பிரான்சில் கொரொனாவைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்க மக்ரோன் அறிவித்ததால் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பு

Alex Lantier
14 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று மாலை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சுருக்கமாகவும், நேர்மையற்ற வகையிலும் தான் வழங்கிய உரையில், பள்ளிகளை காலவரையின்றி மூடுவதற்கு அறிவித்து, பெரியளவில் பரவி வரும் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுமாறு வெற்று அழைப்புக்களையும் விடுத்தார். ஆயினும், உலகளவில் இந்த தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவரும் நிலையில், இந்த கொடிய உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வதற்கென, புதிய சுகாதார நிதி ஒதுக்கீடு அல்லது புதிய மருத்துவமனைகளை கட்டமைப்பது அல்லது மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை சாதனங்கள் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி வசதிகளை விஸ்தரிப்பது பற்றி எதையும் அவர் அறிவிக்கவில்லை.

மக்ரோன், “திங்கட்கிழமை முதல் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், பள்ளிக்கூடங்கள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களையும் காலவரையின்றி மூடுவதற்கு,” அறிவிப்பு விடுத்துள்ளார். இது, கல்வி அமைச்சர் ஜோன்-மிஷேல் பிளாங்கேர் (Jean-Michel Blanquer) நேற்று பிற்பகல், இந்த தொற்றுநோய் பரவினாலும் கூட, அனைத்து கல்வி நிறுவனங்களும் திறந்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததற்கு எதிராக இருந்தது. மேலும் மக்ரோன், வணிக உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈட்டு தொகை வழங்கும் என்றும், பொது சுகாதார நலன்கள் கருதி மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியங்களை வழங்கும் என்றும் அறிவித்தார்.

வயதானவர்களின் ஓய்வு இல்லங்களுக்கு வருகைதருவதை தடை விதிப்பது, அனைத்து நெருக்கடியற்ற அறுவைசிகிச்சைகளை தள்ளிப்போடுவதன் மூலம் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை பெருக்குவது, இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள நகராட்சித் தேர்தல்களுக்கான நடவடிக்கைகளை தொடர முடிவு செய்திருப்பது போன்ற பிற நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

தனிப்பட்ட தொடர்பை கட்டுப்படுத்த மற்றும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்தவரை மக்களை வீட்டிலேயே அடைத்துவைத்து தனிமைப்படுத்துவது மிக அவசியமானது தான். அதேவேளை மக்ரோனின் திட்டம் அதன் ஆரம்பத்திலிருந்தே அபாயகரமான குறைபாட்டுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றிகரமான தனிமைப்படுத்தல் என்பது, நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த தொற்றுநோய் பாதிப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீட்கப்பட்டு, அவர்களது தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்த பின்னர் எஞ்சியுள்ள மக்களுக்கு அவர்களால் நோய்தொற்று பரவாமலிருக்கச் செய்ய முடியும். என்றாலும், பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களாக தாங்கள் சந்தேகிக்கும் பலரை பரிசோதிப்பதையும் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதையும் மறுக்க முயற்சிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

பிரான்சில் தற்போதைய நிலவரப்படி 2,786 கொரொனாவரைஸ் நோயாளிகள் இருப்பதுடன், 61 பேர் அதற்கு பலியாகியுள்ளனர், அதாவது, ஐரோப்பாவின் இந்த தொற்றுநோய்க்கான மையப்பகுதியாக உள்ள அண்டை நாடான இத்தாலியில் தற்போதுள்ள 12,462 கொரொனாவைரஸ் நோயாளிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட 827 இறப்புக்களுடன் இதை ஒப்பிடுகையில் சிறு விகிதமாகவே உள்ளது. என்றாலும், அனைத்து நோயாளிகளையும் பரிசோதித்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பது என்பது ஏற்கனவே தங்களது சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்று பிரெஞ்சு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, பிரான்சின் அவசர மருத்துவர்கள் சங்க (Association of Emergency Doctors of France-AMUF) உறுப்பினரான டாக்டர் வில்பிரிட் சம்மட் (Wilfrid Sammut) இவ்வாறு தெரிவித்தார்: ‘பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தீவிரமாக பாதிப்படைந்தவர்கள், இந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்ட வயதானவர்கள், மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரை மட்டுமே பரிசோதிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்’.

அதன் விளைவாக, பிரான்சில் கொரொனாவைரஸ் நோய் அறிகுறிகள் காணப்படும் இளைஞர்களுக்கு பிற கொரொனாவைரஸ் நோயாளிகளின் நிலைமை எடுத்துக்காட்டப்பட்டு பின்னர் அவர்களை பரிசோதனை செய்யாமல், அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மட்டுமே சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தி பெரும்பாலும் அவர்கள் வீட்டிற்கே திருப்பியனுப்பப்படுகிறார்கள். இத்தாலியை எடுத்துக் கொண்டால், இந்த முறைகள், 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள நோயாளிகள் மத்தியிலான இறப்புக்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது, அவர்களில் ஏற்கனவே நிமோனியா பாதிப்பால் இறக்கும் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்த வழிகாட்டுதல்கள் பற்றி லூமொன்ட் (Le Monde) பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, இந்நிலையில் நோயாளிகளும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களும் “குழப்பமடைந்துள்ளனர்” என்று கூறி, பாரிஸில் உள்ள பிட்டியே-சால்பாட்ரியர் (Pitié-Salpêtrière) மருத்துவமனையின் பேராசிரியர் Eric Caumes அவர்களை பாதுகாத்ததை இடக்கரடக்கலாக குறிப்பிட்டது. மேலும் அவர், “சீனாவில் என்ன நடந்ததோ அதுதான் எங்களுக்கும் நடந்து கொண்டிருக்கிறது: ஆரம்பத்தில், அங்கு மருத்துவர்கள் அனைவரையும் பரிசோதித்தனர், ஆயினும் பின்னர் ஊடுகதிர் பரிசோதிப்பு (x-rays) மூலமாகவே நோயைக் கண்டறிந்தனர்” என்று கூறினார். என்றாலும், சீனாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள சூழ்நிலைகள் தெளிவாக வேறுபட்டவை. சீனாவில் இளம் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு ஊடுகதிர் பரிசோதிப்பு மேற்கொள்ளப்பட்டது, ஆனால் ஐரோப்பாவில் சுகாதார அதிகாரிகள் ஏனோ அதிகரித்தளவில் அதைச் செய்வதற்கு மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்.

இது, இலட்சக்கணக்கான ஜேர்மனியர்கள் கொரொனாவைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைக்கு “அதிக சுமையை” அவர்கள் தரக் கூடாது என்று கூறிய, மக்ரோனின் கூட்டாளியான ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அறிவித்த பாசிசக் கொள்கையையே எதிரொலிக்கிறது.

மக்ரோன் தன்னை சுயநல தேசியவாதத்தின் எதிர்ப்பாளராக இழிந்த முறையில் காட்டிக் கொண்டு, அதனடிப்படையில் பிரெஞ்சு மக்களிடம் ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்கக் கோரும் வகையில், இந்த மோசமான கொள்கைக்கு ஒரு “முற்போக்கான” வெற்று முத்திரை கொடுப்பதற்கு முயன்றார். “தேசியவாத தனிமை” இன் ஆபத்து குறித்து எச்சரித்து, அவர் மேலும், “இந்த நுண்கிருமிக்கு கடவுச்சீட்டு கிடையாது. நாம் நமது படைகளை ஒருங்கிணைத்து, நமது பதிலிறுப்புக்களை ஒன்றிணைத்து, ஒத்துழைக்க வேண்டும். ஐரோப்பிய கூட்டுயைப்பு தற்போது மிக அவசியம் என்பதால், அது முன்னோக்கிச் செல்வதை நான் உறுதி செய்வேன்” என்று தெரிவித்தார்.

இது ஒரு அரசியல் பொய். உண்மையில், கொரொனாவைரஸ் தொற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முன்னணி சக்திகளால் பின்பற்றப்படும் சுயநல மற்றும் தேசியவாத கொள்கையை அம்பலப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தேசியளவில் கையிருப்பில் வைக்க கோரியுள்ளது, இந்நிலையில், ஜேர்மனியோ, ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் இறந்தாலும், இத்தாலியின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையின் பெரும்பகுதி மிக மோசமாக பாதிப்படைந்த நோயாளிகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் உதவியை கோரும் அவசர விண்ணப்பங்களை புறக்கணித்து, மருத்துவ பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

“ஐரோப்பிய ஒருங்கிணைப்பு” என்று மக்ரோன் குறிப்பிடுவது உயிரைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக நிதிச் சந்தைகளையும் பெரும் செல்வந்தர்களையும் பிணையெடுக்க தேவைப்படும் பணத்தை ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank-ECB) அச்சிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். பாரிஸ் பங்குச் சந்தையின் வரலாற்றில் 12 சதவிகித வீழ்ச்சியுடனான மிக மோசமான ஒரு நாள் செயல்பாட்டைத் தொடர்ந்து உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சி நேற்று கட்டவிழ்ந்ததாக மக்ரோன் பேசினார். பல நிதி மதிப்புரையாளர்கள், ECB அதன் விகிதங்களை 0.5 – 0.75 சதவிகித அளவிற்கு மேலும் குறைக்காதது குறித்தும், 2008 வோல் ஸ்ட்ரீட் முறிவுக்குப் பின்னர் வங்கி பிணையெடுப்புக்களுக்காக கிட்டத்தட்ட 3 டிரில்லியன் யூரோக்களுக்கு பதிலாக 120 பில்லியன் யூரோக்களை மட்டும் அச்சிடுவது குறித்தும் அதனைத் தாக்கி பேசினர்.

முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோன், நிதிச் சந்தைகளுக்கு மிக அதிகமான ECB நிதி செலுத்துதலை அவர் கோருவதாகக் கூறினார். “ஐரோப்பிய மத்திய வங்கி அதன் முதல் முடிவுகள் பற்றி ஏற்கனவே எங்களுக்குத் தெரிவித்துள்ளது,” என்று அவர் கூறினார். மேலும், “அவை போதுமானதாக இருக்குமா? நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஐரோப்பா தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஒழுங்கமைக்கப்பட்ட, பாரிய முறையில் எதிர்வினையாற்றும்” என்று தெரிவித்தார்.

ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் உள்ள பல்லாயிரக்கணக்கான கொரொனாவைரஸ் நோயாளிகளுக்கான மருத்துவ கவனிப்பை மக்ரோனைப் போல, சந்தைகள் மற்றும் வங்கியாளர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட முடியாது. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டு, பின்னர் 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் உருவானதிலிருந்து செயல்படுத்தப்பட்ட ஐரோப்பாவின் சிக்கனக் கொள்கையின் முழு போக்கும் அழிவுகரமாகவும் சமூக பிற்போக்குத்தனமாகவும் இருந்ததையே கொரொனாவைரஸ் நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது. மருத்துவ கவனிப்பை அணுகுவது உட்பட அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாக்க ஊழல் நிறைந்த முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கு எதிராக ஐரோப்பா முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட வேண்டும்.

அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனத்துடன், பிரான்சின் பொது சுகாதார அமைப்புமுறை பற்றி மக்ரோன் இவ்வாறு பாராட்ட முனைந்தார்: “இந்த தொற்றுநோய் ஏற்கனவே வெளிப்படுத்தியிருப்பது என்னவென்றால், உலகளாவிய இலவச மருத்துவ பராமரிப்பு… மற்றும் நமது நாட்டின் நலன்புரி செலவுகளும் செலவுகளோ அல்லது சுமைகளோ அல்ல, மாறாக விதியின் தாக்கத்தை எதிர்கொள்கையில், விலைமதிப்பற்ற பொருட்களும், தவிர்க்க முடியாத பலங்களும் தேவைப்படும்.” மேலும், “சந்தையின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு பொருட்களும் சேவைகளும் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும்” என்பதே இந்த தொற்றுநோயிலிருந்து அவர் முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

மக்ரோன் விளையாடுகின்றார் என்று யார் நினைக்கிறார்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளாக, சமூக சமத்துவமின்மை, மற்றும் இரயில்வே துறையை தனியார்மயமாக்கும் அவரது கொள்கைகளுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள், பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய வெட்டுக்கள், மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு எதிரான “மஞ்சள் சீருடையாளர்களின்” ஆர்ப்பாட்டங்களை கொடூரமாக நசுக்குவதற்கு கலகப் பிரிவு பொலிசாரை அவர் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, அவர் தனது ஓய்வூதிய வெட்டுக்களுக்கான திட்டங்களை சட்டமன்றத்தின் மூலம் நிறைவேற்றி முடித்து, வேலையின்மை காப்பீட்டையும் குறைத்த பின்னர், சுகாதாரப் பாதுகாப்புக்கு நிதியளிப்பதற்கான பிரான்சின் சமூக பாதுகாப்பு அமைப்புமுறையில் அடுத்தக்கட்ட நிதி வெட்டுக்களுக்கு அவர் திட்டமிடுகிறார் என்று பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்ரோனின் பொய்யான வாக்குறுதிகளுக்கு போலி-இடது ஏமாற்றுவாதியான ஜோன்-லூக் மெலோன்சோனின் (Jean-Luc Melenchon) பாராட்டுக்கள் கிடைத்தது. “தர்க்கங்கள்” கூடாது ஆனால் “ஒற்றுமையும் ஒத்திசைவும்” இருக்க வேண்டும் என்று கோரி, மெலோன்சோன் மக்ரோனுக்கு மனம் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும், “சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மாதிரி செயலிழந்துவிட்டது மற்றும் அனைவரும் முன்னுரிமையுடன் கூடிய கவனிப்பைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதியை நம்பச்செய்வதற்கு நெருக்கடி ஒன்று தேவைதான், உண்மையில் இது சர்வதேச அளவிலான நெருக்கடி” என்றார்.

பரவலாக வெறுக்கப்படும் மக்ரோனிடம் நப்பாசைகளைத் தூண்டுவதற்கான மெலோன்சோனின் முயற்சிகள் அபத்தமானவையே. வர்க்கப் போராட்டத்தின் புதிய எழுச்சிகள் தயாராகி வருகின்றன. இந்த சூழலில், கொரொனாவைரஸ் தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது, அதாவது, பிரான்சிலும் அதற்கு அப்பாலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த தொற்றுநோய் பாதிப்பாளர்களுக்கு மருத்துவ கவனிப்பு வழங்க மறுப்பதைத் தடுக்க, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள் மெலோன்சோன் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து சுயாதீனமானதாக அது இருக்க வேண்டும். அதற்காக தொழிலாளர்கள் போராட வேண்டியிருக்கும்:

• அனைவருக்கும் சமமான தரமான இலவச மருத்துவ கவனிப்பு வழங்கப்பட வேண்டும். இந்த தொற்றுநோய்க்கான சிகிச்சைக்கு, சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்துறை, பணியாளர்கள் மற்றும் நிதி ஆதாரங்களின் ஒரு பாரிய அணிதிரட்டல் தேவைப்படும். இலாபங்களை கோரும் சந்தைகள் உயிர்களை காக்கும் மருத்துவ சேவையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது.

• தனிமைப்படுத்தலின் போது கண்ணியமான நிலைமைகளை பாதுகாக்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், மேலும் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கட்டாயப்படுத்தப்படும் அனைவருக்கும் சமூக ஆதரவு, உணவு மற்றும் அனைத்து தேவைகளும் கிடைக்கப் பெற வேண்டும்.

• சுயாதீனமான தொழிற்சாலை மற்றும் அண்டை குடியிருப்புப் பகுதி குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், தொழிலாளர்கள் தங்களது கூட்டு வலிமையை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுடன், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக உரிமைகளை மேலும் தாக்குவதற்கான ஒரு சாக்குபோக்காக முதலாளித்துவ பொலிஸ் அரசுகள் தனிமைப்படுத்தலைப் பயன்படுத்தாது இருப்பதை உறுதிப்படுத்துவதும் இதில் அடங்கும்; அதற்கு மாறாக, தனியார் இலாபத்திற்காக என்றல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் சமூகத்திற்கான ஒரு சோசலிச மாற்றத்தை முன்னெடுக்க தனது கரங்களில் அதிகாரத்தின் சக்தியை ஒருமுனைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

Trump’s coronavirus address: Ignorance, xenophobia and helplessness
[12 March 2020]
கொரொனாவைரஸ் சம்பந்தமாக ஐரோப்பாவுக்கு மேர்க்கெல் கூறுவது: “மரணிக்கட்டும்"

[12 March 2020]

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட என்ன செய்ய வேண்டும்

[6 March 2020]

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!

[28 February 2020]