பிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது

Robert Stevens
19 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உயிராபத்தான கொரொனா வைரஸ் சம்பந்தமான அதன் "கூட்டு நோய் எதிர்ப்புச்சக்தி" கொள்கைக்காக போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கம் தொற்று நோயியல் நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுனர்கள் மற்றும் இதர பிற விஞ்ஞானிகளிடம் இருந்து அதிகரித்த விமர்சனத்தைச் சந்தித்தது.

கடந்த வியாழக்கிழமை டவுனிங் வீதி பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் ஜோன்சன் அறிவிக்கையில், “பிரிட்டிஷ் மக்களுக்கு நான் உண்மையை கூறவேண்டியுள்ளது: இன்னும் பல குடும்பங்கள் அவர்களின் காலத்திற்கு முன்னரே அவர்களின் அன்புக்குரியவர்களை இழக்க இருக்கிறார்கள்,” என்றார்.

இது வெளிப்படைத்தன்மை இல்லை மாறாக கொள்கையாகும். இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்து நிறுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும், பிராந்தியங்களை மற்றும் நாடுகளையே கூட விலக்கி வைப்பது உட்பட, உடனடி நடவடிக்கைகள் அவசியப்படுகின்றது என்பதற்கு மலை போல் இருக்கும் ஆதாரங்களுக்கு முன்னால், ஜோன்சன் அவர் கொள்கையின் "கட்டங்கள்" மீது நிற்கிறார், இது மிகப்பெரும் நிகழ்வுகளை இரத்து செய்வது மற்றும் பள்ளிகளை மூடுவதையும் கூட தவிர்த்துள்ளது.

Britain's Prime Minister Boris Johnson holds a news conference giving the government's response to the new COVID-19 coronavirus outbreak, at Downing Street in London, Thursday March 12, 2020. (Simon Dawson/Pool via AP)

ஏன் அவர் இவ்வாறு செய்தார் என்பது அதற்கு முந்தைய நாள் தெளிவுபடுத்தப்பட்டது, அன்று Whitehall இன் அவசர காலங்களுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (SAGE) ஓர் உறுப்பினர் டாக்டர். டேவிட் ஹால்பேர்ன் பிபிசி க்கு கூறுகையில், ஏதேனுமொரு வரையறுக்கப்படாத "தருணத்தில்", "அவர்களுக்கு அடிப்படையில் நோய் தொற்றி விடக்கூடாது என்பதற்காகவும் மற்றும் அபாயத்திலுள்ள குழுக்கள் அவர்களின் கூட்டை விட்டு வருவதற்குள், மற்றவர்களுக்கு கூட்டு நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்க செய்யும் விதத்தில், அபாயத்திலுள்ள குழுக்களை" அரசாங்கம் தனிமைப்படுத்த விரும்பலாம் என்றார்.

இந்த சேதியை மீளவலியுறுத்தும் விதத்தில், அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானத்துறை ஆலோசகர் சர் பாட்ரிக் வாலென்ஸ், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி மற்றும் ஜோன்சன் பக்கவாட்டில் நிற்க, ஊடகங்களுக்குக் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் அது வராமல் தடுப்பது சாத்தியமில்லை, அது விரும்பத்தக்கதும் இல்லை ஏனென்றால் எதிர்காலத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு சற்று நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படுகிறது [அழுத்தம் சேர்க்கப்பட்டது]” என்றார்.

COVID-19 க்கு எந்த தடுப்பு மருந்தும் இல்லை என்பதுடன், அது விரைவில் கிடைக்க கூடியதும் இல்லை என்கின்ற நிலையில், “கூட்டு நோய் எதிர்ப்புச்சக்தி" என்பது தற்போதைய இந்த வைரஸ் வெடிப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக எதிர்கால வெடிப்புகளுக்கு வேண்டுமானால் ஏற்படுத்தலாம். வாலென்ஸ் Sky News க்குத் தெரிவித்தார், “இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடியதாக, காலநிலைக்குரிய வைரஸாக ஆகக்கூடும், என்று நாங்கள் நினைக்கிறோம் … சமூகங்கள் அதற்கேற்ப நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதுதான் நீண்டகால அர்த்தத்தில் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பாகமாக இருக்கும். … சுமார் 60 சதவீதம் என்றளவுக்கு சமூக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

Whitty இன் கூற்றுப்படி இதுவே கூட குறை மதிப்பீடாக உள்ளது. அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்த Sky News பத்திரிகையாளர் ஒருவர், 70 சதவீதம் தொற்றுநோய் ஏற்பட சாத்தியக்கூறு இருப்பதை ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அறிவுறுத்தியதைக் குறிப்பிட்டதுடன், பிரிட்டன் மக்கள்தொகையில் எத்தனை சதவீதத்தினருக்குத் தொற்று ஏற்படுமென அரசாங்கம் மதிப்பிடுகிறது, எத்தனை பேர் “சொல்லப் போனால் உயிரிழப்பார்கள்" என்று நீங்கள் "நினைக்கிறீர்கள்" என்று வினவினார். Whitty பதிலளித்தார், “சொல்லப் போனால், நமது அறிவுக்குட்பட்ட படுமோசமான சூழலில் நமது அதிகபட்ச எண்ணிக்கை சான்சிலரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். உண்மையில், மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு தொற்று ஏற்படலாம் என்பதே நமது உயர்மட்ட திட்டமிடல் அனுமானமாக உள்ளது … நமது பார்வையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதம் 1 சதவீதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ உள்ளது, இருப்பினும் வயதானவர்கள் மற்றும் சுகவீனமாக உள்ள குழுக்கள் மற்றும் அடிமட்டத்திலிருக்கும் இதர குழுக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும்,” என்றார்.

“ஒவ்வொரு நோயாளியையும் அடையாளம் காண்பது இனி நமக்கு அவசியமில்லை,” என்பதையும் Whitty அறிவித்தார்.

பிரிட்டனின் 66.5 மில்லியன் மக்கள்தொகையில் 60 சதவீதத்தினரை அடிப்படையாக கொண்டு, “கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி பெருக்கம்" பெறுவது என்பது சுமார் 40 மில்லியன் மக்களுக்கு COVID-19 தொற்றும், சுமார் 8 மில்லியன் பேர் தீவிர அல்லது கடுமையான நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளாக இருப்பார்கள் என்பதை அர்த்தப்படுத்தும். Whitty இன் "அறிவுக்குட்பட்ட மிக மோசமான சூழலில்" 80 சதவீத மக்களுக்குத் தொற்று ஏற்பட்டு, மற்றும் வெறும் 1 சதவீதத்தினரின் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், 500,000 பேர் உயிரிழப்பார்கள்.

அரசாங்கம் உடனடியாக கண்டிக்கப்பட்டது. பிபிசி இன் "கேள்வி நேரம்" பகுதியில், இங்கிலாந்து பொது மருத்துவ ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் ஜோன் அஷ்டன் கூறுகையில், “இங்கேயே கதை தோற்றுவிட்டது. … நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம், அது நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும்,” என்றார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர். Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், “ஒரு வைரஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாமல், உங்களால் அதை எதிர்த்து போராட முடியாது. COVID தொற்று ஏற்படும் சங்கிலியை உடைக்க நோயாளிகளைக் கண்டறியுங்கள், தனிமைப்படுத்துங்கள், பரிசோதியுங்கள், சிகிச்சை அளியுங்கள். நாம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு நோயாளியும் நோய் விரிவாவதை மட்டுப்படுத்துகிறது. இந்த நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை அனுமதிக்காதீர்கள்,” என்றார்.

COVID-19 பரவுவதைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சனிக்கிழமை 245 வல்லுனர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தனர். நோய் எதிர்ப்பாற்றல் துறை, உயிரியல் துறை மற்றும் மருந்து மற்றும் சிக்கலான அமைப்புமுறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர். "இந்த தருணத்தில் 'நோய் எதிர்ப்புசக்தி பெருக்கத்தை நோக்கி செல்லுதல்' ஒரு நிலையான தெரிவாக தெரியவில்லை, ஏனெனில் இது தேசிய சுகாதாரத்துறை சேவையை [NHS] இன்னும் கடுமையான மட்டத்திற்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கி, ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை விட கூடுதலாக அதிக உயிர்களை அபாயத்திற்கு உட்படுத்துகிறது,” என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது.

அது பின்வருமாறு எச்சரித்தது, “பிரிட்டனில் தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறித்த தற்போதைய புள்ளிவிபரங்கள், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட மற்ற நாடுகளில் ஏற்கனவே காணப்பட்ட வளர்ச்சி போக்குகளின் அதை வரிசையில் உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில நாட்களிலேயே ஆயிர ஆயிரக் கணக்கில் இருக்கும் … இப்போது சமூக விலக்கு (social distancing) நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதன் மூலமாக, அதிகரிப்பை நிறையவே மெதுவாக்க முடியும், ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்வைக் காப்பாற்ற முடியும்,” என்று அதே புள்ளிவிபரம் குறிப்பிட்டது.

தொற்றுநோய்களின் பரிணாமம் மற்றும் தொற்றும் விதம் குறித்து ஹார்வார்டின் பொது சுகாதாரத்திற்கான T. H. சான் பயிலகத்தில் கற்பிக்கும் வில்லியம் ஹானாஜே, கார்டியனில், பின்வருமாறு எழுதினார்: “நோய் எதிர்ப்பாற்றல் பெருக்கும் தடுப்பூசிகள் குறித்து நாம் பேசுகிறோம், ஆனால் ஏன் இந்த வித்தியாசம்? ஏனென்றால் இதுவொரு தடுப்பூசி அல்ல. இது மிகப் பெரும் எண்ணிக்கையில் பல மக்களை நோயாளி ஆக்கும் ஓர் உண்மையான தொற்றுநோய், அவர்களில் சிலர் இறந்தும் போவார்கள். இறப்பு விகிதம் குறைவாக இருக்கலாம் என்றாலும் கூட, மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒரு சிறிய பகுதி என்பதே பெரும் எண்ணிக்கை தான். NHS நிரம்பி வழியும் போது இந்த இறப்பு விகிதம் அதிகரிக்கும்.”

COVID-19 பரவுவதைத் தடுப்பதில் மற்ற நாடுகளின் அனுபவ தகவல்கள் பிரிட்டன் விடையிறுப்புக்காக வழங்கப்பட்டு வருகின்றன என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை,” என்று சனிக்கிழமை Lancet பத்திரிகையின் தலைமை பதிப்பாசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹோர்டன் உட்பட பொது சுகாதார வல்லுனர்கள் குறிப்பிட்டனர் மற்றும் ஏன் என்று அறியவும் கோரினர்.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் Whitty இன் அறிக்கை மட்டும் பகிரங்கமான விளக்கமாக இருந்து, “நீங்கள் மிகவும் முன்கூட்டியே நகர்ந்தால், மக்கள் தளர்ந்து விடுவார்கள் … இது நீண்டகாலத்திற்கு இழுத்துக் கொண்டிருக்கும்,” என்றார். அரசாங்க செயலின்மைக்கு மக்கள் மீது பழிபோடும் இந்த முயற்சி 200 க்கும் அதிகமான பிரிட்டனின் உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் எதிர்க்கப்பட்டது, அது குறிப்பிடுகையில், “'நடவடிக்கைரீதியான தளர்ச்சி' குறித்து போதுமானளவுக்கு அறியப்பட்டுள்ளது என்பதிலோ அல்லது இந்த உட்பார்வஐகள் எந்தளவுக்கு தற்போதைய விதிவிலக்கான சூழ்நிலைகளுக்குப் பொருந்துகின்றன என்பதிலோ நாங்கள் சமாதானமடையவில்லை. பொதுமக்கள் மீதான ஓர் உயர்-அபாய மருத்துவ மூலோபாயத்தை அதன் அடிப்படையில் நாம் நிறுத்துகிறோம் என்றால் அதுபோன்ற ஆதாரங்கள் அவசியமாகும்,” என்று குறிப்பிட்டது.

தொழில்ரீதியில் பிரதான அமைப்பான நோய் எதிர்ப்பாற்றல் துறைக்கான பிரிட்டிஷ் சமூகம் கூறுகையில், “நோய் எதிர்ப்பாளர் பெருக்கும்" கொள்கை குறித்து அதற்கு "குறிப்பிடத்தக்க கேள்விகள்" இருப்பதாக தெரிவித்தது. “நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் போது, நோயால் பாதிக்கப்படக் கூடியவர்கள் நோய்வாய்படுவதில் இருந்து, சான்றாக சமூக விலகல் மூலமாக, பாதுகாக்கப்பட்டால் மட்டுந்தான், தீவிர நோயைக் குறைக்க" இந்த "மூலோபாயம் பயனளிக்கும். இல்லையென்றால், இதன் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டது.

“நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" அரசாங்கத்தின் "ஓர் இலட்சியம் அல்லது ஒரு மூலோபாயம்" ஆகும் என்று, சுகாதாரத்துறை செயலர் மாட் ஹன்காக்கிடம் இருந்து அந்த எதிர்ப்புகளுக்கு ஒரு சம்பிரதாயமான மறுப்பைக் கொண்டு வந்தன. ஆனால் டவுனிங் வீதி ஆதாரநபர் ஒருவர் டெய்லி மெயிலுக்குக் கூறுகையில், அரசாங்கம் உண்மையில் "பூரணமடைய செய்ய எங்களின் தலையீடுகளுக்கு நேரம் வழங்குகிறது. … அதுவும் பாரிய நோய் எதிர்ப்பு சக்திக்கு இட்டுச் செல்கிறது என்றால், அது கூடுதல் இலாபம் தான்—ஆனால் அது நோக்கம் இல்லை, என்றார்.

இதுபோன்ற அனைத்து அரைகுறை மனதுடனான மறுப்புகளைப் பார்க்கையில், அரசாங்கம் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஒரு சுண்டு விரலைக் கூட தூக்க விரும்பவில்லை என்பதையே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. சனிக்கிழமையன்று, வெறும் 37,746 நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. அரசாங்க ஆலோசனைக்கு இணங்க, பள்ளிகள், கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள், விளையாட்டு நிகழ்வுகள், அருங்காட்சியகங்கள் அல்லது கலாச்சார அமைப்புகள் எதுவுமே மூடப்படவில்லை.

இந்த தொற்றுநோயைக் கையாளும் விதம் உண்மையில் "மந்தை" படுகொலை நடைமுறைப்படுத்த, பிரிட்டனில் ஆளும் உயரடுக்கு, மூடிய கதவுகளுக்குப் பின்னால், அமைதியாக கணக்கிடுகிறது என்பதையே வெளிப்படுத்திக் காட்டுகிறது.

“கூட்டம் கூட்டமாக எதிர்ப்பாற்றலை பெருக்குவதை" அடித்தளத்தில் கொண்ட ஒரு கொள்கையை சமூக விமர்சகர்கள் சமூக டார்வினியனிசம் என்று விவரிக்கின்றனர். கனேடிய தொற்றுநோயியல் நிபுணர் ஹெலன் ஸ்காட் ட்வீட் செய்கையில், “மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் கவனத்தில் கொண்டு பாதுகாக்கும் போது தான் ‘மிகச்சிறந்தவரின் பிழைப்பு' நடக்கும் என்ற சாத்தியக்கூறு குறித்து, உலகின் குடிமகனாக, நான் மிகவும் பீதியடைந்தேன்,” என்று குறிப்பிட்டார்.

பாசிசவாத பரம்பரையின் இதுபோன்றவொரு அணுகுமுறை அதிவலது மில்லியனர் ஊடக பிரபலம் Katie Hopkins இன் மனதார்ந்த விடையிறுப்பில் வலியுறுத்தப்படுகிறது, அவர், "#பிரிட்டனில் 60%”: “நீங்கள் அனைவரும் எச்சில் சொட்டுவதை நிறுத்துவீர்களா? சுயநலமான தலைமுறை அவர்களைக் குறித்து மட்டுமே சிந்திப்பதற்காக வளர்க்கப்படுகிறது. கொரொனா வைரஸ் ஒரு குழு விளையாட்டு. அதை பெறுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுங்கள். சிறப்பானதை உணருங்கள். பெருக்கம் ஜெயிக்கும்,” என்று ட்வீட் செய்தார்.

ஜோன்சன் அரசாங்கம், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒரு நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்காகவும், டொனால்ட் ட்ரம்பின் பாசத்திற்குரிய ஹோப்கின்ஸ் போன்ற மிகப் பெரிய சம்பளம் பெறும் கைக்கூலிகளுக்காகவும் பேசுகிறது. அவர்கள் தொற்றுநோயைத் தவிர்க்க எவ்வளவு காலம் எடுக்குமோ அத்தனை நாட்களுக்கு அவர்களுக்கான தனிப்பட்ட மருந்துகளுடன், அவர்களின் ஆடம்பர சொகுசு படகுகளிலும், தீவுகள் மற்றும் "பேரிடர் பாதுகாப்பு புகலிடங்களிலும்" மறைந்து கொள்கின்ற நிலையில், மக்களுக்கு அவர்கள் கூறுவது இது தான்: “மரணிக்கட்டும். எங்களுக்கு கவலை இல்லை.”