இலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கிறது

K. Ratnayake
27 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ரவரி 14 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பயணத் தடை விதித்தார்.

"உள்நாட்டுப் போரின் கடைசி கட்டமான 2009 இல் அவர் (சில்வா), சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டார் என்ற நம்பகமான தகவலுக்கு” பதிலளிக்கும் விதமாக, தான் இந்த நடவடிக்கை எடுத்ததாக பொம்பியோ அறிவித்தார். சில்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களை செய்துவரும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த தடை, பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலின் இறுதி கட்டங்களில் நிகழ்ந்த போர்க் குற்றங்களை, வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான தனது யுத்த தயாரிப்புகளுடன் அணித்திரளுமாறு கொழும்பு அரசாங்கத்துக்கு நெருக்குவதற்காக பயன்படுத்திக்கொள்ளும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுத்துள்ள நேரடியான மற்றும் அச்சுறுத்தலான செய்தியாகும். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்கு புதிய அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சியையும் வாஷிங்டன் பொறுத்துக் கொள்ளாது.

1995 இல் முதல் முதலில் கைச்சாத்திடப்பட்ட இராணுவ நிலைப்படுத்தல் ஒப்பந்தத்தை (சோஃபா) புதுப்பிக்குமாறு, கடந்த ஜூலை மாதம் வாஷிங்டன் கொழும்பு அரசாங்கத்திற்கு விடுத்த உத்தரவுகளை கடுமையாக்கியது. முன்மொழியப்பட்ட சோஃபா ஒப்பந்தம், அமெரிக்க இராணுவ உறுப்பினர்கள் இலங்கை முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், சீனாவுக்கு எதிரான போரில் தீவை ஒரு அமெரிக்க கோட்டையாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கும். இந்த இராணுவ ஒப்பந்தம் குறித்து குறைந்தபட்சம் எந்தவொரு கலந்துரையாடலையும் கூட ராஜபக்ஷ அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்திவிட்டது.

அமெரிக்க மில்லினியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்படுவது குறித்தும் வாஷிங்டன் கவலை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த அக்டோபரில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்தது. எம்.சி.சி. திட்டத்தையும், அதன் கீழ் ஒதுக்கப்பட்ட 480 மில்லியன் டொலர்களையும், ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்ற்றுக்கொள்ளகிறதா என்று அறிவிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கடந்த வாரம் தெரிவித்தது.

இலங்கை அரசாங்கம் இந்த மானியத்தை நிராகரிக்கவில்லை எனினும், "திட்டத்தை மீளாய்வு செய்ய" ஒரு குழுவை நியமித்துள்ளது. கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோடாபய ராஜபக்ஷ, தனது சொந்த தேர்தல் நோக்கங்களுக்காக அமெரிக்க ஒப்பந்தங்கள் மீதான வெகுஜன எதிர்ப்பைப் பயன்படுத்த முயன்றார்.

இராணுவத் தளபதியின் மீதான தடை மூலம், புதிய ஜனாதிபதி, மற்றும் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டத்தின் போது ஜனாதிபதியாக இருந்த அவரது சகோதரரை இலக்காகக் கொண்டுள்ளது. அந்த நேரத்தில், கோடாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

2009 மே மாதம், போரை இரத்தக்களரியில் முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத் தலைவர்களில் சவேந்திர சில்வாவும் ஒருவர் ஆவார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் கூற்றுப்படி, பொது மக்கள் பாதுகாப்புக்காக அரசாங்கம் அறிவித்த "யுத்த சூனிய வலயத்தில்” இருந்த மக்கள் மீது குண்டு பொழிந்தமை உட்பட, நிராயுதபாணியான 40,000 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தமை தொடர்பாக, இராணுவம் பொறுப்புக் கூற வேண்டும். சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கொலைக் குழுக்களுடனும் இராணுவம் சேர்ந்து செயற்பட்டது.

58 வது படைப் பிரிவின் தளபதியாக இருந்த சில்வா இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார். இந்த குற்றங்களில் ராஜபக்ஷ சகோதரர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

ராஜபக்ஷக்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவினரும், இராணுவம் எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் செய்யவில்லை என்றும், படைகள் நாட்டை புலி "பயங்கரவாதத்திலிருந்து" விடுவித்துள்ளன என்றும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இராணுவத்தை பெரிதும் நம்பியுள்ள ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, தொழிலாளர்களின் வளர்ந்து வரும் சமூகக் கோரிக்கைகளின் மத்தியில். ஓய்வுபெற்ற இராணுவத் தலைவர்களை அரசாங்கத்தின் பிரதான நிறுவனங்களுக்கு இயக்குனர்களாக நியமித்து, சர்வாதிகார ஆட்சிக்குத் தயாராகி வருகின்றார் .

தளபதி சில்வாவுக்கு பொம்பியோ விதித்த தடையால் அதிர்ச்சியடைந்த ராஜபக்ஷ அரசாங்கம், உடனடியாக பயணத் தடையை எதிர்ப்பதற்கு வெளியுறவு அமைச்சை பயன்படுத்தியது. வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெப்ரவரி 16 அன்று, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸை வரவழைத்து, பயணத் தடைக்கு தனது “வலுவான எதிர்ப்பை” வெளிப்படுத்தி, அது “மறு ஆய்வு” செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் அக்கறை போலியானதாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முழுமையாக ஆதரித்த வாஷிங்டன், இலங்கை இராணுவம் செய்த குற்றங்கள் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டது. 2009 மே மாதம், புலிகளின் தோல்விக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான், வாஷிங்டன் மனித உரிமைகள் பிரச்சினைகளை கிளப்பி, சீனாவிலிருந்து தூர விலகுமாறு கொழும்பு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு யுக்தியாக அதைப் பயன்படுத்தியது.

மஹிந்த ராஜபக்ஷ அதற்கு பதிலளிக்கத் தவறியபோது, அவரை வெளியேற்ற அமெரிக்கா ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையைத் திட்டமிட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிறரின் ஆதரவுடன், ராஜபக்ஷ அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். 2015 ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிசேன, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகவும் “நல்லாட்சி” மற்றும் “மனித உரிமைகளுக்காக” போராடுவதாகவும் அறிவித்தார்.

ஆட்சிக்கு வந்த சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க மற்றும் அதன் பிராந்திய மூலோபாய நட்பு நாடான இந்தியாவின் புவிசார் அரசியல் இலக்குகளுக்கு ஏற்ப மாற்றினார். இராணுவம், குறிப்பாக கடற்படை, அமெரிக்க இந்தோ-பசிபிக் படை மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் இராணுவத் திட்டங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டது. அதற்கு ஈடாக அமெரிக்கா மனித உரிமை பிரச்சினையை கைவிட்டது.

கடந்த நவம்பரில் கோடாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அமெரிக்க போர் திட்டங்களுடன் இலங்கை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்வதில் வாஷிங்டன் உறுதியாக உள்ளது. பொம்பியோ அனுப்பிய தனது வாழ்த்துச் செய்தியில் “மனித உரிமைகள்” பிரச்சினையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டி, புதிய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்தார்

இலங்கை எந்த நாட்டிற்கும் அடிபணியாத சுதந்திர நாடு என்று அறிவித்து, கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கையை புறக்கணித்துள்ளார். வெளியுறவுக் கொள்கையில், வாஷிங்டன் பொறுத்துக் கொள்ளாத, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமநிலைப்படுத்தலை அவர் முயற்சித்துள்ளார். ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனித உரிமைகள் பிரச்சினையை மீண்டும் சுரண்டிக்கொள்ள அமெரிக்கா அச்சுறுத்துவதையே சமீபத்திய பயணத் தடை தெளிவுபடுத்துகிறது.

பாம்பியோவின் பயணத் தடைக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பயணத் தடை “இலங்கை வீரர்களுக்கு எதிராக தமிழ் கட்சிகள் நடத்திய பிரச்சாரத்தின் விளைவாகும்” என்று அறிவித்தார். தமிழ் விரோத இனவெறியைத் தூண்டிவிட்டு இராணுவத்தை வெள்ளையடிக்கும் இந்த ஆத்திரமூட்டும் முயற்சியுடன் கொழும்பு ஊடகங்கள் விரைவாக வரிசையாக நிற்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சில்வா மீதான தடை "கவலைக்குரியதும் துரதிர்ஷ்டவசமானதும் ஆகும்" என்று இராணுவத் தலைவரைப் பாராட்டினார். சில்வா, "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்தை வழிநடத்திய ஒரு வீர தளபதி" என்று அவர் அறிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, வாஷிங்டனின் பயணத் தடையை புகழ்ந்தது. "எங்கள் மக்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதியை நாடுகிறார்கள். இறுதியில், போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பான அரசாங்க அதிகாரிகளைக் கையாள்வதற்கான சர்வதேச சமூகத்தின் முதல் நடவடிக்கைகளை அவர்கள் காணத் தொடங்கியுள்ளனர்,” என சுமந்திரன் அறிவித்தார்.

கொழும்பு ஆளும் உயரடுக்கினருடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு ஊடாக, அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு, ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளையும் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சமிக்கை காட்டியுள்ளனர்.

அமெரிக்க பயணத் தடையானது கொழும்பு உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் தனது நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற அமெரிக்க கட்டளைக்கு ஒத்ததாகும். இது சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளின் உச்சத்தை கோடிட்டுக் காட்டுவதுடன் இரு அணு ஆயுத சக்திகளுக்கும் இடையிலான மோதலாக விரைவில் மாறக்கூடும்.