தொற்றுநோய்க்கான புதிய மையப்பகுதியாக ஐரோப்பா மாறி வருகின்ற நிலையில்,

அமெரிக்காவில் கொரொனாவைரஸ் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரி ஒப்புக்கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனாவைரஸ் நோய்தொற்றால் உருவாகும் கோவிட்-19 நோயினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வெடித்துப் போகும் அளவிற்கு அதி விரைவாக பரவி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அனைத்தும் முழு மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை செயல்படுத்தியுள்ளன. மேலும் பெரும்பாலான ஏனைய நாடுகளில் அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளியன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), சீனாவைக் காட்டிலும் ஐரோப்பா தான் தற்போது தொற்றுநோயின் மையப்பகுதியாக இருப்பதாக அறிவித்தது. இத்தாலி 24,747 கொரொனாவைரஸ் நோயாளிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட 1,800 க்கும் மேற்பட்ட இறப்புக்களால் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அதாவது, சீனாவைக் காட்டிலும் அங்கு கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 80,649 ஆக உயர்ந்து, 3,000 க்கும் மேற்பட்டவர்கள் அதற்கு பலியான பின்னர், இந்த தொற்றுநோய் பரவுவது குறையத் தொடங்கியது. இத்தாலிய மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் விகிதாசாரரீதியால் மிகஅதிக எண்ணிக்கையாக அது உள்ளது.

எவ்வாறாயினும், ஏதேனுமொரு பயனுள்ள நடவடிக்கையை எடுப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் வேண்டுமென்றே தவறுவதன் விளைவு மில்லியன் கணக்கானோரை அமெரிக்க மக்கள் உயிரிழப்பதற்கான வழியை திறந்துவிடும் என்ற நிலையில், இந்த தொற்றுநோய்க்கான அடுத்த மையப்பகுதியாக அமெரிக்கா மாறக்கூடும். ஞாயிறன்று State of the Union என்ற CNN நிகழ்ச்சியில், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் (National Institute of Allergy and Infectious Diseases) இயக்குநரான டாக்டர் அந்தோனி ஃபவுசி (Anthony Fauci), “அமெரிக்காவில் இலட்சக்கணக்கானோர் இறக்கக்கூடும் அல்லது, மோசமான நிலைமையை அடையுமானால் மில்லியன் கணக்கானோர் இறக்கலாம் என்பதற்கான மதிப்பீடுகள் உள்ளன. அது நடப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க மக்களிடம் உங்களால் கூற முடியுமா?” என்று கேட்கப்பட்ட போது, அவர் “இது சாத்தியம்,” என்றே பதிலளித்தார்.

மார்ச் 15, 2020 ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸின் கியூசன் நகரின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு சோதனைச் சாவடியில் பெருநகரத்திற்குள் நுழைவதற்கு முன்னர் இராணுவ சிப்பாயின் மூலமாக ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது (ஏ.பி. ஃபோட்டோ/ஆரோன் ஃபவிலா)

பல நாடுகள் அவர்களது எல்லைகளுக்குள் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்காமல் இருப்பதைக் குறிப்பிட்டு, “பெரியளவில் தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளான பிற நாடுகளின் அனுபவத்தைப் பார்க்கும் எந்தவொரு நாடும், ‘அது எங்களுக்கு நடக்காது’ என்று நினைப்பது ஒரு கொடிய தவறாகிவிடும் என்று வெள்ளியன்று WHO எச்சரித்தது.

என்றாலும், ஜனாதிபதி ட்ரம்ப் மில்லியன் கணக்கான உயிர்களை இழக்கக்கூடிய சாத்தியம் இருப்பது குறித்து கவலைப்படாமல், நிதிச் சந்தைகளில் டிரில்லியன் கணக்கில் டாலர்களை பாய்ச்சுவது பற்றி கவலைப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், தொற்றுநோய் குறித்த வெள்ளை மாளிகையின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தனது தொடக்க உரையில், சுகாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க மக்களின் அச்சங்களைப் பற்றி பேசாமல், ஆசிய சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அவர்களின் வட்டி விகிதங்களை 1.25 இல் இருந்து 0.25 சதவிகிதமாகக் குறைத்ததற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் டாலரில் உச்சபட்ச அளவாக, மத்திய வங்கியும் 700 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியது.

ஜேர்மன் தினசரி நாளிதழான Die Welt இன் அறிக்கையின் படி, கொரொனாவைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தும் ஒரு தடுப்புமருந்தை உருவாக்க வேண்டும் “அதிலும் அது அமெரிக்காவிற்காக மட்டுமே” உருவாக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன், சாத்தியமுள்ள போட்டியாளர்களுக்கு எதிராக இந்த தொற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் போட்டியில் வெற்றி காண்பதில் வெள்ளை மாளிகையும் ஆர்வமாக உள்ளது. கோவிட்-19 தொற்றுநோயை குணப்படுத்துவதற்கான அவர்களின் ஆராய்ச்சிகளின் பிரத்தியேக உரிமைகளைப் பெறுவதற்காக ஜேர்மனிய மருத்துவ நிறுவனமான CureVac இற்கு “பெரும் தொகைகளை” ட்ரம்ப் வழங்க முன்வந்தமை வஞ்சனையான முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. இது, வணிக ரீதியான அனுகூலத்தை அல்லது மூலோபாய போட்டியாளர்களின் வாழ்வா சாவா என்ற ரீதியிலான சக்தியை அல்லது இரண்டையும் பெறுவதற்கான உந்துதலை குறிப்பதாக உள்ளது இல்லையா.

இந்த தொற்றுநோயின் நிலை, அனைத்து நம்பகமான மதிப்பீடுகளின் படி, மில்லியன் கணக்கானவர்களை பேரழிவிற்குள் தள்ளுவதற்கு விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப் படி, உலகளவில் 167,638 கோவிட்-19 நோயாளிகள் இருந்தனர். சீனாவிற்கு வெளியே உள்ள கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சீனாவிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையான 80,849 ஐ காட்டிலும் அதிகமானதாக உள்ளது. அங்கு கொரொனாவைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த 76,219 நோயாளிகளில் 66,931 பேர் தற்போது சீனாவில் உள்ளனர். அதாவது, தற்போது 80,658 உயிர்ப்புடன் தொற்று பாதிப்பிலுள்ள நோயாளிகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவிலும், ஈரானிலும் உள்ளனர், அவர்களில் 5,655 பேர் கடுமையான அல்லது நெருக்கடியான நிலையில் இருப்பதாக கருதப்படுகிறார்கள்.

கோவிட்-19 இன் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 6,456 ஆக உள்ளது. இத்தாலி, ஈரான் மற்றும் தற்போது ஸ்பெயின் ஆகிய நாடுகள் புதிய இறப்புக்களின் அதிகளவிலான தினசரி விகிதங்களைக் கொண்டுள்ளன, இது 4 சதவிகிதம் அல்லது அதற்கு மேலாக இருந்து வருகிறது. தொற்றுநோய் பரவிய ஆரம்பகட்டங்களில், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில், இறப்பு குறியீட்டு விகிதங்கள் 2.5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்து வந்தன. சுவிட்சர்லாந்த், புதிய நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை 842 என அறிக்கை வெளியிட்ட நிலையில், புதிய நோயாளிகளின் பேரழிவுகர அதிகரிப்பைக் காணும் நாடுகளின் பட்டியலில் இதுவும் தற்போது இணைகிறது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு வேறுபடுவதற்கான காரணங்கள் சிக்கலானவை. அவற்றில், பொது சுகாதாரம் மற்றும் மக்களின் வயது, பரிசோதனைக்கான வரம்புகளின் காரணமாக சமூகத்தில் அறியப்படாத பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையில் எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் போன்றவை அடங்கும்.

தொற்றுநோயின் வேகமான பரவல் குறிப்பிடத்தக்கது. நான்கு வாரங்களுக்கு முன்பு, பெப்ரவரி 20 அன்று, 38 வயதான ஒரேயொரு இத்தாலியர் மட்டுமே அந்த நாட்டில் கோவிட்-19 பாதிப்பாளராக இருந்தார். லோம்பார்டி பிராந்தியத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் இத்தொற்று உள்ளூரில் அதிவிரைவாக பரவி கட்டுப்பாட்டை மீறியது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்களுக்கான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இறுதியில், மார்ச் 12 அன்று, அந்த நாடு முழுவதுமாக மக்கள் வீட்டிற்குள் அடைத்துவைத்திருக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், அவசர சிகிச்சை பிரிவிற்கு தொடர்ந்து புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்ததால் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை சீர்குலைந்தது. பெர்காமோவில் உள்ள போப் ஜோன் XXIII மருத்துவமனையைச் சேர்ந்த Roberto Cosentini, “இது ஒரு அலை போன்றது. தற்போது ஒரு நாளைக்கு சுமார் 60-80 புதிய கோவிட்-19 நோயாளிகள் அவசரப் பிரிவிற்கு வந்து சேரும் நிலையை எதிர்கொண்டுள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர் மிக மோசமான நிலையில் உள்ளனர், மேலும் அவர்கள் அனைவரும் மாலை 4 இல் இருந்து 6 மணிக்குள்ளான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதிலிருந்து, பிற்பகல் முடிவுறும் நேரத்தில் நோயாளிகளின் சுவாசக் கோளாறு மோசமடைகிறது என்பதை நாங்கள் அறிந்தோம், மேலும் ஒவ்வொரு நாளும் குறுகிய நேரத்திற்குள் மிகச் சிக்கலான நிலையிலுள்ள நோயாளிகளில் ஒருவரையடுத்து மற்றொருவரை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை இப்போது நாங்கள் அறிகிறோம்” என்று தெரிவித்தார்.

இத்தாலியில் இந்த தொற்றுநோய் பரவலினால் ஏற்பட்ட மருத்துவமனை அனுபவம் சீனாவைக் காட்டிலும் மிகுந்த கவலைக்குரியது. JAMA வலைத் தள செய்தியின் படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்படும் நோயாளிகளின் விகிதம் அனைத்து உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளில் 12 சதவிகிதமாகவும், மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனைத்து உள்நோயாளிகளில் 16 சதவிகிதமாகவும் உள்ளது தெரியவருகிறது. இதற்கு மாறாக, சீனாவில், கோவிட்-19 நோய் பாதிப்புள்ள நோயாளிகளில் 5 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்க வேண்டிய தேவை இருந்தது.

வடக்கு இத்தாலியில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் அனைவரும் கடந்த மூன்று வாரங்களாக தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். அங்கு அண்ணளவாக 350 பேர் பாதிக்கப்பட்டு, சிலர் இறந்துள்ளனர். வடக்கு நகரமான கிரெமோனாவில் உள்ளூர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரான Francesca Mangiatordi, இத்தாலிய தொலைக்காட்சியில், “சரீர ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாங்கள் எங்களது கடைசி முயற்சியில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

7,753 மொத்த கொரொனாவைரஸ் தொற்று நோயாளிகளையும், இருபத்தி நான்கு மணிநேர காலத்திற்குள் கண்டறியப்பட்ட 1,362 க்கு மேற்பட்ட புதிய நோயாளிகளையும் கொண்ட ஸ்பெயின், ஐரோப்பாவில் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக மாறியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு, மருத்துவ கவனிப்பை அணுகுவதற்கு அல்லது வேலைக்குச் செல்வதற்கு என பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை இது கட்டுப்படுத்தியுள்ளது. நேற்று 95 புதிய இறப்புக்கள் நிகழ்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 291 ஆக அங்கு உயர்ந்துள்ளது. பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sanchez) அறிவிப்பின் படி, அனைத்து அருங்காட்சியங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் என அனைத்தும் மீள் அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

பிரான்சில் 4,499, ஜேர்மனியில் 5,795, மற்றும் இங்கிலாந்தில் 1,372 என்ற எண்ணிக்கையில் கோவிட்-19 பாதிப்பாளர்களைக் கொண்டு இந்த நாடுகளும் இதேபோன்ற தீவிரப்படுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. என்றாலும், இந்நாடுகளின் இறப்பு எண்ணிக்கைகள் இங்கிலாந்துடன் இத்தாலியின் விகிதம் 2.6 சதவிகிதமாக இருப்பதிலிருந்து தொடர்ந்து மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நோய் பரவல் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்திலும் தொடர்கிறது, அங்கு முறையே 214 மற்றும் 153 நோய்தொற்று பாதிப்பாளர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்காட்டிஷ் அரசாங்கம், அவர்களது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இந்நோயாளிகளின் எண்ணிக்கையின் இருமடங்கு அளவிற்கு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

ஜேர்மனியும் பிரான்சும் மருத்துவ சாதனங்களுக்கான உள்நாட்டு விநியோகஸ்தர்கள் மற்றும் பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்த்து தேசியளவிலான கையிருப்புக்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்வதில் தீவிரமாக உள்ளன. ஜேர்மனியில் ஏறக்குறைய 28,000 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன, அதில் 25,000 படுக்கைகளில் செயற்கை காற்றோட்ட சாதனம் பொருத்தப்பட்டுள்ளன. அவர்கள் 100,000 பேருக்கு 25 தீவிர பராமரிப்புக்கான படுக்கைகளைக் கொண்டுள்ளனர். அதனுடன் ஒப்பிடுகையில், இத்தாலி அதில் பாதியளவையும், இங்கிலாந்து கால்பகுதி அளவையும் கொண்டுள்ளன. பிரிட்டனின் சுகாதார செயலரான மாட் ஹான்காக் (Matt Hancock), தேசிய சுகாதார சேவை கிட்டத்தட்ட 5,000 செயற்கை காற்றோட்ட சாதனங்களையே கொண்டுள்ளது, ஆனால் அதைப்போல பல மடங்கு இங்கு தேவைப்படுகிறது” என்று Financial Times பத்திரிகைக்கு தெரிவித்தார்.

கொரொனாவைரஸ் மக்களின் ஊடாக பரவுவதால், இந்த நாடுகள் கடுமையான நெருக்கடியில் உள்ளன, ஆனால் அமெரிக்காவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பின் மோசமான நிலைமை மற்றும் அதிகாரிகளின் ஒழுங்கற்ற மற்றும் இலாப நோக்கம் மிக்க ஏற்பாடுகள் ஆகியவற்றால் அமெரிக்காவின் நிலைமைகள் மேலும் மிக மோசமாகிவிடக்கூடும்.

தற்போது 3,400 கொரொனாவைரஸ் நோயாளிகள் (457 புதிய நோயாளிகள் உட்பட) இருப்பதாகவும், அதற்கு 63 பேர் பலியாகியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டது. மில்லியன் கணக்கிலான பரிசோதனை கருவிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது மெதுவாக ஆயிரக்கணக்காக மாறியது, அவை விரைவில் அல்லது பின்னர் “பொது-தனியார் நிறுவன முன்னெடுப்பின்” மூலம் கிடைக்கும். “விடயங்கள் மோசமாகிவிடும்,” என்று நிறைவுபெறும் சில குறைமதிப்புள்ள கருத்துக்களை தெரிவிக்க டாக்டர் ஃபவுசி அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரோ, மற்ற அதிகாரிகளோ, அல்லது ஊடகங்களோ இறப்பு எண்ணிக்கை குறித்து விவாதிக்கவில்லை.

இந்த பெரும் தொற்றுநோயை கண்காணிப்பது மற்றும் எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில், மத்திய அரசாங்கம், 50 மாநிலங்கள் மற்றும் பல்வேறு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாவட்டங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான கூட்டுழைப்பு மிகக் குறைவாக உள்ளது. இதன் விளைவு நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒட்டுவேலையாக உள்ளது, ஒரு டசின் மாநிலங்களில் அனைத்து பொதுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன, ஆனால் மற்றவற்றில் அவ்வாறு இல்லை; சில மாநிலங்களில் மட்டுமே மதுபான அருந்தகங்களும் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன, ஆனால் மற்ற மாநிலங்களில் அது செயல்படுத்தப்படவில்லை; மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள், 250 க்கும் மேற்பட்டவர்கள் அல்லது 500 க்கும் மேற்பட்டவர்கள் கூடும் கூட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் எவ்வித தடைகளையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை.

ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கூடுவதை தேசியளவில் தடை செய்யுமாறு நோய் கட்டுப்பாட்டு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தன. ஆனால் CDC மேலும், “பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள் அல்லது வணிகங்கள் போன்ற அமைப்புக்களின் அன்றாட செயல்பாட்டுக்கு இந்த பரிந்துரை பொருந்தாது” என்று தெரிவித்தது. பெரும்பாலான கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன, மேலும் பெரும்பாலான பொதுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் என்று மட்டும் குறிப்பிடுவதானது, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பைப் பொருட்படுத்தாமல், தொழிற்சாலைகள் மற்றும் பிற பெரிய பணியிடங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு இது பச்சைக்கொடி காட்டுவதாக உள்ளது. மேலும், பொது சுகாதாரத்தை காட்டிலும் பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான மேலதிக அறிகுறியாகவும் இது உள்ளது.

Loading