முன்னோக்கு

வேலைநிறுத்தம் செய்து வரும் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களை ஆதரிப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.

இன்ஸ்டாகார்ட் நிறுவன தொழிலாளர்கள் முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் கை தொற்றுநீக்கிகள் உட்பட முறையான பாதுகாப்பு சாதனங்களின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதால் திங்கட்கிழமை அவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தொடங்கினர். கொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகின்ற நிலையில், அவர்கள் வேலை செய்து வரும் பாதுகாப்பற்ற நிலைமைகள் அவர்களது உயிருக்கு மட்டுமல்ல, மாறாக அவர்கள் சேவையாற்றும் வாடிக்கையாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தானதாகும்.

இந்த தொழிலாளர்கள் துணிச்சலாக ஒரு மிக முக்கிய சமூக சேவை செய்து வருகிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கையில் 165,000 நோயாளிகளுடன் மற்றும் 3,100 இக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன், அமெரிக்கா இப்போது இந்த நெருக்கடியின் குவிமையமாக உள்ளது. அமெரிக்காவின் சுமார் 250 மில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அல்லது வரக்கூடாத இந்த மக்களுக்கான உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை வினியோகிப்பதற்கான அவசியம் முன்பினும் அதிக முக்கியமாக உள்ளது.

“கடைக்காரர்கள்" (shoppers) என்றறியப்படும் 150,000 இன்ஸ்டாகார்ட் தொழிலாளர்கள் Kroger, Aldi, Sam’s Club மற்றும் ஏனைய பிரதான உணவுப்பொருள் விற்பனையாளர்களிடம் இருந்து மளிகைச் சாமான்களைப் பெற்று வினியோகிக்கின்றனர். வீட்டு வினியோகங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்ற நிலையில், சான் பிரான்சிஸ்கோவை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம் இன்னும் 300,000 தொழிலாளர்களை நியமிக்க திட்டமிடுகிறது. ஆனால் அது தொழிலாளர்களுக்கு மிகவும் அடிப்படை பாதுகாப்புகளை வழங்கும் கோரிக்கைகளை எதிர்க்கிறது.

அமசனில் முன்னாள் வினியோக தொடரின் பொறியாளராக இருந்த 34 வயதான இன்ஸ்டாகார்ட் தலைமை செயலதிகாரி அபூர்வா மெஹ்தா 400 மில்லியன் டாலர் தனிப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கும் அதேவேளையில் இன்ஸ்டாகார்ட் தொழிலாளர்களோ ஒரு வினியோகத்திற்கு சராசரியாக 7 டாலர் மட்டுமே சம்பாதிக்கின்றனர். தற்காலிக ஒப்பந்தங்களுடன் நிரந்தரமற்ற தொழிலாளர்களை கொண்ட பொருளாதாரத்தில் பணியாற்றும் ஏனைய தொழிலாளர்களைப் போலவே, இவர்களும் "சுய-தொழில்" ஒப்பந்ததாரர்களாகவே பகுக்கப்படுகிறார்கள் அவ்விதத்தில் அந்நிறுவனம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச கூலி, வேலை நேரக் குறைப்பு மற்றும் வேலையிழப்பிற்கான உதவித்தொகை கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்ய விரும்புகிறார்கள். ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவன தொழிலாளர்கள், அந்நிறுவனம் கடுமையாக தேவைப்படும் சுவாசக் கருவிகளின் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென கோரி நேற்று போராட்டங்களைத் தொடங்கினர். ஆனால் தொழிலாளர்கள், பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் பில்லியன்களைக் குவித்துக் கொள்வதற்காக தங்களையும் மற்றவர்களையும் ஆபத்திற்கு உட்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இன்ஸ்டாகார்ட் வேலைநிறுத்தம் நடந்த அதே நாளில், வங்கிகள் மற்றும் மிகப் பெரும் பெருநிறுவனங்களுக்கு பல ட்ரில்லியன் டாலர் "ஊக்கப்பொதி" கையளிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதத்தில், வோல் ஸ்ட்ரீட் அவ்வாரத்தை தொடங்கியது.

இன்ஸ்டாகார்ட் வேலைநிறுத்தம், பரந்த தொழிலாள வர்க்க இயக்கத்தின் பாகமாகும். சமீபத்திய நாட்களில், இத்தாலிய மற்றும் ஸ்பானிய வாகனத்துறை மற்றும் எஃகுத்துறை தொழிலாளர்களும், பிரிட்டிஷ் தபால்துறை தொழிலாளர்கள், பிரெஞ்சு பேருந்து ஒட்டுனர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களும், மற்றும் பிரேசிலிய தொலைபேசி அழைப்பு மைய தொழிலாளர்களும் அத்தியாவசியமல்லாத வேலையிடங்களை மூடுவதற்கும் அல்லது முக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களினது பாதுகாப்பை கோருவதற்காகவும் வேலைநிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.

நியூ யோர்க் நகரின் தன்னாட்சி பெருநகரமான ஸ்டாடென் தீவில் அமைந்துள்ள அமசன் சேவை நிறைவேற்று மையத்தில் கடந்த வாரம் ஒரு தொழிலாளருக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது என்பதால், அங்குள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பு சாதனங்கள் கோருவதற்காகவும், அக்கட்டிடம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் வரையில் அது மூடப்பட வேண்டும் என்றும், அங்கே வேலை செய்யும் 4,500 தொழிலாளர்களுக்கு முழுமையான இழப்புத் தொகை வழங்க வேண்டுமென்றும் கோருவதற்காக திங்கட்கிழமை வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

குறைந்தபட்சம் அதன் 10 சரக்கு வைப்பு கிடங்குகளில் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதினும் கூட, அமசன் நிறுவனம் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும் மற்றும், முறையாக முகக்கவசங்கள், கையுறைகள் அல்லது இதர பாதுகாப்பு சாதனங்களை வழங்கவும் மறுத்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் அமசன் பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், சரக்கு வைப்பு கிடங்கு பணியாளர்களுக்கும், ஓட்டுனர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்காக மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வாங்க கொள்முதல் ஆணைகளை அனுப்பி உள்ளதாகவும், ஆனால் உலகளாவிய பற்றாக்குறை இருப்பதால் "நமது சமூகங்களுக்கு சேவையாற்றும் மருத்துவ சேவை வழங்குனர்களுக்கு முதல் முன்னுரிமையில் வழங்க வேண்டி உள்ளது. நமக்கான முகக்கவசங்கள் வருகையில், பணியாளர்களின் கரங்களில் அவற்றை ஒப்படைப்பதே நமது முன்னுரிமையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு மாதமும் 6.5 பில்லியன் டாலர் அல்லது ஒவ்வொரு நிமிடமும் 150,000 டாலருக்கு சற்று குறைவாக சம்பாதிக்கும் அவர், அவரின் சொந்த ஆடை நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், மென்பொருள், பத்திரிகை, ரோபோடிக் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களைச் சொந்தமாக கொண்டுள்ள உலகின் மிகப்பெரும் செல்வந்தரான அவர், உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பண்டங்களை முறைப்படுத்தி வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கான முகக்கவசங்களை உற்பத்தி செய்வதை ஒழுங்கமைக்கும் ஆற்றல் அவருக்கில்லை என்று வாதிடுகிறார்.

தொழிலாளர் நடவடிக்கையை ஒழுங்கமைக்க உதவிய ஒரு பணியாளரை அந்நிறுவனம் வேலையிலிருந்து நீக்கிவிட்டதாக நேற்று அமசன் அறிவித்தது.

அமசனுக்குச் சொந்தமான Whole Foods விற்பனை அங்காடி தொழிலாளர்களும் இன்று வெளிநடப்புக்குத் திட்டமிட்டு வருகின்றனர். ஒரு தொழிலாளருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்படும் எந்தவொரு அங்காடியையும் மூட வேண்டும், தொழிலாளர்களுக்கு முழு இழப்புத் தொகை வழங்கப்பட வேண்டும், பகுதி நேர மற்றும் குறிப்பிட்ட கால தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டு வர வேண்டும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு முதலாளிமார்கள் வழங்கும் தொகைகளை அதிகரிக்க வேண்டுமென அந்நிறுவன தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.

Vice’s Motherboard வலைத் தளத்தின் தகவல்படி, நியூ ஓர்லியன்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் ஹன்டிங்டன் பீச் அங்காடிகளின் தொழிலாளர்களுக்கு, தானியங்கி அழைப்பின் மூலமாக அவர்களின் சக தொழிலாளர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், “இத்தகவலைப் பெற்றுக் கொண்டதற்கு ஓர் ஒப்புதலாக எண் ஒன்றை அழுத்துமாறு" கூறப்பட்டது. இருப்பினும் அந்த அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன, ஏனென்றால் Whole Foods விற்பனை அங்காடி உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கையிருப்பில் வைப்பதற்காக முண்டியடித்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் இலாபங்களை ஈட்டுகின்றது.

பண்டைய எகிப்தின் பரோவாக்கள் போல (pharaohs – பண்டைய எகிப்திய மன்னர்கள்), பெஸோஸூம் ஏனைய பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களும் அவர்களின் பிரமிடுகளைக் கட்டமைக்கும் நிகழ்முறையில் எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தாலும் அதை செய்யும் அடிமைகளை விரும்புகிறார்கள். ஆனால் எடுத்துரைப்பதற்குத் தொழிலாளர்களிடம் வேறு விடயம் உள்ளது. இது வாகனத்துறை தொழிலாளர் ஒருவரிடம் இருந்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு கிடைத்த ஒரு மின்னஞ்சலில் தொகுத்தளிக்கப்பட்டிருந்தது, அவர் ஏப்ரல் 14 இல் —இந்த வைரஸ் உச்சத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்படும் காலத்தில்— வேலைக்குத் திரும்புவதற்கான திட்டங்களைக் கண்டித்ததுடன், “எங்கள் உயிர்களும் மதிப்புடையதே!” என்று வலியுறுத்தினார்.

எந்தவித கூலி மற்றும் சலுகைகளின் இழப்பின்றி தொழிலாளர்களுக்கு முழு இழப்புத் தொகையுடன், அனைத்து அத்தியாவசியமற்ற வேலையிடங்களையும் உடனடியாக மூடுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

மருத்துவச் சிகிச்சை, பரிசோதனை வழங்குதல், முகக்கவசங்கள், கையுறைகள், சுவாசக் கருவிகள் மற்றும் இதர மருத்துவச் சாதனங்களின் உற்பத்தி, உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களின் வினியோகம், மின்சாரம், தொலைதொடர்பு, தண்ணீர் மற்றும் கழிவுநீர் முறைகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பின் பராமரிப்பு உள்ளடங்கலாக, பொருளாதார வாழ்வானது அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.

மளிகைச் சாமான் வினியோக தொழிலாளர்கள், இந்த முக்கிய சமூக சேவையை வழங்க விரும்புகின்றனர் என்பதுடன் அவர்களால் வழங்க முடியும் என்கின்ற நிலையில், அவர்கள் உள்ளடங்கலாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார கூலிகளும் பாதுகாப்பான வேலையிட சூழலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நிரந்தரமற்ற ஒப்பந்த தொழில்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் முழு சலுகைகளுடன் முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட வேண்டும்.

வேலையிட நிலைமைகளை மேற்பார்வை செய்யவும் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்களால் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் சாமானிய வேலையிட குழுக்களை உருவாக்குமாறு SEP வலியுறுத்துகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கு எதையும் செய்திராத பெருநிறுவன நிர்வாகத்தின் அங்கங்களாக விளங்கும் தொழிற்சங்கங்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.

ஒவ்வொரு வேலையிடத்திலும் மருத்துவ தொழில் வல்லுனர்களுடன் இணைந்து செயல்படும் சாமானிய தொழிலாளர் குழுக்கள், அனைத்து தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

வோல் ஸ்ட்ரீட்டும் மிகப்பெரும் பெருநிறுவனங்களும் பொது சொத்துக்களில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வழங்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கையேந்திவருகையில், அதையும் மக்கள் தான் விலையாக கொடுக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கின்ற நிலையில், “தனியார் நிறுவனம்" தொடர்பான அதிசயங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வாதங்களும் தூள்தூளாகி வருகின்றன.

மிகப் பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பிணையெடுப்பு வழங்குவதற்கு பதிலாக அவற்றின் பில்லியனர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் பெருநிறுவன செயலதிகாரிகளுக்கு எந்த நஷ்டஈடும் இல்லாமல் அவை ஜனநாயகரீதியில் தொழிலாள வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களால மாற்றப்பட்ட வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

உணவு மற்றும் ஏனைய பொருட்களின் வினியோகத்தை இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் ஏனைய தனியார் பெருநிறுவனங்கள் ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு அங்கே எந்த பகுத்தறிவார்ந்த காரணமும் இல்லை. இதற்கு பதிலாக அந்த இன்றியமையா சமூக சேவையானது தனியார் இலாபத்தை உருவாக்குவதற்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் மத்திய திட்டமிடல் கொண்ட சோசலிச பொருளாதாரத்தின் பாகமாக இருக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து பொருட்களும் மனித ஆதாரவளங்களும் இந்த உயிராபத்தான நோயை எதிர்த்து போராடுவதற்காக மட்டுமல்ல, மாறாக வறுமை, சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக வர்க்க சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராடும் பொருட்டு சமூகரீதியில் பகுத்தறிவார்ந்த அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

The author also recommends:

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், சோசலிச முன்னோக்கும்

[30 March 2020]

ஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது
[28 March 2020]

How to fight the COVID-19 pandemic: A program of action for the working class
[17 March 2020]

Loading