட்சம் 18 மாதங்களுக்குள் வினியோகிப்பது அனேகமாக சாத்தியமில்லாமல் போகலாம்.

Loading