கொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் வெளிப்பட்ட கொரொனாவைரஸ், Covid-19, தொற்று ஏற்பட்ட இரண்டு நோயாளிகள், சீயாட்டெல் புறநகர் பகுதியான கிர்க்லாந்தின் எவர்கிரீன் மருத்துவ மையத்தில் இவ்வாரயிறுதியில் உயிரிழந்தனர். சனிக்கிழமை இறந்தவருக்கு உயர் அபாய நாட்டின் எவரொருவருடனும் தொடர்புகளோ அல்லது அங்கு பயணம் சென்று வந்த எவரொருவருடன் எந்த தொடர்புகளோ இருக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உள்ளார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார், அவரின் இந்த உடல்நலமின்மை போக்கு இந்நோயிற்கு பங்களிப்பு செய்திருக்கலாம்.

நுண்ணுயிரி மரபணு பரிசோதனை (Viral genetic testing) ஜனவரியில் இருந்து நோய்தொற்றிற்கு உட்பட்ட அவரை அமெரிக்காவின் முதல் நோயாளியாக ஆக்கியது. இதனால் அந்த தொற்றுநோய் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமல் பரவி இருக்கலாம், அனேகமாக இன்னும் நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாமென சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

சனிக்கிழமை, பெப்ரவரி, 29, 2020, வாஷிங்டன் கிர்க்லாந்து மருத்துவ மையத்திலிருந்து ஒருவர் படுக்கை மூலமாக காத்திருக்கும் அவசரசிகிச்சை ஊர்திக்கு எடுத்துச் செல்லப்படுகிறார், இந்த மையத்தில் 50 க்கும்அதிகமானவர்கள் Covid-19 நுண்கிருமி பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ எலைன் தோம்சன்)

சனிக்கிழமை, பெப்ரவரி, 29, 2020, வாஷிங்டன் கிர்க்லாந்து மருத்துவ மையத்திலிருந்து ஒருவர் படுக்கை மூலமாக காத்திருக்கும் அவசரசிகிச்சை ஊர்திக்கு எடுத்துச் செல்லப்படுகிறார், இந்த மையத்தில் 50 க்கும்அதிகமானவர்கள் Covid-19 நுண்கிருமி பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ எலைன் தோம்சன்)

ஞாயிறன்று இரண்டாவதாக உயிரிழந்த ஒருவர் உள்ளடங்கலாக, அமெரிக்காவில் ஆறு நோயாளிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சீட்டெல் கிர்க்லாந்தின் நீண்டகால கவனிப்பு மையத்தில் வயதானவர்களும் உள்ளனர். இவர்களின் பலவீனமான உடல்நலம் மற்றும் நெருக்கமான இடத்தில் இருக்கும் நிலைமைகளின் காரணமாக அபாயத்தில் உள்ளனர். எவர்கிரீன் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர். பிராங்க் ரெய்டோ கருத்துப்படி, “இது மிகப் பெரும் பனிமலையின் ஒரு சிறுதுளி மட்டுந்தான் … [நீண்ட காலத்திற்கான கவனிப்பு மையம்] Life Care இல் 50 இக்கும் அதிகமான நபர்கள் சுவாச கோளாறு அறிகுறிகளுடன் நோய்வாய் பட்டிருப்பதாகவும் அல்லது நிமோனியாவுடன் அல்லது என்ன காரணமென்றே தெரியாத ஏனைய சுவாசக் கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், Covid-19 சம்பந்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.”

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் (CDC) பரிசோதனை முடிவுகள் உறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளவர்கள், "நோய்தொற்று இருக்கலாமென கருதப்படும்" இன்னும் இரண்டு நோயாளிகள், வாஷிங்டன் மாநிலத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் Everett இல் உள்ள பதின்ம வயதினர். இவர் வேறெங்கும் பயணம் செய்ததற்கான எந்த முன்வரலாறும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அவரது நோய் அறிகுறிகள் மிகவும் சிறியளவில் இருப்பதாகவும், அவர் வீட்டிலேயே தனிமையில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது நோயாளி 50 களில் உள்ள ஒரு பெண்மணி, இவர் தென் கொரியாவில் இந்நோய் வெடித்த மையப்பகுதியான Daegu இல் சமீபத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.

Covid-19 இன் திடீர் வெளிப்பாடு வாஷிங்டன் ஆளுநர் ஜே இன்ஸ்லெயை அவசரகாலநிலையை பிரகடனப்படுத்த செய்தது. இந்நடவடிக்கை, அந்நோய் பெரியளவில் உண்டானால் தயாராக இருப்பதற்கு, தேசிய பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது உள்ளடங்கலாக, மாநிலத்திற்கு கூடுதல் ஆதாரவளங்களை வழங்குகிறது.

மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் பரிசோதனை கருவிகள் இல்லாமல் செயல் குலைந்துள்ளன. அதேவேளையில் தனிநபர்களைப் பரிசோதனை செய்வதற்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் அமைத்துள்ள கடுமையான நெறிமுறைகள் புதிய நோயாளிகளைப் பரிசோதனை செய்வதற்கும் பின்தொடர்வதற்குமான தகைமையை இன்னும் பின்னடிக்க செய்கின்றது. உணவு மற்றும் மருந்து மேலாண்மை அமைப்பு (FDA) இவ்வாரயிறுதியில் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டது. இக்கொள்கையானது சமீபத்தில் SARS-CoV-2 என்று பெயரிடப்பட்ட புதிய 2019 கொரொனா வைரஸை உறுதிப்படுத்தும் பரிசோதனைக் கருவிகள் தங்களிடம் இருப்பதை எடுத்துக்காட்டும் ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்குகிறது.

அந்த FDA கொள்கை அறிவிக்கிறது: “COVID-19 வெடிப்புக்கு நடைமுறையளவில் விடையிறுப்பதற்கு, நோயாளிகள் மற்றும் தொடர்புகளை விரைவாக கண்டறிவதும், உரிய மருத்துவச் சிகிச்சை நிர்வாகம் மற்றும் தொற்றுநோய் கட்டுப்படுத்தலும், சமூகத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதும் மிக முக்கியமாகும். சுகாதார கவனிப்பு மையங்கள், ஆலோசனை இடங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களிலும், கவனிப்பு இடங்களிலும் பரிசோதனை தகைமைகளைப் பரவலாக கிடைக்க செய்வதன் மூலமாக இதை சிறப்பாக செய்ய முடியும்.”

மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் அவற்றின் இடங்களில் அந்த வைரஸ் பரிசோதனைகளைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை ஆரம்பித்துள்ளன. இது பல வாரங்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ள சுகாதார நெருக்கடியின் அளவை உடனுக்குடன் ஆய்வுக்குட்படுத்த அனுமதிக்கும். சமீபம் வரையில், மொத்தம் 500 பரிசோதனைகளுக்கும் குறைவாகவே CDC ஆல் செய்ய முடிந்திருக்கிறது. பொது சுகாதார ஆய்வுக்கூடங்களின் அமைப்பு தலைவர் ஸ்காட் பெக்கர் NPR இக்குத் தெரிவிக்கையில், இந்த வாரயிறுதிக்குள் அந்த வைரஸைப் பரிசோதனை செய்யக்கூடிய 40 இக்கும் அதிகமான ஆய்வுக்கூடங்களை அவர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும், வெகு விரைவில் இன்னும் கூடுதல் ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸூம் மனித சுகாதார சேவைகள் (HHS) செயலாளர் அலெக்ஸ் அஜாரும், நோய்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் நோய்தொற்றின் எண்ணிக்கை பெரிதும் குறைவாகவே உள்ளது என்றும் சலிப்பூட்டும் அளவுக்குத் தொடர்ந்து வலியுறுத்தியவாறு, ஞாயிற்றுக்கிழமை செய்தி நிகழ்ச்சிகளில் பலசுற்று வலம் வந்தனர். அதற்கும் கூடுதலாக, அரசாங்கம் பத்தாயிரக் கணக்கான பரிசோதனை கருவிகளை வினியோகிக்க தனியார் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக அவர்கள் பார்வையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தனர்.

உலக சுகாதார அமைப்பு, CDC, மருத்துவ வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்ன கூறி வருகிறார்களோ அந்த வெளிச்சத்தில் பார்க்கையில், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் HHS இன் பாகத்தில் உள்ள அலட்சியம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது. தடுப்பு மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தவும், சிகிச்சை பரிசோதனை மையங்களை நடைமுறைப்படுத்தவும், பரிசோதனை கருவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நேரம் மிகக் குறைவாக இருக்கையில், அதற்கு பதிலாக அவர்கள் சீனா குறுகிய காலத்திலேயே அதன் ஆலைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும் என்று முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் வழங்குவதில் ஈடுபட்டிருப்பதுடன், நிதியியல் சந்தைகள் பலமாக இருப்பதாகவும் அறிவித்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தி வரும் மருத்துவ நெருக்கடியின் அபிவிருத்தியில் ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் இந்நெருக்கடி முன்னிறுத்தும் தீவிரத்தன்மை மற்றும் அபாயங்களைக் குறைமதிப்பீடு செய்துள்ளனர்.

கலிபோர்னியாவில் Travis விமானப் படைத்தளம் ஒட்டுமொத்த திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. அத்தளத்திற்கு அனுப்பப்பட்ட மருத்துவ அதிகாரிகள் முற்றிலும் படுமோசமான தயாரிப்பில் இருந்தனர் மற்றும் ஜப்பானில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தவர்களுக்கு உதவுவதில் பயிற்சியின்றி இருந்தனர் என்று இரகசியங்களை அம்பலப்படுத்தும் ஓர் உயர்மட்ட HHS அதிகாரி உண்மைகளை வெளியிட்டார். அவர்கள் நோய் தொற்றிய நோயாளிகளிடையே தாமும் தொற்றுதலுக்கு உட்படும் நிலையில் நின்றனர் என்பது மட்டுமல்ல, மாறாக அத்தளத்தினுள் நுழைந்த அவர்கள் பொது பாதுகாப்பைக் கருத்திக் கொள்ளாமல் அவர்களின் விருப்பம் போல் வெளியே சென்றும் உள்ளே வந்தும் பொது மக்களையே ஆபத்திற்குட்படுத்தினார்கள்.

மருத்துவ மற்றும் அரசு அதிகாரிகள் எழுப்பும் கவலைகள் ஒருபுறம் இருக்க, ஜனவரி 21 இல் வாஷிங்டன் மாநிலத்தில் முதல்முதலில் அந்நோயில் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து கொரொனாவைரஸின் மரபணு அமைப்பைப் பரிசோதிக்க முடிந்துள்ளது மற்றும் இவ்வாரயிறுதியில் உயிரிழந்த ஒருவருடன் அதை ஒப்பிட்டு பார்க்க முடிந்துள்ளது.

இவ்விருவருமே ஒரே நாட்டில் வசித்தவர்கள், ஆனால் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் இருக்கவில்லை. அந்த வைரஸின் மரபணு உருவமைப்பு மீதான மரபணு பரிமாண (phylogenetic) ஆய்வானது, வாஷிங்டன் மனிதரை கொன்ற வைரஸ் ஜனவரி 21 ஆம் தேதி முதலே நோயாளியில் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும், அவை இரண்டுமே அரிய மரபணு வகைப்பாடுகளை பகிர்ந்து கொள்கின்றன. இது நோய்தொற்று பல வாரங்களாக சமூகத்தில் பரவி வந்துள்ளதைச் சூசகமாக எடுத்துக்காட்டுகிறது. விஞ்ஞான அறிவிப்புகள் என்ன எச்சரிக்கின்றன என்பதைக் குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்ளவில்லை. கணினி கணிப்புமுறை, கண்டறியப்படாத நோயாளிகளின் எண்ணிக்கையை 150 இல் இருந்து 1,000 இக்கு இடையே இருக்கலாம் என்கின்றது.

இந்த தவிர்க்கக் கூடிய நாசகரமான வளர்ச்சியைச் சரியாக கணிக்க, இது கால அளவை ஆய்வு செய்வது உதவுகிறது.

ஜனவரி 21 இல், வாஷிங்டன் மாநில ஆளுநர் இன்ஸ்லெ அமெரிக்காவில் முதல் Covid-19 நோயாளியைக் குறித்து அறிவித்தார். அந்நேரத்தில், சீனா நூற்றுக் கணக்கான நிமோனியா-போன்ற பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளைக் குறித்தும், 2003 SARS வைரஸ் போன்ற ஒரு புதிய கொரொனாவைரஸ் உண்டாக்கிய பல உயிரிழப்புகளைக் குறித்தும் அறிவித்துக் கொண்டிருந்தது.

வாஷிங்டன் ஸ்னொஹொமிஷ் உள்ளாட்சியில் வாழும் 35 வயதான நோய்தொற்று கொண்டிருந்தவர் ஜனவரி 15, 2020 இல் வூஹானில் இருந்து திரும்பி இருந்தார்—அப்போது விமான நிலையங்களில் எந்த பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வாஷிங்டன் மாநிலத்திற்குத் திரும்பிய அவருக்கு சளிக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படத் தொடங்கின. சீனாவில் வித்தியாசமான வைரஸ் குறித்த செய்திகள் அவருக்குத் தெரிய வந்ததும், அவர் ஊர் திரும்பிய நான்கு நாட்களிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முயன்றார். எவரெட்டில் மாகாண நோய் தடுப்பு மருத்துவ மையத்தில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பரிசோதனைக்கான முன்மாதிரிகள் அட்லாண்டாவில் CDC இக்கு அனுப்பப்பட்டு, அவை Sars-CoV-2 வைரஸால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் முதல் சில நாட்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சலின் மிதமான அறிகுறிகளுடன் ஸ்திரமாக இருந்தார். ஐந்தாம் நாளில் இருந்து, கூடுதல் சுவாச வாயு தேவைப்படும் அளவுக்கு அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன், நிமோனியா இருப்பதும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவர் நிலைமை மோசமடைந்தது, அவரின் மருத்துவர்கள் எபோலாவுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட ஆனால் பயனற்றதென கண்டறியப்பட்ட நுண்கிருமி-தடுப்பு மருந்துவம் என்றறியப்படும் Remdesivir ஐ கொண்டு அங்கீகரிக்கப்படாத சிகிச்சையை வழங்க முடிவெடுத்தனர். அவரிடம் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது, அவருக்கான சிகிச்சை அனுபவம் சீனாவில் நடந்து வரும் பரிசோதனைகளுக்கான அடித்ததளமாக இருந்ததுடன் தற்போது அமெரிக்காவிலும் அதுவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவிற்கு திரும்பி ஐந்து நாட்களில் அவர் 65 நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் விமானத்தின் பயணிகள், ஒரு விருந்தில் ஒரு குழுவினர், மருத்துவக் கவனிப்பு பெற முனைந்த உள்ளூர் மருத்துவச் சிகிச்சை மையத்தின் நோயாளிகள் ஆகியோர் அதில் உள்ளடங்குவர். இவர்களை அன்றாடம் கண்காணித்து வருவதாகவும், ஆனால் இந்த பின்தொடர்வுகள் குறித்து ஊடகங்களுக்கு வெகு குறைவான தகவல்களே வழங்கப்படுகின்றன என்றும் உள்ளூர் மருத்துவ துறைகள் தெரிவித்தன. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவருடன் மட்டுப்பட்ட சந்திப்பில் இருந்தனர் என்றாலும் அவருக்குச் சிகிச்சை வழங்கிய 16 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அதில் உள்ளடங்குவர்.

பெப்ரவரி 4 இல், அந்த ஸ்னொஹொமிஷ் உள்ளாட்சி நபர் வீட்டிலிருந்தே தொடர்ந்து குணமாகலாமென அனுப்பப்பட்டார். அவர் தொடர்ந்து தனிமையில் இருக்க வைக்கப்பட்டிருந்தார் என்பதுடன் ஸ்னொஹொமிஷ் மருத்துவ வட்டம் அவரைக் கண்காணித்து வந்தது. இந்நேரத்தில், அமெரிக்காவில் 11 உறுதி செய்யப்பட்ட கொரொனாவைரஸ் நோயாளிகள் இருந்தனர், 36 மாநிலங்கள் எங்கிலும் 260 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், “கண்காணிப்புக்கு" அப்பாற்பட்டு எந்த நடைமுறைகளும் முறைப்படுத்தப்படவில்லை. இவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டார்களா அல்லது தொடர்ந்து மீள மதிப்பிடப்படுகிறார்களா என்பது தெளிவின்றி உள்ளது.

பெருநில சீனா பல நகரங்களில் பாரிய தடுப்புமுறைகளை முறைப்படுத்திய பின்னர் உலக சுகாதார அமைப்பு ஓர் உலகளாவிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியது. இந்த சந்திரோதய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்னரும் ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் 420 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், புதிய உயிரிழப்புகளும் உறுதி செய்யப்பட்டிருந்தன.

இத்தருணம் வரையில், பல ஆய்வுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் இந்த தொற்றுநோயின் அசாதாரண இயல்பை எடுத்துக்காட்டி இருந்தன. அது உயர் விகிதத்தில் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு தொற்றக்கூடியதாக உள்ளது. தேசிய எல்லைகளைப் புறக்கணித்து, அது இப்போது 68 நாடுகளைப் பாதித்துள்ளது. பெரும்பாலான நோயாளிகளுக்குக் காய்ச்சல் ஆரம்ப அறிகுறியாக இருக்கவில்லை. இந்த வைரஸ் நீண்ட முதிர்வு காலம் கொண்டிருப்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் சிக்கலாக உள்ளது. பரிசோதனைகளில் அந்நோய் இல்லை என்று கண்டறியப்பட்ட சில நோயாளிகள் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் மீண்டும் பரிசோதனையில் அவர்களுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் குணமாக்கப்பட்ட நோயாளிகளை அது மீண்டும் தாக்கும் என்பது அரிதாக ஏற்படலாம் என்றாலும், அவர்களும் இந்த வைரஸைத் தொடர்ந்து எடுத்துச் சென்று ஒரு தொற்றுநோய் அபாயத்தை முன்னிறுத்தக்கூடும்.

இந்நோய் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உலகெங்கிலும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில், இப்போது 89,071 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,039 இல் நிற்கிறது, அதில் பெரும் பெரும்பான்மையினர், அதாவது 2,803 பேர், சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இத்தாலி இரவோடு இரவாக 566 புதிய நோயாளிகளை உறுதிப்படுத்தியது, அங்கே 1,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரண எண்ணிக்கை 34 இல் உள்ளது. அந்நாட்டின் தொழில்துறை எந்திரமாக விளங்கும் மற்றும் அதன் தொழில்துறை வெளியீட்டை 40 சதவீதமாக கணக்கில் கொண்டுள்ள வடக்கு இத்தாலியில் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன் பொருளாதாரம் மிகப்பெரும் தாக்கத்தை அனுபவிக்குமென எதிர்நோக்கப்படுகிறது.

பிரான்ஸ் 30 புதிய நோயாளிகளைக் கண்டுள்ளதுடன் அந்நாட்டில் Covid-19 நோயாளிகளின் எண்ணிக்கை 130 ஆக உள்ளது. மூடப்பட்ட இடங்களிலும், அத்துடன் திறந்தவெளி சூழல்களிலும் 5,000 க்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்க ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். இது விளையாட்டு நிகழ்வுகள் மீதும் மற்றும் நில-கட்டிட வியாபார கருத்தரங்கங்கள் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அது இப்போது தொடர்ந்து நடந்து வரும் மஞ்சள் சீருடை போராட்டங்கள் போன்ற அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கைகளை பிரயோகிக்கவும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

சீனாவில் 202 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதையும் விஞ்சி, தென் கொரியாவில் 586 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தென் கொரியா எங்கிலும், இப்போது 4,212 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் உள்ளனர் மற்றும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரஸ் அறிகுறியை அலட்சியப்படுத்தியதற்காக சின்சியோன்ஜி தேவாலயம் லீ மேன்-ஹீ ஸ்தாபகருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யுமாறு சியோல் நகர அரசாங்கம் வழக்குதொடுநர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ், எல்ஜி டிஷ்ப்ளே, ஹுண்டாய் வாகனத்துறை நிறுவனங்கள் ஆகியவை உற்பத்திகளைத் மீண்டும் தொடர்வதன் மீது ஏற்படும் பாதிப்புகளால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

ஈரானில், இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்புகளை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லையென மக்கள் உணர்வதால் அவர்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. அங்கே இந்த வைரஸ் மரண எண்ணிக்கை 54 ஐ எட்டியுள்ளது மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 978 இல் உள்ளது, என்றாலும் இது இன்னும் அதிகமாக இருக்கலாமென அஞ்சப்படுகிறது. கொம் நகரில் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர் Ziba Rezaie சுருக்கமாக கூறுகையில், “தொற்றுநீக்கிகளின் மணம் எனது கெட்டகனவு போல் வந்துகொண்டிருக்கின்றது. இந்நகரமே ஒரு கல்லறையைப் போல, ஒரு பிணவறையைப் போல காணப்படுகிறது,” என்றார்.

Loading