இலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த ராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தமிழ் மக்களுக்கு எதிரான 30 ஆண்டுகால யுத்த காலகட்டத்தில் 2000 ஆண்டு டிசம்பர் மாதம் வடக்கில் மிருசுவில் பிரதேசத்தில் மூன்று இளம் சிறுவர்கள் உட்பட எட்டுப்பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி, ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவினால் மார்ச் 26 அன்று விடுவிக்கப்பட்டார்.

இலங்கையின் அரசியலமைப்பு, நீதி மன்றங்களில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பதற்கான எதேச்சதிகார மற்றும் ஜனநாயக விரோத அதிகாரத்தை நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.

"கொரோனா வைரஸ் தடுப்பு முறைமையின்" சகல பிரிவுகளும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் நெருக்கடியின் மத்தியில், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் ஏராளமான கஷ்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியம் குறித்து பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பு, ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வெடிக்கும் என்று ராஜபக்ஷ உட்பட ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. இராணுவத்தை "தொற்று நோய் ஒழிக்கும் முறைமையின்" தலைமையில் அமர்த்தி இருப்பதன் உண்மையான நோக்கம், அத்தகைய சமூக வெடிப்பை கொடூரமாக நசுக்குவதாகும். இந்த வெகுஜன கொலைகாரனின் விடுதலை, இராணுவத்தின் கைகளை வலுப்படுத்த ஒரு சக்திவாய்ந்த ஊக்கத்தை அளித்துள்ளது.

படுகொலை தொடர்பாக மிருசுவில்லில் அமைக்கப்பட்டிருந்த கஜபா படைப்பரிவின் ஏவுகனை குழுவின் சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க மற்றும் சிப்பாய் மஹிந்த குமாரசிங்க உட்பட ஐந்து பேருக்கு எதிராக, 2002 நவம்பரில் மூன்று நீதியரசர் குழாம் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டுக்கள் உட்பட 19 கடும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சியின் கீழ் நீண்டு சென்ற 13 ஆண்டுகால வழக்கு விசாரணை, இறுதியாக 2015 இல், எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டமை சந்தேகத்திதிற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த மூவர் அடங்கிய நீதிபதி குழு, ஏகமனதாக சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தின் முடிவு சரியானது என்று 2017 இல் தீர்ப்பளித்தது.

இந்த இரண்டு தீர்ப்புகளும், உள்ளூர் வழிமுறைகளின் நம்பகத்தன்மையையும் நீதித்துறை அமைப்பின் சுயாதீனத்தையும் உறுதி செய்கின்றன என்று, அந்த நேரத்தில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், உண்மையில் நடந்தது என்னவெனில், வலுவான சான்றுகள் மற்றும் கொலைகள் சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைந்த நிலைமையில் இந்த வழக்கை மூடி மறைக்க முடியாமல் போனது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் வடக்கில் மோதல்கள் தீவிரமடைந்த போது, இராணுவம் முன்னணியில் இருந்த எழுதுமட்டுவால் மற்றும் கொடிக்காமம் அருகே அமைந்துள்ள மிருசுவில் கிராமத்தின் மீதும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஷெல் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக கிராமத்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு ஓடிவிட்டனர். போர் நிலைமைகள் சற்றே தணிந்த பின்னர், மக்கள் தமது கிராமத்துக்கு வந்து தமது விளைச்சல்களை அறுவடை செய்துக்கொன்டு நேரகாலத்துடன் தங்கள் தற்காலிக வீடுகளுக்கு செல்வது வழமையானதாக இருந்தது.

ரவிவர்மன், தவகுலசிங்கம், வில்வராசா மற்றும் அவரது ஐந்து மற்றும் பதின்மூன்று வயது சிறுவர்கள், ஜெயச்சந்திரன், ஞானச்சந்திரன் மற்றும் அவரது பதினைந்து வயது மகன் மற்றும் மைத்துனர் மகேஸ்வரனும், சம்பவத்தை கண்கண்ட ஒரேயொரு சாட்சியான மகேஸ்வரனும் சைக்கிளில் மிருசுவில் கிராமத்துக்கு சென்று வழமைபோல் மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தனர்.

துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் வந்த இரண்டு வீரர்கள், இந்த கிராமவாசிகளை மண்டியிடவைத்து விசாரணை செய்தனர். மேலும் நான்கு சிப்பாய்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, கிராமவாசிகளின் கண்களை கட்டி அவர்களைத் தாக்கத் தொடங்கினர். தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மஹேஸ்வரனை படையினர் இழுத்துச் செல்லும் போது அவருக்கு நினைவு திரும்பியதுடன் கண்களைக் கட்டியிருந்த துணியும் அவிழ்ந்தது. ஒரு கழிப்பறை குழிக்கு இழுத்துச் செல்லப்படும்போது அருகில் இரத்தக் கறைகளை அவர் கண்டார். குழிக்குள் ஏதோ சத்தத்தை கேட்டு ஆபத்தை உணர்ந்த அவர், சிப்பாய்களை தள்ளிவிட்டு இருளில் தப்பியோடியுள்ளார்.

மகேஸ்வரன் பொலிஸ் விசாரணையின் போது, ரத்நாயக்க மற்றும் குமாரசிங்கவை அடையாளம் காட்டிய போதிலும், கழிவறை குழிக்குள் ஒரு ஆடு மற்றும் ஒரு பாம்பின் எச்சங்கள் மட்டுமே காணப்பட்டன. டிசம்பர் 24 அன்று, மகேஸ்வரன் காட்டிய இடத்துக்கு அருகில், எட்டு கிராமவாசிகளின் சடலங்கள் புதர்களிடையே புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரேத பரிசோதனையில் சிறுவர்கள் உட்பட அனைவரும் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ரத்நாயக்கவை விடுவித்ததன் மூலம், எந்தவொரு பொறுப்புணர்வும் இன்றி, மக்களுக்கு எதிராக எந்தவொரு குற்றத்தையும் செய்ய அவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று ரஜபக்ஷ மீண்டும் இராணுவம், உளவுத்துறை மற்றும் பொலிஸ் உட்பட பாதுகாப்புப் படையினருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

யுத்தம் நடந்த 26 ஆண்டு காலகட்டத்தில், அரச பாதுகாப்பு படையினர் செய்த ஆயிரகணக்கான யுத்த குற்றங்களில் இதுவரை அம்பலமானவற்றில், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்கி வந்த மூதூரில் நின்ற அக்ஷன்ஃபார்ம் அமைப்பின் அதிகாரிகள் 17 பேர் 2006 ஆகஸ்ட்டில் கொலை செய்யப்பட்டமை ஆகிய இரண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்தவை ஆகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சிங்கள-பௌத்த பேரினவாதத்தையும் இராணுவத்தை மகிமைப்படுத்துவதையும் பெரிதும் அடிப்படையாகக் கொண்டிருந்த ராஜபக்ஷ, "போர் வீரர்களை" விடுவிப்பதாக உறுதியளித்தார். ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், பாதுகாப்புச் செயலாளர் தொடக்கம் பல்வேறு அரசாங்க சிவில் நிறுவனங்களுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரிகளை தலைவர்களாக நியமித்த ராஜபக்ஷ, மேலும் மேலும் ராணுவத்தினரரை தூக்கிப் பிடித்து ஒரு எதேச்சதிகார அரசுக்கான அடித்தளத்தை தயார் செய்கிறார்.

2009 இல் போரின் முடிவின் போது, தனது மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் கீழ், பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய கோடாபய ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீட்டின்படி 40,000 நிராயுதபாணிகளான பொது மக்கள் மற்றும் ராணுவத்திடம் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டது தொடர்பாக, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள, தான் உட்பட, இராணுவ மற்றும் அரசியல் தலைமையை பாதுகாக்க சபதமெடுத்துள்ளார்.

பெப்ரவரி மாதம், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தால் இணை அணுசரனை வழங்கப்பட்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து, இலங்கையை விலக்கிக்கொள்ள ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார். இந்த தீர்மானம் எந்த வகையிலும் போர்க்குற்ற விசாரணை நடத்துவதையும் தண்டனை வழங்குவதையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும், யு.என்.எச்.ஆர்.சி. உயர் ஸ்தானிகர், மார்ச் 27 அன்று, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மிருசுவில் படுகொலை வழக்கு இலங்கையில் பல தசாப்தங்களாக நடந்த "போரில் குற்றம் செய்தமைக்காக ஒருவர் தண்டனை பெற்ற அபூர்வமான சில மனித உரிமை வழக்குகளில்" ஒன்றாகும்.

"ஜனாதிபதியின் மன்னிப்பானது பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதும்" "போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அர்த்தமுள்ள பொறுப்புணர்வை வழங்கத் தவறியுள்ளமை, இலங்கையானது அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்கத் தவறியுள்ளமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்திற்கு போரின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போனவர்கள் மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய 20,000 புகார்கள் கிடைத்துள்ளன. எனினும், அவை பற்றி எந்த விசாரணையையும் நடத்தாமல், அவர்கள் அனைவரும் இறந்து போனவர்களாக கணக்கிட்டு, அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதாக ராஜபக்ஷ அண்மையில் அறிவித்தார்.

ராஜபக்ஷ, இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக் குழுவை நிறுவி, கப்பம் பெறுவதற்காக பதினொரு தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு, மேல் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தவிர்த்துவரும், முன்னாள் கடற் படைத் தளபதி வசந்த கரன்னகொட ,உட்பட ஏனைய அதிகாரிகளை, நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கினார்.

ரத்நாயக்க உட்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 அரச புலனாய்வு அதிகாரிகளை விடுவிப்பதற்கான ராஜபக்ஷ வின் ஏற்பாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தயாரிப்புகளை மேற்கோள் காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேர, தேர்தல் வாக்குறுதியை நிரைவேற்றியமைக்காக ராஜபக்ஷவை பாராட்டினார். மக்களுக்கு எதிராக, சிங்கள பேரினவாதம் மற்றும் இராணுவத்தையும் நம்பி எழுச்சி பெறுவதற்கு ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் முண்டியடிக்கின்றன.

கடும் கடன் மற்றும் உலகளாவிய தொற்றுநோய் ஆபத்து நிலைமையின் கீழ், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள ராஜபக்ஷ, அரசியலமைப்பின் படி தனக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாளர் போராட்டங்களை ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு அவசியமான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்பை திருத்துவதற்காக, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்காகவே அவர் அவ்வாறு செய்தார். தனது அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று நீதித்துறையையும், பிரதம நீதியரசரையும் கேட்டுக்கொண்ட ராஜபக்ஷ, நீதித்துறை தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.