ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவாரா என்பதை தீர்மானிக்க பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கப்பட்ட முதல் நாள் விசாரணை, அசான்ஜின் உயிருக்கும் மற்றும் அவரது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு சட்டரீதியான மோசடியாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை.

அரசியல்ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தனிப்பட்ட நபர்கள் நாடுகடத்தப்படுவதை மறுக்கும் பிரிட்டிஷ் சட்டங்களின் படி பார்த்தால், அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் விண்ணப்பம் சில நிமிடங்களில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றாகும்.

அமெரிக்க போர்க்குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சதிகளை அம்பலப்படுத்தியதான கசியவிடப்பட்ட தகவல்களை 2010 மற்றும் 2011 இல் விக்கிலீக்ஸ் பிரசுரித்தது குறித்து பல உளவு குற்றச்சாட்டுக்கள் அசான்ஜ் மீது சுமத்தப்பட்டுள்ளது. தனது குற்றங்களை அம்பலப்படுத்தியவர் மீது சம்பந்தப்பட்ட நாடு வழக்கு தொடர முனைவதைக் காட்டிலும் மிகவும் அப்பட்டமான அரசியல் நோக்கத்துடன் ஒரு வழக்கு தொடரப்படக் கூடுமா என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

ஆயினும், வழக்கை தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, நீதிபதி வனேசா பாரைட்ஸர், “அவர் [அசான்ஜ்], அரசாங்கத்தால் வெளிப்படுத்தியிருந்திருக்க முடியாத” தர்மசங்கடமான அல்லது மோசமான தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டார்” என்று அமெரிக்க நீதித்துறை சார்பாக வழக்காடும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜேம்ஸ் லூயிஸ் QC வலியுறுத்திக் கூறியதை ஏற்றுக் கொண்டார்.

இந்த அபத்தமான மற்றும் அப்பட்டமான பொய் அசான்ஜிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முரணாக உள்ளது, இது, “தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அங்கீகாரமற்ற முறையில் வைத்திருந்தது, அணுகியது, மற்றும் கட்டுப்படுத்தியது, மேலும் வேண்டுமென்றும் சட்டவிரோதமாகவும் இணைய தளத்தில் அதை பிரசுரித்து, அத்தகைய தகவல்களை பெறுவதற்கு உரிமையில்லாத நபர்களுக்கு அதுபற்றி தகவல் வழங்கியது, மற்றும் அனுப்பியது” தொடர்பாக அவரை குற்றம்சாட்டுகிறது.

அதாவது, அமெரிக்க அரசாங்கத்திற்கு “தர்மசங்கடமாக” இருந்த ஆவணங்களை அந்த “அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்திருக்காது,” என்ற வகையிலான அவற்றை அசான்ஜ் பிரசுரித்தார் என்று அவர் குற்றம்சாட்டப்பட்டார், ஏனென்றால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் அதன் இராணுவப் படைகள் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொல்வதை அது வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

நேற்றைய தொடக்க அறிக்கைகளில் முன்குறித்துக் காட்டிய அமெரிக்க வழக்கு, ஆவணங்களிலிருந்த அமெரிக்க அரசாங்க மற்றும் இராணுவ உளவாளிகள் மற்றும் வேவு பார்ப்பவர்களின் பெயர்களை விக்கிலீக்ஸ் பிரசுரிப்பதற்கு முன்னர் திருத்தியமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மையப்படுத்துகிறது. அமெரிக்க முகமைகள், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த “ஆயிரக்கணக்கான ஆபத்தான நபர்களை அடையாளம் கண்டுள்ளன” என்று லூயிஸ் கூறினார். ஏனையோர் “அதன் பின்னர் காணாமற்போன” நிலையில், இது சிலரை “இடமாற்றம்” செய்திருந்தது என்று அவர் வலியுறுத்தினார். அசான்ஜ் “தெரிந்தே” அந்த நபர்களை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டார் என்று நீதிமன்றத்திற்கு லூயிஸ் தெரிவித்தார்.

இதே குற்றச்சாட்டு இரகசிய செய்தி வெளியீட்டாளரான செல்சியா மானிங்கிற்கு எதிராகவும் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், விக்கிலீக்ஸூக்கு தகவல்களை அனுப்பியதற்காக அவர் மீதான இராணுவ விசாரணையின் போது அவர் இழிவுபடுத்தப்பட்டார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை நடத்திய விசாரணையை மேற்பார்வையிட்ட எதிர் தரப்பு புலனாய்வு அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ராபர்ட் கார் (Robert Carr), கசியவிடப்பட்ட தகவல்களை வெளியிட்டதால் எந்தவொரு நபருக்கும் தீங்கு ஏற்பட்டதாக “எந்தவித குறிப்பிட்ட உதாரணமும் என்னிடம் இல்லை” என்று 2013ம் ஆண்டில் சத்தியபிரமாணம் செய்து ஒப்புக்கொண்டார். மானிங்கின் செயல்களின் விளைவாக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் பெயரை கார் ஆரம்பத்தில் குறிப்பிட்டார், அந்த நபரின் பெயர் விசாரணையின் உத்தியோகபூர்வ பதிவிலிருந்து நீக்கப்பட்டிருந்தது, ஏனென்றால் அந்த நபரின் பெயர் ஆவணங்களில் கூட அடையாளம் காணப்படவில்லை.

நேற்று, பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், இதேபோல், “விக்கிலீக்ஸின் வெளியீட்டால் நபர்கள் காணாமல் போனது பற்றி அமெரிக்காவால் நிரூபிக்க முடியவில்லை” என்பதை லூயிஸ் ஒப்புக்கொண்டார். மேலும், அசான்ஜின் வழக்கறிஞரான எட்வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் QC, “விக்கிலீக்ஸ், ஏனையோரால் அந்த தகவல்கள் பிரசுரிக்கப்பட்ட பின்னரே, திருத்தப்படாத தகவல்களை மட்டும் பிரசுரித்தது” என்று குறிப்பிட்டு அசான்ஜிற்காக வாதாடினார்.

என்றாலும், இந்த நாடுகடத்தல் விசாரணை, அசான்ஜ் குற்றம் செய்தார் என்று தவறாக வலியுறுத்தப்பட்டது தொடர்பான நடவடிக்கையாக உள்ளது. உண்மையில், உண்மையான ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பாளர்களும் இதைச் செய்வதற்கு எப்போதும் தமக்குத் தாமே பெருமை கொள்வர்: வாஷிங்டனிலும் மற்றும் வேறெங்கிலும் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களிடம் இருந்து மறைக்க முயலும் குற்றங்களுக்கான ஆதாரங்களை அவர் பொதுவில் கிடைக்கச் செய்தார். ஒரு செய்தி வெளியீட்டாளராக அவரது நடவடிக்கைகள் வரலாற்றுரீதியாக அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்ததின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத்தின் மோசமான அம்பலப்படுத்தலையும், ஏகாதிபத்திய போர்கள் மற்றும் இராஜதந்திரத்தின் யதார்த்தத்தையும் அசான்ஜ் கண்காணித்து அவற்றை பின்தொடர்ந்த காரணத்தால், உலக மக்களிடமிருந்து அவற்றை மறைக்க முடியாமல் போன நிலையில், அமெரிக்காவில் தயார் செய்யப்பட்டு இலண்டனில் இந்த சட்டரீதியான மோசடி நடந்து கொண்டிருக்கிறது.

செல்சியா மானிங் கைது செய்யப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டதுடன், 35 ஆண்டுகள் கொண்ட கடும் சிறை தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்ட நிலையில், 2017 இல் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே ஏழு ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டிருந்தார். அந்த சமயத்தில், விக்கிலீக்ஸ் இணைய தணிக்கைக்கு உள்ளானது என்பதுடன், அசான்ஜ் அவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களால் அவதூறாகப் பேசப்பட்டார். இந்நிலையில், சுவீடனுக்கு தான் நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்காக பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் நீடித்த போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். மேலும், இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் கோரும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது, ஏனென்றால் சுவீடன் வழக்கு பொய்களால் புனையப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் புறக்கணித்தன, மேலும் ஆஸ்திரேலிய அரசாங்கமோ தனது குடிமகனான அவரை பாதுகாக்கும் பொறுப்பை அது கொண்டிருந்தாலும், இதில் தலையிட மறுத்துவிட்டது.

ஜூன் 2012 முதல் ஏப்ரல் 2019 வரை தூதரகத்தில் இருந்தபோது, அசான்ஜிற்கு போதுமான மருத்தவ கவனிப்பிற்கு ஏற்பாடு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்ததுடன், சூரிய ஒளியை கூட நேரடியாக அணுக விடாமல் செய்தது. அவர் தொடர்ந்த சரீர ரீதியான துன்புறுத்தலுக்கும் மற்றும் “உளவியல் சித்திரவதைக்கும்” ஆளாகியுள்ளார் என்று மருத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியதை அவர் சகித்துக் கொண்டார். இப்போது முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன் படி, அவரை பாதுகாப்பதாகக் கூறப்படும் UC Global என்ற பாதுகாப்பு நிறுவனமும் மற்றும் தூதரகமும், உண்மையில் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அவரை உளவு பார்க்கின்றன. இது, அவரது சட்ட பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடுவது உட்பட அவரது மிக நெருக்கமான விவாதங்களை பதிவு செய்து CIA வசம் ஒப்படைத்துள்ளன.

சர்வதேச சட்டத்திற்கு முரணாக, ஈக்வடோர் அரசாங்கம் அசான்ஜிற்கு தஞ்சம் வழங்குவதை கைவிட வேண்டுமென ட்ரம்ப் நிர்வாகம் அதை அச்சுறுத்துவதுடன் அதற்கு கையூட்டும் வழங்கியுள்ளது. பொலிசாரால் தூதரகத்திலிருந்து அசான்ஜ் வெளியே இழுத்துவரப்பட்டு, அதனைத் தொடர்ந்து நாடுகடத்தல் விசாரணைக்கு காத்திருக்கும் வகையில் அதிஉயர் பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் கொடூரமான நிலைமைகளின் கீழ் அவர் சிறையிலடைத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும், அசான்ஜிற்கு எதிராக இரகசிய நீதிமன்றத்தின் முன்பாக சாட்சியமளிக்க மறுத்த குற்றத்திற்காக மானிங் மீண்டும் சிறையிலிடப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சியை நிராகரிப்பது பிரிட்டிஷ் அரசாங்கமும் மற்றும் நீதிமன்றங்களையும் பொறுத்தவரையில் மிகப்பாரதூரமானதும் நடைமுறைப்படுத்தப்பட முடியாததுமாகும். இந்நிலையில், ஒரு ஆஸ்திரேலிய குடிமகனும் மற்றும் ஊடகவியலாளருமான அவருக்கு எதிரான மிருகத்தனமான பழிவாங்கலை முடிவுக்கு கொண்டுவர, ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் இராஜதந்திர மற்றும் சட்டரீதியான அதிகாரங்களை பிரயோகித்து முழுவீச்சில் தலையிட வேண்டும்.

அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை, நீதியிலிருந்து தப்பித்து ஆனால் தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களை வேட்டையாடும் ஒரு கொலைகாரனின் செயல்களுடன் ஒப்பீடு செய்யலாம், ஏனென்றால் மானிங் கசியவிட்டு விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ஆவணங்களில் வெளியான பாரிய படுகொலைகள் மற்றும் ஜனநாயக விரோத சதித்திட்டங்களுக்கு ஒரு அரசியல்வாதி, இராணுவ அதிகாரி அல்லது இராஜாங்க அதிகாரி என எவரும் பொறுப்பாளியாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஜூலியன் அசான்ஜூம் செல்சியா மானிங்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும், அமெரிக்க மத்திய சிறை அமைப்பின் இருண்ட மூலையில் 175 ஆண்டுகள் வரையிலான ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் நிலையையும் அசான்ஜ் எதிர்கொள்ளவிருக்கிறார்.

உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களும் மற்றும் டசின் கணக்கான அமைப்புக்களும், அசான்ஜ் மற்றும் மானிங்கை பாதுகாப்பதற்காக இன்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சக்திவாய்ந்த சர்வதேச இயக்கம் உருவெடுக்கின்றது. ஆனால் அது வர்க்கப் போர் கைதிகளையும், அரசு ஜோடிப்பு வழக்கிற்கு பலியானவர்களையும் விடுவிப்பதற்கான கடந்த கால போராட்டங்களின் படிப்பினைகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டு அவற்றை உட்கிரகித்து தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் பாரிய அரசியல் அணிதிரட்டல் மீதான பயம் மட்டுமே அவர்களை துன்புறுத்துபவர்களை விடுவிக்க கட்டாயப்படுத்தும்.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் மற்றும் தொழிற் கட்சி தலைமையும், ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசனும் மற்றும் தொழிற் கட்சித் தலைவரான அந்தோனி அல்பானீஸூம், அமெரிக்காவில் ட்ரம்ப் அல்லது ஜனநாயகக் கட்சி ஸ்தாபகமும் போன்ற விக்கிலீக்ஸை அழித்துவிட உறுதியாகவுள்ள, ஜனநாயக மற்றும் தார்மீக கொள்கைகளுக்கு உடன்படாத அரசியல் தலைவர்களிடம் முறையிடுவதன் மூலம் அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலையை வென்றெடுக்க முடியாது.

மாறாக, அசான்ஜின் பாதுகாப்பு என்பது, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள், பெருகிவரும் வேலைநிறுத்த மற்றும் அரசியல் போராட்ட அலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுடன், இந்த சமூக சக்திதான் அசான்ஜ் மற்றும் ஏனைய வர்க்கப் போர் கைதிகளை விடுவிக்கும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சமூக சமத்துவத்திற்கான போராட்டத்திலிருந்து பிரித்தறிய முடியாதது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய நகரம் சிட்னியில் பெப்ரவரி 22 அன்று நடந்த அசான்ஜ் பாதுகாப்பு குறித்த சோசலிச சமத்துவக் கட்சி பேரணியில் பேச்சாளர் ஒருவர், “நேர்மையான தகவலும் பேச்சு சுதந்திரமும் எங்களுக்கு இல்லையென்றால் எந்தவொரு பிரச்சினை குறித்தும் நாங்கள் குரல் கொடுக்க முடியாது” என்று கூறினார்.

சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல், போரின் வளர்ந்து வரும் அபாயம் ஆகியவற்றிற்கு எதிராக இன்னும் மிகப்பெரிய இயக்கமாக தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதற்கு அசான்ஜை பாதுகாப்பது குறித்து வளர்ந்துவரும் இயக்கம் அதன் முழு ஆற்றலை பிரயோகிக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தி மட்டுமே, இலண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டரீதியான போலித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய, மற்றும் அசான்ஜின் உடனடி மற்றும் நிபந்தனையற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கக்கூடிய சக்தியாக உள்ளது.

Loading