இலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர். ஒருவர் சிறைச்சாலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றவர் மருத்துவமனையில் இறந்தார். இந்த சிறை, கொழும்பிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மேற்கோள் காட்டி, மார்ச் 18 அன்று இலங்கை சிறை அதிகாரிகள் அனைத்து பார்வையாளர்களுக்கும் தடை விதித்தனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கைதிகளைப் பாதுகாப்பதற்கான குழு தலைவர் சேனக பெரேரா, தடை விதிக்கப்பட்ட தினத்திலிருந்து அதிகாரிகள் வழங்கிய மோசமான தரமற்ற உணவு குறித்து அனுராதபுர சிறை கைதிகள் கோபமடைந்துள்ளனர்.

இலங்கை சிறைச்சாலைகள் மிகவும் நெரிசலானவை என்று பெரேரா கூறினார், சில சந்தர்ப்பங்களில், 800 பேர் தங்குவதற்கான வசதிகளில் 5,000 கைதிகள் நெரிசலில் சிக்கியுள்ளனர். சுருக்கமான ஊடக அறிக்கையின்படி, கடந்த வாரம் ஒரு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் சிறைக்கு கொண்டு வரப்பட்டதாக வதந்திகள் பரவிய பின்னர் கேகாலையில் உள்ள சிறைக்குள்ளும் பதட்டங்கள் அதிகரித்தன.

நான்கு கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டதை அடுத்து சனிக்கிழமை காலை அனுராதபுர கைதிகள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். சில கைதிகள் தப்பிக்க முயன்றபோது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் கூறினர். நிராயுதபாணியான கைதிகள் மீது சிறைக் காவலர்களோ அல்லது விசேட அதிரடிப் படை பொலிசாரோ துப்பாக்கிச் சூடு நடத்தியார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிறைச்சாலைக்கு அருகே சனிக்கிழமை இரவு முதல் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை தொடங்கி ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நாடு தழுவிய ஊரடங்கை அமுல்படுத்தியதை அடுத்தே அனுராதபுர சிறைக் கலவரம் ஏற்பட்டது. இன்று நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அகற்றப்படும் அதே வேளை, வடக்கு மாவட்டங்களும், கொழும்பு உட்பட வடமேற்கு மற்றும் மேல் மாகாணத்தின் பல மாவட்டங்களும் செவ்வாய்க்கிழமை காலை வரை பூட்டப்பட்டிருக்கும்.

தனது நிர்வாகத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்று கூறி, ராஜபக்ஷ ஆரம்பத்தில் தேசிய முழு அடைப்பை விதிக்க மறுத்துவிட்டார். முன்னர் ஏப்ரல் 25 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான வேண்டுகோள்களையும் நிராகரித்த அவர், மற்ற கட்சிகளால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலைமையை சுரண்டிக்கொள்ள முடியும் என்று நம்புகிறார். மார்ச் 19 அன்று, வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல் ஆணையம், பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

நேற்றிரவு, இலங்கையில் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12,000 ஆக உயர்ந்ததுடன் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 82 ஐ எட்டியது. இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் COVID-19 வேகமாக பரவி வந்த நிலைமையின் மத்தியில், ராஜபக்ஷ நிர்வாகம் இறுதியாக ஒரு குறுகிய கால தேசிய அடைப்பை அமுல்படுத்த முடிவு செய்தது.

கடந்த செவ்வாயன்று தொற்றுநோய் குறித்த ஜனாதிபதியின் தேசிய உரையில், ராஜபக்ஷ அரசாங்கத்தின் அலட்சியமான மற்றும் குற்றவியல் அணுகுமுறை வெளிப்பட்டது. தனது நிர்வாகத்தால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று ராஜபக்ஷ உரையாற்றிய, பின்னர் ஒரு பிற்போக்குத்தனமான குற்றச்சாட்டை சுமத்திய அவர், நோயை இலங்கைக்குக் கொண்டுவந்தமைக்காக "வெளியாட்களை" குற்றம் சாட்டினார்.

ஜனவரி மாதம் ஒரு சீன சுற்றுலாப் பயணி பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சையின் பின்னர் பெப்ரவரி மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டதாக ராஜபக்ஷ கூறினார். இது மீதமுள்ள மக்களை பாதுகாக்க இந்த நேரத்தில் அரசாங்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை தற்செயலாக வெளிப்படுத்தியது.

வைரஸ் பரவுவதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்: "எங்கள் மிகப்பெரிய பிரச்சனை, நாங்கள் உண்மையில் தனிமைப்படுத்தலைத் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைந்த கிட்டத்தட்ட 2,000 பயணிகள்தான்," என அவர் கூறினார்.

தனது நிர்வாகத்தால் “இந்த நிலைமையை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்” என்று வலியுறுத்திய ராஜபக்ஷ, சுகாதார அமைப்பை மேம்படுத்த மேலதிக நிதி எதையும் அறிவிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டில்கள் பற்றாக்குறையாக இருந்த போதிலும், கொரோனா வைரஸ் சுகாதார செலவினங்களுக்காக அரசாங்கம் வெறும் 500 மில்லியன் ரூபாயை (2.67 மில்லியன் அமெரிக்க டாலர்) மட்டுமே ஒதுக்கியுள்ளது.

பிரதான தனிமைப்படுத்தல் மையங்கள், ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் மேம்படுத்தப்பட்ட முகாம்களாகும். அல்லது கந்தகாடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் போன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தற்போது 22 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ள போதிலும், அதிக வெப்பமண்டலம் மற்றும் வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதால் இவற்றில் பல விரும்பத்தகாதவை.

"தயார்நிலை" பற்றிய ராஜபக்ஷவின் கூற்றுகளுக்கு மாறாக, உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள நாடுகளை "அவசரமாக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய" மற்றும் வைரஸை எதிர்த்துப் போராட "இன்னும் இன்னும் வேலைகளை அவசரமாக செய்ய" வேண்டிய நாடுகள் என எச்சரித்தார். இந்த நாடுகளில் சோதனை நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. சோதனைகள் குறைவாக இருக்கின்றமையே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு ஒரு காரணமாகும், என்று அவர் கூறினார்

ராஜபக்ஷ தனது உரையை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இன் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கும் "[அவரது மூத்த சகோதரர் [மற்றும் முன்னாள் ஜனாதிபதி] மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒரு வலுவான அரசாங்கத்தை" ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு தற்போதுள்ள அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது ஈவிரக்கமின்றி சுமத்துவதற்கும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற ராஜபக்ஷக்கள் போராடுகிறார்கள்.

COVID-19 முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது மற்றும் இலங்கை பொருளாதாரத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளியன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து நிதியை திரும்பப் பெற்று, ரூபாய்க்கு அழுத்தம் கொடுத்தனர். வெளிநாட்டு இருப்புக்கள் கறைந்து போவதைத் தடுக்க கார்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற இறக்குமதிகளுக்கு உடனடியாக மூன்று மாத தடையை மத்திய வங்கி அறிவித்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது நிர்வாகத்தை மேலும் இராணுவமயமாக்க தொற்றுநோயைப் பயன்படுத்துகிறார். தனது மார்ச் 17 தேசிய உரைக்கு முன்னதாக, தொற்றுநோயை எதிர்த்து போராட அமைக்கப்பட்ட விசேட அதிரடிப்படை குழு உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். புதிய நிர்வாகம் மூத்த இராணுவ அதிகாரிகளால் நிரம்பியுள்ளது.

இலங்கையை முற்றிலுமாக பூட்ட வேண்டும் என்ற அழைப்புகளை ஒதுக்கித் தள்ளி, ராஜபக்ஷ கூறியதாவது: “உலகின் பிற நாடுகளைப் போலல்லாமல் புலி பயங்கரவாதத்தை எம்மால் தோற்கடிக்க முடிந்தது. மற்ற நாடுகளில் சிறந்த மருத்துவ வசதிகள் இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களை எங்கள் முயற்சிகள் மூலம் குணப்படுத்த முடிந்தது.”

துறைமுக அதிகாரசபையின் தற்போதைய தலைவராக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, “இது இராணுவத்திற்கு சொந்தமான காலம்… இராணுவம் மேலிடத்தைப் பெற வேண்டும்,” என அறிவித்தார்.

அதே நாளில், ராஜபக்ஷ, COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்க இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான கொழும்பின் கொடூரமான தசாப்த கால யுத்தத்தில், புலிகளை தோற்கடிப்பது குறித்த ராஜபக்ஷவின் குறிப்பு, இனவாதத்தைத் தூண்டிவிடுவதற்கான ஒரு முயற்சியாகும். கொரோனா வைரஸுக்கு போதுமான அளவில் பதிலளிக்க அவரது அரசாங்கம் மறுத்தமை சம்பந்தமான விடயத்தில் இருந்து கவனத்தை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும். “நான் தான் இந்த நாட்டை நடத்துகிறேன். பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் நான் சொல்வது போல் செய்ய வேண்டும்,” என்று அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சாதாரண இலங்கையர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ராஜபக்ஷ இழிந்த முறையில் ஒரு கிலோ பருப்பு சில்லறை விலையை 65 ரூபாயாகவும், ஒரு டின் மீன் விலையை 100 ரூபாயாகவும் குறைப்பதாக அறிவித்தார். அதே மூச்சில், அவர் பெருவணிக மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாரிய சலுகைகளை அறிவித்தார்: “வணிகத்துக்காக எடுக்கப்பட்ட கடன் வசதிகளுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆறு மாத கால மீட்டெடுப்பு காலத்தையும் நான் கட்டளையிடுகிறேன்… [மற்றும்] வங்கிகளுக்கு நான்கு சதவீத வட்டிக்கு மூலதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என அவர் அறிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள அவர்களது சகாக்களைப் போலவே இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தோற்கடிக்கத் தேவையான சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு போதுமான சுகாதார அமைப்பு, நிதி உதவி மற்றும் பிற முக்கிய வளங்களைப் பெற அரசாங்கங்களையும் ஆளும் உயரடுக்கினரையும் நம்ப முடியாது.

அதனால்தான், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கும், முதலாளித்துவ இலாப முறையை ஒழிப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள தனது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைந்து தொழிலாள வர்க்கம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

Loading