ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா எங்கிலும், மற்றும் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலையிடங்கள் அடைக்கப்பட்டு அவற்றின் மக்கள் மீது ஊரடங்கு திணிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐரோப்பாவில் நேற்று கொரொனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது உலகளவில் 244,799 கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ள நிலையில், ஐரோப்பா 107,397 நோயாளிகளையும், 4,964 உயிரிழப்புகளையும் அறிவித்துள்ளது, நேற்று 1,010 நபர்களில் 800 பேர் உயிரிழந்தனர். இதில் ஜேர்மனியில் 16, பிரிட்டனில் 44, பிரான்சில் 108, ஸ்பெயினில் 165 மற்றும் இத்தாலியில் 427 பேர் உள்ளடங்குவர்.

இந்த தொற்றுநோயின் முதல் குவிமையமான சீனாவில் 3,245 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன மற்றும் 80,928 நோயாளிகள் உள்ளனர், இவர்களில் 70,420 பேர் குணமாக்கப்பட்டுள்ளனர், கடுமையான தடுப்பு நடவடிக்கைகளும் மற்றும் தீவிர சிகிச்சையும் இந்நோய் பரவுவதைப் பெரிதும் தடுத்திருப்பதுடன் இப்போது நோய்வாய்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது. ஆனால் புதிய குவிமையமாக ஆகியுள்ள ஐரோப்பாவில் இந்நோய் இன்னமும் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது என்பதுடன், அதிகரித்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் இந்த வைரஸ் காரணமாக நிமோனியாவினால் மூச்சு திணறும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இத்தாலி 41,035 நோயாளிகளையும், 3,405 கொரொனா வைரஸ் உயிரிழப்புகளையும் கண்டுள்ளது. இது இத்தாலியை விட 23 மடங்கு அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும். நோயின் ஐரோப்பிய குவிமையமாக விளங்கும் வடக்கு இத்தாலியில் நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சையளிக்கமுடியாது இருப்பது ஒருபுறம் இருக்க, சடலங்களை அவர்களால் அடக்கம் செய்ய முடியாதளவுக்கு சுகாதாரத்துறை சுமையேறிப்போயுள்ளது. இத்தாலியில் புதன்கிழமை 475 பேர் உயிரிழந்த பின்னர் நேற்று 427 பேர் உயிரிழந்தனர், இது இந்த தொற்றுநோய் பரவியுள்ள எந்தவொரு நாட்டிலும் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையிலேயே மிக அதிகபட்சமாகும்.

A patient in a biocontainment unit is carried on a stretcher from an ambulance arrived at the Columbus Covid 2 Hospital in Rome.(AP Photo/Alessandra Tarantino)

இத்தாலியில் மிகப்பெரியளவில் மனித துயரம் கட்டவிழ்ந்து வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடிய அல்லது எரிக்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் தேவாலயங்களின் சக்தியை மீறி வேகமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் பெர்காமோவில், சடலங்களை அடக்கம் செய்வதற்காக மற்ற நகரங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதினைந்து இராணுவ வாகனங்களின் ஒரு தொகுப்பை இத்தாலி அனுப்பியது. சவப்பெட்டிகள் ஏற்றிய இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் அந்நகரின் வெறிச்சோடிய வீதிகளில் ஊர்ந்து சென்றதை, பெர்காமோவில் வசிப்பவர்கள் அவர்களின் அடுக்குமாடி கட்டிடங்களில் அடைபட்டு இருந்தவாறு அவை செல்லும் பாதையைப் படம் எடுத்தனர்.

இத்தாலி அரசாங்கத்தால் கைவிடப்பட்ட மருத்துவர்கள், எப்பாடுபட்டாவது உதவியைப் பெறுவதற்காக முறையீடுகள் செய்ய சமூக ஊடகங்களை அணுகி வருகிறார்கள். பெர்காமோவின் Papa Giovanni மருத்துவமனையின் டாக்டர் Stefano Fagiuoli ஆங்கிலத்தில் ஒரு சிறிய காணொளியைப் பதிவிட்டார், அதில் அவர் கூறுகிறார்: “நான் இரண்டு சேதிகளைக் கூற வேண்டும். முதலாவது பொதுமக்களுக்கு: தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். இரண்டாவது எங்களுக்கு உதவ விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கானது. செயற்கை சுவாச சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் சேர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் எங்களுக்கு மிகவும் கடுமையாக தேவைப்படுகிறார்கள்,” என்றார்.

க்ரீமொனாவில் டாக்டர் Romano Paolucci கூறினார், “நாங்கள் எங்கள் பலத்தின் முடிவில் நிற்கிறோம். இதுவொரு சிறிய மருத்துவமனை என்பதோடு நிறைய நபர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.” தீவிரமாக தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக இருக்கும் காற்றோட்ட மருத்துவ சாதனங்களின் எண்ணிக்கையை விட இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது, இதனால் மருத்துவர்கள் யாரை காப்பாற்ற முயல வேண்டும், காற்றோட்ட மருத்துவ சாதனங்களை வழங்க மறுப்பதன் மூலமாக யாரைச் சாவதற்கு விட வேண்டும் என்று கொடூரமாக தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். நோயாளிகள் "அவர்கள் பக்கத்தில் அவர்களின் அன்புக்குரியவர்கள் இல்லாமல் தனியாக மரணிக்க விடப்பட்டுள்ளார்கள். பெரும்பாலும் அவர்களின் தெளிவற்ற கைத்தொலைபேசி அழைப்பில் தங்களின் உறவினரிடம் தமது இறுதி பிரியாவிடையை கூறிக் கொண்டிருக்கிறார்கள்" அவர்களைப் பார்த்து பணியாளர்கள் மனம் ஒடிந்து போகிறார்கள் என்பதையும் Paolucci சேர்த்துக் கொண்டார்.

அனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், இதுபோன்ற நிலைமைகள் படிப்படியாக அக்கண்டம் எங்கிலும் உருவாகி கொண்டிருக்கின்றன. ஸ்பெயின் நேற்று 2,626 புதிய நோயாளிகளையும் 165 உயிரிழப்புகளையும் கண்டது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாட்ரிட்டில் மருத்துவமனைகள் பொறிவின் விளிம்பில் உள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு நோயாளிகள் ஒரே அறைகளில் குவிக்கப்பட்டுள்ளனர், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் முகப்பு நடைபாதைகளிலேயே நிறுவப்பட்டுள்ளன, கிடைக்கும் ஒவ்வொரு எந்திரமும் பயன்படுத்தப்படுகிறது, இருந்தும் கூட, ஒரு மருத்துவர் El Diario இக்கு கூறியவாறு, “நாம் ஒரு கொடூரமான சூழ்நிலையில் உள்ளோம். புதன்கிழமை தீவிர சிகிச்சை பிரிவுக்கு 200 பேர் கொண்டு வரப்பட்டனர், எங்களால் அவர்களைக் கையாள முடியவில்லை, மக்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.”

இதேபோன்ற நிலைமைகள் பாரீசில் எதிர்பார்க்கப்படுகின்றன. செவ்வாயன்று, பிரான்ஸ் எங்கிலும் வெளியில் வராமல் வீட்டிலேயே அடைந்திருக்கும் நிலை நடைமுறைக்கு வந்த நிலையில், தொற்றுநோய் நிபுணர்கள் பாரீஸ் பொது மருத்துவமனை (AP-HP) நிர்வாகத்திற்குக் கூறுகையில், வெளியில் அடைந்திருப்பது தொடங்கிய பின்னரும் நோயாளிகளின் எண்ணிக்கை வாரக்கணக்கில் தொடருமென எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைக் கையாள அவர்களுக்கு நூற்றுக் கணக்கில் அல்ல, மாறாக 4,000 தீவிர சிகிச்சை படுக்கைகள் தேவைப்படும் என்றனர். இந்த அறிவிப்பு உருவாக்கிய "அதிர்ச்சிக்கு" பின்னர், பாரீஸ் மருத்துவமனைகளில் இருக்கும் எல்லா இடங்களையும் பணியாளர்கள் கொரொனா வைரஸ் கவனிப்புக்காக மாற்ற நகர்ந்தனர். ஆனாலும் செயற்கை சுவாச சாதனங்கள் மற்றும் மருத்துவத்துறை முக கவசங்கள் உட்பட முக்கிய பொருட்களின் பற்றாக்குறை குறித்து மருத்துவர்கள் இன்னமும் தெரிவிக்கின்றனர்.

“என்ன வரவிருக்கிறதோ அது குறித்து நாங்கள் அனைவரும் பயந்து போயுள்ளோம்,” டாக்டர் Nicolas Van Grunderbeeck அர்ராஸில் Le Monde இக்குத் தெரிவித்தார், அதேவேளையில் ஒரு பாரீஸ் மருத்துவர் இன்னும் அதிக விரைவாக செயல்பட தவறுவதற்காக அதிகாரிகளைக் கண்டித்தார்: “பொருட்கள் இறுதியில் வழங்கப்பட்டு வருகின்றன என்றாலும் அது அனேகமாக போதுமானதாக இருக்காது. மூன்று வாரங்களுக்கு முன்னரே நாம் விலக்கி வைப்பதை, மருத்துவமனைகளைக் காலி செய்வதை, COVID-19 ஐ கையாள ஒவ்வொருவருக்கும் பயிற்றுவிப்பதைத் தொடங்கி இருக்க வேண்டும். அங்கே உண்மையான விலக்கி வைப்பு, அதாவது வீடுகளிலேயே இருக்குமாறு கடுமையான உத்தரவுகள் இல்லையோ என எனக்கு பீதியாக உள்ளது, அவ்வாறில்லை என்றால் இன்னும் அதிக மரணங்கள் நிகழக்கூடும்.”

இத்தகைய சம்பவங்கள் ஐரோப்பிய முதலாளித்துவம் பின்பற்றும் கொள்கைகளின் குற்றகரமான குணாம்சத்தை அடிக்கோடிடுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் பல தசாப்தங்களாக, குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து, சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றி, முக்கிய சுகாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பைச் சூறையாடியது, சமூக சமத்துவமின்மை கடுமையாக அதிகரித்தது. கடந்த பெப்ரவரியில் நோயாளிகளின் எண்ணிக்கை வெடிப்பாக வெளிப்பட தொடங்கியதும், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் வீட்டிலேயே அடைந்து இருக்கும் உத்தரவுகளை எதிர்த்தன மற்றும் தொழிலாளர்களை வேலையில் இருக்குமாறு நிர்பந்திக்க முயன்றன. ஆலைமூடல்களை தவிர்க்கலாமென்றும் மற்றும் பாரியளவில் பிணையெடுப்புகள் வழங்கி ஊதிப் பெருத்த பங்குச் சந்தைகளுக்கு முட்டுக்கொடுக்கலாமென்றும் கருதின.

மனித உயிர்களைக் குறித்த அதிர்ச்சியூட்டும் அலட்சியத்துடன், உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தொழிலாளர்களைத் தொடர்ந்து வேலை செய்யுமாறு கோரியதுடன், ஐரோப்பா எங்கிலும் பத்து நூறு மில்லியன் கணக்கானவர்கள் நோயில் விழுவதை ஏற்றுக் கொண்டனர். ஜேர்மன் மக்களில் 60 இல் இருந்து 70 சதவீதத்தினர் (49 இல் இருந்து 57 மில்லியன் மக்கள்) நோய்வாய்படுவார்கள் என்று சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்தார். பிரிட்டனின் தலைமை விஞ்ஞானத்துறை ஆலோசகர் சர் பாட்ரிக் வாலன்ஸ் கொரொனா வைரஸ் பரவுவதை நிறுத்தும் முயற்சிகளுக்கு எதிராக வாதிட்டார்: “அது பாதிப்பதிலிருந்து ஒவ்வொருவரையும் தடுப்பது சாத்தியமில்லை என்பதோடு, அதுவிரும்பத்தக்கதும்இல்லை ஏனென்றால் எதிர்காலத்தில் நம்மைநாமே பாதுகாக்க மக்களுக்கு சிறிது எதிர்ப்புசக்தி தேவைப்படுகிறது,” என்று வலியுறுத்தினார் [அழுத்தம் சேர்க்கப்பட்டது].

சமூக விலக்கு மற்றும் உழைக்கும் மக்களின் பெரும் பிரிவினரை வீடுகளிலேயே அடைந்திருக்க செய்வது ஆகியவை இதுபோன்ற ஒரு தொற்றுநோய் பரவுவதை தடுக்க அவசியமானது என்றாலும் கூட, பல ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் இந்த கொள்கையையே பேணி வருகிறார்கள். புதன்கிழமை மாலை, மேர்க்கெல் மீண்டும் உரையாற்றினார், தேசியளவில் வெளியில் வராமல் இருக்க கோரும் உத்தரவை தவிர்த்த அவர்; புதிய நபர்களுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் புதிய மருத்துவ சாதனங்களை ஏற்படுத்துவது குறித்து எந்த முறைமைகளும் முன்மொழியவில்லை. திங்கட்கிழமை, டச் பிரதம மந்திரி மார்க் ரூட் வெளியில் வராமல் வீட்டிலேயே அடைந்திருக்கும் உத்தரவுகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்று நிராகரித்ததுடன், 2,460 டச் மக்களை இப்போது அந்த வைரஸ் தாக்கி உள்ள போதினும், அந்த நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படாது என்று வலியுறுத்தினார்.

உலகெங்கிலும் தயாரிப்பு செய்யப்பட்டு வரும் மனித உயிரிழப்பு இறுதியில் பிரதான ஆயுத மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இணையாக நெருங்கி வரக்கூடும் என்பது அதிகரித்தளவில் தெளிவாகி வருகிறது.

ஐரோப்பாவில் 107,397 நோயாளிகள் உள்ள நிலையில், மருத்துவமனைகள் ஏற்கனவே வழிந்து நிரம்புகின்றன, தீவிர நோயாளிகளுக்கு உயிர்காக்கும் கவனிப்பு மறுக்கப்பட்டு வருகின்றன, இந்த தொற்றுநோய் பல ஆயிரக் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்து வருகின்றன. ஐரோப்பிய மக்கள்தொகையில் 60 இல் இருந்து 70 சதவீதத்தினர் (305-356 மில்லியன் பேர்) கொரொனா வைரஸ் நோயில் வீழ்ந்தால், மிலான் மற்றும் மாட்ரிட் நடந்து வரும் பயங்கர காட்சிகள் ஐரோப்பா எங்கிலும் ஆயிர மடங்கு எதிரொலிக்கும். மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வழியும், பத்து மில்லியன் கணக்கானவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படலாம், பல மில்லியன் கணக்கானவர்கள் இறக்கக்கூடும்.

நிதியியல் பிரபுத்துவத்தின் இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு இப்போது வாழ்வா சாவா விடயமாகும். கடந்த வாரம் இத்தாலி எங்கிலும் ஆலைகளில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்களின் வெடிப்பு தான் வெளியில் வராமல் இருக்குமாறு உத்தரவுகள் மீதான இத்தாலிய அரசாங்கத்தின் எதிர்ப்பைக் கைவிட அதை நிர்பந்தித்தது. இந்த கொள்கை அதற்கடுத்து அடுத்தடுத்து பிரான்சிலும், மாட்ரிட் மற்றும் ஸ்பெயினின் பாஸ்க் பிரதேசத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த நோயை எதிர்த்து போராடுவதற்கு, அதிகாரத்தை ஆளும் வர்க்கத்தின் கரங்களில் விட்டு வைத்திருக்க முடியாது. நோயைப் பரப்பி வருபவர்களைக் கண்டறிவதற்காக மக்களுக்குப் பாரியளவில் பரிசோதனைகளை ஒழுங்கமைக்கவும், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்கான முக்கிய மருத்துவ சாதனங்களை அவசரமாக உற்பத்தி செய்வதை ஒழுங்கமைக்கவும், தொழிலாளர்கள் வெளியில் வராமல் தனிமைப்படுத்தப்படும் காலகட்டங்களில் அவர்களுக்கு உதவவும் இப்போதும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மறுக்கின்றன. இது என்னவிதமான தனிமைப்படுத்தும் கொள்கைகளை மேற்கொண்டாலும் அவற்றின் நீண்டகால விளைவுகளை இல்லாதொழிக்கின்றது.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இவ்வாரம் ஐரோப்பிய ஒன்றிய நிதியியல் சந்தைகளுக்கு 750 பில்லியன் யூரோ பிணையெடுப்பு வழங்க உடன்பட்ட பின்னர், அங்கே இதுபோன்ற கொள்கைகளுக்கு ஆதாரவளங்கள் இல்லை என்று வாதிடுவது அர்த்தமற்றது. ஆதாரவளங்கள் உள்ளன, தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த செல்வவளம், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்துவதில் தனியார் சொத்து வளம் அல்லது இலாபத்தைக் குறித்த எந்த பரிசீலனையும் குறுக்கிட அனுமதிக்கக்கூடாது.

இத்தாலியிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வேலைநிறுத்தங்களின் மேலெழுச்சி, ஆலைகள் மீது கட்டுப்பாட்டை எடுக்கவும் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்யவும், அரசு கட்டுப்பாட்டிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான செயல்படுவதற்குரிய, தொழிலாள வர்க்கத்தின் சக்தியைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு சோசலிச முன்னோக்கு அடிப்படையிலான அதுபோன்றவொரு போராட்டம் மட்டுமே, நச்சார்ந்த சமூக சமத்துவமின்மை மட்டங்களைக் கடந்து சென்று, இந்த வைரஸிற்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச போராட்டத்திற்கான ஆதாரவளங்களை வழங்கும்.

Loading