தேசிய நலன்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தடையாக நிற்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய், பாரிய சமுதாயத்தின் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலாளித்துவத்தின் இயலாமையை அம்பலப்படுத்துகிறது. இது வைரஸைக் கட்டுப்படுத்தவது மற்றும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக மட்டுமல்லாமல், ஒரு தடுப்பூசியை உருவாக்குவது தொடர்பாகவும் உண்மையாக உள்ளது. தடுப்பூசியை உருவாக்குவது நீண்ட காலப்போக்கில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.

விஞ்ஞானிகளிடையேயான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப வழிமுறைகள் சமீபத்திய தசாப்தங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஒரு வைரஸின் மரபணுவை மிகக் குறுகிய காலத்தில் குறிவிலக்கு (decode) செய்யலாம், மேலும் வைரஸின் பலவீனமான வடிவத்தைக் கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு பதிலாக, இப்போது மரபணு பொறியியலைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை உருவாக்க முடியும்.

எவ்வாறாயினும், ஒரு சில கையளவு மருந்து நிறுவனங்களால் மருந்து உற்பத்தி கட்டுப்படுத்தப்படுவது, பெரும் இலாபம் ஈட்டுவது மற்றும் காப்புரிமைகள் மூலம் பெருமுற்போக்கான கண்டுபிடிப்புகளை தமக்குரியதாக பாதுகாப்பதும் இந்த சாதனைகளுக்கு குறுக்கே நிற்கிறது. இதன் விளைவாக, முக்கிய மருந்துகளின் உற்பத்தி தாமதமாக்கப்படுகின்றது அல்லது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது, மேலும் உருவாக்கப்பட்ட மருந்துகள் மனிதகுலத்தின் கூடிய பிரிவினரால் விலைசெலுத்தி வாங்க முடியாததாக உள்ளன. மேலும், ஒரு மருந்தை கட்டுப்படுத்தும் நிறுவனத்தால் தனது பொருளாதார போட்டியாளருக்கு அதனை வழங்க மறுப்பதன் மூலம் சந்தை மற்றும் இலாபங்களுக்கான உலகளாவிய போட்டியில் மருத்துவ முன்னேற்றங்கள் பெரும்பாலும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் இரக்கமற்ற முறைகள் அண்மைய நாட்களில் ஜேர்மனிய உயிரியல் தொழில்நுட்பவியல் நிறுவனமான CureVac தொடர்பான சர்ச்சையில் நிரூபிக்கப்பட்டுள்ள. இந்த நிறுவனம் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, Welt am Sonntag பத்திரிகை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் CureVac தனது ஆராய்ச்சியை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கும், அந்த நிறுவனம் அபிவிருத்திசெய்துவரும் COVID-19 தடுப்பூசிக்கான பிரத்தியேக உரிமையையும் ஆராய்ச்சியினையும் அமெரிக்காவிற்கானதாக பாதுகாப்பதற்கும் CureVac இற்கு பெரும் தொகையை வழங்குவதாக கூறியதாக அறிவித்தது.

இது பற்றிய உண்மை தெளிவாக இல்லை. CureVac இன் 80 சதவீதத்தை வைத்திருக்கும் டீட்மார் ஹாப் (Dietmar Hopp), அந்த நிறுவனத்தை அமெரிக்காவிற்கு விற்பது தனக்கு “ஒரு விருப்பமல்ல” என்று கூறியபோதுதான் அந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக தோன்றியது. ஒரு ஜேர்மன் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்குவது சாத்தியமில்லை என்றும், அமெரிக்காவில் மட்டும் பிரத்தியேகமாக அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறினார். 1972 ஆம் ஆண்டில் SAP என்ற மென்பொருள் நிறுவனத்தை இணைத்து நிறுவிய டீட்மார் ஹாப், ஜேர்மனியில் 10 பில்லியன் யூரோ சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்களில் ஒருவராவார். இன்று அவர் புதிய ஆரம்பநிலையிலுள்ள மருத்துவ நிறுவனங்களில் முதலீட்டாளராகவும், அவற்றின் புரவலராகவும் உள்ளார்.

அந்த அறிக்கை வெளியான பின்னர், ஜேர்மனிய அரசாங்க அதிகாரிகள் அமெரிக்காவை மூர்க்கமாக தாக்கியதுடன், தேசியவாத நிலைப்பாட்டில் ட்ரம்பை விட குறைவானவர்களாக தம்மை காட்டிக்கொள்ளவில்லை.

"ஜேர்மனி விற்பனைக்கு இல்லை" என்று மத்திய பொருளாதார மந்திரி பீட்டர் அல்ட்மையர் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் - CDU) கூறினார். மத்திய அரசு, "ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் உற்பத்தியில் உள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். "குறிப்பாக தேசிய அல்லது ஐரோப்பிய பாதுகாப்பு நலன்கள் ஆபத்தில் இருக்கும்போது" ஜேர்மன் நிறுவனங்களை மற்ற நாடுகளால் கையகப்படுத்துவதை ஜேர்மன் அரசாங்கம் தடுக்க முடியும் என்று அல்ட்மையர் அறிவித்தார்.

வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD), ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள் "உலகளாவிய ஒத்துழைப்புடன், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளனர்" என்று கூறினார். அவர் தொடர்ந்து, "மற்றவர்கள் எமது ஆராய்ச்சி முடிவுகளை தமக்குரியதாக்கிக்கொள்ள அனுமதிக்க முடியாது" என்றார்.

மறுபுறம், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த பிரதிநிதிகள், நியூ யோர்க் டைம்ஸு க்கு அளித்த அறிக்கையை "மிகை மதிப்பீடானது" என விவரித்தனர்.

செவ்வாயன்று, CureVac நிறுவனம் Welt am Sonntag பத்திரிகையில் இந்த அறிக்கையை மறுத்தது. அந்நிறுவனம் ட்விட்டரில் கூறியது, "மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்துவதற்காக: மார்ச் 2 ம் திகதி வெள்ளை மாளிகை பணிக்குழு கூட்டத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்தோ CureVac ஒரு விருப்பு அறிவிப்பு எதையும் பெறவில்லை." சர்வதேச ஊடகவியலாளர்களுடனான ஒரு தொலைபேசி மாநாட்டில், ட்ரம்ப் அல்லது வெள்ளை மாளிகையிலிருந்து பிரத்தியேக தயாரிப்பு அளவுக்கான கோரிக்கையையோ அல்லது கையகப்படுத்தலுக்கான கோரிக்கையையோ பெறவில்லை என்று நிறுவனத்தின் உயர் நிர்வாகம் வெளிப்படையாக மறுத்தது.

மார்ச் 2 ம் தேதி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமையிலான கொரோனா வைரஸ் பணிக்குழுவை அமெரிக்கரும், அப்போதைய CureVac இன் தலைவரான Dan Menichella சந்தித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பல உயிரியல்தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். Menichella தனது நிறுவனம் விரைவில் ஒரு தடுப்பூசியை பரிசோதனை கட்டத்திற்கு கொண்டு வருவதாக அறிவித்தார்.

எட்டு நாட்களுக்குப் பின்னர், Menichella இரண்டு ஆண்டுகளாக அவர் வழிநடத்திய நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு பதிலாக Ingmar Hoerr நியமிக்கப்பட்டார், அவர்தான் முதலில் CureVac இனை நிறுவியவராவார். அதற்கு ஒரு வாரம் கழித்து, "உடல்நல காரணங்களுக்காக" Hoerr இராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக அவரது துணைத் தலைவர் Franz-Werner Haas நியமிக்கப்பட்டார்.

CureVac மீதான இழுபறி, மிக உயர்ந்த அரசாங்க வட்டங்களை உள்ளடக்கியது. இது இலாபங்கள் மற்றும் சந்தைப் பங்கிற்கான போராட்டத்தில் மருந்துத் தொழிற்துறை மேற்கொண்டுள்ள தீவிர போட்டியைக் காட்டுகிறது. அவர்களை பொறுத்தவரை எந்தவொரு நெருக்கடியும் பணம் சம்பாதிக்க பயன்படுத்த முடியாத கடுமையானதாக இல்லை.

COVID-19 க்கு எதிரான தடுப்பூசி மூலம் பெரும் இலாபம் ஈட்டப்பட உள்ளது. ஆனால் அதனை அபிவிருத்திசெய்வது விலை கூடியதுடன் நீண்டகாலம் எடுப்பதுமாகும். COVID-19 தடுப்பூசிகளின் விரைவான வளர்ச்சிக்கு அடுத்த பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்களில் இரண்டு பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (Coalition for Epidemic Preparedness Innovations - CEPI) மதிப்பிடுகிறது.

British Observer இன் அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் 35 நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி அமைப்புகள் தற்போது இதுபோன்ற தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. சீன விஞ்ஞானிகள் ஜனவரி தொடக்கத்தில் கொரோனா வைரஸ் SARS-CoV-2 இன் மரபணு வரிசையை இலவசமாகக் கிடைக்கச் செய்ததால், ஆராய்ச்சிப் பணிகள் மிக ஆரம்ப நிலையிலேயே தொடங்க முடிந்தது.

ஆராய்ச்சி, பரிசோதனை, ஒப்புதல் பெறல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் பாரிய செலவுகளைச் சமாளிக்க, நிறுவனங்கள் அரச நிதியுதவி மற்றும் பணக்கார நன்கொடையாளர்களான ஹாப் மற்றும் பில் & மெலின்டா கேட்ஸ் போன்றவற்றில் தங்கியிருக்கவேண்டியுள்ளது. இவை CureVac இல் ஒரு பங்கைக் கொண்டுள்ளதால், அவற்றால் இவ்வாறான இலாபஆபத்தான திட்டங்களில் பெரிய தொகைகளை முதலீடு செய்ய முடியும். ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே நடைமுறை மருத்துவ பரிசோதனையை செய்யக்கூடியதாக இருப்பதால், பெரிய முதலீடுகள் போட்டியிடும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு இது ஒரு மொத்த இழப்பாகலாம். ஆனால் இறுதியில் மருந்தினை உற்பத்தி செய்து முடிப்பவர்களாலேயே ஒரு பெரிய இலாபத்தை எதிர்பார்க்கலாம்.

அத்தகைய நிறுவனங்களை தங்கள் சொந்த நாட்டில் வைத்திருப்பதில் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. உலகளாவிய மருந்து சந்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்த அவர்கள் முயல்கின்றனர். இத்தொகை 2018 ஆம் ஆண்டில் 1.2 டிரில்லியன் டாலராக இருந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை பின்வரும் ஐந்து நாடுகளால் பங்கிடப்பட்டுள்ளன: அமெரிக்கா (485 பில்லியன் டாலர்), சீனா (134 பில்லியன் டாலர்), ஜப்பான் (85 டாலர் பில்லியன்), ஜேர்மனி (52 பில்லியன் டாலர்) மற்றும் பிரான்ஸ் (36 பில்லியன் டாலர்).

CureVac இனை அமெரிக்காவிற்கு விற்க மாட்டேன் என்று ஜேர்மன் ஊடகங்களுக்கு உறுதியளித்த பின்னர் ஹாப் ஒரு வீரனாக கொண்டாடப்பட்டார். “CureVac மீதான வெட்கக்கேடான தாக்குதல் ஜேர்மனியை தட்டி எழுப்புவதற்கான அழைப்பு” என்ற தலைப்பில் Die Welt பின்வருமாறு எழுதியது: “மதிப்புமிக்க தொழில்நுட்பத்தையும், புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளையும் Tübingen நகரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பணத்துடன் ஈர்க்கும் அனைத்து வெட்கம்கெட்ட முயற்சிகளும் ஜேர்மனியை உலுக்கியுள்ளன”.

இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வாய்ப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடமிருந்து 80 மில்லியன் யூரோ நிதியுதவிக்கு CureVac ஒரு உறுதிப்பாட்டைப் பெற்றதுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜேர்மனிய அரசாங்கத்தால் இணை நிதியளிக்கப்பட்ட CEPI, CureVac இன் தடுப்பூசி திட்டத்திற்கு 8.3 மில்லியன் டாலர்கள் வழங்கி ஆதரிக்கிறது.

CureVac மூலக்கூறு மெசஞ்சர்-ஆர்.என்.ஏ (molecule messenger-RNA (mRNA) அடிப்படையில் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. CEPI இன் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சார்ட் ஹாட்செட்டின் கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பம் "சில மாதங்களுக்குள் மருத்துவ பரிசோதனைக்கான தடுப்பூசி முன்மாதிரி ஒன்றை உருவாக்குவது சாத்தியமாக்குகிறது. இது நோய்க்கிருமியின் அறியப்பட்ட மரபணு வரிசையைப் பயன்படுத்தி - முன்பு சாத்தியமானதை விட மிக விரைவான செயல்முறையாகும்." CureVac இனை தவிர, அமெரிக்க நிறுவனமான Moderna உம் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அவர்களும் ஜேர்மனிய நிறுவனமான BioNTech தற்போது ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்குவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளன

CureVac உரிமையாளர் ஹாப் சமீபத்தில் இலையுதிர்காலத்தில் ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார். இருப்பினும், தேவையான மருத்துவ பரிசோதனைகள் காரணமாக, நிபுணர்கள் இது நம்பத்தகாதது என்று கருதுகின்றனர் மற்றும் தடுப்பூசி தயாரிக்கப்படுவதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

2002 ஆம் ஆண்டில் சீனாவிலும், 2012 ல் சவுதி அரேபியாவிலும் வெடித்த SARS மற்றும் MERS தொற்றுநோய்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்திருந்தால் இந்த தடுப்பூசியின் வளர்ச்சி மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்திருக்கும். அந்த நோய்க்கிருமிகள் தற்போதைய கொரோனா வைரஸுடன் நெருக்கமாக தொடர்புடையவை. இருப்பினும், எதிர்காலத்தில் இதேபோன்ற தொற்றுநோய்கள் உருவாகலாம் என வல்லுநர்கள் கணித்திருந்தாலும், தொற்றுநோய்கள் தணிந்ததால் ஒரு தடுப்பூசி பற்றிய ஆராச்சி பணிகள் நிறுத்தப்பட்டன.

SARS வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கத்தில் டெக்சாஸில் பணிபுரிந்த டாக்டர் Dr. Peter Hotez, Houston Chronicle இதழிடம் தனது குழு ஒரு முதலீட்டாளரை தேடுவதாகவோ அல்லது மருத்துவ பரிசோதனைகளுக்கான மானியங்களுக்காகவோ தேடுவதாகக் கூறினார். “ஆனால் எங்களால் அதிக ஆர்வத்தை உருவாக்க முடியவில்லை”. மாறாக, தடுப்பூசி, குளிர்சாதன பெட்டியில் சென்று முடிந்தது. "சீனாவில் இந்த புதிய வெடிப்பின் தொடக்கத்தில் நாங்கள் தடுப்பூசியின் செயல்திறனை சோதித்துப் பார்க்க தயார் நிலையில் இருந்திருக்கலாம்" என்று Hotez முடித்தார்.

பில்லியன் கணக்கான டாலர்களை இலாபம் ஈட்டும் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு, ஒருபோதும் பயன்படுத்தமுடியாத இதுபோன்ற தடுப்பூசிகளின் அபிவிருத்தியில் பொருளாதார அக்கறை இல்லை. “இலாபம் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான போராட்டத்தை எவ்வாறு கடினமாக்குகிறது” என்ற தலைப்பின் கீழ், பிரிட்டிஷ் கார்டியன் பின்வருமாறு எழுதுகிறது, “தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகள் ... மருந்துத் தொழிற்துறையை இயக்கும் சந்தைகளில் இருக்கும் மொத்த ஆர்வமின்மையால் பாதிக்கப்படுகின்றன.”

இது தொடர்கிறது: “இந்த நிறுவனங்களுக்கு ஒரு வெற்றி என்பது ஒரு பரவலான, தொடர்ச்சியாக இருக்கும் நோய்க்கான சிகிச்சையாகும். அவை இவற்றிற்கான மருந்தை ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக விற்க முடியும். கடைசியாக தொழிற்துறை பிரபல்யமான Merck இன் HPV தடுப்பூசியான Gardasil, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அபிவிருத்தியின் பின் 2006 இல் வெளியிடப்பட்டது. இது இன்னும் ஆண்டுதோறும் 1 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக இலாபத்தை கொண்டு வருகிறது. நீண்டகாலம் எடுக்கும் ஆராய்ச்சி மற்றும் இலாப மாதிரியை ஒரு தொற்றுநோய்க்கு எளிதில் பயன்படுத்த எந்த வழியும் இல்லை”.

The Guardian பின்வருமாறு முடிக்கிறது: “தற்போதைய நிலைமை பெரும்பாலும் அனைத்து மோசமானவற்றையும் ஒன்றாக கொண்டுவருகின்றது. அதாவது புதிய அச்சுறுத்தல்கள் குறித்த ஆராய்ச்சியை செய்வது மிகவும் மெதுவாக உள்ளது, ஏனெனில் பணம் இல்லை. மேலும் எதிர்காலத்தில் அதற்கு பணம் கிடைப்பது உறுதியாக தெரியாவிட்டால் அது விரைவாக கைவிடப்படுகின்றது. இது மிகவும் சந்தை சார்ந்த அமைப்பாகும், சந்தை நம்மை வழமையாக தோல்வியடைய செய்கின்றது”.

உலகளாவிய COVID-19 தொற்றுநோய்க்கு ஒரு சோசலிச பதில் தேவைப்படுகிறது: உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த நேரத்தில் ஒரு தடுப்பூசியை வழங்க, தேசிய மற்றும் இலாப நலன்களிலிருந்து விடுபட்டு அனைத்து வளங்களையும் விஞ்ஞான அறிவையும் பூகோளரீதியாக ஒன்றிணைக்க வேண்டியுள்ளது.

Loading