ஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக கொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவி 2,600 க்கும் மேற்பட்டோர் அதற்கு பலியாகியுள்ளனர், அதில் பெரும்பாலானோர் இத்தாலியையும், அதனைத் தொடர்ந்து இந்த தொற்றுநோய் பரவலின் பாதிப்புக்குட்பட்ட ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளையும் சேர்ந்தவர்கள் அடங்குவர். இந்த வார இறுதி நிலவரப்படி ஐரோப்பிய நாடுகளில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை, இந்த தொற்றுநோய் பரவத் தொங்கிய சீனாவில் ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த இறப்பு எண்ணிக்கையை கிட்டத்தட்ட சமன் செய்வதாக இருந்தது.

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அனைத்து பதிவுகளின் படி பார்த்தால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,287 பேர் இறந்திருப்பதும், மற்றும் கொரொனாவைரஸால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் 17,303 பேர் இருப்பதும் தெரியவருகிறது. இவ்வாறாக, ஒட்டுமொத்த கண்டத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 168,803 ஆகவும் மற்றும் இறந்தோர் எண்ணிக்கை 8,785 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதன்படி, ஐரோப்பாவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் புள்ளிவிபரங்கள் சீனாவில் இருந்த அதன் தாக்கத்தைப் போல இரு மடங்கிற்கும் மேற்பட்டதாக உள்ளன. அதாவது அங்கு 81,054 பேர் கொரொனாவைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதுடன், அதற்கு 3,261 பேர் பலியாகியுள்ளனர். மேலும், உலகளவில் அறிவிக்கப்பட்டுள்ள படி, 335,377 பேர் கொரொனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 14,611 பேர் அதற்கு பலியாகியுள்ளனர்.

கொரொனாவைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது குறித்து கிழக்கு பிரான்சின் மல்ஹவுஸ் நகரத்தில் கட்டப்பட்டுள்ள இராணுவ கள மருத்துவமனைக்குள் பிரெஞ்சு சிப்பாய்கள் விவாதிக்கின்றனர் (AP Photo/Jean-Francois Badias)

இந்த தொற்றுநோயின் மூன்றாவது பெரிய மையப்பகுதியாக ஈரான் உள்ளது. அங்கு 1,685 இறப்புக்கள் நிகழ்ந்தது உட்பட குறைந்தது 21,638 பேர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், அதேவேளை, அமெரிக்காவில் அதற்கு பலியான 400 பேர் உட்பட, 32,000 க்கும் மேற்பட்டோர் அதிரடி வேகத்தில் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலும் கூட இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி காணப்படுகிறது.

மக்கள் வீட்டிலேயே அடைந்திருப்பதற்கான முழு அடைப்பை செயல்படுத்துவதற்கோ, அல்லது இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களது தொடர்புகளை கண்காணிக்கும், மேலும் அவர்களை தனிமைப்படுத்தும் வகையிலான கூட்டு அடைப்புக்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த தொற்று பரவுவதை உண்மையில் தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுப்பதற்கோ பல வாரங்களாக அரசாங்கங்கள் மறுத்து வந்ததன் பின்னர், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தேசியளவிலும், அத்துடன் ஜேர்மனியின் பெரும்பாலான பகுதிகளிலும் முற்றிலும் மக்கள் நடமாட்டமில்லாத முழு அடைப்பு தற்போது செயல்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த தொற்றுநோய் தொய்வின்றி தொடர்ந்து பரவி வருகிறது.

ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்பிற்குள்ளான நாடான இத்தாலியில், சனிக்கிழமையன்று இந்த கொரொனாவைரஸ் தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,557 என்றும் இறந்தோர் எண்ணிக்கை 793 என்றும் பதிவாகி, பின்னர் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 5,560 என்றும் இறந்தோர் எண்ணிக்கை 651 என்றும் பதிவான நிலையில், தற்போது அங்கு ஒட்டுமொத்தமாக 59,138 கொரொனாவைரஸ் நோயாளிகள் இருப்பதுடன், 5,476 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். சனிக்கிழமையன்று, பிரதமர் யூசுப்ப கொன்தே, “அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், கண்டிப்பாக அவசியமானவை…” என்பவை தவிர பிற அனைத்து தொழிற்சாலைகளும் காலவரையின்றி மூடப்படும் என்று அறிவித்தார். மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியமான லோம்பார்டியில் உள்ள அதிகாரிகள், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மிகச் சிக்கலான நிலையிலுள்ள நோயாளிகளினால் மருத்துவமனைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்ற நிலையில், வீட்டை விட்டு வெளியே எவரும் வராத வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரித்தனர்.

ரஷ்ய இராணுவ உதவியும், கியூப மருத்துவர்கள் குழுவின் உதவியும் இத்தாலிக்கு கிடைத்து வந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) பேரழிவிற்குள்ளான இந்த நாட்டிற்கு உதவ இன்னும் மறுத்து வருகிறது. இத்தாலிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 680,000 சீன தயாரிப்பிலான முகக் கவசங்கள் செக் குடியரசில் திருட்டு போனது குறித்து இந்த வார இறுதியில் ஒரு இராஜதந்திர கருத்துமோதல் நிகழ்ந்தது, அதாவது, ஆரம்பத்தில் செக் அரசாங்கம் எதுவும் இங்கு திருட்டு போகவில்லை என்று மறுத்தது. என்றாலும், அது இப்போது முகக் கவசங்களையும் சுவாசக் கருவிகளையும் இத்தாலிக்கு அனுப்பி வருகிறது.

இத்தாலிய சுகாதாரத்துறை அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை, தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டினர், அத்துடன் லோம்பார்டியில் வெறும் 30.4 சதவிகித அளவில் மட்டுமே புதிய தொற்றுநோயாளிகள் இருந்தனர் என்ற உண்மையும் தொற்றுநோய் பரவும் வேகம் குறைந்து வருவதை காட்டுகிறது. இந்த நுண்கிருமியின் நோயரும்பல் காலம் பொதுவாக மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும், மேலும் 14 நாட்கள் வரை கூட இந்த கால அளவு அதிகரிக்கலாம். இந்த நோயை மேலும் பரவாமல் தடுப்பதற்காக மக்களை வீட்டிலேயே அடைத்து வைக்கும் உத்தரவுகள் ஒரு வாரத்திற்கு முன்பு தான் நடைமுறைக்கு வந்ததால், பெரும்பாலானவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதுடன், அந்த நேரத்தில் நோயரும்பல் தொடங்கி அதற்கான அறிகுறிகளும் அவர்களிடம் தெரிய ஆரம்பித்திருக்கக் கூடும்.

என்றாலும், தவறான நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று அதிகாரிகளும் எச்சரித்தனர். “இந்த புள்ளிவிபரங்கள் வரும் நாட்களில் வெளிவரக் கூடும் என நானும் நம்புகிறேன் மேலும் நாங்கள் நம்புகிறோம். ஆனால் உங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்,” என்று இத்தாலிய மக்கள் பாதுகாப்பு சேவைத் தலைவர் அஞ்சலோ பொரெல்லி கருத்து தெரிவித்தார்.

ஸ்பெயினில், சனிக்கிழமையன்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 3,925 என்றும் மற்றும் அன்று இறந்தோர் எண்ணிக்கை 288 என்றும் பதிவாகியது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று மேலும் 3,107 புதிய நோயாளிகள் இருப்பதும் மற்றும் 375 பேர் பலியாகியிருப்பதும் பதிவான நிலையில், அந்நாட்டின் மொத்த கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 28,603 ஆகவும் மற்றும் மொத்த இறந்தோர் எண்ணிக்கை 1,756 ஆகவும் அதிகரித்தது. சமீபத்தில் #MeToo இயக்கத்தின் இலக்காக இருந்தவரான, பிரபல ஓபேரா பாடகர் பிளாசிடோ டொமிங்கோ இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராவார். அனைத்திற்கும் மேலாக, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் 12 சதவிகிதத்தினர் (3,475 பேர்) மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களாக இருப்பதானது, ஏற்கனவே மாட்ரிட் போன்ற முக்கிய பகுதிகள் நோயாளிகளின் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் சுகாதார அமைப்புமுறையையே பேரழிவிற்கு உள்ளாக்குகிறது.

சனியன்று, ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், “மிக மோசமான நிலைமை வரப் போகிறது” என்று எச்சரித்தார். இந்த தொற்றுநோய் விவகாரத்தை அவர் கையாளுவது குறித்து பானைகளையும் தட்டுக்களையும் தட்டி பேரொலி எழுப்பி ஸ்பானிய மக்கள் அவரை எதிர்ப்பதை கட்டுப்படுத்தும் வகையில், கொரொனாவைரஸ் தொற்றுநோய் குறித்த பாரிய பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதாக சான்செஸ் உறுதியளித்தார். மேலும், சான்செஸ் அரசாங்கம், ஸ்பெயினில் விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலைப்பாட்டையும், மக்கள் நடமாட்டமில்லாத முழு அடைப்பையும் குறைந்தது ஏப்ரல் 11 வரை நீட்டித்துள்ளது.

பிரான்சில், கொம்பாய்ன் (Compiegne) பகுதியில் கொரொனாவைரஸ் பாதிப்பால் முதலாவதாக ஒரு மருத்துவர் இறந்தார், மேலும் ஞாயிறு மட்டும் 112 பேர் பலியானது உட்பட, அந்நாட்டில் பதிவான மொத்தம் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 16,018 ஆகவும், இறப்புக்கள் 674 ஆகவும் உயர்ந்துள்ளன. இந்நிலையில், சுகாதார அமைச்சர் ஒலிவியே வாரன் (Olivier Veran) உண்மையான நோயாளிகளின் எண்ணிக்கை 30,000 முதல் 90,000 வரை இருக்கலாம் என நம்புவதாகக் கூறினார். என்றாலும், இந்த தொற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றவர்களுக்கு அதை பரப்புவதற்கு முன்னர் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் வகையில் பாரிய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார நிபுணர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை அவர் வெட்கமின்றி புறக்கணித்தார். அதற்கு பதிலாக, “வீட்டுக்காவல் நடவடிக்கைகள் நீக்கப்பட்டவுடன்,” குறிப்பாக அல்லாமல் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் பிரான்ஸ் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று வாரன் கூறினார்.

ஜேர்மனியில், ஞாயிறன்று மட்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 2,488 என பதிவாகி, மொத்தம் 24,852 பேர் இருக்கின்ற நிலையில், தேசியளவிலான முழு அடைப்பிற்கு பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முதியோர் ஓய்வு இல்லங்களில் கொரொனாவைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், ஒரு இல்லத்தில் வயதான ஒன்பது குடியிருப்பாளர்கள் இறந்துவிட்டனர் என்பதுடன், வூர்ஸ்பேர்க்கில் உள்ள வயோதிபர் இல்லத்தைச் சேர்ந்த சில ஊழியர்களும் உட்பட 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இங்கு ஏற்கனவே 166 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்போது சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்களில் ஒருவரான ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டதன் பின்னர் அம்மருத்தவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இந்த நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில், ஞாயிறன்று 48 பேர் இதற்கு பலியானதாகவும் மற்றும் 665 பேர் புதிதாக பாதிப்படைந்துள்ளதாகவும் பதிவான நிலையில், அங்கு மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,683 ஆக உயர்ந்ததுடன், கொரொனாவைரஸ் பாதிப்பால் 18 வயதான முதல் பதின்ம வயது நபர் இறந்தது உட்பட, அங்கு இறந்தோர் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்தது குறித்து அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அவரது விஞ்ஞான ஆலோசகரான பாட்ரிக் வாலன்ஸ், மக்கள் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக மாறுவதை இது தடுக்கும் என்று கூறி, பிரிட்டன் நோயால் பாதிக்கப்படுவதைத் தடுப்பது “விரும்பத்தக்கது அல்ல” என்று அவர் கூறியதையடுத்து, அவரது தீவிர வலதுசாரி ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் “வயதானவர்களை இறக்க அனுமதிக்க வேண்டும்” என்று அவர் வாதிட்டதாக கூறும் Sunday Times செய்தியிதழின் அறிக்கையை ஜோன்சன் மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த தொற்றுநோய் சர்வதேச அளவில் ஆழமான வர்க்கப் பிளவுகளை விரைந்து முன்னிலைப்படுத்தி வருகிறது. முன்பை விட முடிந்த வரை பணக்காரர்களாக தோன்றுவதற்கு, நோய் அதன் போக்கில் பரவ அனுமதிப்பதில் நிதி பிரபுத்துவம் உறுதியாக உள்ளது. தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்னர் பங்குச் சந்தைகளையும் பெரும் செல்வந்தர்களையும் பிணை எடுப்பதற்காக ஐரோப்பிய மத்திய வங்கி 750 பில்லியன் யூரோ தொகையை அச்சடித்துள்ளது, மேலும் தேசிய அரசுகள் பெருநிறுவனங்களுக்கு நிதி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வழங்கி வருகின்றன என்றாலும், ஐரோப்பா முழுவதிலுமான வணிகங்கள் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களுக்காக இலாபம் ஈட்டித் தர வேண்டும் எனக் கருதி அவர்களைத் தொடர்ந்து வேலை செய்யும்படி கோருகின்றன.

எவ்வாறாயினும், இந்த கொடிய தொற்றுநோய் தொடர்பான ஆளும் உயரடுக்கின் பொறுப்பற்ற அணுகுமுறை குறித்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வார வேலைநிறுத்தங்கள் மற்றும் பிரான்சில் அமசன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக விடுத்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னர், இத்தாலியில் அத்தியாவசியமற்ற பொருட்களை அனுப்புவதை அமசன் நிறுத்தியது.

சுகாதாரத்துறைக்கான வரவு-செலவுத் திட்ட நிதியை குறைத்து மருத்துவமனைகளை பேரழிவுக்குள்ளாக்கிய பல தசாப்தங்கள் நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளை சுகாதார வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில், இத்தாலியில் அதிரடியாக எழுந்த வேலைநிறுத்த அலைக்குப் பின்னர், ஆரம்பகட்ட தடுப்புக்காவலை பின்பற்றுவதற்கு உத்தரவிடும் நிலைக்கு கொன்தே தள்ளப்பட்டார்.

ஸ்பெயினில், மருத்துவத்துறை பொருட்களின் கொள்முதலாளர் ஒருவர் El Espanol செய்தியிதழுக்கு அளித்த பேட்டியில், சான்செஸின் ஸ்பானிய சோசலிசக் கட்சி-பொடேமோஸ் அரசாங்கம் முகக் கவசங்கள் மற்றும் அவசரகால செயற்கை சுவாசக் கருவிகளுக்கான கொள்முதல் உத்தரவை பிறப்பிக்க தவறியது குறித்து விமர்சித்தார். “அவர் அவற்றை சரியான நேரத்தில் வாங்க முடியவில்லை என்றும், அதிலும் ஊழல் உள்ளது,” என்றும் கூறினார். “இதற்கிடையில், பாஸ்க் நாடு மற்றும் கலீசியாவின் உள்ளூர் தேர்தல்களைப் பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள் அல்லது பாலியல் சுதந்திரம் குறித்த மான்டெரோ சட்டம் ஆளும் கூட்டணிக்குள் மோதலை உருவாக்குகிறதா என்று கேட்கிறார்கள். கொரொனாவைரஸ் பற்றி எல்லாவற்றையும் தாண்டி எதையும் ஊதிப் பெரிதாக்கும் என்ன முட்டாள்தனம் இது! நேரத்தை இப்படியா வீணாக்குவது!” என்று பேசப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிரான்சில், 600 மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு, பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் அன்னியேஸ் புஸானும் இந்த தொற்றுநோய் விவகாரத்தை கையாண்ட விதம் குறித்து குடியரசின் நீதித்துறையில் (Republic’s Court of Justice-CJR) வழக்கு தொடுத்துள்ளது. “மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்திற்கு” எதிராக “தானாக முன்வந்து நடவடிக்கைகளை எடுக்கவோ அல்லது தொடங்கவோ இல்லாமல் விலகிக் கொண்டதாக” அவர்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர். ஜனவரி முதல் தொற்றுநோயால் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து தான் ஏற்கனவே பிலிப்பை எச்சரித்ததாக புஸான் ஒப்புக்கொண்ட பின்னர், பிலிப்பை குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தவும் அவரது கணினிகளை பறிமுதல் செய்யவும் இந்த குழு கோருகிறது.

வளர்ந்து வரும் வர்க்க மோதல்களுக்கு மத்தியில், தொற்றுநோயை எதிர்த்து போராட சமூக வளங்களை பாதுகாக்க முயற்சி செய்யுமாறு அரசாங்கம் மற்றும் வங்கிகளுடன் தொழிலாளர்கள் மோதுகின்ற நிலையில், ஆளும் வர்க்கமோ, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் போலி இடது அரசியல் கூட்டாளிகளின் உதவியுடன் அந்த எதிர்ப்பை நசுக்குவதற்கு முனைந்து வருகிறது. வங்கிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் நிதியூட்டங்களை வழங்குவதில் அவர் வெறியாக உள்ள நிலையில், இது ஊதியங்கள் மற்றும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு தயாராகி வருவதுடன், சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கிய நகர்வுகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மார்ச் 18 அன்று, போர்ச்சுக்கலின் சமூக ஜனநாயக அரசாங்கம் அவசரகால நிலைக்கு வாக்களித்த நிலையில், 1974 இல் சலாசர் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல் முறையாக வேலைநிறுத்தம் செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை நிறுத்திவைத்து, எச்சரிக்கை நிலையை அமல்படுத்த ஸ்பெயின் இராணுவத்தை உள்நாட்டிற்குள்ளேயே நிலைநிறுத்தியது. பிரான்சில், கொரொனாவைரஸ் நெருக்கடியின் போது புதிய அவசரகால நிலைக்கான மசோதாவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது, இது, கொரொனாவைரஸ் நெருக்கடி முடிந்த பின்னரும் கூட, வணிகங்கள் ஒரு வார கால விடுமுறையை குறைக்கவும், வேலை வாரத்தின் நீளத்திற்கான கட்டுப்பாடுகளை அகற்றவும் அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கைகள், வணிகங்கள் மற்றும் தொழிற்சங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளியன்று ஜேர்மனியில், IG Metall தொழிற்சங்கம், வணிக நடவடிக்கைகளை பாதுகாக்க இது அவசியம் என்று கூறி, முதலாளிகளுடனான பேச்சுவார்த்தைகளை கைவிடுவதற்குமான மற்றும் ஊதிய உயர்வு இல்லாத ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வதற்குமான ஒரு சாக்குப்போக்காக கொரொனாவைரஸ் நெருக்கடியை பயன்படுத்தியது. இடது கட்சியின் தலைவர் டீட்மார் பார்ட்ஸ் (Dietmar Bartsch) மேர்க்கெலின் கொள்கைகளைப் பாராட்டி, “தேசத்துக்கும், மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் சேதம் ஏற்படாமல் இருக்க தேவைப்படும் ஐக்கியத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த கட்சிப் பிரிவு ஆதரிக்கும்” என்று ட்வீட் செய்தார்.

பல ஆண்டுகளாக திணிக்கப்பட்டு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் அரசு அடக்குமுறைக்குப் பின்னர், தொழிலாளர்களின் உடல்நலம், வாழ்வாதாரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவை குறித்த பாதுகாப்பு என்பது, ஒரு சமூக புரட்சியையும், மற்றும் இந்த அழுகிப்போன அரசியல் ஸ்தாபகத்துடனான முறிவையும் கோருகிறது. தொற்றுநோயை தடுப்பது, முழு அடைப்பின் போது கண்ணியமான ஊதியங்களைப் பெறுவது, மற்றும் இலவச மற்றும் கண்ணியமான மருத்துவ வசதிகளைப் பெறுவது ஆகிய அனைத்தையும் பெறுவதற்கான போராட்டம் ஒரு சர்வதேச அரசியல் போராட்டமாகும். இதற்கு, தொழிற்சங்களிலிருந்து சுயாதீனமான சாமான்ய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்ட ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்க அமைப்பு தேவைப்படுவதுடன், அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதற்கான போராட்டமும் அவசியமாகிறது.Top of Form

Loading