வழக்கறிஞர்களுடன் தன்னை பேச விடாமல் தடுக்கும் நீதிமன்றத்தை ஜூலியன் அசாஞ்ச் கண்டிக்கிறார்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ், அமெரிக்க அரசாங்கம் அவருக்கு எதிராக கொண்டு வந்துள்ள நாடுகடத்தல் நடவடிக்கைகளில் தனது அடிப்படை சட்ட உரிமைகள் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நீதிமன்றத்தில் ஒரு இணக்கமற்ற எதிர்ப்பை வெளியிட்டார்.

டிசம்பர் 20, 2019, வெள்ளிக்கிழமை, இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு சிறைவாகனத்தில் கொண்டுசெல்லப்படும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ்

பெல்மார்ஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நாடுகடத்தல் விசாரணையின் மூன்றாம் நாளன்று கைதி கூண்டில் இருந்து அசான்ஜ் பேசினார். பல விருதுகளைப் பெற்ற இந்த ஊடகவியலாளர் மீது உளவு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள், சட்டவிரோதமான அதன் வெகுஜன கண்காணிப்பு மற்றும் சித்திரவதை பற்றி அம்பலப்படுத்தியதற்காக 175 ஆண்டுகள் நீடிக்கும் கடும் சிறைவாசத்தையும் அவர் எதிர்கொள்ளவிருக்கிறார்.

அதிவுயர் பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அண்மித்து 12 மாதங்களாக உண்மையான தனிமைச் சிறையில் அசான்ஜ் அடைத்து வைக்கப்பட்டார் என்பதுடன், சித்திரவதை செய்வது மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைப்பதை தடை செய்யும் சர்வதேச சட்டத்தை மீறியே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெல்மார்ஷ் சிறையில் தனித்த தடுப்புக்காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட போது, மாவட்ட நீதிபதி வனேசா பாரைட்ஸர், அசான்ஜிற்கு “மருந்து கொடுக்கப்பட்டுள்ளது” என்ற நிலையில் அவருக்கு “நடவடிக்கைகளை பின்பற்றுவதில் சிரமம்” இருக்கலாம் என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும், மாலை 2 மணிக்கு சற்று பின்னர், அசான்ஜின் வழக்கறிஞர் காரெத் பியெர்ஸிடம் அவரது கட்சிக்காரரால் கவனம் செலுத்த முடிந்ததா என்றும் இடைவேளை தேவையா என்றும் அவர் கேட்டார்.

கைதி கூண்டில் தனது இருக்கையில் இருந்து எழுந்து, நீதிமன்ற குழுமத்தில் இருந்து தன்னை பிரிக்கும் குண்டு துளைக்காத கண்ணாடி சுவரின் அருகே வந்து, சிறைக் காவலர்களின் தொடர் கண்காணிப்பில் தான் இருந்ததாகவும், “எனது வழக்கறிஞர்களை நான் தொடர்பு கொள்ளவோ அல்லது எதிர் தரப்பினரின் கருத்தை பற்றி அறிய முடியாத நிலையில் அவர்களிடம் விளக்கங்களை கேட்கவோ என்னால் முடியவில்லை” எனவும் வெளிப்படையான துன்பத்துடன் தான் அனுபவிக்கும் கஷ்டத்தைப் பற்றி பியெர்ஸிடம் கூறினார்.

“எதிர் தரப்பினரோ தங்களது வழக்கறிஞர்களை ஒரு நாளில் கிட்டத்தட்ட 100 முறைக்கும் அதிகமாக தொடர்பு கொள்கின்றனர்… என்னால் அவ்வாறு பங்கேற்க முடியாத நிலையில் என்னால் கவனம் செலுத்த முடியுமா என்று கேட்பதில் என்ன பயன்?” என்று கேட்டார்.

கடந்த மூன்று நாட்களாகவே பெரும்பாலும் விசாரணை நடவடிக்கைகளை கேட்பதற்கு சிரமப்படும் அசான்ஜ், “விம்பிள்டனில் ஒரு பார்வையாளராக இருப்பதுபோல், இந்த நடவடிக்கைகளில் பெரிதும் ஒரு பங்கேற்பாளராகவே இருக்கிறேன்” என்று பியெர்ஸிடம் கூறினார்.

அசான்ஜின் தலையீடு பாரைட்ஸரிடமிருந்து வெளிப்படையான விரோதத்தை தூண்டியது. அவரை நேரடியாக விசாரித்தாலே தவிர நீதிமன்றத்தில் பேசுவதற்கு அவருக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது என்று நீதிபதி அறிவித்து, வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்தார். நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியபோது, அவரின் வழக்கறிஞர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் QC, அசான்ஜ் தனது சட்ட குழுவினருடன் அமர்வதற்கு விண்ணப்பிக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

பொம்மலாட்டத்தில் நூலில் தொங்கும் பொம்மையைப் போலத் தோன்றிய பாரைட்ஸரை ஃபிட்ஸ்ஜெரால்டின் எதிர்பாராத கோரிக்கை ஸ்தம்பிக்கச் செய்தது. “அத்தகைய உத்தரவை வழங்குவதற்கு எனக்கு அதிகாரம் உள்ளதா?” என்று அமெரிக்காவின் வழக்கறிஞர் ஜேம்ஸ் லூயிஸ் QC ஐ அவர் கேட்டதால், அவர் கைதி கூண்டிலிருந்து வெளிவர அனுமதிக்க வேண்டும் என்ற அசான்ஜின் கோரிக்கை தொடர்பாக வழக்குத்தொடுனர் “நடுநிலை” வகிக்கலாம் என்று அவர் பின்னர் சுட்டிக்காட்டினார். ஒருவேளை மேசையுடன் சேர்த்து அவருக்கு கைவிலங்கு பூட்டலாம் என்று லூயிஸ் ஆலோசனை வழங்கினார்.

“இது குறித்த அபாயத்தை மதிப்பீடு செய்கையில் இது என்னை கடினமான நிலைக்கு தள்ளும்,” என்று பாரைட்ஸர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார், அதற்கு ஃபிட்ஸ்ஜெரால்ட், “அவர் அறிவார்ந்த தன்மை கொண்ட கனிவான நபராவார் என்பதை மரியாதையுடன் நாங்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் எங்களுடன் அவர் உட்கார முடியாது என்பதற்கு எந்தவித காரணமும் கிடையாது” என்று பதிலிறுத்தார்.

அசாஞ்ஜின் வழக்கறிஞ்ஞர் குழுவின் கோரிக்கை பிணையெடுப்புக்கான விண்ணப்பமா என்று பாரைட்ஸர் வினவிய நிலையில், மேலும் குழப்பம் நீடித்தது, அப்போது எந்தவொரு பிணை விண்ணப்பத்தையும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் மறுப்பார் என்று உடனடியாக ஒரு ஆலோசனையை பாரைட்ஸரிடம் லூயிஸ் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஒரே இரவில் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்.

இந்த விநோதமான விவாதங்கள், சட்டரீதியாக மனிதர்களே இல்லாத பகுதியில் அசான்ஜ் தள்ளப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகிறது. இன்று காலை 10.00 மணியளவில் அசான்ஜை கைதி கூண்டிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய ஃபிட்ஸ்ஜெரால்ட் திட்டமிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் அதிகாரிகளால் நடத்தப்படும் இந்த மூர்க்கத்தனமான போலிநாடக விசாரணை, தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் அல்லது அவரது நிழல் சான்சிலர் ஜோன் மெக்டோனல் ஆகியோரிடமிருந்து இந்த வாரம் ஒரு எதிர்ப்பு வார்த்தையை கூட வெளிக் கொண்டு வரவில்லை. நேற்று பிரதமரின் கேள்வி நேரத்தின்போது தோன்றுகையில், இங்கிலாந்து வெள்ளம் பற்றிய அரசாங்கத்தின் பதில் மீது கோர்பின் கவனம் செலுத்தினாரே தவிர, உலகின் மிகப் பிரபலமான அரசியல் கைதியின் விதி பத்து மைல் தொலைவில் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி எதையும் கூறவில்லை.

நாடுகடத்தலுக்கு எதிராக ஒரு சுருக்கமான எதிர்ப்பு நிலைப்பாட்டை காட்டிய பின்னர், அசான்ஜின் அவலநிலை பற்றி எடுத்துக் கூறுவது தொடர்பாக துணை நீதி விதியால் தொழிற் கட்சி கட்டுப்படுத்தப்படும் என்று கடந்த வாரம் மெக்டோனல் அறிவித்தார். இது அரசியல் கோழைத்தனம் மற்றும் போலித்தனத்தின் வசதியான சாக்குபோக்காகும். அவர் அவ்வாறு செய்ய தேர்ந்தெடுத்திருந்தால், ஒவ்வொரு நாளும் அசான்ஜ் எதிர்கொண்ட கொடூரமான சித்திரவதைக்கு எதிராக கோர்பின் பேசியிருக்கலாம், மற்றும் பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவரது உடனடி விடுதலைக்கு அவர் கோரிக்கை விடுத்திருக்கலாம்.

சட்ட விவாதங்கள் நேற்று இங்கிலாந்து-அமெரிக்க நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் கவனம் செலுத்தின. உளவு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுக்களும் (மற்றும் கணினி தகவல் திருட்டு குறித்த ஒரு தனி குற்றச்சாட்டும்) “அப்பட்டமான அரசியல் குற்றச்சாட்டுக்களாக” இருந்தன என்று அசான்ஜின் பாதுகாப்புக் குழு வாதிட்டது.

இது, குவாண்டனாமோ கொள்கை, ஈராக் போருக்கான கொள்கை, ஆப்கான் போருக்கான கொள்கை, குடிமக்களின் உயிரிழப்பு, சித்திரவதை மற்றும் போர்க்குற்றங்கள் பற்றியது” என்று ஃபிட்ஸ்ஜெரால்ட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆங்கிலோ-அமெரிக்க நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் பிரிவு 4, “நாடுகடத்தல் கோரப்பட்டது தொடர்பான குற்றம் அரசியல் குற்றமாக இருப்பின் நாடுகடத்தப்பட மாட்டாது” என்று தெரிவிக்கிறது. ஆகவே, உளவுபார்த்ததாக கூறப்பட்டதால் அசான்ஜின் நாடுகடத்தலுக்கு இது தடை விதிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விதி ஆங்கில சட்டத்திற்குள் இணைக்கப்படவில்லை என்பதால், அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றது என்று அரசு தரப்பு கூறுகிறது. ஜனநாயக விரோத “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டத்தின் பெரும்பகுதியுடன் சேர்ந்து டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கம் நிறைவேற்றிய இங்கிலாந்து நாடுகடத்தல் சட்டம் (2003), அரசியல் குற்றங்களுக்கான விதிவிலக்கை நீக்கியது.

விதிவிலக்கை நிலைநாட்ட முற்படுகையில், எட்வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் QC, பல நூற்றாண்டுகளின் சட்ட கொள்கை மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளின் தரங்களை மேற்கோளிட்டு அவற்றை பாதுகாப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த வழக்கை முன்வைத்தார்.

அரசியல் குற்றங்களுக்காக நாடுகடத்துவது மீதான தடை “உலகம் முழுவதுமாக ஒரு அடிப்படை பாதுகாப்பாகக் கருதப்படுகிறது” என்று ஃபிட்ஸ்ஜெரால்ட் வாதிட்டார். இது, 2007 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்ட ஆங்கிலோ-அமெரிக்க ஒப்பந்தம் உட்பட, மேற்கத்திய ஜனநாயக நாடுகளுடனான அமெரிக்காவின் நாடுகடத்தல் ஒப்பந்தங்கள் “ஒவ்வொன்றிலும் உள்ளது.”

மேலும், “ஒவ்வொரு வழக்கிற்கு பின்னரும், முழு நாடுகடத்தல் நடவடிக்கையையும், நீதிமன்றங்கள் அதை அணுக வேண்டிய வழிமுறையையும் வழிப்படுத்தும் ஒரு முக்கியமான கொள்கையாக ஒப்பந்த கடமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன” என்று ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறினார்.

உள்நாட்டு சட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு எந்தவித அடிப்படையும் கிடையாது என்பதால், அசான்ஜிற்கு எந்த உரிமையும் வழங்க முடியாது என்ற அரசு தரப்பு வாதத்திற்கு பதிலளிக்கையில், ஃபிட்ஸ்ஜெரால்ட் நாடுகடத்தல் சட்டம் (2003) இன் பிரிவு 87 ஐ பற்றி குறிப்பிட்டார். இந்த பிரிவின் படி, ஒரு மனிதரின் நாடுகடத்தல் என்பது மனித உரிமைகள் சட்டத்தின் (1998) மூலம் ஆங்கில சட்டத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டதான மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய வழக்கத்திற்கு இணக்கமானதா என்பதை நீதிபதி தீர்மானிக்க வேண்டும். நாடுகடத்தல் ஒப்பந்தம் அசான்ஜின் நாடுகடத்தலுக்கு “முழு அடித்தளமாக உள்ளது.” அரசியல் குற்றங்களுக்கான விதிவிலக்கை புறக்கணிப்பது என்பது, தெளிவான செயல்முறை துஷ்பிரயோகமாக அது இருந்ததுடன், அதனால் தன்னிச்சையான தடுப்புக்காவலும் செயல்படுத்தப்பட்ட நிலையில், ECHR இன் 5 வது பிரிவை இது மீறுவதாகும்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் பின்னர் அடிப்படை சட்ட கோட்பாடுகள் மீதான அவரது ஆழ்ந்த ஆய்வு விபரத்தை வெளியிட்டார். “சுதந்திரத்திற்கான உரிமை என்பது சட்டரீதியான விதிகளுக்கு பொருத்தமாக இருக்கின்றதா என்பதற்கேற்ற சுதந்திரத்திற்கான உரிமை மட்டுமல்ல, மாறாக ‘இது விதிக்கட்டுப்பாட்டிற்குள் இல்லாததா?’ என்பதற்கான பரந்த சோதனையாகும்.

அவர் மேலும், “சட்டத்தின் சரியான விசாரணை என்பது சட்ட விதி பற்றிய கருத்தையும் நீதிக்கான உலகளாவிய தரங்களையும் குறிக்கும் ஒரு இணக்கமான வெளிப்பாடாகும்” என்றும் கூறினார்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் தனது கருத்தை தெரிவிக்க மூன்று முக்கிய வழக்குகளை மேற்கோள் காட்டினார்.

முதலாவது, R v Mullen வழக்கு (2000), இதில் செயல்முறை துஷ்பிரயோகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, ஏனென்றால் நாடுகடத்தல் நடைமுறைகளில் பிரிட்டிஷ் அதிகாரிகள் “பொது சர்வதேச சட்டத்தை மீறும் வகையிலான நடவடிக்கையில்” ஈடுபட்ட அவர்களது நடத்தை தான் அதற்கான காரணம்.

இரண்டாவது, Thomas v Baptiste வழக்கு (2000), இதில் Privy Council “டிரினிடாட் அரசியலமைப்பின் உரிய செயல்முறை சட்ட விதியை கண்டறிந்து ‘சட்ட விதியின் கருத்தாக்கத்தை செயல்படுத்தியது’,” என்பது உள்நாட்டு டிரினிடாடியன் சட்டத்தில் இணைக்கப்படாத ஒரு ஒப்பந்தத்திற்கு மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ஃபிட்ஸ்ஜெரால்ட் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் இதை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், “சட்டவிதிகள் [1215-Magna Carta] பற்றிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட உரிய செயல்முறை சட்டம் இன்னும் எங்களது சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது” என்றார்.

மூன்றாவது, Neville Lewis v Attorney General Jamaica வழக்கு (2001), இது “சட்டத்தைப் பாதுகாத்தல்” என்ற அரசியலமைப்பு கருத்து அசான்ஜ் வழக்கில் அரசுதரப்பு வாதிகளால் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரிகள் மீதான ஜமைக்கா அரசின் நம்பிக்கையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது குறித்து நடைபெற்றது. அதே அரசியலமைப்பு கருத்து அமெரிக்க அரசியலமைப்பின் ஐந்தாவது திருத்தத்தில் புகுத்தப்பட்டது, இது “அதன் குடிமக்களுக்கு வழங்கிய அரசியலமைப்பு பாதுகாப்புகளின் மைல்கல் ஆகும்.”

ஃபிட்ஸ்ஜெரால்ட், “பொது சர்வதேச சட்டத்தின் கீழ் கோரப்படும் அரசின் கடமைகள் மீதான எந்தவொரு நம்பிக்கையையும் அரசு தரப்பு எளிதாக நிராகரிப்பது… சட்ட விதிமுறையை அவமதிப்பதற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கென செயல்முறை அதிகார வரம்பை துஷ்பிரயோகம் செய்கிறது என்ற உண்மையை புறக்கணிக்கிறது. இதில் சர்வதேச சட்டம் கூட ஒரு பகுதியாக உள்ளது” என்று நிறைவு செய்தார்.

இந்த விடயத்தை இன்னும் கூர்மையாக கவனத்தில் கொண்டு, பிளேயர் அரசாங்கத்தின் ஜனநாயக எதிர்ப்பு சட்டத்தை நம்பி, சட்டத்தின் முழு பிற்போக்குத்தனமான, தேசியவாத, கறுப்புக் கடித வாசிப்புக்கு முறையீடு செய்ய அரசு தரப்பு முயல்கிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஜேம்ஸ் லூயிஸ் QC இன் மறுப்பு, “ஒப்பந்தத்தின் மூலம் எந்தவித உரிமைகளையும் அசான்ஜ் பெறுவதற்கு உரிமை இல்லை” என்று தெரிவித்தது. நாடுகடத்தல் சட்டம் (2003) இன் படி அரசியல் குற்றம் சார்ந்த விதிவிலக்கை பாராளுமன்றம் “வெளிப்படையாக இரத்து செய்துள்ளது” என்பதால், “சட்டத்தின் செயல்பாடு திரு அசான்ஜ் விருப்பத்தை சாதிக்க விடாமல் தடுத்து விட்டது.”

“இது ஏனைய வெளிநாடுகளுக்கு சற்று ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம், ஆங்கில சட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் பொருத்தமற்றது” என்று லூயிஸ் ஒப்புக் கொண்டார்.

விசாரணை தொடர்கிறது.

Loading