இலங்கை சோ.ச.க. நேரடி ஒளிபரப்பு இணையவழி பொதுக் கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது

20 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வரவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்துகிறது. இந்தக் கூட்டம் மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரமான மாலை 3 மணிக்கு முகநூல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக முன்னர் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மார்ச் 21 நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி இரத்து செய்துள்ளது.

ஏப்ரல் 25 நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு 43 வேட்பாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது. சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கட்சியின் மூத்த தலைவர்களான விலானி பீரிஸ், பி. சம்பந்தன், எம். தேவராஜா ஆகியோர் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் குழுக்களுக்கு தலைமை தாங்குகின்றனர்.

தனது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அதிக ஆசனங்களை வெல்லும் முயற்சியில் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அவரது நோக்கம், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அதிகரித்துவரும் வெகுஜன எதிர்ப்பை அடக்க கூடியவாறு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதாகும்.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, அதிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவை இராஜபக்ஷவின் சர்வாதிகாரத் திட்டங்களுடன் எந்த முரண்பாட்டையும் கொண்டிருக்காத அதே வேளை, அவருடன் பணியாற்றுவதற்கான தமது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் பாராளுமன்றத்தில் தங்கள் ஆசனங்களை பெருக்கிக்கொள்ள முயல்வதோடு அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடான இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை ஆதரிக்கும் கொழும்புடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதன் மூலம் தங்கள் நலன்களை தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றன.

இலங்கை ஆளும் உயரடுக்கின் அதிகரித்துவரும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதைத் தடுப்பதற்கு, நவ சம சமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன.

இந்த அனைத்து கட்சிகளையும் எதிர்த்து, சோசலிச சமத்துவக் கட்சி சர்வதேச சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கும், சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிராக போராடுகிறது. தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் மிக அடிப்படையான சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முதலாளித்துவ அமைப்பு முறை இலாயக்கற்றது என்பது, உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ள இணையவழி கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் மற்றும் தலைமை வேட்பாளர்கள் உட்பட பலர் உரையாற்றுவர். இந்த கூட்டம் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முகநூல் பக்கத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். சோசலிச சமத்துவக் கட்சி பேச்சாளர்கள் சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் பற்றியும் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் அடிப்படையாகக் கொண்டுள்ள முன்னோக்கு பற்றியும் விளக்குவார்கள்.

இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். https://www.facebook.com/sep.lk/