இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து தேசிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, திங்கள்கிழமை இரவு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அதைக் கலைத்து, அடுத்த பொதுத் தேர்தலை ஏப்ரல் 25 நடத்துவதாக அறிவித்தார்.

அரசியலமைப்பை மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்வதே இராஜபக்ஷ மற்றும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இனதும் அறிவிக்கப்பட்ட குறிக்கோள் ஆகும்.

நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகத் தலைவர்கள் முன் உரையாற்றிய இராஜபக்ஷ, தற்போது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் "நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சாதகமற்றது" என்று கூறியதுடன், அரசியலமைப்பின் 19வது திருத்தம் ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் விமர்சித்தார். விரிவாக்கப்பட்ட அதிகாரங்கள் இல்லாமல் “மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாதுள்ளது” என்றும் அவர் அறிவித்தார்.

Gotabaya Rajapaksa (AP Photo/Eranga Jayawardena)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் முந்தைய “ஐக்கிய” அரசாங்கம், ஜனாதிபதியின் சில அதிகாரங்களைக் குறைப்பதற்காக 19வது திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் கீழ், பதவிக் காலம் இரண்டு முறைக்கு மட்டுப்படுத்தப்பட்டது; பாராளுமன்றத்தை அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தில் குறைந்தது நான்கரை ஆண்டுகளாவது பணியாற்றும் வரை ஜனாதிபதி அதைக் கலைப்பதற்கு தடை விதிக்கிறது; பிரதமருடன் கலந்தாலோசித்து மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க முடியும்; சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலமே உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமிக்க முடியும்; மற்றும் ஜனாதிபதி அமைச்சரவை இலாகாவை வைத்திருப்பதை தடை செய்தலும் அடங்கும். எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை நீக்குவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை சிறிசேன கைவிட்டார்.

இந்த கட்டுப்பாடுகளை நீக்குவதையும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக மீட்டெடுப்பதையும் இராஜபக்ஷ விரும்புகிறார்.

பெப்ரவரி 4 அன்று நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அவர், “[மக்களுக்கான] இந்த அர்ப்பணிப்பை நான் செயல்படுத்துவதை பொது அதிகாரிகளோ, சட்டம் இயற்றுபவர்களோ அல்லது நீதித்துறையோ தடைசெய்வர் என எதிர்பார்க்கவில்லை,” என்றார் - அதாவது பாராளுமன்றமும் நீதித்துறையும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் ஒத்திசைவான கருவிகளாக செயல்பட வேண்டும் என்பதாகும்.

இராஜபக்ஷ, கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றது மக்கள் ஆதரவின் காரணமாக அல்ல. மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை ஈவிரக்கமின்றி அமுல்படுத்திய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீதான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொண்டதன் மூலமேயாகும்.

தேர்தலின் போது, போலி இடது குழுக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளும், ஆளும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை "குறைந்த தீமை" என்று தூக்கிப் பிடித்தன. இது முந்தைய அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு வாக்குகள் இராஜபக்ஷவுக்கு கிடைப்பதை உறுதி செய்தது.

இராஜபக்ஷ மற்றும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தேர்தல் பிரச்சாரமானது முஸ்லீம் எதிர்ப்பு வாய்ச்சவடால், தமிழர்-எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் இராணுவ மற்றும் சிங்கள அதிதீவிரவாத குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதையும் மையமாகக் கொண்டிருந்தது. சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தை "பலவீனப்படுத்துகிறது" என்று இராஜபக்ஷ குற்றம் சாட்டியதுடன் "தேசிய பாதுகாப்பை" வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

தேர்தலுக்குப் பின்னர், இராஜபக்ஷ உடனடியாக பிரதமர் விக்ரமசிங்கவை இராஜினாமா செய்யுமாறு கோரியதுடன் அவரும் ஒப்புக் கொண்டு வெளியேறினார். அடுத்து இராஜபக்ஷ தனது மூத்த சகோதரரும், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவருமான மஹிந்த இராஜபக்ஷவை சிறுபான்மை ஆட்சியின் பிரதமராக நியமித்தார்.

புதிய இராஜபக்ஷ ஆட்சி அதனது நிர்வாகத்தை இராணுவமயமாக்க விரைவாக நகர்ந்துள்ளது. பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் பல முக்கிய அரசாங்க பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளது. ஸ்தாபக பாராளுமன்றக் கட்சிகள் இந்த நியமனங்களை எதிர்க்கவில்லை.

ஏப்ரல் 25 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, இராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., தங்கள் இனவாத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இராணுவத்தின் மத்தியில் தனக்கு ஆதரவை உயர்த்தும்.

இந்த முயற்சிகளுக்கு இணங்க, 2015 அக்டோபரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகிக்கொள்வதாக இராஜபக்ஷ அரசாங்கம் அறிவித்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுடன் இலங்கை இராணுவத்தை அச்சுறுத்துவதால் இந்தத் தீர்மானம் தேசிய பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது என்று அது அறிவிக்கின்றது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட போரின் இறுதி கட்டங்களில் இந்த போர் குற்றங்கள் செய்யப்பட்டன.

ஜனாதிபதி இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், அவரது நிர்வாகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், கஹடகஹா சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் 200,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்கொண்டது. பல்வேறு துறைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலிருந்து புதிய அரசாங்கத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 15,000 தொழிலாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி கொழும்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் கீழ் வளர்ந்த வெகுஜன எதிர்ப்பின் தொடர்ச்சியாகும்.

மஹிந்த இராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை கவிழ்ப்பதற்காக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்குப் பின்னர் சிறிசேன ஜனாதிபதியானார். பெய்ஜிங்குடனான மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் நெருங்கிய உறவினாலும், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் புவி-மூலோபாய இராணுவ திட்டமிடலின் பாதையில் இலங்கையை மீண்டும் கொண்டுவருவதற்காகவும் அவர் நீக்கப்பட வேண்டும் என்று வாஷிங்டன் விரும்பியது.

அடுத்து ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகம், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இந்தியாவுக்கும் ஏற்ப இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைத்ததாலும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியதாலும் பரவலான சமூக எதிர்ப்புக்கு அது முகங்கொடுத்தது.

இந்த வெகுஜன சீற்றம், 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பெற்ற தேர்தல் வெற்றியில் ஒரு சிதைந்த வடிவத்தில் வெளிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980 இல் அரசாங்கத்துறை பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், இலங்கைத் தொழிலாளர்களின் மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த வெடிப்பு சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்திற்குள் கூர்மையான பிளவுகளை உருவாக்கியது.

இதற்கு ஒரு அரசியல் சதி மூலம் பிரதிபலித்த சிறிசேன, விக்ரமசிங்கவை நீக்கி அவருக்கு பதிலாக பிரதமராக மஹிந்த இராஜபக்ஷவை நியமித்தார். எவ்வாறாயினும், வாஷிங்டன் இராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை எதிர்த்ததாலும் உயர் நீதிமன்றம் சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்ததாலும் இந்த ஆட்சி கவிழ்ப்பு தோல்வியுற்றது.

இலங்கையின் ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளின் பிற்போக்குத்தனமான தொழிலாள வர்க்க விரோத குணாம்சம், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு அனுமதித்ததன் மூலம் வெளிப்பட்டது. ஜனாதிபதி சிறிசேன, விக்ரமசிங்க மற்றும் மஹிந்த இராஜபக்ஷ உட்பட உளவுத்துறை எந்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும், இந்த தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தாலும் அவை நடக்க அனுமதித்தனர். அடக்குமுறை அரச எந்திரத்தை வலுப்படுத்தவும், முஸ்லீம்-விரோத பேரினவாத சக்திகளைத் தூண்டிவிடவும் இந்த தாக்குதல்கள் சுரண்டிக்கொள்ளப்பட்டன.

நேற்று, இராஜபக்ஷ அதே கூட்டத்தில், இலங்கையின் "முக்கிய பிரச்சினை பொருளாதார மேம்பாடு" என்றும் அவரது நிர்வாகம் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தும் என்றும் அறிவித்தார். இது, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் சுமையையும் பெருகிவரும் கடன் நெருக்கடியையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதற்காக கூர்மையான சமூக தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கான சமிக்ஞை ஆகும்.

சிறிசேனவின் மீதமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கன்னையும் அதன் கூட்டாளிகளும் தேர்தலில் போட்டியிட ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. உடன் ஒரு அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அமைப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. உடன் இணைந்துள்ளனர்.

எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் இந்த நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. அதன் தலைவரும் கட்சியின் “பழைய காவலருமான” விக்ரமசிங்க, தலைமையை துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைப்பதை எதிர்க்கின்றார். எவ்வாறாயினும், முன்னாள் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிலும் பெரும்பான்மையானவர்கள், பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர். ஐ.தே.க. பரவலாக மதிப்பிழந்த நிலையில், பௌத்த ஸ்தாபகத்தின் ஒரு பகுதிக்கு நெருக்கமான பிரேமதாசவால், சிங்கள இனவாத தேர்தல் பிரச்சாரத்தை திறம்பட கையாள முடியும் என்று இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கணக்கிடுகின்றனர்.

தனது கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை வென்றால் அவர் இராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றுவார் என்று பிரேமதாச சமீபத்தில் அறிவித்தார். இது ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு மாறுவதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்பதற்கான அறிகுறியாகும்.

பல தமிழ் கட்சிகளின் பிரதான கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதன் பிற்போக்கு மற்றும் கொள்கையற்ற சூழ்ச்சிகள் காரணமாக தமிழ் மக்களிடையே அவப்பேறு பெற்றுள்ளது.

2015 இல், இராஜபக்ஷவை அகற்றுவதற்கான அமெரிக்க ஆட்சி மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததுடன், ஏறத்தாழ கொழும்பு ஆட்சியின் ஒரு பங்காளியாகவும், தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பின் பாதுகாவலராகவும், எந்தவொரு போர்க்குற்ற விசாரணைகளையும் அடக்குவதற்கும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் செயல்பட்டு வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அங்கத்தினர்களான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆகியவை முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடன் அணிதிரண்டுள்ளன. இது தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு இன்னொரு தேசியவாத பொறிக்கிடங்காகும்.

ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் அதன் போலி இடது கூட்டாளிகளும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பால் பீதியடைந்துள்ளனர்.

ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்நிலை சோசலிச கட்சியின் அரசியல் நடவடிக்கைகள், இராஜபக்ஷ தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோருவதில் கவனம் செலுத்தி வரும் அதே வேளை, போலி-இடது நவ சம சமாஜ கட்சியானது ஐ.தே.க. இன் விக்கிரமசிங்க பிரிவினருடன் இணைந்துள்ளது. இந்த அமைப்புகள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்திற்கும் விரோதமானவை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஏப்ரல் 25 நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஏகாதிபத்திய போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்சி இந்த தேர்தலில் தலையீடு செய்யும். விரிவான தேர்தல் அறிவித்தலையும் விஞ்ஞாபனத்தையும் சோ.ச.க. வரும் நாட்களில் வெளியிடும்.

Loading