கொரொனாவைரஸ் சம்பந்தமாக ஐரோப்பாவுக்கு மேர்க்கெல் கூறுவது: “மரணிக்கட்டும்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதியை அதிர்ச்சிகரமாக அலட்சியப்படுத்தும் ஓர் அறிக்கையில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், மக்களில் 60 இல் இருந்து 70 சதவீதம் பேர் Covid-19 ஆல் பாதிக்கப்படுவார்களென அவரது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் அறிவித்தார்.

அவர் குறிப்பிட்டார்: “அந்த வைரஸ் தொற்றிவிட்டால், மக்களுக்கு அந்த வைரஸை எதிர்ப்பதற்கான எதிர்ப்பாற்றல் இல்லை, அதற்கு எந்த தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ இல்லை, அப்படியானால் இந்த நிலைமை நீடிக்கும் வரையில் மக்களில் 60 இல் இருந்து 70 சதவீதமான பெரும்பான்மையானோர் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.”

இந்த வைரஸ் குறித்த அடிப்படையான உண்மைகள் இன்னும் பரவலாக தெரியவில்லை என்கின்ற நிலையில், மேர்க்கெல் அவரின் அறிக்கையின் இதன் அதிர்ச்சியூட்டும் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை குறிப்பிடவில்லை. கொரொனா வைரஸ் நோயாளிகளில் 5 இருந்து 20 சதவீதத்தினர் நாட்பட்ட நுரையீரல் நோயினால் (நிமோனியாவால்) பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் உயிர் பிழைப்பதற்கு தீவிர சிகிச்சையும் செயற்கை சுவாசமும் தேவைப்படுகிறது. 48 முதல் 56 மில்லியன் ஜேர்மனியர்கள் Covid-19 ஆல் பாதிக்கப்பட்டால், 11 மில்லியன் மக்களுக்காவது தீவிர சிகிச்சை அவசியப்படும். 500,000 க்கு குறைவான மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஒரு மில்லியனுக்கு குறைவான செவிலியர்களும் இருக்கின்ற நிலையில், ஜேர்மனியின் மருத்துவத்துறை மிதமிஞ்சிய நெரிசலில் இருக்கும், கடுமையாக பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை வழக்க முடியாமல் உயிரிழக்க விடப்படுவார்கள். ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும், மரண எண்ணிக்கை பத்து மில்லியன் கணக்கில் அதிகரிக்கக்கூடும்.

மனிதகுலத்தில் 70 சதவீதத்தினருக்கு இந்நோய் தாக்கக்கூடும் என்ற மதிப்பீடுகள் ஒரு முன்கணிப்புகள் இல்லை, மாறாக இதுபோன்ற பாரிய உயிரிழப்புகளைத் தடுக்க காலந்தாழ்த்தாது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஏற்படும் அபாயச் சூழல்களைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ எச்சரிக்கை என்று மருத்துவ வல்லுனர்கள் பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

இவ்விதத்தில், மனிதகுலத்தில் 50 இல் இருந்து 70 சதவீதத்தினருக்கு இந்நோய் தொற்று ஏற்படலாம் என்று எச்சரித்த பின்னர், கொரொனா வைரஸ் நிபுணர் மருத்துவர் ரிச்சர்ட் ஹாட்செட் பிரிட்டனின் Channel Four ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “நான் முன்கணிப்புகளை கூற விரும்பவில்லை. இந்த வைரஸின் ஆற்றல் குறித்து கூறுவது முக்கியம் அதற்கேற்ப நீங்கள் இந்த அச்சுறுத்தல் எவ்வளவு அபாயகரமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வைரஸிற்கு எவ்வாறு விடையறுப்பது என்பது ஒவ்வொரு நாட்டினதும் சமூகங்களை பொறுத்த விஷயமாகும்,” என்றார்.

கடுமையான பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததன் மூலமாக அந்நோய் பரவலைத் தடுத்த பின்னர், சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, கொரொனா வைரஸை எதிர்த்து போராடுவது சாத்தியமே என்று ஹாட்செட் வலியுறுத்தினார்: “வைரஸ் இருக்கிறது தான், படுபாதகங்கள் ஏற்படுத்துவதற்கும், பெரும் விகிதத்தில் நோயை உருவாக்குவதற்கும் அதிக விகிதத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கும் அது மிகவும் ஆற்றல் மிக்கது தான். ஆனால் அவ்வாறான ஒரு நிலைமை தவிர்க்கப்படமுடியாத ஒன்றல்ல” என்றார்.

ஆனால் அதுபோன்ற வல்லுனர் ஆலோசனைக்கு நேரடியாக முரண்பட்ட விதத்தில், மேர்க்கெலோ தொடர்ச்சியாக, கட்டுப்படுத்த முடியாமல், நாசகரமாக வைரஸ் நிச்சயமாக பரவும் என்பதை ஏற்றுக் கொள்ளுவதற்கு அழைப்பு விடுத்தார். அவர் பாரியளவில் ஆதாரவளங்களைச் சர்வதேச அளவில் பாய்ச்ச வேண்டும் என்றோ, இந்த தொற்றுநோயை எதிர்த்து உலகளவில் போராடுவதற்குத் தொழில்துறை ஆற்றலையும் பயிற்றுவிக்கப்பட்ட நபர்களையும் உள்நுழைக்க வேண்டும் என்பதற்கோ அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர், ஜேர்மனியின் மருத்துவத்துறையை கொரொனா வைரஸ் நோயாளிகளைக் கொண்டு "சுமையேற்றுவதை" தவிர்க்க வேண்டும் என்றார்.

அவர் குறிப்பிட்டார்: “மக்களில் வயதானவர்கள் மற்றும் முன்னரே வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட விஷேடமான சில பிரிவினர் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். இவர்கள் தான் இந்த வைரஸால் அதிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், ஆகவே நமது சுகாதாரத்துறை சுமையேறாமல் வைத்திருக்கும் நோக்கத்தால் நமது கொள்கை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்றார்.

இதை எவ்வாறு செய்ய முடியும் என்பதைக் குறித்து மேர்க்கெல் எதுவும் கூறவில்லை. ஆனால் பிரான்சில், ஆபத்தில் உள்ள வயதான நோயாளிகள் மீது கவனம் செலுத்துவதற்காக மருத்துவமனைகள் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளைச் திருப்பி அனுப்புகின்றனர். இத்தாலியில், மருத்துவமனைகள் இப்போது செயற்கை சுவாசத்தை இளம் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன, இது 80 வயதைக் கடந்த கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளை உயிரிழக்க விட்டுவிடுகிறது. மனிதகுலத்தில் 70 சதவீதத்தினருக்கு நோய்தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைகளை "சுமையேற்ற" கூடாது என்றவொரு கொள்கை ஜேர்மனியில் மட்டுமே பத்து மில்லியன் கணக்கானவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்படும் என்பதையே அர்த்தப்படுத்தும்.

தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்தாகப்பட வேண்டும். மருத்துவத்துறைக்குள் பாரியவளில் நிதி ஆதாரங்களைப் பாய்ச்சுவதன் மூலமும் மற்றும் தனிமைப்படுத்தல்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும் மட்டுமே ஒரு நாசகரமாக தொற்றுநோயைத் தடுக்க முடியும். இதற்கு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணித்திரட்டல் அவசியப்படுகிறது. தற்போது இது பெரியளவில் செய்யப்படவில்லை ஏனென்றால் குறிப்பாக மருத்துவ-சுகாதாரத் துறை மற்றும் ஏனைய முக்கிய சமூக சேவைகளை இலக்கில் வைத்து தசாப்தங்களாக நடத்தப்பட்ட இடைவிடாத சிக்கன நடவடிக்கைகளின் அடிப்படையில் ஓர் இராணுவ-பொலிஸ் எந்திரத்தைக் கட்டமைத்துள்ள, பரந்த செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள ஆளும் வர்க்கத்தின் நிதிய மற்றும் அரசியல் நலன்களை இது குறுக்காக வெட்டும் என்பதால் ஆகும்.

இத்தகைய பிற்போக்குத்தனமான கொள்கைகளே மேர்க்கெலின் இன்றியமையா "முன்னுரிமைகள்,” இவற்றை அவர் அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பின்னர் பட்டியலிட்டார். அவர் அறிவித்தார்: “அரசின் எல்லா துறைகளும் செயல்பட வேண்டும் என்பது முக்கியம். இது பொலிஸ், ஆயுதப் படைகள் (Bundeswehr), முக்கிய உள்கட்டமைப்பு, அரசியல் முடிவுகளுக்கும் பொருந்தும், அவ்விதத்தில் தான் மருத்துவச் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்த முடியும்... இது பின்னர் வேறு ஒரு விதத்தில் பொருளாதார வாழ்வைப் பேணும் விடயமாகும்,” என்றார்.

இதுபோன்ற அறிக்கைகள் என்ன வெளிப்படுத்துகின்றன என்றால் திறமையின்மையை அல்ல, மாறாக அரசியல் குற்றகரத்தன்மையை ஆகும். நாஜி மூன்றாம் குடியரசு வீழ்ந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், நிதியியல் செல்வந்த தட்டுக்களில் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு பாசிசவாத மனோபாவம் மேலோங்கி உள்ளது, இது பண்டைய ரோம் அதன் அருங்காட்சியக அடிமைகளுக்கு கூறியதைப் பிரதிபலிக்கிறது: சாகும் வரை உழைத்து கொண்டே இரு.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து அவர்களின் கொழுத்த சொந்த பங்குத்துறைகளுக்கு ட்ரில்லியன் கணக்கிலான யூரோ பிணையெடுப்புகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைக் சுற்றி பொருளாதார வாழ்வை ஒழுங்கமைத்துள்ள இந்த பெருநிறுவன செல்வந்த தட்டு அவர்களின் சொந்த வாழ்வையும் பரந்த காகித செல்வவளத்தையும் பாதுகாப்பதற்காக மில்லியன் கணக்கில் எண்ணற்ற தொழிலாளர்கள் உயிரிழக்க விட தயாராகி உள்ளது. “கொரொனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில் பெரும் செல்வந்தர்கள் அழிவிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பிடங்களுக்குப் பறக்கின்றனர்,” என்று தலைப்பிட்ட கட்டுரையில் கார்டியன்குறிப்பிடுகையில், “இத்தாலியின் முன்மாதிரியை தொடர்ந்து தேசியளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதிலிருந்து" தப்பிக்க ஐரோப்பாவிலிருந்து வெளியேறி, செல்வந்தர்கள், “விடுமுறை புகலிடங்களுக்கோ அல்லது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அழிவிலிருந்து பாதுகாக்கும் பதுங்குழிகளுக்கோ" செல்ல "தனியார் விமானங்களை" வாடகைக்கு அமர்த்தி வருவதாக குறிப்பிட்டது.

ஐயத்திற்கிடமின்றி, ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் கொரொனா வைரஸைக் கடவுளின் வரமாக கருதுகின்றன. வயதான மற்றும் சுகவீனமுற்றுள்ள மில்லியன் கணக்கானவர்கள் இறப்பது சமூக செலவினங்களில் புதிய வெட்டுக்களை அனுமதித்து, அவர்களின் பைகளில் இன்னும் கூடுதலாக பில்லியன்களைக் கொண்டு சேர்க்கும். இது, நிதியியல் கருத்துரையாளர் ரிக் சான்டெல்லியின் பாசிசவாத வெளிப்பாட்டில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது, “ஒவ்வொருவருக்கும் நாம் இந்த புதிய கொரொனா வைரஸை வழங்க வேண்டும்,” ஏனென்றால் எந்தளவுக்கு பரவலாக அது பரவும் என்பது தொடர்பான சந்தையின் நீண்டகால நிச்சயமற்றத்தன்மை "உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரங்களைச் சூறையாடி வருகிறது,” என்றார்.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள், தங்களின் தலைவிதியை வரலாற்றுரீதியில் திவாலான ஓர் ஆளும் வர்க்கத்தின் கரங்களில் விட்டு வைத்திருக்க முடியாது. ஒரு தொற்றுநோய் பேரழிவைத் தடுப்பதற்காக போராடும் ஒரு வேலைத்திட்டம் அவர்களுக்கு அவசியப்படுகிறது. பின்வரும் முக்கிய கோரிக்கைகள் உள்ளடங்குகின்றன:
* அனைவருக்கும் இலவசமான சமமான உயர்-மட்ட சிகிச்சை! வருமானம் அல்லது காப்பீடு என இவற்றின் அடிப்படையில் இல்லாமல், அனைவருக்கும் அதிநவீன மருத்துவக் கவனிப்பு கிடைக்குமாறு செய்ய ஆதாரவளங்கள் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். வயதானவர்கள், சிறைக்கைதிகள், சுகாதாரமற்ற முகாம்களில் சிக்கி உள்ள அகதிகள், வீடற்றவர்களுக்கு அவசர சிறப்பு பாதுகாப்பு அவசியம்.

* இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தும் இடங்கள் வேண்டும்! மில்லியன் கணக்கானவர்கள் தொற்றில் பாதிக்கப்படுவதையும் மற்றும் வரவிருக்கும் வாரங்கள் மாதங்களில் உயிரிழக்கவே சாத்தியமுள்ளதையும் தடுக்க, அனைத்து அவசியமான தனிமைப்படுத்தும் இடங்கள் செயல்படுத்தப்பட வேண்டும், அதேவேளையில் அவர்கள் அனைவரினது தனிப்பட்ட கண்ணியமும் ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காரணமாக தொழிலாளர்களுக்கும், சிறு வியாபாரிகள் மற்றும் வீட்டில் தங்கியுள்ள அவர்களின் குடும்பங்களுக்கும் சமூக உதவி, உணவு மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் வழங்கப்பட வேண்டும்.

* ஆலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுயாதீனமான குழுக்களைக் கட்டமையுங்கள்! அவசியமான நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிப்படுத்த தொழிலாளர்கள் அவர்களின் கூட்டு பலத்தை ஒருங்கிணைக்கவும் அணித்திரட்டவும் தங்களைச் சுயாதீனமான ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க தவறுவது மட்டுமல்ல மாறாக மில்லியன் கணக்கானவர்களின் உயிரிழப்புகளைப் பதட்டமின்றி கணக்கிட்டு கொண்டிருக்கும் ஒரு சமூக அமைப்பு தூக்கி வீசப்படவேண்டும். முதலாளித்துவ ஆளும் வர்க்கம் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்டது. தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், சமூகத்தின் சோசலிச மாற்றம் என்பது இப்போது வாழ்வா சாவா என்ற கேள்வியாகியுள்ளது.

Loading