முன்னோக்கு

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், சோசலிச முன்னோக்கும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும், மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை, “COVID-19 தொற்றுநோய்: முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார பேரழிவின் உருவாக்கமும்,” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. உலகெங்கிலும் இருந்து பெருந்திரளானவர்கள் அதில் பங்கெடுத்ததுடன், அந்த நேரலையில் நூற்றுக்கணக்கான கருத்துக்களையும் பதிவிட்டிருந்தனர்.

அந்த கருத்தரங்கம் உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களின் அலட்சியம் மற்றும் குற்றகரமான அசட்டைத்தனத்திற்கு எதிராக, இந்த தொற்றுநோய்க்கு சோசலிச விடையிறுப்பை வழங்கியது. அது ஆளும் வர்க்கம் மற்றும் ஊடகங்களில் உள்ள அதன் அனுதாபிகளின் பொய்கள் மற்றும் தட்டிக்கழிப்புகளுக்குப் பதிலளித்தது. சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் பாகமாக அத்தியாவசிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசரகால நடவடிக்கைகளுக்காக போராட சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் முன்னோக்கை அது விவரித்தது.

The COVID-19 pandemic: Capitalism and the making of a catastrophe

WSWS எழுத்தாளர் ஆண்ட்ரே டேமன் தலைமை தாங்கிய அந்த கருத்தரங்கில், கொரொனா வைரஸ் தொற்றுநோய் நிபுணரும் மருத்துவரும் மற்றும் WSWS க்கு பங்களிப்பு செய்பவருமான மருத்துவர் பெஞ்சமின் மாத்தியஸ் (Benjamin Mateus); WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP-US) தேசிய தலைவருமான டேவிட் நோர்த்; அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோசப் கிஷோர்; ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி (Sozialistische Gleichheitspartei) உறுப்பினர் ஜொஹானஸ் ஸ்ரேர்ன் ஆகிய நான்கு சிறப்பு பேச்சாளர்களாக பங்குபற்றினர்.

மருத்துவர் மாத்தியஸ் இந்த தொற்றுநோயின் உலகளாவிய வீச்சை மீளாய்வு செய்து அக்கூட்டத்தைத் தொடங்கினார். தீவிரமடைந்து வரும் தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கைகள் "போர்கால பேரழிவு எண்ணிக்கையை போலுள்ளன,” என்றார். “ஏப்ரல் முதல் வாரத்தில் நாம் ஒரு மில்லியன் வரம்பை எட்டவிருக்கிறோம், ஏப்ரல் இரண்டாம் வாரம் வாக்கில் அது பத்து மில்லியனாக ஆவதற்கு வாய்ப்புள்ளது, அதுவே மே மாத முதல் பகுதியில் 100 மில்லியன் நோயாளிகளாக இருக்கலாம், இது மிகப் பெரும் எண்ணிக்கையாகும்,” என்றார்.

இந்த தொற்றுநோயின் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் நோர்த்தால் அவரின் அறிமுக உரையில் தொகுத்தளிக்கப்பட்டது. “இந்த தொற்றுநோய், பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சார மற்றும் முதலாளித்துவ அடிப்படையிலான ஒரு சமூகத்தின் அறநெறிசார் திவால்நிலையின் மிகவும் ஒருங்குவிந்த வடிவத்தை அம்பலப்படுத்தி உள்ளது.” அவர் தொடர்ந்து கூறினார்:

இந்த தொற்றுநோய் ஒரு தொடக்க நிகழ்வுதான். இந்த அர்த்தத்தில், இதை ஜூன் 1914 இல் ஆர்ச்ட்யூக் பிரான்ஸ் பேர்டினான்ட்டின் படுகொலையுடன் ஒப்பிடலாம், அதுதான் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 1914 இல் முதலாம் உலக போர் வெடிப்பதில் உச்சத்தை அடைந்த தொடர்ச்சியான சம்பவங்களை இயக்கத்திற்குக் கொண்டு வந்தது. அந்த படுகொலை போர் வெடிப்பதற்கான தேதியைத் தீர்மானிப்பதற்கு அப்பாற்பட்டு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் முதலாளித்துவ தேசிய எதிர்விரோதங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத்தின் உலகளாவிய முரண்பாட்டின் வெடிப்பான போர் என்பதே தவிர்க்கவியலாததாக இருந்தது.

இந்த தொற்றுநோயும் இன்றைய நெருக்கடிக்கு அதேபோன்ற ஒரு தொடர்பை கொண்டிருகிறது. ஐயத்திற்கிடமின்றி, இந்த தொற்றுநோய், ஓர் உயிரியியல் நிகழ்வாக, சமூகத்திற்கு ஓர் அளப்பரிய சவாலை முன்நிறுத்துகிறது. ஆனால் இதுபோன்றவொரு தீவிர தொற்றுந்தன்மையை தவிர்க்க முடியாது என்றாலும் கூட இதற்கான சாத்தியக்கூறு நீண்டகாலத்திற்கு முன்னரே உணரப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் வரலாற்று தன்மை இந்நோய்க்கான விடையிறுப்பில் இருந்து எழுகிறது, அது வெளிப்படும் விதம் இப்போது நிலவும் சமூகத்தின் பரந்த தோல்வியை முற்றிலுமாக அம்பலப்படுத்துவதாக உள்ளது: அதன் அரசியல் தலைவர்களின் அலட்சியம் மற்றும் மனிதாபிமானமற்றத்தன்மையை, அதன் ஆளும் வர்க்கத்தின் ஊழல் மற்றும் பணத்திற்கு விலை போனத்தன்மையை, அதன் அமைப்புகளினது கையாளாகாத்தனம், அதன் தலையாட்டி ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கதாநாயகர்கள் மற்றும் போலியான மதிப்புகளும் கூட அம்பலமாகின்றன.

இப்போது இந்த தொற்றுநோய் ஏதேனும் ஒரு புள்ளியில் முடிவடையும். ஆனால் இந்த தொற்றுநோயின் கொடூரம் குறைந்ததும், மக்கள் தனிமைப்படலில் இருந்து வெளிவரும் போது, அங்கே முன்னர் இருந்த பழைய நிலைமைக்கு திரும்புவது என்பது இருக்கப்போவதில்லை. முதலாம் உலக போரில் சிதைந்ததைப் போலவே மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரமைகள் அதே வழியில் சிதைந்துள்ளன. என்ன நடந்துள்ளதோ அதை திரும்ப கொண்டு வரவே முடியாது.

மனித தேவையைத் தனியார் இலாபத்திற்கு அடிபணிய செய்திருப்பதன் விளைவாக, முற்றிலும் தயாரிப்பின்மையின் விளைவாக உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதை மறந்து விட முடியாது. மக்களின் நனவில் மாற்றங்கள் ஏற்கனவே நிகழ்ந்து வருகின்றன. மக்கள் வங்கியாளர்களை அல்ல, மருத்துவத்துறை தொழிலாளர்களை வாழ்த்துகிறார்கள். அங்கே மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல் நடக்காது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள், இந்த தனித்துவமான உலகளாவிய அனுபவத்தினூடாக கடந்து சென்றுள்ள நிலையில், அவர்கள் இந்த யதார்த்தத்தை பற்றி வித்தியாசமான விதத்தில் கூர்ந்துணர்ந்து சிந்திப்பார்கள்.

சுருக்கமாக கூறுவதானால், முதலாளித்துவம் மீண்டுமொருமுறை ஓர் அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகமாக ஆகியுள்ளது. இந்த நெருக்கடி ஓர் உலகளாவிய அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி வேகப்படுத்தும். சோசலிசம் மற்றும் மிகவும் தீவிர வகைப்பட்ட சோசலிசமாக பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அரசியல்ரீதியில் முக்கியத்துவமற்ற மற்றவர்களின் முட்டாள்தனங்களால் அல்லாது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி மற்றும் ரோசா லுக்செம்பேர்க்கின் சோசலிசமான நிஜமான சோசலிசம் ஒரு பாரிய இயக்கமாக, உலகெங்கிலும், மீண்டும் எழுச்சி பெறும், அதுவும் அமெரிக்காவில் மிகவும் வெடிப்பார்ந்த விதத்தில் வெளிப்படும்.

இந்த தொற்றுநோய் எதிர்பார்த்திராத ஒன்று என்ற வாதத்தை பேச்சாளர்கள் மறுத்துரைத்தனர். தசாப்தங்களாக, தொற்றுநோய் நிபுணர்களும் விஞ்ஞானிகளும் இதுபோன்றவொரு நிகழ்வு குறித்து எச்சரித்துள்ளனர், ஆனால் அதற்காக எந்த தயாரிப்பும் செய்யப்படவில்லை என்பதை அவர்கள் குறிப்பிட்டு காட்டினார்கள். அவர்கள் மக்களின் தேவைகளால் அல்ல ஆளும் வர்க்க நலன்களால் வழிநடத்தப்படும் உலக அரசாங்கங்களின் விடையிறுப்பைக் குற்றஞ்சாட்டினர்.

கிஷோர் குறிப்பிடுகையில், “அமெரிக்கா,” “அது உலகளாவிய சித்தாந்த மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் மையமாக விளங்குகிறது, முடிவில்லாத செல்வவளத் திரட்சிக்காக நாற்பதாண்டுகளாக ஆளும் உயரடுக்கு ஒவ்வொன்றையும் அடிபணிய செய்துள்ளது... இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பு அதே கருத்தியலின் நிபந்தனைக்குட்பட்டுள்ளது என்றார்.

வெறுமனே ட்ரம்ப் நிர்வாகம் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமுமே இதற்கு பொறுப்பாகிறது என்றவர் குறிப்பிட்டார். அமெரிக்க அரசின் விடையிறுப்பு, இரு கட்சிகளினது ஒருமனதான இசைவுடன், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்குக்குப் பணத்தை மட்டுப்பாடின்றி ஒப்படைக்க நிதி வழங்கும் ஒரு சட்டமசோதாவை நிறைவேற்ற உள்ளது.

அமெரிக்காவில் மேலோங்கி உள்ள நிலைமைகள் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் நிலவுகின்றன என்பதை ஸ்ரேர்ன் விவரித்தார். அரசாங்கங்கள் தேசிய மோதல்களால் மோதிக் கொண்டு அனைத்திற்கும் மேலாக அவற்றின் சொந்த ஆளும் உயரடுக்குகளின் நலன்களை முன்னெப்பதில் ஒருமுனைப்பட்டுள்ள அதேவேளையில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அக்கண்டம் எங்கிலும் ஒரு பேரழிவு கட்டவிழ்ந்து வருகிறது.

“முதலாளித்துவவாதிகள் அவர்களைப் பாதுகாக்க அவர்களின் அரசு தலையிட வேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் வங்கி கணக்குகளில் இன்னும் அதிக ஆதாரவளங்கள் பாய்ச்ச விரும்புகிறார்கள். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசு அதிகாரத்தை உருவாக்க வேண்டியுள்ளது; அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் மற்றும் ஒரு நிஜமான ஜனநாயக தொழிலாளர் அரசை மனிதகுலத்தின் நலன்களுக்காக ஒரு பகுத்தறிவார்ந்த, விஞ்ஞானப்பூர்வ முறையில் சமூகத்தை ஒழுங்கமைக்கவும் போராட வேண்டியுள்ளது.”

அவரின் நிறைவான கருத்துக்களில், நோர்த் குறிப்பிடுகையில், WSWS இன் வாசகர் எண்ணிக்கை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைய முடிவெடுக்குமாறு அக்கூட்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் அவர் அழைப்புவிடுத்தார்.

“இந்த உலகம் மாற்றப்பட வேண்டும். இதுவே கடைசி நெருக்கடி அல்ல, இதுவே உயிர்பிழைப்புக்கான கடைசி அச்சுறுத்தலும் அல்ல. சோசலிசம் அல்லது மனிதகுலத்தின் மற்றும் இந்த புவியின் அழிவு என்பதே எதிர்காலம், இதுவே யதார்த்தமாகும். இப்போது அனுபவித்து வரும் அனுபவம் ஒரு கொடூரமான, கொடூரமான எச்சரிக்கையாகும். இதிலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு அந்த படிப்பினைகளின்படி செயல்பட வேண்டும்.”

அந்த ஒட்டுமொத்த ஒளிபரப்பையும் பார்க்குமாறும் அதை சாத்தியமான அளவுக்குப் பரவலாக பகிர்ந்து கொள்ளுமாறும் நாங்கள் வாசகர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Loading