ஜேர்மன் அரசாங்கம் இணைய தணிக்கைக்கும் மற்றும் ஆயுதப்படைகளை நிலைநிறுத்தவும் தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோய் அரசியலின் வர்க்கத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. சுகாதார பாதுகாப்பு அமைப்பு துண்டுதுண்டுகளாக்கப்பட்டு, மருத்துவமனைகள் தனியார்மயமாக்கப்பட்டு இலாபத்திற்காக எண்ணிக்கையில் குறைக்கப்பட்டுள்ளன. ஆய்வுகூட தகமைகள் மற்றும் நாடு தழுவிய சிகிச்சை தேர்வுகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், மக்களைப் பாதுகாக்க எந்த தயாரிப்புகளும் செய்யப்படவில்லை. அரசாங்கம் பெருவணிகத்தின் நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது மற்றும் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் வரம்பற்ற நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்கிறது. வைரஸின் ஆபத்து தெரிந்திருந்தாலும், பொது வாழ்க்கை கடுமையாக தடைசெய்யப்பட்டிருந்தாலும், பல தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு இல்லாமல் தங்கள் வேலையைத் தொடர நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

அரசாங்கத்தினதும் தொழில்வழங்குனர்களினதும் இந்த குற்றவியல் பொறுப்பற்ற தன்மைக்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தின் பிரச்சாரத்தை மறுப்பதற்கும், மருத்துவமனைகள், மீட்பு நிலையங்கள், பராமரிப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மோசமான நிலைமையின் கீழ் தொழிலாளர்களை வேலையில் தொடர்ந்தும் இருத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விவரிக்கவும் எதிர்த்து போராடவும் பல்வேறு எதிர்ப்புக்குழுக்கள் இணையத்தில் உருவாகின்றன.

இந்த எதிர்ப்பிற்கு பிரதிபலிப்பாக அரசியல்வாதிகள் தணிக்கை மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வாரத்தின் தொடக்கத்தில், லோயர் சாக்சோனியின் மாநில உள்துறை மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக “போலி செய்திகள்” என்று அழைக்கப்படுவதற்கு எதிராக தடைகளை கோரினார். அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும் என்று அவர் கோரினார், “மக்களுக்கான பொருள் விநியோக நிலைமை, மருத்துவ பராமரிப்பு அல்லது காரணம், தொற்றுநோய்க்கான வழிகள், நோயறிதல் மற்றும் COVID-19 சிகிச்சை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக பரப்புவதை தடை செய்ய வேண்டும்” என்றார்.

பிஸ்டோரியஸின் கூற்றுப்படி, இப்போதுள்ள தொற்று பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தடைகளை விதிக்க முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இல்லையெனில், தண்டணை சட்ட புத்தகம் அல்லது ஒழுங்குவிதிகளை மீறுவது தொடர்பான சட்டம் “கூடிய விரைவில்” திருத்தப்பட வேண்டும்.

தற்போது பரவி வரும் மிகப்பெரிய தவறான தகவல் அரசாங்கத்திலிருந்தே வருகிறது. தொற்றுநோய் பரவுவதற்கு ஜேர்மன் சுகாதார அமைப்பு நன்கு தயாராக உள்ளது என்றும், எவரும் கவலைப்பட தேவையில்லை என்றும் அது கூறுகிறது. பல வாரங்களாக, அரசாங்கம் ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிட்டது.

இப்போது யதார்த்தம் அரசாங்கத்தின் பிரச்சாரத்தை மறுத்துவிட்டது, அதைப் பற்றிய எந்தவொரு விமர்சனமும் குற்றமயமாக்கப்பட்டு ஒடுக்கப்பட வேண்டும். பிஸ்டோரிஸின் படி, தகவல் மற்றும் கருத்து மீதான அரசாங்கம் அதன் ஏகபோகத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இது தணிக்கை மற்றும் சர்வாதிகாரத்திற்கான அழைப்பாகும்.

குஸ்டாவ் நொஸ்க இன் பாரம்பரியத்தில் பிஸ்டோரியஸ் நீண்ட காலமாக ஒரு வலதுசாரி சமூக ஜனநாயகவாதியாக அறியப்பட்டவராவார். நொஸ்க 1918 நவம்பர் புரட்சியின் போது ஜேர்மன் இராணுவம் மற்றும் தீவிர வலதுசாரி Freikorps உடன் இணைந்து முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கினார்.

லோயர் சாக்சோனியின் உள்துறை அமைச்சராக ஏழு ஆண்டுகளாக, அகதிகளுக்கு எதிராகவும், அரசின் அடக்குமுறை சக்திகளை முடுக்கிவிடவும் கடுமையான வலதுசாரி போக்கை அவர் ஆதரித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு கோடையில், உள்நாட்டுக் கொள்கை குறித்த ஒரு சமூக ஜனநாயகக் கட்சி நிலைப்பாட்டை அவர் முன்வைத்தார், இதன் மையப் புள்ளி மத்திய பொலிஸ் படையை நிதி ரீதியாகவும் அதிக பணியாளர்களுடனும் பலப்படுத்துவதாகும். ஒரு வருடம் கழித்து, பிஸ்டோரியஸ் வரைவு செய்த லோயர் சாக்சோனியின் புதிய பொலிஸ் சட்டத்திற்கு எதிராக 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஹனோவர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏனெனில் அவர் வரைந்து இச்சட்டமானது பாதுகாப்புதுறையினரின் அதிகாரத்தை பாரியளவில் அதிகரிப்பதுடன் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது.

தணிக்கை மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கான தனது அழைப்பின் மூலம், பிஸ்டோரியஸ் ஒரு நெருக்கடியான சூழ்நிலைகளுக்கும், மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பிற்கும் எப்போதும் இவ்வாறு பதிலளித்த ஒரு கட்சியின் (சமூக ஜனநாயகக் கட்சி) சார்பாக பேசுகிறார். பிஸ்டோரியஸ் முன்னாள் ஜேர்மன் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடரின் அதே அரசியல் நிலையிலிருந்து வந்தவராவர், அவர் நலன்புரி அமைப்புகளை "ஹார்ட்ஸ்" சட்டங்களுடன் கொடூரமாக இல்லாதொழித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் 2015 இலிருந்து ஷ்ரோடரிடமிருந்து பிரிந்து வாழும் அவரின் நான்காவது மனைவி டோரிஸ் ஷ்ரோடர்-கோப் உடன் உறவை கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு சமூக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் நடமாட்டத்தில் கட்டுப்பாடும் தேவை என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும், ஒரு சர்வாதிகாரத்திற்கான நிபந்தனைகள் "அவசியத்திற்கு எந்த சட்டமும் தெரியாது!" என்ற முழக்கத்தின் கீழ் உருவாக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்று, அதன் அச்சுறுத்தும் உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகள் யார் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர், அரசை நிதி தன்னலக்குழுவா அல்லது தொழிலாள வர்க்கமா? கட்டுப்படுத்துகின்றன என்ற கேள்வியை எழுப்புகின்றன.

எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கம் கொரோனா நெருக்கடிக்கு எதிரான நடவடிக்கைகளை அதன் அதிகாரத்தை வலுப்படுத்த பயன்படுத்த முயற்சிக்கிறது. DPA மற்றும் Der Spiegel ஆகியவற்றின் தகவல்களின்படி, கூட்டாட்சி நாடாளுமன்ற தலைவர் வொல்ப்காங் ஷொய்பிள (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், CDU), பாராளுமன்ற குழுக்களின் தலைவர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தினை திருத்துவதன் மூலம் அவர்கள் அவசரகால சட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் 1968 மே மாதம் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டங்கள், நெருக்கடி சூழ்நிலைகளில் (இயற்கை பேரழிவு, எழுச்சி, போர்) அரை-சர்வாதிகார அதிகாரங்களை வழங்குவதுடன் பாராளுமன்றத்தினையும் பாராளுமன்ற மேல் சபையையும் (Bundestag, Bundesrat) அவசர பாராளுமன்றமான "கூட்டுக் குழு" மாற்றுவதற்கு அனுமதிக்கின்றன. இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்ட 48 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் பாராளுமன்றத்தின் இரு அறைகளின் முழு அதிகாரங்களையும் கொண்டுள்ளது, இதனால் தற்போதுள்ள பாராளுமன்ற அமைப்பை பெரும்பாலும் மீறும் தன்மை கொண்டுள்ளது. ஒரு தொற்றுநோயின் போதும் அரசியலமைப்பில் இதேபோன்ற ஒழுங்குமுறையை சேர்ப்பதற்கான யோசனையை ஷொய்பிள இப்போது கொண்டு வந்துள்ளார்.

பாதுகாப்பு மந்திரி அன்னெகிரெட் கிராம்ப்-காரன்பவர் வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த ஆயுதப்படைகள் (Bundeswehr) நிலைநிறுத்தப்படுவதையும் இந்த உள்ளடக்கத்திலேயை பார்க்க வேண்டும். தற்போதைக்கு, தளவாட பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. Bundeswehr இற்கு சொந்தமாக ஐந்து மருத்துவமனைகள், 3,000 மருத்துவர்கள், நகரும் இராணுவ மருத்துவமனைகள் மற்றும் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து திறன் ஆகியவை வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்படலாம்.

ஆனால் கிராம்ப்-காரன்பவர் இன்னும் அதிகமானதை கருத்தில் கொண்டுள்ளார். 50,000 படையினர் வரை நிறுத்தப்படுவதோடு, 75,000 சேமப்படையினரையும் (reservists) அணிதிரட்டுவது குறித்தும் பேசப்படுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், பாதுகாப்பு மந்திரி நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் "தங்கள் தகமையின் இறுதிஎல்லையை எட்டியிருக்கும் போது" மட்டுமே துருப்புக்கள் முறையாக நிறுத்தப்படுவார்கள் என்று வலியுறுத்தினார். பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு துறையில், இராணுவத்தின் உதவி "கடுமையான நிபந்தனைகளின் கீழ் மட்டுமே கிடைக்கும்" என்று அவர் கூறினார். ஆனால் "நாங்கள் சுகாதாரத்துறைக்கும் மற்றும் தேவைப்பட்டால் உள்கட்டமைப்பு மற்றும் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கும் நாளாந்தமும் உதவுவோம்" என்று எழுதினார்.

தலைமைத் தளபதி அல்போன்ஸ் மைய்ஸ் படையினருக்கு எழுதுகையில், இப்போது தேவையான எந்தவொரு ஆதரவிற்கும் செயல்பாட்டுத் தயார்நிலையில் இருக்கும் கடமையை இராணுவம் கொண்டுள்ளது. "நாங்கள் ஒரு சாலையின் ஆரம்பத்தில் இருக்கிறோம், அதன் திசையையும் நீளத்தையும் நாம் இன்னும் மதிப்பிட முடியாது," என்று அவர் அறிவித்தார்.

பவேரியாவில், பழமைவாத மாநில அரசு கடந்த திங்கட்கிழமை ஒரு பேரழிவுகால சூழ்நிலையை அறிவித்தது. இது கொரோனா வைரஸின் பரவலுக்கு எதிராக தொலைநோக்கான நடவடிக்கைகளை எடுக்கவும், "சேவைகள், பொருள் மற்றும் வேலை" வடிவத்தில் உதவ குடிமக்களை அழைக்கவும் உதவுகிறது. எவ்வாறாயினும், பேரழிவுகரமான சூழ்நிலைலை என்பது ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகால தாக்குதலையும் குறிக்கிறது, இது சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்கு பயன்படுத்தப்படலாம். தொழிலாள வர்க்கம் அந்த உரிமைகளை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கவேண்டும்.

Loading