போரினால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் பட்டினிக்கும் வழிவகுக்கிறது

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று நோயினால் இருவர் உயிரழந்துள்ளனர். இன்றுவரை 142 பேர் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை, இவர்களில் 15 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 114 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்குள் 20 நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வாரத்துக்கு இரு முறை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பிற்பகல் வரை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதில் ஆட்சியாளர்களின் இலாயக்கின்மை காரணமாக ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் அவசர அவசரமாக பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கின்றனர்.

இலங்கையில்’ அடையாளம் காணப்படாத 550 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சமூகத்தில் நடமாடி வருவதற்கான சாத்தியங்கள் உள்ளது, இவர்கள் கிட்டத்தட்ட 19,000 பேருடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என்றும் ஊரடங்குச் சட்டத்தை நீக்கினால் நிலமை இன்னும் விபரீதமாகும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், கடந்த வாரம் எச்சரித்துள்ள நிலைமையிலேயே மக்கள் இவ்வாறு கிடைப்பதை சேகரித்துக்கொள்ள போராடுகின்றனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக கருதப்பட்டு இடைவேளை இன்றி ஊரடங்கு அமுலில் உள்ளது. களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேசத்தில் நேற்று முதல் அட்டுலுகம பிரதேச கிராமங்கள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் அக்குறணை, புத்தளம் மாவட்டத்தில் கடையன்குளம் மற்றும் நாத்தாண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தாவடி ஆகிய பிரதேசங்கள் முழுமையாக பூட்டப்பட்டு கிராமவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூட்டாக எச்சரிக்கை ஒன்றை விடுத்த யாழ்ப்பாண மாவட்ட வைத்தியர்கள், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடிய 100 வீத வாய்ப்பு உள்ளதாக கூறினர். முன்னெச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தும் மக்கள், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதை சுட்டிக்காட்டி வைத்தியர்கள், போதியளவு விழிப்புணர்வு இல்லாத பரிதாப நிலை யாழ்ப்பானத்தில் காணப்படுவதாக விசனம் தெரிவித்திருந்தார்கள். கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் 400 பேருக்கு நோயை பரப்பக்கூடியவர், இந்த நிலையில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள போதிய வசதிகள் வளங்கள் வடக்கில் கிடையாது எனவும், தொற்று பரவினால் நினைத்துப் பார்க்கமுடியாதளவு பேரழிவை ஏற்ப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் இல்லாததால் அதற்காக அனுராதபுரத்துக்கு செல்லவேண்டியுள்ளது. தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 20 படுக்கைகளைக் கொண்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தால் அதை விஸ்தரிக்கவேண்டிய தேவையேற்படும் என யாழ்ப்பாண வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நோயின் பாரதூரமான விளைவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த தொகை மிகவும் அற்பமானதாகும். வடக்கில் ஏனைய வைத்தியசாலைகளில் வேறு பாரதூரமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் கூட போதுமானவு இல்லாத பட்சத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவசர சிகிச்சை அளிப்பதற்கு எந்த வசதியும் கிடையாது.

தற்போது தென்னிலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை அவர்களே தயாரித்துக்கொள்ளும் நிலையில், வடக்கில் வத்தியசாலைகளில் இத்தகைய கவசங்களுக்கு நிலவும் பற்றாக்குறை பற்றி புதிதாக சொல்லத் தேவையில்லை. வடக்கில் முகமூடிகளுக்கு பலத்த பற்றாக்குறை நிலவுகின்றது. மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலும் 20 கட்டில்களுடன் ஒரு கொரோனா பிரவு அமைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய வசதிகள் ஒன்றும் அங்கு கிடையாது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 10 கட்டில்கள் மட்டுமே உள்ளன. சுமார் 50 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் கூட நிலைமை கவலைக்கிடமாகும் என வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று முறையாக தடுக்கப்படாது போனால், சுமார் 40 வீதமானோர் பாதிக்கப்படுவர் என தெரிவித்த வைத்திய நிபுணர் எஸ். மதனழகன், 40,000 நோயாளிகளுக்கு விடுதி வசதி தேவைப்படும் என்றும், தற்போதுள்ள ஆயிரம் கட்டில்களை இரண்டாயிரமாக மட்டுமே அதிகரிக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

25 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலை கட்டமைப்புகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதோடு அவை இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவில்லை. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் வன்னி பிரதேசத்தின் முழு உட்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்பட்டு இரண்டரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டனர். 40,000க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த போதும் இன்னமும் வடக்கு கிழக்கை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களிலும் முகாம் அமைத்து, பாதுகாப்பு படைகள் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தி வைத்துள்ளன. இங்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் என கண்டறியப்படுவோர் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பிரதான ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவர். நாடுபூராவும் இப்போது 32 நிலையங்களில் சுமார் 1730 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோடாபய இராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர், வடக்கு கிழக்கில் பாதுகாப்பையும் சோதனை நிலையங்களையும் இராணுவம் புதுப்பித்துள்ளது. தற்போது நிலவும் ஊடரடங்கு நிலையைப் பராமரிப்பதன் பேரில் வடக்கில் புதிய வீதித் தடைகளைப் போட்டு சோதனைகளை நடத்துவதற்காகவும் கிராமங்களை முடக்குவதற்கும் இராணுவம் வீதிக்கு இறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷ எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் தனது பொலிஸ்-இராணுவ ஆட்சியை இன்னும் பலப்படுத்தவும் உழைக்கும் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கவும் இந்த தொற்றுநோயை சுரண்டிக்கொண்டுள்ளார்.

இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் என்ற பெயரில் சுமார் 7,500 பேர்வரை கைது செய்யப்பட்ட்டுள்ளதோடு 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் மக்கள் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தேடி, வெளியேறத் தள்ளப்படுகின்றார்கள்.

திங்களன்று வெளியான உதயன் பத்திரிகையின்படி, மறு அறிவித்தல்வரை முழுமையாக பூட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆகக் குறைந்தது சமுர்தி நிவாரணம் பெறும் 76 ஆயிரம் குடும்பங்களில் 60 ஆயிரம் பேருக்காவது உதவிகள் தேவை என அரசாங்க செயலகம் அறிக்கையிட்ட போதும் எந்தவித நிதியோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை. இதனால் பட்டினி நிலைமை ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. அரசாங்கம் சமுர்தி நிவாரணம் பெறுபவர்களுக்கு இரண்டு தவணைகளில் 10,000 ரூபா வழங்குவதாக அறிவித்திருந்தது.

ஊரடங்குச்சட்டத்தால் மன்னார் மாவட்டத்தில் 17,066, கிளிநொச்சி 8,152, வவுனியா 37,508, முல்லைத்தீவு 26,091 மற்றும் யாழ்ப்பாணத்தில் 64000 என வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள அரசாங்க அதிபர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வடமாகாணத்தில் 152,817 குடும்பங்களைச் சேர்ந்த 521,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் ஊடகங்களுக்கு தொரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மாதம் நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தாலும், இதுவரை அதற்குரிய ஒதுக்கீடுகள் இல்லை.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மானிப்பாயிலுள்ள தாவடி கிராமமானது யாரும் உள்ளே செல்ல முடியாமலும் வெளியேற முடியாமலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு அரியாலையில் நாவலடி கிராமத்தின் ஒரு பகுதியும், பூம்புகார் கிராமத்தின் பெரும்பாலான பகுதிகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. மார்ச் 23 தொடக்கம் மூடப்பட்டுள்ள இந்த கிராமங்களுக்கு, சமுர்தி நிவாரண திட்டத்தின் கீழ், ஐந்து கிலோ கோதுமை மாவும் 650 கிராம் சீனியும் மட்டுமே அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள், அரச சார்பாற்ற நிறுவனங்கள் கொடுத்த பாண் போன்ற உணவுப் பொருட்களில் தங்கி வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேத்தில் சமுர்தி நிவராணம் பெறும் குடும்பங்களுக்கு இந்த வாரம் 2 கிலோ அரிசி, ஒன்றரை கிலோ கோதுமை மா, 750 கிராம் சீனி மற்றும் 100 கிராம் தேயிலையும் வழங்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் பெறுமதி 500 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளோடு ஒப்பிடும் போது தென்னிலங்கையில் ஏழைகளின் நிலைமை பெருமளவில் வேறுபட்டதல்ல.

வடக்கின் பெரும்பாலான மக்கள் நாளாந்தம் கூலி வேலை மற்றும் கடற்றொழிலுக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துபவர்களாவர். அரசாங்கம் இவர்களது அத்தியாவசியத் தேவைகளை கணக்கில் எடுக்காது பாரிய நெருக்கடி நிலமைக்குள் தள்ளியுள்ளது. அரசாங்கம் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலத்தில் கடற்றொழிளார்கள் மற்றும் விவசாயிகளை அவர்களது தொழிலை மேற்கொள்ள முடியும் என அறிவித்திருந்த போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை, முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி, வலைப்பாடு போன்ற இடங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினர் மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை, என கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செவ்வாய் நாடு முழுவதும் 8 மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும், மக்கள் குறுகிய நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடித்துக் கொண்டும் கும்பல் கும்பலாக சந்தைகளிலும் நிறைந்து வழிந்தனர். இதற்கு மக்கள் மீதே குற்றம் சாட்டிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி’ “மக்களின் பொறுப்பற்ற செயல்” என குற்றஞ்சாட்டினார்.

யுத்தத்தின் பேரழிவுகளை சந்தித்த வடக்கு மக்கள், மரணங்கள், ஷெல் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்கு ஓடி ஒழிதல், தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டங்களுக்கு தயாராகுதல் போன்றவற்றால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்களில் இருந்து இன்னமும் மீளவில்லை. யுத்தத்தின் பின்னர் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உளவியலை பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், “யாழ்ப்பாண மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய பாதிப்புகள்” காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

நெருக்கடிக்கு பின்னரான மனவடுநோய் 13 வீதமாகவும் பதகளிப்பு நோய் 48.5 வீதமாகவும் மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக இந்த மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். இதன் விளைவாகவே ஈரானின் இராணுவத்தளபதி அமெரிக்காவால் கொலை செய்யப்பட்ட போதும் மற்றும் கொரோனா பற்றிய செய்திகள் பரவிய போதும் வடக்கு’ மக்கள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை சேகரிப்பதற்கு திரண்டமைக்கான காரணம் என ஐ.வி. மஹாசேனன் என்ற பத்தி எழுத்த்தாளர் குறிப்பிட்டிருந்தார்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஊர்காவற்றுறையை சேர்ந்த மீனவரான மு. முகுந்தராஜ், 49 எங்களிடம் எப்போதுமே மேலதிகமான பணம் இருப்பதில்லை, என்றார். “எங்கள் வருமானம் எமது அன்றாட தேவைகளுக்கும் எமது தொழிலை பாதுகாப்பதற்கும் கூட போதுமானதாக இருப்பதில்லை. நாளாந்தம் கிடைக்கின்ற வருமானத்திலேயே எங்களது வாழ்க்கை ஓடுகின்றது. தற்போது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் மற்றும் பலதரப்பட்ட நடவடிக்கைகளும் எங்கள் வருமானங்களை இல்லாது செய்துள்ளது. தற்போது கடல் உணவு ஏற்றுமதிகள் முற்றாக தடை செய்யப்பட்டமையால் எங்கள் வாழ்க்கை நிலமை கேள்விக் குறியாகியுள்ளது. தற்போது யாரிடமும் கடன் வாங்கவும் முடியாது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாதுள்ளேன். தற்போது ஜனாதிபதி 1 கிலோ பருப்பு 65 ரூபாவுக்கும் ரின்மீன் 100 ரூபாவுக்கும் குறைப்பாக கூறினார். ஆனால் நாம் அதிக விலைக்கே அவற்றை வாங்குகின்றோம்.”

அவர் மேலும் கூறியதாவது: “எங்களது இடத்தில் தண்ணீர் கிடையாது, பொது கிணறுகளைத் நம்பி இருக்கின்றோம், தற்போது வறட்சிக்காலத்தில் விரைவில் கிணறுகள் வறண்டுவிடும், இந்த நிலையில் நாங்கள் சுத்தமாக இருப்பது மிகவும் கடினமானது. குடிப்பதற்கே’ நீர் விற்பனையாளர்களிடம் 1000 லீற்றர் 700 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய வேண்டும். மூன்று வேளை உணவுடன் எங்களை சுத்தமாக வைத்திருக்க நாளொன்றுக்கு குறைந்தது 2000 ரூபா தேவை. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நிலமை தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் நோய் தொற்று ஏற்படுகின்றதோ இல்லையோ, பட்டினிச்சாவு நிச்சையமானதாக இருக்கும்.”

த. புஸ்பாகரன், தன் குடும்பத்திற்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் கீழ் 750,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக திட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட போதிலும், அதை நம்பி கடன்பட்டு வீட்டை கட்டிமுடித்த பின்னர் 70,000 ரூபா மட்டுமே தந்ததாகவும் தெரிவித்தார். “தற்போது எனக்கு 700,000 கடனுள்ளது. வீட்டு வேலை முடிக்க இன்னும் 5,00,000 தேவை. இந்த நிலைமையில் வீட்டுக்குள் முடங்குவது எங்களை திணறவைக்கின்றது. கடற்றொழில் வருமானம் எனது குடும்பத்தின் அன்றாட வாழ்வுக்கே தின்டாட்டமாகத்தான் இருந்து வந்தது. தற்போது ஏற்ப்பட்டுள்ள நிலமைகளால் வாழ்க்கை நடத்த முடியாத மனவுழைச்சலுடன் உள்ளோம்,” என அவர் கூறினார்.

வே. முருகையாவின் குடும்பம் 1983ல் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானபோது பருத்தியடைப்பு கிராமத்திலிருந்து அனலைதீவுக்கு இடம்பெயர்ந்துள்ளது. “2013 இல் இங்கு வந்து வேறு வீட்டில் இருந்தோம். சென்ற ஆண்டு கடன்பட்டு போரில் நாசமாக்கப்பட்ட வீட்டை திருத்தினோம். அதுவும் இன்னும் 500,000 ரூபா செலவு செய்தாலே அது பூர்த்தியாகும். தற்ப்போது வரையில் எனக்கு 300,000 ரூபா கடன் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் நிலமைக்குள் எங்கள் உணவுத் தேவைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது. கடந்த 24 அன்று பருத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினர் எம்மை சூழ்ந்து பீதியடைய வைத்தது, சமூக விரோதிகள் போன்று நடத்தினர். அதனால் கரை திரும்பினோம். எங்களிடம் சரியான வீடு இல்லை. மீன்பிடி உபகரணங்கள் இல்லை, உணவு இல்லை, சரியான ஆடைகளும் இல்லை. குளிப்பதற்கு 1.5 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டும்,” என்றார்.

Loading