இலங்கை கோவிட்-19 தேசிய ஊரடங்கு உத்தரவு, உழைக்கும் மக்களுக்கு அடிப்படையான உணவு மற்றும் மருத்துவ நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளதாகவும் இருவர் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மார்ச் 25 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் ஹரிதா அலுத்ஜின் கருத்துக்களால் நிலைமையை குறைமதிப்பிற்குட்படுத்திய அபாயம் எச்சரிக்கப்பட்டது. "நாங்கள் இந்த வழியில் காத்திருந்து பார்த்தால், 100 க்குள் எங்கள் சுகாதார அமைப்பு சரிந்துவிடும்…., மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1000, 1500, 2000 ஆக இருக்கலாம். எங்கள் கண்களுக்கு முன்பாக இறப்பதற்காக நோயாளிகள் காத்திருக்கிறார்கள்” என எச்சரித்தார்.

மருத்துவ நிபுணர்களின் கருத்தின்படி, “இலங்கையில் செய்யப்பட்டுவரும் ஊரடங்கும், அதன் பின்னரான 6 மணிநேர ஊரடங்கு தளர்த்தலும் மேலும் மேலும் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்குமே தவிர குறைக்காது”, ”மக்களுக்கு அனைத்து வசதிகளையும் உத்தரவாதம் செய்து கொண்டு முற்றாக முடக்குவதுதான் இலங்கையை பொறுத்தவரை சரியாக இருக்கும், அப்படி செய்யமுடியாது போனால் பெரும் பாதிப்பினை இது உண்டுபண்ணும்”, இந்த நிலைமையை சமாளிப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் போதாதுள்ளது, இது பெரும் அவலத்தினை உருவாக்கும் என தெரிவிக்கிறது.

கொரோனோ வைரஸ் நோய்தொற்று பரவும் தீவிரத்தினை, உலக சுகாதார அமைப்பும் மருத்துவ விஞ்ஞானிகளும் சீனா அனுபவங்கள் மற்றும் ஆய்வுகளி்ல் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிபப்படையில் ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்திருந்தனர்.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு அவசியமான முன்கணிப்பையும் செய்து முன்நடவடிக்கைகளை கடைசி நிமிடம் வரை எடுக்காது செயலற்ற நிலையில் இருந்த பின்னர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ஷ அறிவித்துள்ள கோவிட்-19 தேசிய ஊரடங்கு உத்தரவு, உழைக்கும் மற்றும் கிராமப்புற வறிய மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில், அதன் பொதுச் செலளார் விஜே டயஸ், “இலங்கை அரசாங்கம் கடந்த 50 நாட்களாக எவ்விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்திருக்கவில்லை. மார்ச் 12 திகதி ஒரு சுற்றுலா பயணிகளின் வழிகாட்டி தொற்றுக்கு உள்ளாகி இருந்தது தெரிய வரும்வரை பகிரங்க எச்சரிக்கை கூட விடுக்கப்பட்படவில்லை” என அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை குற்றஞ்சாட்டியதோடு “கொரொனா தொற்று வைரஸால் ஏற்படும் ஆபத்துகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் அக்கறையற்றதும் இரக்கமற்றதுமான பிரதிபலிப்பு ஒன்றும் பிரத்தியேகமானதல்ல. உலகின் அனைத்து அரசாங்கங்களை ஒத்ததாகும். இவர்கள் அனைவரினதும் ஒரே கவனம் இலாபத்திற்கான உற்பத்தியே தவிர உற்பத்தி செய்வோரின் நல்வாழ்வு அல்ல” என தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கை, “வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்காக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட சில சமயங்களில் பொறுப்புடன் செயல்படுமாறு பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனக் குறிப்பிடுகிறது.

இந்த நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மக்களை பாதுகாக்கவும் தனிமைப்படுத்துவது அவசியமாக உள்ளது. அவர்கள் உயிர்வாழ அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் பாராபட்சம் இன்றி கிடைக்கச்செய்வதும், இலவசமாக முகமூடிகளையும், சுகாதாரமாக இருப்பதற்கான பொருட்களையும், பிற மருத்துவ உதவிகளையும் குழந்தைகள் முதல் முதியோர் வரை கிடைக்கச் செய்வதும் அவசியமாகிறது.

இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக உத்தியோகபூர்வமாக அரசாங்க நிவாரணம் பெறும் கிட்டதட்ட, 24 இலட்சம் பேர் உயிர் வாழ்வதற்கு எவ்வித அடிப்படை உதவியும் இன்றி விடப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் அன்றாட கூலிவேலைக்கு கூட போகமுடியாது, நிவாரணங்களை நம்பி வாழும் வறிய மக்கள் தட்டினர் ஆவர்.

தற்போது இவர்களுக்கு 5000 ரூபாவுக்கு உணவு பொருட்களும், முற்பணமாக 5000 ரூபா கொடுக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ள போதும், உணவுப் பொருட்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை, சில இடங்களில் 5000 ரூபா முற்பணம் கொடுக்கப்பட்டிருப்பதாவும், பல இடங்களில் 3000 கொடுத்துவிட்டு மிகுதி வைப்பில் இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் எதுவுமே கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். உதவி நிவாரணங்கள் சென்றடைய எத்தனை நாட்களாகும் என்பது தெளிவாக இல்லை. வறிய மக்கள் படும் அவலம் தாங்கமுடியாத நிலையில் சில தனியார் அமைப்புகளும், நலன் விரும்பிகளும் தமது செலவில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் அவசியத்திற்கும் அன்றாட சமூக வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மக்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கலந்துரையாடினர்.

வவுனியாவை சேர்ந்த விதவை தனலட்சுமி, “இப்போதைய நிலையில் என்னிடம் சில நகைகளைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை, அடகு வைத்துத்தான் சாமான்கள் வாங்க முடியும், அடகு வைக்கவும், சாமான்கள் வாங்கவும் வவுனியா நகருக்குத்தான் போகவேண்டும், இங்கிருந்து 30 கிலோமீட்டர், ஒரு மணிநேரமாகும். என்னை விட மோசமான நிலையில் வாழ்பவர்களும் இங்கே இருக்கிறார்கள், அவசர தேவைக்குகூட வெளியே போனால் இராணுவம் பிடித்து உள்ளே அடைத்துவிடுகிறது” என்றார்.

வலை நிறுவனத்தில் பணிபுரியும் ஓமந்தையை சேர்ந்த சுதா, “ஊரடங்கின் போது சாமான்கள் வாங்கமுடியவில்லை, கடனாக சாமான் தருவீர்களா சம்பளம் வந்தவுடன் கடனை அடைக்கிறேன் என கெஞ்சிக்கேட்டும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பாளர் தாம் கடன் கொடுப்பதில்லை என நிராகரித்துவிட்டார் ஆனால், அதேநேரம் வசதியானவர்களுக்கு அவர் கூப்பிட்டு, கடன்கொடுக்கிறார்” என தெரிவித்து, “இப்படித்தான் ஏழைகளின் நிலமை இங்கே இங்கிருக்கிறது” என்றார்.

யாழ்ப்பாண வாசி ஒருவர் ஐபிசி க்கு வளங்கிய பேட்டியில், யுத்த நிலைமையில் கூட இப்படி ஒரு கஸ்ட்த்தினை நாங்கள் முகம் கொடுக்கவில்லை, சாமான்கள் வேண்டுவதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது, அன்றாடம் உழைத்து சீவிக்கிறவர்களின் நிலமை சோசமானதாக இருக்கிறது, இவர்கள் ஊரடங்கு உத்தரவினை 6 மணித்தியாலம் எடுத்துவிடுகிறார்கள், இந்த 6 மணித்தியாலத்திற்குள் சாமன்களை வாங்கி வீடு திரும்பிவிட வேண்டும் என்பதால், மக்கள் வெள்ளம் மோதியடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நோய்பரவுவதற்கான நிறைய சந்தர்ப்பம் உண்டு, எல்லோருமே நெருங்கி நெருங்கி நிற்கிறார்கள், பொருட்களும் தட்டுப்பாடாக இருக்கிறது, நோய்பரவாமால் காப்பாற்றிக் கொள்வதற்கான அத்தியாவசியமான முகமூடி எங்குமில்லை, மரக்கறிகள் பிரச்சனையாக இருக்கிறது, வாகனங்கள் போக்குவரத்தும் பிரச்சனையாக இருக்கிறது, அவர்கள் உயிர்வாழ்வதற்கு எதுவுமேயில்லை, பட்டினிச் சாவுதான்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் கணக்காளராக பணிபுரியும் மோகனுடன் பேசியபோது, “தற்போது யாழ்ப்பாணத்தில் முழு அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனோவைத் தவிர மக்களுக்கு சாதாரணமாக வரும் நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியாமல் இருக்கின்றது. உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் ஒழுங்காக சிகிச்சை பெறமுடியவில்லை. பெரியாஸ்பத்திரிக்கு அனாவசியமாக வர வேண்டாம் என்று அறிவிக்கின்றார்கள். சுகயீனம் ஏற்பட்டால் போக கூட முடியாது. பொதுப் போக்குவரத்து இல்லை. கடும் சுகயீனம் என்றால் அம்புலன்ஸைக் கூப்பிட முடியும். ஆனால் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வருவதாக இருந்தால், எந்விதமான வசதியும் இல்லை. கட்டாயம் வாடகைகார் அல்லது ஆட்டோ மட்டுமே உண்டு. ஆஸ்பத்திரியில் பாஸ் இருந்தால் அவற்றைபிடிக்க முடியும். அதற்கு 1500 முதல் 2000ம் வேண்டும்” என்றார்.

இலங்கையிலே வறுமைக்கு உட்பட்ட மாநிலங்களில் ஒன்றான மட்டகளப்பினை சேர்ந்த

சமூக செயற்பாட்டாளர் சிவதர்ஷினி குறிப்பிட்டபோது, “வயலில் களையெடுத்தல், வரம்பு செதுக்குதல் போன்ற நாட்கூலி வேலைசெய்யும் மக்கள், கரைவலை மீன் பிடித்து அன்றாடம் சீவிக்கும் மக்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முடமான மற்றும் வேலையற்ற பிள்ளைகளுடன் தனித்திருக்கும் பெண்கள், தாய் தந்தை இறந்துவிட பிள்ளைகளை வளர்க்கும் முதியோரினால் வழிநடத்தும் குடும்பங்கள் என பல ஆயிரம் இங்குண்டு, அவர்களிடம் பெரிதாக சேமிப்பு எதுவுமிருக்காது, இப்படி அடைத்துவைப்பதால் வெளியில் பல தூரம் பயணித்து குறிப்பிட்ட மணித்தியாலத்திற்குள் சாமானை வேண்டுவதென்பது முடியாத விடயம், அவர்கள்தான் இந்த ஊரடங்கு முடக்கத்தினால் பெரும் பட்டினி கஸ்ட்டத்திற்கு முகம்கொடுக்கிறார்கள்” என்றார்.

இந்த அவலங்களை பொறுக்க முடியாத உழைக்கும் மற்றும் வறிய மக்கள் தமிழ் முதலாளித்துவ கட்சிகளிடம் போய் முறைப்பாடு செய்தார்கள். ஆனால் வழமைபோல அவர்களது பதில், “பொறுப்பான அரச அதிகாரிகளுடன் பேசியிருக்கிறோம், பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இதையிட்டு முறைப்பாடு செய்திருக்கிறோம், அவர்களும் செய்வதாக கூறியிருக்கிறார்கள், அது எந்தவளவுக்கு உடனடி சாத்தியம் என்பது தெரியவில்லை ஆகையால் வெளிநாட்டு தமிழர்கள் இதற்கு உதவ முன்வரவேண்டும்” என மாவை சேனாதிராஜாவும், “அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தால் கூட அவை இந்த மக்களின் துன்பங்களை முழுமையாக போக்கும் வகையில் அமையப்போவதில்லை. ஆனால், நாம் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள் என்ற உணர்வுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் எமது சக உறவுகள் பசியிலும் பட்டினியிலும் வீழ்ந்து விடாமல் கை கொடுத்து உதவ வேண்டியது எமது கடமை” என விக்கினேஸ்வரனும் அறிக்கை விட்டுள்ளனர்.

ஒரு நாட்டின் பிரஜைகளை பாதுகாக்கும் “சமூகப் பொறுப்புணர்வு” அந்த அரசாங்கத்தின் கடமையல்ல, மாறாக புலம்பெயர்ந்து, மிகவும் வறிய சம்பளத்துடனும் மோசமான வாழ்க்கை நிலைமையிலும் இதே நோய்தொற்றுக்கு பயந்து வாழும் “தமிழ் தாயின் பிள்ளை”களாம். இந்த பேரழிவுகரமான நிலைமையிலும் இராஜபக்ஷ ஆட்சியையும், நிதியப்பிரபுக்களையும் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கும் பொதுமக்களிடம் இருந்து பாதுகாப்பதே தமது இலக்கு என்பதை தமிழ் தேசியவாதிகள் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பரந்துபட்ட மக்களின் வாழ்கையை கருத்தில் கொண்டு திட்டமிடப்படாத ஊரடங்கினால் அன்றாடத் கூலித்தொழிலாளர்கள், எந்த வருமானமும் அற்ற வறிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், வறிய விவசாயிகள், சுயதொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் ஊரடங்கு உத்தரவினை மீறியவர்கள் என கைதுசெய்யப்பட்ட 6000 க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேடிப்போனவர்களாகவே இருக்கிறது.

இலவச சுகாதாரப் பாதுகாப்பு முறைகளுக்கு பெரும் நிதி ஒதுக்கி, அதை மீட்டெடுக்கவோ அல்லது மக்களின் தற்போதையை உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளை இல்லாமல் செய்யவும், உயிர்வாழ தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக கொடுப்பதற்கு பரந்த நிதி ஒதுக்க எந்த வழிமுறையையும் செய்யாமல் பெருவணிக மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஆதரிப்பதில் அரசாங்கம் முயற்சிகளை எடுத்தது.

தொற்றுநோய் நெருக்கடியினால் பாதிக்கப்பட இருக்கும் பெரும் நிறுவனங்களுக்கு உத்தரவாதத்தினை அளிக்க, இலங்கை மத்திய வங்கி மார்ச் 16 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, நிதி சந்தை "வளர்ந்து வரும் சூழ்நிலையிலிருந்து எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்கொள்ள" தேவையான பணப்புழக்கத்தை வழங்கும் என்று உறுதியளித்தது.

ஐரோப்பிய அமெரிக்க அரசாங்களைப் போலவே இலங்கையில் கோத்தபாயாவும், இந்தியாவில் மோடியும் கொரோனோ வைரஸ் நெருக்கடியை பெரும் நிதிநிறுவனங்களுக்கும் முதலாளிகளின் இலாபங்களுக்கும் பங்கம் விளைவிக்காமல் முடிவுகளை எடுப்பதுடன், உழைக்கும் மக்களை கையறுநிலைக்கு தள்ளுவதும், பெரும் அவலங்களை சுமக்கும்படி ஆபத்தில் விடுவதுமே இந்த நெருக்கடிக்கான அவர்களது தீர்வாக உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இதன் ஆரம்பத்திலே கூறியதுபோல், முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் யுத்தம் தொடுத்துள்ளது என்பதையே இந்த துயரகரமான அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, 9 March 2020 அறிக்கையில் குறிப்பிட்டவாறு,

“இந்த அபாயகரமான நோய்க்கு விடையிறுக்கையில், மனிதகுலத்தின் தேவையே முதன்மையானது என்ற கோட்பாடே நம்மை வழி நடத்த வேண்டும். மில்லியன் கணக்கானவர்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்தும் ஒரு தொற்றுநோயை எதிர்த்து போராடுவதைத் தனியார் இலாபத்தின் பரிசீலனைகளுக்கு அடிபணிய வைத்திருக்க முடியாது.

மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்ற பணம் இல்லை என்ற எந்தவொரு வாதமும் ஓர் இழிவான பொய்யாகும். இந்த நெருக்கடிக்கான ஓர் உடனடி அவசர விடையிறுப்பைக் கோருவதற்கும், இதற்கான செலவுகளைப் பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டே ஏற்க வேண்டுமென கோருவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும்”.

இது இலங்கையில் மட்டுமல்ல, இன்று உலகெங்கும் அதன் பரவலின் தாக்கம் சமூகத்திற்கு பாரியளவிலான உயிரிழப்புகளையும், அவலங்களையும் உருவாக்கியிருக்கிறது. உலகெங்கும் இதனால் பாதிக்கப்பட்வர்கள் எண்ணிக்கை 8 இலட்சத்தினை தாண்டிவிட்டதுடன் 42 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர், அதில் இறந்ததில் 70 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

இப்படியான தொற்றுநோய்க்கு தேசிய எல்லைகளும் கிடையாது அதேபோல தேசிய எல்லைகளுக்குள் தீர்வும் கிடையாது. இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் என்பது சர்வதேச மட்டத்திலும் விஞ்ஞானபூர்வமான வழிமுறைகளிலும் ஒழுங்கமைக்க வேண்டியிருக்கிறது.

உலக அளவில் மருத்துவ நிபுணர்களின் மற்றும் விஞ்ஞானிகளின் கூட்டுழைப்பினை ஒழுங்குசெய்து, அதற்கான மருந்தினை கண்டுபிடிப்பதையும், அதை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச்செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை நோய்தொற்று பரவாமல் இருக்க அனைவருக்கும் ஊதியத்துடனான வேலை விடுமுறை, எல்லோருக்கும் மருத்துவப் பரிசோதனை, அத்தியாவசிய பொருட்களை இருப்பிடத்திலேயே பெற்றுக்கொள்ளவைதை உறுதிப்படுத்த வேண்டும், இதற்கு அவசியமான உலகரீதியான வளங்களை பகிர்ந்துகொள்ளவும் செயல்படுத்தவும் ட்ரில்லியன் கணக்கான நிதிகளை ஒதுக்குவது இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் இன்றியமையாததாக உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் இந்த முன்னோக்குக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்ட போராடுகிறது. இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Loading