இலண்டனின் இம்பீரியல் கல்லூரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என்று முன்கணிக்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலண்டனில் உள்ள அரசஆராய்ச்சி பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரி திங்களன்று வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என மதிப்பீடு செய்கிறது. இந்நாடுகளில் வைரஸ் பரவுவது பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்டு அங்கு நிலைமை சீரடைந்து, மேலும் “அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க முடிந்தாலும் கூட,” “இங்கிலாந்தில் 250,000 இறப்புக்களும், மற்றும் அமெரிக்காவில் 1.1 – 1.2 மில்லியன் இறப்புக்களும் நிகழும் என நாங்கள் கணித்துள்ளோம்”. என அதன் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, கோவிட்-19 உம் “மற்றும் அதனால் உருவாகும் பொது சுகாதார அச்சுறுத்தலும், 1918 ஆண்டின் H1N1 நுரையீரல் தொற்றுநோய் பரவலுக்கு பின்னர் சுவாசப் பிரச்சினையை ஏபடுத்தும் நுண்கிருமியாக இது இருப்பது மிகவும் தீவிரமானது என எடுத்துக் காட்டுகிறது.” இப்போது உலகளவில் கொரொனாவைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 198,000 பேர் இருப்பதுடன், கிட்டத்தட்ட 8,000 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். பெரும் எண்ணிக்கையில் புதிய நோயாளிகளை கொண்ட நாடுகளில் இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

இந்த ஆய்வு நீல் ஃபெர்குசன் (Neil Ferguson) தலைமையில், இம்பீரியல் கல்லூரி, அத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO), உலகளாவிய தொற்றுநோய் பகுப்பாய்வுக்கான எம்.ஆர்.சி. மையம் (MRC Centre for Global Infectious Disease Analysis) மற்றும் நோய் மற்றும் அவசரகால ஆய்வுக்கான அப்துல் லத்தீப் ஜமீல் நிறுவனம் (Abdul Latif Jameel Institute for Disease and Emergency Analytics) ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவால் நடத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளுடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த தொற்றுநோய் ஆகஸ்ட் வரை தொடரும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

“இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைகளின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை பன்மடங்கு அதிகரிப்படவில்லை எனில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிரடியாக பெருகக்கூடிய அவசரகால சூழலை எதிர்கொள்வதில் வரம்புகள் இல்லாமல் தேவை பலமடங்காக பெருகும் சூழ்நிலையில் நோயை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை” என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த நோய் குறுகிய காலத்திற்குள் பெரிதும் பரவியதாக இருந்தாலும், “எங்களது ஆய்வின் படி, முக்கியமான பராமரிப்பு தேவைகளுக்கான மிகவும் நம்பகமான சூழ்நிலையில் குறைந்தது எட்டு மடங்கு அளவிற்கு மருத்துவமனையின் பொதுப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு [ICU] ஆகிய இரண்டிலும் வந்து சேரும் நோயாளிகளின் அதிரடியான எண்ணிக்கை வரம்புகளை மீறியதாக இருக்கும்” என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், அமெரிக்கா ஒரு நாளைக்கு அதன் உச்ச நிலையில் 56,100 இறப்புக்களை எதிர்நோக்கலாம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜோன்சன் மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்களின் தற்போதைய கொள்கைகளுடன், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக அதிகரிப்பதால் மருத்துவமனைகளும், மருந்தகங்களும் மற்றும் ஏனைய மருத்துவ அமைப்புக்களும் சீர்குலைந்து வருகின்ற நிலையில், மில்லியன் கணக்கானவர்கள், ஒருவேளை பல கோடிக்கணக்கானவர்கள் கூட, இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இறக்கலாம். அனைத்திற்கும் மேலாக, உலக சுகாதார அமைப்பு (WHO) தொடர்ந்து தெரிவித்து வந்ததன் படி, இந்த நெருக்கடியின் ஆரம்பத்திலேயே கொரொனாவைரஸ் தொற்றுநோய் குறித்த பாரிய பரிசோதனை நடவடிக்கைகளை செயல்படுத்த அனைத்து அரசாங்கங்களும் மறுத்து வந்தமை, இத்தொற்றின் முடிவு எப்போது என்பது தெரியாதிருப்பதுடன் பெருமளவில் மக்களிடையே நுண்கிருமி பரவுவதற்கு வழி செய்தது.

WHO இயக்குநர் ஜெனரல் Dr. Tedros Adhanom Ghebreyesus எச்சரித்தபடி, “நீங்கள் கண்களை மூடிக்கொண்டு நெருப்பை எதிர்த்துப் போராட முடியாது, அத்துடன் யார் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் அறியாமலும் அது பரவுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.”

இத்தாலிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையின் சீர்குலைவில் இது தொடர்பான உடனடி ஆபத்துக்கள் பற்றி மிகத் தெளிவாக காணலாம், இந்நாடு இன்றுவரை ஏற்கனவே 31,506 கொரொனாவைரஸ் நோயாளிகளை கொண்டுள்ளது, இது ஒரு மாதத்திற்கு முன்னர் வெறும் மூன்று பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இறப்பு எண்ணிக்கை குறைந்தது 2,503 ஐ எட்டியுள்ளதுடன் அதிகரித்தும் வருகிறது. இத்தாலியின் இறப்பு விகிதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் பொருந்துமானால், இவ்விரு நாடுகளும் முறையே குறைந்தது இரண்டு மில்லியன் மற்றும் 8.6 மில்லியன் அளவிற்கு உண்மையான இறப்புக்களை எதிர்கொள்ளும், மேலும் இரு நாடுகளிலும் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையும் அதற்கான சாத்தியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்கள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால், பால்வினை நோய் (HIV), புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற தீவிர நோய்களுடன் தொடர்புடைய இறப்புக்களுக்கான புள்ளி விபரங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. கொரொனாவைரஸ் காரணமாக சுவாச நோய்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மருத்துவமனைகள் ஏற்கனவே உள்ள சிகிச்சைகளையும் மற்றும் அறுவைச் சிகிச்சைகளையும் இரத்து செய்துள்ளன.

செவ்வாயன்று, ஹார்வார்ட் க்ளோபல் சுகாதார அமைப்பின் (Harvard Global Health Institute) இயக்குநரான டாக்டர் Ashish Jha MSNBC இன் Morning Joe நிகழ்ச்சியில் வழங்கிய கருத்துரையில் இம்பீரியல் கல்லூரி ஆய்வின் கருத்துக்கள் எதிரொலித்தன.

Dr. Jha அமெரிக்கா முழுவதிலுமாக மக்கள் நடமாட்டமில்லாத முழு தனிமைப்படுத்தலுக்கு அழைப்புவிடுத்தார். அவர், “எங்களது மருத்துவமனைகளும் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தயார் நிலையில் இல்லை. இந்நிலையில் எங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கின்றன. அடிப்படையில், இரண்டு வார கால அளவிற்கு, நாங்கள் தேசியளவிலான தனிமைப்படுத்தலை இப்போது ஏற்படுத்திக் கொள்ளலாம், [மற்றும்] இதனால் நிலைமையை கட்டுப்படுத்திய பின்னர் நாம் நிலைமையை மீண்டும் மறுபரிசீலனை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

“அல்லது இன்னும் ஒரு வாரத்திற்கு அதை செய்யாது விட்டால் விடயங்கள் உண்மையில் மிகவும் மோசமாக மாறுகையில், அது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் அதனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவோம், மேலும் பலர் இறந்துவிடுவார்கள். எனவே உண்மையில் அவையே எங்களுக்கான இரண்டு தேர்வுகளாக உள்ளன. ஒன்று இது நிகழ்வுகளை எதிர்நோக்கியிருத்தல் அல்லது நாங்கள் இன்னும் காலத்தை இழக்கும்வரை காத்திருப்பது. இத்தாலியில் நிகழ்வதை பார்க்கையில் அவ்வாறான ஒரு முழு அடைத்துவைத்தலானது வெற்றிகரமானதாக இருக்கும் என தெரிகின்றது” என்றும் அவர் கூறினார்.

ஆயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் உயரடுக்கின் கவனம் மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் இல்லை, மாறாக தங்கள் சொந்த நாடுகளிலும் சர்வதேச அளவிலும் உள்ள நிதி தன்னலக்குழுக்களைப் பாதுகாப்பதாகவே அது உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ட்ரம்ப் தற்போது 600 பில்லியன் டாலர் ஊக்கத் தொகுப்பு நிதியை நேரடியாக வணிகங்களுக்குச் செலுத்த வலியுறுத்தி வருகிறார். ஊதிய வரிகளை குறைக்கவும் அவர் வாதிட்டு வருகிறார். இது, தனியார் முதலீட்டு நிதியமேலாளர்களுக்கும் பெருநிறுவன நிர்வாகிகளுக்கும் மேலதிக பணமழையாக இருக்கும்.

மேலும் 250 பில்லியன் டாலரை பரந்த மக்கள்தொகைக்கு நேரடியாக விநியோகிக்கவிருப்பதாக கூறப்படுகிறது, அதற்கு சரியான தொகையை நிர்ணயிக்கவும் மற்றும் அதனை விநியோகிக்கும் முறை குறித்தும் காங்கிரஸ் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒருவருக்கு 1,000 டாலர்கள் வீதம் தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டாலும், பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளை தொற்றுநோய் முடக்கிவிடும் நிலையில், பல வாரங்கள் அல்லது மாதங்களாக ஊதியம் பெறாத மில்லியன் கணக்கானக்கானவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இது முற்றிலும் போதாது.

அதே கூட்டத்தில், கருவூலச் செயலரான Steve Mnuchin அறிவித்த மற்றொரு திட்டம், “வணிகப் பத்திரங்களின் கொள்முதல்… அதாவது, முன்னோக்கிச் செல்வதற்கு உத்தரவாதமளிக்க மத்திய வங்கிக்கு உதவி செய்யக் கூடியதாக அது இருக்கும் என்றும், அதுதான் 1 டிரில்லியன் டாலர் அளவிலான டாலர் சந்தையாகும்” என்றும் அறிவித்தார். அத்தகைய கொள்முதல் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ஆரம்ப தொகை 10 பில்லியன் டாலர் மட்டுமே” என்றாலும், “தேவைப்பட்டால், மத்திய வங்கி 1 டிரில்லியன் டாலர் வணிகப் பத்திரத்தை வாங்குவதற்கான திறன் எங்களிடம் உள்ளது” என்று Mnuchin தெளிவுபடுத்தினார். கடந்த வாரத்தில், இது பெருநிறுவன பிணையெடுப்பு, பங்குச் சந்தை மற்றும் பிற முறைகளில் நேரடி உட்செலுத்துதலாக 3.8 டிரில்லியன் டாலர் அளவிலான மொத்த செல்வத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் மூலம் வோல் ஸ்ட்ரீட்டுக்கு வாரி வழங்கும் நிலையை கொண்டு வந்தது.

அந்த தொகையில் பாதிக்கும் குறைவான தொகை அனைத்து மாணவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் எஞ்சிய தொகை ஒவ்வொரு தொழிலாளியின் கடன் அட்டை (Credit card) தொகையை மற்றும் வாகன கடனை அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கொரொனா வைரஸூடன் போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவைப்படுவதான பல இலட்சம் முகக் கவசங்கள், மற்றும் மோசமான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு இலட்சக்கணக்கான மேலாடைகள், பல்லாயிரக்கணக்கான செயற்கை காற்றோட்ட சாதனங்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஆகியவற்றை தயாரித்து விநியோகிக்க இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்வதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் தலா 500 படுக்கைகள் கொண்ட நூற்றுக்கணக்கான புதிய மருத்துவமனைகளை வாரங்களில் கட்டமைத்து முடித்திருக்கலாம். நோய்தொற்று ஏற்படக்கூடிய மில்லியன் கணக்கான மக்களுக்கான பரிசோதனை நடைமுறைகளை எளிதாக்கி தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

தனியார் பணப்பெட்டிகளுக்கு சென்ற சமீபத்திய சுற்று நிதி வழங்கலுக்கு சந்தைகள் இன்று ஐந்து சதவிகித இலாப அதிகரிப்பைக் காட்டின. மறுபுறம், தொழிலாளர்கள் வறுமை மற்றும் நோயை எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு குறிப்பிட்டது போல: “மிகப் பெரியளவிலான நேரம் இழக்கப்பட்டுவிட்டது, ஆனால் தொற்றுநோயின் தாக்கமும் அளவும் இப்போது எடுக்கப்படக்கூடிய உடனடி எதிர் நடவடிக்கைகளைப் பொறுத்தது. இந்த நடவடிக்கைகள் இரண்டு முக்கியமான முன்னுரிமைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்: முதலாவது, முடிந்த வரை நுண்கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்துவது, மற்றும் இரண்டாவது, ஏற்கனவே உலகளாவிய பரிமாணங்களைப் பெற்றுள்ள வகையில், நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் அவசர சிகிச்சை வழங்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசர உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்வது.

உலக சோசலி சவலைத் தளம், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இணைவதற்கும், மற்றும் ஒரு சர்வதேச அளவிலான சோசலிச மற்றும் புரட்சிகர இயக்கத்தை கட்டமைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இது தற்போது நமது காலம், மற்றும் வாழ்வா சாவா பிரச்சினையை குறிக்கும் ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.

Loading