பொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் "செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்" மற்றும் "வேலைநிறுத்தம்" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன

Nick Barrickman
28 March 2020

By Nick Barrickman
26 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரபல பொப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் "செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்" மற்றும் "வேலைநிறுத்தம்" என்று தனது இன்ஸ்டாகிராம் ஊடகத்தில் மறு ட்வீட் செய்த இடுகை அவரது சமூக ஊடக கணக்கினை திங்களன்று வைரலாகியது, இப்பாடகருக்கு 23.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

எழுத்தாளர் Mimi Zhu இன் இன்ஸ்டாகிராம் இடுகையிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட “சமூக விலகியிருத்தல்” நடவடிக்கைகளின் தாக்கத்தைக் குறிப்பிடும் ஒரு பகுதியை பின்வருமாறு குறிப்பிடுகின்றது, “இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், முன்பை விட இப்போது எங்களுக்கு இணைப்பு தேவை. ” இது மேலும் கூறுகிறது, “வலைத் தளத்தின் அலைகள் மூலம் ஒருவருக்கொருவர் முத்தமிடவும் பிடித்துக்கொள்ளவும் கற்றுக்கொள்வோம். நாங்கள் ஒருவருக்கொருவர் உணவளிப்போம், செல்வத்தை மறுபங்கீடு செய்வோம், வேலைநிறுத்தம் செய்வோம். நாம் இருக்க வேண்டிய இடங்களிலிருந்து நம்முடைய சொந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வோம். சுவர்களுக்கு அப்பாலும் ஒற்றுமைக்கு தொடர்கின்றது. இன்னும் எம்மால் ஒன்றாக இருக்க முடியும்”

Britney Spears in 2013 (Photo credit–Glenn Francis)

1990 களின் பிற்பகுதியில் பல்லாயிரக்கணக்கான இசைத்தட்டு விற்பனையால் "இளம் பொப்" பாடல்களின் வெற்றியினால் மிகவும் அடையாளம் காணப்பட்ட ஸ்பியர்ஸ், பொதுவாக சோசலிசத்துடன் அடையாளம் காணப்பட்ட மூன்று சிவப்பு ரோஜா ஈமோஜிகளுடன் தனது கருத்தை முன்னிலைப்படுத்தினார்.

ஸ்பியர்ஸின் இந்த படம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அவரது இடுகை பதிவு எடுக்கப்பட்டு மில்லியன் கணக்கான முறை பகிரப்பட்டது. பெரும்பான்மையான வர்ணனைகள் செல்வ மறுபங்கீடு செய்வதற்கு க அழைப்பு விடுக்கும் சொற்றொடரிலும் "பொது வேலைநிறுத்தம்" என்று பொருள் கொள்ளப்படுவதிலும் கவனம் செலுத்தியுள்ளன. இந்த அறிக்கை பற்றி ஸ்பியர்ஸ் எந்தவொரு பொது கருத்தையும் பின்னர் தெரிவிக்கவில்லை. “தோழர் பிரிட்னி” எனக்குறிப்பிட்டு பொதுவாக நட்புரீதியான குறிப்புகள் எல்லா இடங்களிலும் வெளிவந்துள்ளன.

ஸ்பியர்ஸ் கருத்து வைரலாகிவிட்ட சிறிது நேரத்திலேயே Paper இதழுக்கு அளித்த பேட்டியில் Zhu, “நாங்கள் குழப்பம், துண்டிப்பு மற்றும் விரக்தியின் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். அதைப் பற்றி என் சொந்த நல்லறிவுக்காகவும் சிந்தனைரீதியான ஆரோக்கியத்திற்குமாக எழுதுவது மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது என்று நான் உணர்ந்தேன். … குறைந்த பட்சம் நியூ யோர்க்கில், எனது நண்பர்கள் அனைவரும் [கொரோனா வைரஸ் பணிநிறுத்தம் காரணமாக] பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிறைய பேர் வாடகை, அடிப்படைத் தேவைகள் மற்றும் எப்படி வாழ வேண்டும், அதையெல்லாம் எவ்வாறு கொண்டு செல்வது பற்றி வலியுறுத்துகிறார்கள்.”

"அந்த கவலை மற்றும் குழப்பங்களுடன் நான் எழுதியதை நான் எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதில் நிச்சயமாக சோசலிச உட்கருத்துக்கள் இருந்தன," என்று அவர் மேலும் கூறுகிறார், "ஏனெனில் பொதுவாக நான் இதை நம்புகிறேன்."

இதற்கிடையில், நடிகை Fran Drescher, "உழைப்பவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்பும் மூலதனத்தின் செல்வந்த உரிமையாளர்களை" கண்டித்து ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஒரு ட்வீட்டுக்கு சாதகமாக பதிலளித்து, தனது ட்விட்டர் கணக்கில் பின்வருமாறு எழுதினார். "நான் ஒப்புக்கொள்கிறேன். ஆளும் வர்க்க உயரடுக்கின் மற்றொரு வார்த்தையாக முதலாளித்துவம் மாறிவிட்டது! இலாபம் தான் அனைத்து பொருட்களின் இழப்பின் உண்மையான மதிப்பானால், எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது.”

இக்காலத்தின் மேலுமொரு அடையாளமாக, ராப் ரெக்கார்டிங் கலைஞர் Cardi B இன் இன்ஸ்டாகிராம் வீடியோவும் வைரலாகிவிட்டது. பாடகரின் கருத்துக்கள் சமூகத்தின் மீது கொரோனா வைரஸின் தாக்கத்தை நோக்கி செல்வந்தர்களின் பொதுவாக சுயமாக உறிஞ்சப்பட்ட அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

ஒரு அனுதாப வர்ணனையாளர் நகைச்சுவையாகக் பின்வருமாறு குறிப்பிட்டார், “பிரிட்னி ஸ்பியர்ஸ் மற்றும் ஃபிரான் ட்ரெஷர் இருவரும் இன்று ட்ரொட்ஸ்கியை நோக்கி முற்றாகச் சென்றுவிட்டனர். இப்போது நாங்கள் எங்கோ வருகிறோம்" என்றார் அவர். மற்றொருவர் பரிந்துரைத்தார், " ஃபிரான் ட்ரெஷர் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோரால் புரட்சி வழிநடத்தப்படும் என்று நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்பொழுது இங்கே நாங்கள் இருக்கிறோம், நான் அதனுடன் முற்றாக உடன்படுகின்றேன்."

"பொது மக்கள், வழக்கமான வேலைகளைச் செய்கிறவர்கள், வழக்கமான ஊதியம் பெறும் மக்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் ... அவர்கள் அனைத்திலும் பிரபலங்கள் மற்றும் எல்லாவற்றையும் போல நடத்தப்படுவதில்லை" என்று ஒரு நீலநிற மருத்துவ முகமூடி ஊடாக பாடகர் கூறுகிறார். கொரொனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட நபர்களில் அதிக காய்ச்சல் இல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். அவர் தொடர்கிறார், “ மக்களை வீட்டிற்கு அனுப்புகிறார்கள் என்று அவர்கள் எவ்வாறு நினைக்கிறார்கள்? எல்லோருக்கும் ஒரு பெரிய வீட்டிற்கு சென்று மக்களிடமிருந்து விலகி இருக்கும் அந்தவித ஆடம்பர வசதியில்லை ... பலர் ஏனைய மக்களுடன் சிறிய குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.”

"இந்த நாளின் முடிவில், இந்த தீமையை, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இந்த தீமையை பற்றி அறிந்தபோது தடுக்கப்பட்டிருக்கலாம் " என்று அவர் கூறினார். இந்த ஏமாற்றுக்கார "45" தான்(டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதி) இந்த நெருக்கடிக்கான அரசாங்கத்தின் உணர்வற்ற பிரதிபலிப்பிற்கு பொறுப்பாகும்.” என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.