உலகெங்கிலும் COVID-19 தொடர்பாக முடக்கங்கள் அதிகரிக்கையில், உலக சுகாதார அமைப்பு அதிக பரிசோதனைகளுக்கு கோருகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் 162 நாடுகளிலும் தற்போது 183,000 கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். இதன் அர்த்தம் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை இப்போது கடந்துள்ளது. இதில் 600 க்கும் அதிகமான புதிய உயிரிழப்புகள் உள்ளடங்கலாக, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7,200 க்கு அதிகமாக கொண்டு வந்துள்ளது. ஒப்பீட்டளவில் இப்போது ஸ்திரமாக உள்ள சீனாவினுள் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை அந்நாட்டிற்கு வெளியே உள்ள நோயாளிகள் எண்ணிக்கை கடந்துள்ளது. அதேவேளையில் உலகளாவிய இந்த தொற்றுநோய்க்கான புதிய குவிமையமாக ஐரோப்பா உருவாகி உள்ளதுடன் அமெரிக்காவும் இதிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருவதற்கான சிறிய அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், ஒட்டுமொத்த நாடுகள் எங்கிலும் அவசரகால நடவடிக்கைகள் இப்போது சகஜமாகி உள்ளன.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி முடக்கப்பட்டுள்ளன. இந்நிலைமை இப்போது ஐரோப்பா எங்கிலும் 250 மில்லியனுக்கும் அதிகமானவர்களைப் பாதித்து வருகிறது. இந்த நான்கு நாடுகள் மட்டுமே ஒட்டுமொத்தமாக 52,000 இக்கும் அதிகமான நோயாளிகளைக் கையாண்டு வருகின்றன, இதில் 2,663 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் உயிர்வாழும் ஒவ்வொரு கண்டத்திலும் ஐம்பத்தி ஏழு நாடுகள் ஏதோவொரு விதத்தில் பயணத் தடைகளை விதித்துள்ளன. அவற்றில் பல உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்துள்ளன.

அமெரிக்காவில், கலிபோர்னியா, ஓஹியோ, இலினோய், மாசசூசெட்ஸ், மிச்சிகன், வாஷிங்டன், கென்டக்கி, மேரிலாந்து, இண்டியானா, ரோட் தீவு மற்றும் பென்சில்வேனியா ஆகிய அனைத்தும் பள்ளிகள், விடுதிகள் மற்றும்/அல்லது உல்லாச மதுக்கூடங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளன. சான்பிரான்சிஸ்கோவிலும் மற்றும் அதைச் சுற்றியும் ஆறு நாடுகளில் வாழும் 6.7 மில்லியன் மக்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு "இடத்திலேயே முகாமிட்டு" இருக்கும் உத்தரவின் கீழ் இப்போது இருத்தப்பட்டுள்ளனர், இது "ஒத்துழைப்பை உறுதிப்படுத்த" உள்ளூர் பொலிஸால் அமல்படுத்தப்படும். நியூ ஜெர்ஸியில் வசிப்பவர்கள் இப்போது மாலை 8 மணிக்கு மேல் அவர்களின் வீடுகளை விட்டு வெளியே வர "கடுமையாக" செய்யப்பட்டுள்ளனர், இதை அம்மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு அமலாக்க உள்ளது.

இந்த தடைகள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தேசியளவிலான வழிகாட்டுதல்களுக்கு கூடுதலாக ஏற்படுத்தப்பட்டவை ஆகும். 10 நபர்களுக்கு அதிகமாக எங்கேயும் ஒன்றுகூடல் வேண்டாமென CDC திங்கட்கிழமை பரிந்துரைத்திருந்தது.

ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டதைப் போல, அதுபோன்ற நடவடிக்கைகளில் மற்றும் அந்நடவடிக்கைகளே கூட இந்நோய் பரவுவதைத் தடுக்க போதுமானதில்லை. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டாக்டர் Tedros Adhanom Ghebreyesus நேற்று கூறுகையில், இந்த தொற்றுநோயை எதிர்க்க அரசாங்கங்கள் போதுமானளவுக்கு செயல்படவில்லை என்று கூறியதுடன், அவற்றின் பரிசோதனை திட்டங்களை அதிகரிக்கவும் வலியுறுத்தினார்.

“பரிசோதித்தல், தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்பு ஏற்படும் விதத்தைப் பின்தொடர்வதில் போதுமானளவுக்கு அவசர தீவிரப்பாட்டை நம்மால் பார்க்க முடியவில்லை — இது தான் விடையிறுப்பின் முதுகெலும்பாக உள்ளது. … கண்ணைக் கட்டிக் கொண்டு நெருப்பை அணைக்க முடியாது, யார் தொற்றுநோயை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியாமல் இந்த தொற்றுநோயை நம்மால் நிறுத்த முடியாது,” என்றவர் ஜெனிவாவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள் என்பதே எல்லா நாடுகளுக்குமான எங்களின் ஒரு எளிய சேதி ஆகும்,” என்றார்.

இந்த தொற்றுநோயின் வீச்சைக் கண்டு "நாடுகள் கைவிட்டு விட வேண்டும் என்று அர்த்தமில்லை. நாடுகள் கட்டுப்படுத்துவதில் இருந்து குணமாக்குவதற்கு மாற வேண்டும் என்ற கருத்து தவறானது அபாயமானது. … இது கட்டுப்படுத்தத்தக்க தொற்றுநோய் தான். அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை விட்டுவிடலாமென முடிவெடுக்கும் நாடுகள் இன்னும் பெரிய பிரச்சினைகளில் போய் நிற்கும், கட்டுப்படுத்துவதற்கு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு சுகாதார முறையின் மீது பலமான சுமை விழும்,” என்று அந்த அமைப்பு பலமுறை வலியுறுத்தி உள்ளது.

பொது சுகாதார முறையின் இந்த முறிவு அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவுக்கு அதிக தெளிவாக தென்படாது. அங்கே ட்ரம்ப் நிர்வாகம் இந்த வாரம் தான் பெருந்திரளான மக்களுக்கு தேசியளவில் கொரொனா வைரஸ் பரிசோதனைகளைச் செய்ய தொடங்கி உள்ளது. திங்கட்கிழமை, இப்போது நடக்கும் நிர்வாகத்தின் அன்றாட கொரொனா வைரஸ் பத்திரிகையாளர் கூட்டத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நாம் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியை எதிர் கொண்டுள்ளோம். ஒரு மாதத்திற்கு முன்னர் எவரொருவரும் நினைத்தே பார்த்திராத ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது,” என்று கூறி நாட்டில் பரிசோதனை தாமதமானதைத் தட்டிக்கழிக்க முயன்றார்.

இது முகத்திற்கு நேராக எரிச்சலூட்டும் ஒரு பொய்யாகும். இந்த வைரஸின் தீவிரமாக தொற்றக்கூடிய தன்மை மற்றும் உயிராபத்தான தன்மையை அடிப்படையாக கொண்டு, உலக சுகாதார அமைப்பு ஜனவரி 31 அன்றே இந்த வைரஸை "சர்வதேச அளவில் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தது, அதே நாளில் தான் அமெரிக்காவில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள். தென் கொரியா, பெப்ரவரி மாத மத்தியில், நாளொன்றுக்கு 10,000 நபர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடியதாக இருந்த நிலையில், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்களுக்கு மருந்துகளை அனுப்பியும், இந்நோய்கிருமி தாக்கப்பட்ட எவரொருவரையும் அழைத்து தனிமைப்படுத்த ஆட்களையும் நியமித்தது. 28,000 க்கும் அதிகமான நோயாளிகளால் பெரிதும் நிரம்பி வழியும் சுகாதாரத்துறையைக் கொண்டுள்ள இத்தாலி, இப்போதும் குறைந்தபட்சம் 60,000 கொரொனா வைரஸ் பரிசோதனைகளைச் செய்ய கூடியதாக உள்ளது. இதற்கெல்லாம் முரண்பட்ட விதத்தில், அமெரிக்கா அந்த எண்ணிக்கையில் பாதியை விட குறைவாகவே இதுவரையில் பரிசோதனைகள் செய்துள்ளது.

இதற்கு பதிலாக ட்ரம்ப் நிர்வாகம் பெடரல் ரிசர்வின் அடைப்புகளை நீக்கி, பங்குச் சந்தைக்கு முட்டுக்கொடுக்கும் ஒரு முயற்சியில் நிதித்துறைக்கு 2.2 ட்ரில்லியன் டாலர் வழங்கி உள்ளது. இந்த தொகையானது, உலக சுகாதார அமைப்பு கோரிய ஆதாரவளங்களுடன் ஒப்பிடுகையில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான முகக்கவசங்கள், அங்கிகள், சுவாசக் கருவிகள் மற்றும் இதர முக்கிய மருத்துவ பொருட்களை 3,000 மடங்கிற்கும் அதிகமாக வழங்கக்கூடியதாகும்.

அதே நேரத்தில், ட்ரம்ப் ட்வீட் செய்தியில், “அனைத்து அமெரிக்கர்களும் ஒருங்கிணைந்து நிற்குமாறும், அவசியமின்றி உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பதுக்காமல் உங்கள் அண்டை அயலவர்களுக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்த வார்த்தைகளுக்கு விடையிறுத்து, மேற்கு வேர்ஜினியாவில் இருந்து ஒரு தொழிலாளி, தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று வாரம் இரண்டு முறை மருத்துவமனைக்கு விஜயம் செய்து வருகின்ற கர்ப்பிணியான இவர், WSWS க்கு எழுதினார்: “இந்த கீழ்தரமான நபர்கள் அவர்களின் குற்றகரமான தவறான தகவல்கள் மூலமாகவும், தாமதமான விடையிறுப்பு மற்றும் நமது பொது சுகாதார உள்கட்டமைப்பை சீரழித்ததன் மூலமாகவும் இந்த பீதியை உண்டாக்குகிறார்கள். இப்போது அவர்கள் ஏதோ கழிவறை காகிதம் வாங்கியதுதான் பிரச்சினை என்பதைப் போல அதை கூடுதலாக வாங்கியவரை குற்றம்கூறுகின்றனர்”

அனைத்திற்கும் மேலாக, கொரொனா வைரஸ் முதலாவதாக ஒரு தொற்றுநோயாக மாறுவதில் இருந்தே இதுபோன்ற ஆதாரவளங்கள் அதைத் தடுத்திருக்கக்கூடும். சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரிவான பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் செய்திருக்கலாம், இதற்கும் கூடுதலாக அவர்கள் குணமடைய அவசியமான மருத்துவ உதவிகளும் வழங்கி இருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு சம்பளம் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க அது போதுமானது என்பதற்கும் அதிகமாகவே இருந்திருக்கும். COVID-19 ஓர் அபாயகரமானது தான் ஆனால் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்ட நோயாக நினைவுகூரப்பட்டிருக்கும்.

இதற்கு பதிலாக, மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்க செய்வதே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கையாக மாறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 216 மில்லியன் நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படுமென CDC மதிப்பிடுகிறது. ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய பயிலகத்தின் இயக்குனர் டாக்டர் Anthony Fauci அப்பட்டமாக குறிப்பிடுகையில், இதன் விளைவாக நூறாயிரக் கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழப்பது "சாத்தியமாகலாம்" என்றார்.

ஜேர்மன் மக்கள்தொகையில் 70 சதவீதத்தினருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படலாமென அவர் எதிர்பார்ப்பதாக கடந்த வாரம் அறிவித்த ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் இதையே எதிரொலித்தார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் அரசாங்கம் குறிப்பிடுகையில், “மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு" தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு இருப்பதால் இந்த வைரஸை எதிர்த்து போராட "நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை" பெறுவதே சிறந்த தீர்வு என்றார்.

இந்த அறிக்கைகள் பெருந்திரளான மக்களை வன்மத்துடன் படுகொலை செய்வதற்கான முன்குறிப்புகளாகும். இத்தாலியின் எடுத்துக்காட்டு தெளிவுபடுத்துவதைப் போல, “முதல் உலக" நாடுகள் எனக் கூறப்படும் நாடுகளிலும் கூட சுகாதார கவனிப்பு முறைகள் வெறும் ஒரு சில பத்தாயிரக் கணக்கான நோயாளிகளுடன் இன்றியமையாத விதத்தில் சிதைந்துள்ளது, அவற்றில் முக்கிய மருத்துவ பொருட்கள் இல்லாததால் இந்த வைரஸிற்கு பலியானவர்களின் இறப்பு விகிதம் சுமார் 5 சதவீதமாக ஆகியுள்ளது. 10 மில்லியனில் இருந்து 15 மில்லியன் மக்கள் உயிரிழப்பது மட்டுமே இந்த தொற்றுநோயை விரட்டுவதற்கான ஒரே வழி என்று அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் கூறுகின்றன.

Loading