COVID-19 இனால் அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்கள் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகரிக்கையில்

ட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது

28 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. உலகளவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 22,000 க்கும் அதிகமாகியுள்ளது. வியாழக்கிழமை, இத்தாலியில் 6,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களும் மற்றும் 712 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்பெயினில் 6,600 புதிய தொற்றுக்களும் மற்றும் 500 புதிய இறப்புகள், மற்றும் ஜேர்மனியில் 6,000 புதிய தொற்றுக்களும் மற்றும் 56 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தோனேசியா, பிரேசில், இந்தியா மற்றும் ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பிற நாடுகளிலும் இந்த வைரஸ் இப்போதுதான் பரவத் தொடங்குகிறது.

அமெரிக்கா தொற்றுநோய் துரிதப்படும் மையமாகியுள்ளது. இது இப்போது இத்தாலி மற்றும் சீனாவை விட அதிக எண்ணிக்கையில், உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களை 85,000 க்கும் அதிகமாக கொண்டுள்ளது. அமெரிக்கா நேற்று 17,000 புதிய தொற்றுக்களை கணிப்பிட்டுள்ளது. இது வேறு எந்த நாட்டையும் விட மூன்று மடங்கு அதிகமாகும். இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,300 ஆக உயர்ந்துள்ளது.

மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை, பேர்லின், பாரிஸ் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (இந்திய, இலங்கை உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணி), சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த இணையவழி கூட்டத்தை நடத்துகின்றன. இன்றே பதிவு செய்யுங்கள்.

அதிகரித்து வரும் இந்த நெருக்கடிக்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம் விரைவாக பணிக்கு திரும்புவதற்கான தனது முயற்சிகளை தீவிரப்படுத்துகிறது.

"நாங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும்" என்று ட்ரம்ப் தனது வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். "எங்கள் மக்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள், அவர்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள், அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் ... இது ஒரு நாடு, அதைச் செய்து முடிப்பதற்காக கட்டப்பட்ட ஒரு நாடு, எங்கள் மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள். எல்லோரிடமிருந்தும் இதை நான் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கிறேன் " என ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்பின் கற்பனை உலகத்தில், “எல்லோரும்” எனப்படுவது முதன்மையாக அவரையே குறிக்கிறது. அதற்கு அடுத்ததாக பொதுமக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பைப் பொருட்படுத்தாமல், தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், இலாபத்தை ஈட்டவும் விரும்பும் ஒரு பெருநிறுவன நிர்வாகிகளைக் குறிக்கிறது.

ஒருவித விசித்திரமான கனவை ட்ரம்ப் தொடர்ந்தார், “அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். நம் நாடு திரும்பிச் செல்ல வேண்டும். நமது நாடு அதன் அடிப்படையில் அமைந்துள்ளது. அது மிக விரைவாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன்..." என்றார்.

முன்னதாக நிர்வாகம், மாநில ஆளுநர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தியுள்ள நடவடிக்கைகளை தளர்த்துமாறு அழுத்தம் கொடுப்பதற்காக "சமூக இடைவெளி" குறித்த அதன் வழிகாட்டுதல்களை அடுத்த வாரம் ஆரம்பத்தில் புதுப்பிக்கப்போவதாக அறிவித்தது”.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகள் அனைத்து தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு முரணானவை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் தொற்று நோய் உதவி பேராசிரியரான Yonatan Grad இந்த வாரம் Medscape மருத்துவ வலைத் தளத்திடம் "சமூக இடைவெளிப்படுத்தல்தான் உண்மையில் நாம் இப்போது செய்யக்கூடிய முக்கிய விஷயம்" என்று கூறினார். அவர் தொடர்ந்தார், "சமூக இடைவெளிப்படுத்தலிருந்து மிக விரைவாக பின்வாங்குவது எங்கள் சுகாதார உள்கட்டமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது மிகப்பெரிய பொருளாதார விளைவுகளைக் கொண்டுவரும்" என்றார்.

Georgetown பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார சட்டத்தின் பேராசிரியரான Larry Gostin, “வேலை மற்றும் சாதாரண சமூக வாழ்க்கைக்கு திரும்பிச் செல்ல மக்களை வற்புறுத்துவது முற்றிலும் பொறுப்பற்றது. அரசாங்கங்கள் உடல்ரீதியான இடைவெளியை மிக விரைவில் அகற்றினால், அது தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று எல்லா ஆதாரங்களும் தெரிவிக்கின்றன” என கருத்து தெரிவித்தார்.

வேலைக்கு திரும்பும் கட்டளையை நியாயப்படுத்த, ட்ரம்ப் ஒரு பொய்யின் மீது மற்றொன்றை குவித்தார். "பரிசோதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது" என்று அவர் கூறினார், தென் கொரியாவை விட அதிகமான மக்களை அமெரிக்கா பரிசோதனை செய்துள்ளது என்று அறிவித்தார். நிர்வாகம், முன்னர் அதிகமாக பரிசோதனை செய்ததற்காக விமர்சித்தது. உண்மையில், அமெரிக்காவில் 500,000 பரிசோதனைகள் மட்டுமே நடந்துள்ளன. இது 650 பேரில் ஒருவருக்கு என்பதைவிட குறைவானது. இது தென் கொரியாவை விட மிகக் குறைவானதாகும். நோய்வெடிப்பின் மையமான கலிபோர்னியாவில், 2,000 பேரில் ஒருவர் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவரான Deborah Birx அமெரிக்கா இன்னும் கடுமையான அறிகுறிகள் இல்லாதவர்களை பரிசோதிக்கவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டார். அதாவது வைரஸ் உள்ளவர்களில் பெரும்பாலோர் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் பரிசோதனைகளின் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் இன்னும் தெரிவிக்கின்றனர்.

மேலும், தீவிரமாக பரிசோதனை செய்வதன் மூலம், தென் கொரியா வைரஸ் பரவுவதை ஒப்பீட்டளவில் ஆரம்ப கட்டத்தில் கட்டுப்படுத்த முடிந்தது. அமெரிக்காவில் பல மாதங்களாக உண்மையில் எந்த பரிசோதனையும் செய்யப்படாததால் வைரஸ் நாடு முழுவதும் பரவ அனுமதிக்கப்பட்டது.

தொற்றுநோயின் தீவிரத்தை குறைக்கும் முயற்சியில், ட்ரம்ப் "இறப்பு விகிதம், என் கருத்துப்படி, மிகமிக குறைவு" என்று அறிவித்தார். அமெரிக்காவின் அனைத்து தொற்றுக்களிலும் 30 சதவிகிதம் உள்ள நியூ யோர்க் நகரம், இறப்புகளின் அதிகரிப்பைக் கையாள்வதற்காக தற்காலிக முகாம்களை நிர்மாணிக்கும் நிலைமைகளின் கீழ் உள்ளது. இப்போது உலகில் புதிய தொற்றுக்களின் வேகமான அதிகரிப்பை அனுபவித்து வரும் நியூ ஓர்லியன்ஸில், மருத்துவமனைகள் பொருட்கள் மற்றும் அறைகள் இல்லாமல் உள்ளன. நாடு முழுவதும் அடிப்படை உபகரணங்கள் பற்றாக்குறைக்கு மத்தியில், மருத்துவமனைகள் யாரை இறக்கவிடுவது யாரை காப்பாற்றுவது என மருத்துவமனைகள் விவாதிக்க தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் "திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள்" என்பது ஒரு பொய்யாகும். உண்மையில், கார் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கப்பல் கட்டுபவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், இறைச்சி தயாரிப்பு தொழிலாளர்கள் மற்றும் அமசன் தொழிலாளர்கள் ஆகியோரின் திடீர் வேலைநிறுத்தங்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டதால் சில தொழில்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த உயர் வோல் ஸ்ட்ரீட் நிர்வாகி நியூயோர்க்டைம்ஸின் தலையங்கப் பக்கத்தில், “குணப்படுத்துதல் நோய்களை விட மோசமாக இருக்க முடியாது” எனக்கூறி வேலைக்கு விரைவாகத் திரும்புவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கைகளில் ஒரு திட்டவட்டமான வர்க்க தர்க்கம் உள்ளது. வியாழக்கிழமை, புதிய வேலையின்மை கொடுப்பனவுக்காக உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 1982 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முந்தைய உயர்மட்டங்களை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும். டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 6 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க நிதிச் சந்தைகள் வாரத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 23 சதவீதம் உயர்ந்துள்ளன.

சந்தையில் சாதனையளவு உயர்வு குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் வியாழக்கிழமை கூறினார்: “வைரஸுடன் தொடர்புபட்ட இந்த முழு சூழ்நிலையையிலும் நாங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிர்வாகமும், நானும் ஒரு நல்ல வேலையைச் செய்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.”

வோல் ஸ்ட்ரீட் கொண்டாடும் "நல்ல வேலை" என்பது இருகட்சி அடிப்படையில், முற்றிலும் தவறாக பெயரிடப்பட்ட "கேர்ஸ் (Coronavirus Aid, Relief, and Economic Security - CARES) என்ற புதிய சட்டத்தின் பத்தி பற்றியதாகும்." "அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நிதி நிவாரண சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக" செனட்டில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். இந்த ஒருமித்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் வெர்மான்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் உம் ஒருவராவார்.

ஜனநாயகக் கட்சியின் மன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று இந்த மசோதாவுக்கு இன்று "வலுவான இரு கட்சி வாக்குகளை" எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர், அது வெள்ளை மாளிகைக்குச் எடுத்துச்சென்று சட்டமாக கையெழுத்திடப்படும்.

2 டிரில்லியன் டாலர் மசோதாவின் மிக முக்கியமான கூறுபாடு, அமெரிக்க கருவூலத் திணைக்களத்திடமிருந்து 425 பில்லியன் டாலர் ஆகும். இது பெடரல் ரிசர்வ் இனால் சொத்துக்களை வாங்குவதற்கு 4 டிரில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்டதை வழங்குகின்றது. இது அதன் தற்போதைய இருப்புநிலைக் குறிப்பை 10 டிரில்லியன் டாலராக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களில், வங்கி சொத்துக்களை வாங்குவதும், முதன்முறையாக நிறுவனங்களின் கடனை நேரடியாக வாங்குவதும் அடங்கும். இந்த திட்டங்களை உலகில் மிகப்பெரிய சொத்து மேற்பார்வையாளரான BlackRock மேற்பார்வையிடும்.

சாராம்சத்தில், வங்கிகள் மற்றும் மாபெரும் நிறுவனங்களுக்கு நேரடியாக வரம்பற்ற தொகையை வழங்குவதற்கான அதிகாரத்தை காங்கிரஸ் பெடரல் ரிசர்விற்கு அளிக்கிறது. இறுதி ஆய்வில், உழைப்பைச் சுரண்டுவதன் மூலமும், இலாபத்தைப் பிரித்தெடுப்பதன் மூலமும் இந்த கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும். பொருளாதார அச்சுறுத்தல் மற்றும் தேவைப்பட்டால் வெளிப்படையான அச்சுறுத்தல் மூலம் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் தொழிலாளர்களை பணிக்குத் திரும்புமாறு ஆளும் வர்க்கம் விரும்புகிறது. தொழிலாளர் கட்டுப்பாடுகளை அமல்படுத்த பொலிஸாரும் இராணுவமும் தயாராக உள்ளன.

COVID-19 தொற்றுநோய் அமெரிக்காவில் ஆழமான வர்க்க பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும், தொற்றுநோய்களுக்கு எதிராக “போரை வெல்வது”, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் தீவிரமான சுரண்டலுக்கான சிறந்த நிலைமைகளை மீட்டெடுக்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தின் வெற்றி, இலாபம் ஈட்டுவதால் அல்லாது காப்பாற்றப்பட்ட உயிர்களினால் அளவிடப்படுகிறது.

இது ஒரு இணக்கம்காண முடியாத மோதலாகும். முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பை ஆபத்திற்குள்ளாக்காத வகையில் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆளும் உயரடுக்கின் தீர்மானமானது, சர்வாதிகாரத்திற்கும் போருக்குமே வழிவகுக்கிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் முயற்சிகள் சோசலிசத்திற்கு இட்டுச் செல்கின்றன.

Joseph Kishore