முன்னோக்கு

கொரொனா வைரஸ் தொற்றுநோயில் உள்ள வர்க்க பிரச்சினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும் தொடர்ந்து பரவி வரும் கொரொனா வைரஸ், இனம், பாலினம், தேசியம் அல்லது பாலியல் நோக்குநிலை அடிப்படையில் பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆனால் தொற்றுநோயைத் தவிர்ப்பதிலும் உயிர்பிழைப்புக்கான வாய்ப்பை அதிகரிப்பதிலும் ஐயத்திற்கிடமின்றி செல்வவளம் ஒரு முக்கிய அம்சமாக உள்ளதென்பது உண்மையாகும்.

ஒவ்வொரு இயற்கை அல்லது தொற்றுநோய் சார்ந்த நிகழ்விலும் போலவே, இந்த கொரொனா வைரஸ் விடயமும் சமூக சமத்துவமின்மையால் சீரழிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தின் யதார்த்தத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கின்றது. பரந்த மக்கள்தொகையின் வாழ்க்கை நிலைமைகள் அவர்களை இலகுவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களாகவும், விரிவடைந்து வரும் பொருளாதார பேரழிவின் விளைவுகளை கையாள முடியாதவர்களாகவும் ஆக்குகின்றன.

Fabian Ramirez, 11, and members of his family scavenge a trash container for vegetables discarded during the fourth week of a quarantine to help contain the spread of COVID-19 in Asuncion, Paraguay, April 2, 2020 [Credit: AP Photo/Jorge Saenz]

இந்த வர்க்க யதார்த்தம் எண்ணற்ற வழிகளில் வெளிப்பாட்டைக் காண்கிறது. “இடம்சார் புள்ளிவிபரங்கள் அனைத்தையும் எடுத்துரைக்கின்றன: கொரொனா வைரஸின் போது வீட்டில் இருப்பது ஆடம்பரம்,” என்று நியூயோர்க்டைம்ஸ் வெள்ளியன்று ஒரு கட்டுரை வெளியிட்டது, அது இந்த தொற்றுநோயின் இப்போதைய மையமான அமெரிக்காவில் ஏழைகளை விட செல்வந்தர்களால் அதிக சுலபமாக "சமூக விலகல்" நடைமுறைகளைக் கடைபிடிக்க முடிகிறது என்ற உண்மையை ஆவணப்படுத்துகிறது.

டைம்ஸ் குறிப்பிடுகிறது, “எல்லா வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்களும் இந்த நெருக்கடிக்கு முன்னர் அவர்கள் நடமாடியதை விட குறைவாகவே இயங்கி வருகின்றனர் என்றாலும், குறிப்பாக வார வேலை நாட்களில் செல்வந்தர்கள் தான் அதிகமாக வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆனால் அதுமட்டுமல்ல, நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 15 மில்லியன் செல்பேசி பயனர்களைப் பின்தொடரும் இடம்சார் பகுப்பாய்வு நிறுவனம் Cuebiq ஆல் திரட்டப்பட்ட தகவல்களின்படி, அண்மித்து ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த வைரஸ் பரவிய போது, சமூக விலகலுக்கு ஒரு முன்கூட்டிய ஆரம்பத்தை அளித்து, ஏழைகள் அதை மேற்கொள்வதற்கு பல நாட்களுக்கு முன்னரே செல்வந்தர்கள் அதை மேற்கொள்ள தொடங்கினர்.”

முடிவாக ட்ரம்ப் நிர்வாகம் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்த தொடங்கிய மார்ச் 16 அளவில், எல்லா பகுதிகளிலும் நடமாட்டங்களும் ஏற்கனவே கைவிடப்பட்டிருந்ததாக அந்த பகுப்பாய்வு குறிப்பிட்டது. “ஆனால் அந்த தேதிகளவில், மிகப்பெரும் வருவாய் பெறும் பிரிவினர் அண்மித்து பாதியளவுக்கு அவற்றின் நடமாட்டங்களை ஏற்கனவே நிறுத்தி இருந்தன. அதற்கு மூன்று நாட்கள் கழியும் வரையில் ஏழைகளின் பகுதிகள் அதுபோன்றவொரு நடமாட்ட குறைவைக் காணவில்லை.”

பல பிரதான பெருநகர பகுதிகளில், உயர்மட்ட பத்து சதவீதம் நடைமுறையளவில் பூஜ்ஜியத்திற்கு அதன் நகர்வுகளைக் குறைத்துள்ளது. ஆனால் அடிமட்ட பத்து சதவீதத்தின் நடமாட்டம் வாரயிறுதி நாட்களில் மட்டுமே பூஜ்ஜியத்தை நெருங்குகிறது, வார வேலை நாட்களின் போது மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறது. சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் போதிய பாதுகாப்புகள் இல்லை என்றாலும், பல குறைவூதிய தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட KFF Health Tracking கருத்துக்கணிப்பு, மார்ச் கடைசி வாரத்தில் நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் 57 சதவீத வயது வந்தோர் தங்களால் வேலையைத் தவிர்க்க முடியாது என்பதாலேயே அவர்கள் தம்மை அபாயத்திற்கு உள்ளாக்கும் ஆபத்தில் இருப்பதாக கவலை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்தது. வருடத்திற்கு 40,000 டாலருக்குக் குறைவாக சம்பாதிக்கும் வகைப்பாட்டில் உள்ள வயது வந்தோரைப் பொறுத்த வரையில், இந்த புள்ளிவிபரம் 72 சதவீதமாக, அல்லது அண்மித்து மூன்று கால்வாசியாக அதிகரிக்கிறது.

பின்னர் நிச்சயமாக மருத்துவத்துறை உள்ளது. குறைவூதிய தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் மருத்துவக் காப்பீடு இருப்பதில்லை அல்லது அவர்கள் அதிக சுய கட்டணங்கள் மற்றும் பிடித்தங்களுடன் தனியார் காப்பீட்டைப் பெற வேண்டியிருக்கும். இந்த வைரஸ் பாதிப்பதற்கு முன்னரே கூட, குறிப்பிடத்தக்க அளவிற்கு வர்க்க அடிப்படையிலான மருத்துவச் சிகிச்சை முறையின் பாகமாக, அமெரிக்காவில் ஏழைகளின் ஆயுள்காலம் செல்வந்தர்களின் ஆயுள்காலத்தை விட 20 ஆண்டுகள் குறைவாக இருந்தது.

பரிசோதனையைப் பொறுத்த வரையில், தொழிலாளர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், சுவாசித்தலில் சிக்கல் போன்ற COVID-19 இக்கான அறிகுறிகள் இருந்தாலும் கூட அவர்களால் பரிசோதனை செய்து கொள்ள முடிவதில்லை என்று காண்கிறார்கள்.

தெற்கு அலபாமாவில் ஒரு மளிகை கடை தொழிலாளரான Nathan Tetreault தேசிய பொது வானொலிக்குக் கூறுகையில், எல்லா அறிகுறிகளாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் மிகவும் இளம் வயதினர் என்பதாலும் இன்னும் பல வரையறைகளுக்கு பொருத்தமாக இல்லை என்பதால் அவரால் பரிசோதனை பெற முடியவில்லை என்றும், மருத்துவர்கள் "நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். சில நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததற்குப் பின்னர், அவருக்கு நோய் இருக்கிறதா அல்லது இன்னமும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறியாமலேயே Tetreault வேலைக்குத் திரும்பி ஆக வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் நாளொன்றுக்கு ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

ஆவணமற்றவர்களில் ஒரு கணிசமான பங்கினரான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாங்கள் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவோமோ அல்லது நீக்கப்படுவதற்கு தங்களின் உறவினர்களைக் காட்டிக்கொடுத்து விடுவோமோ என்று அஞ்சி பரிசோதனை எடுக்கவோ அல்லது சிகிச்சை எடுக்கவோ முயற்சியைத் தவிர்த்து வருகின்றனர். புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், கூட்ட நெரிசலான சுத்தமில்லாத சிறை முகாம்களில் அந்நோய் நுழைந்து வருவதால், தங்களை விடுவிக்கக் கோரி, போராடி வருகிறார்கள். இதே நிலைமைகளே அந்நாட்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கைதிகளுக்கும் நீடிக்கிறது.

இதற்கிடையே, மிகப்பெரும் செல்வந்தர்களோ தங்களின் மாளிகைகள், கோடைகால இல்லங்கள் அல்லது முழுமையாக பொருட்கள் கையிருப்பு வைக்கப்பட்ட உயிர்பிழைப்பு பதுங்குமிடங்களில் சௌகரியமாக பதுங்கி வருகிறார்கள்.

அவர்கள் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டால், செல்வந்தர்களால் சரியான நேரத்தில் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்க்க முடியும் என்பதோடு, கூட்ட நெரிசலான மருத்துவமனைகளின் கும்பல்களில் இருந்து பாதுகாப்பாக விலகி இருந்து, சிகிச்சைப் பெற முடியும். நிறைய செல்வந்தர்கள் நியூ யோர்க்கில் மற்றும் இதர நகரங்களில் இருந்து தப்பி செல்வதால் தனியார் விமானச்சேவையில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிகின்றன. பொழுதுப்போக்குத்துறை பில்லியனர் செயலதிகாரி David Geffen கரீபியனில் அவரின் பல மில்லியன் டாலர் சொகுசு படகில் தங்கியிருப்பதாக ஃபோர்ப்ஸ்அறிவிக்கிறது.

உலகளவில் தற்போதைய குவிமையமாக விளங்கும் நியூ யோர்க் நகரில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள், குவின்ஸ், புரூக்ளின் மற்றும் புரோன்க்ஸின் வறிய ஏழைகள் வசிக்கும் அண்டைபகுதிகளாகும். அமெரிக்காவில் மிகவும் வறிய பெரும் நகரமான டெட்ராய்டில் ஆயிரக் கணக்கானவர்கள் இன்னமும் தங்களின் வீடுகளுக்கும், மருத்துவமனைக்கும் தண்ணீர் பெற முடியாமல் இருக்கும் நிலையில், இவர்கள் ஏற்கனவே நோயாளிகள் நிறைந்த கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர், தொற்று மற்றும் உயிரிழப்புகளில் மிச்சிகன் சற்றே நியூ யோர்க் மற்றும் நியூ ஜெர்சிக்குப் பின்னால் நிற்கிறது.

பொருளாதார பாதிப்புகளும் நிச்சயமாக தொழிலாளர்கள் மீது தான் மிகவும் அதிகமாக விழும், அவர்களில் பலரும் மாதாந்தர சம்பளத்தை நம்பி வாழ்பவர்கள் என்பதோடு மருத்துவ சிகிச்சைக்கான அவசரநிலையைக் கையாள அவர்களிடம் எந்த சேமிப்பும் இருக்காது.

வங்கிகளுக்கும் பெரு வணிகங்களுக்கும் முட்டுக்கொடுக்க காங்கிரஸ் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டுக்கு பிணையெடுப்பு பணமாக வழங்கி உள்ளது, அதேவேளையில் தொழிலாள வர்க்கத்திற்கு அற்பத்தொகையே வழங்கி உள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் வேலையிழந்து வருகையில், தலா ஒரு நபருக்கு சில ஆயிரக் கணக்கான டாலர்கள் என்பது மிகவும் குறைவானதும், மிகவும் தாமதமானதும் ஆகும்.

ஏற்கனவே தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பதா அல்லது வாடகை செலுத்துவதா என்று முடிவெடுக்க விடப்பட்டுள்ளனர். நியூ யோர்க் நகரில் வாடகைக்கு இருப்போரில் 40 சதவீதத்தினர் இம்மாதம் அவர்களின் வாடகையைக் செலுத்த மாட்டார்களென மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு நகரிலும், ஆயிரக் கணக்கானவர்கள் வாராந்தர இலவச உணவுப்பொருள் வாகனத்திற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கின்றனர், பலர் இந்த சேவையை எதிர்நோக்கி வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிலைமைகள் உலகெங்கிலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. செல்வவளத்தின் அடிப்படையில் இப்போது நிலவும் வேறுபாடுகளை ஆவணப்படுத்தும் ஒரு கட்டுரையில் ஸ்பானிய நாளிதழ் El País, மாட்ரிட்டில் ஒரு மளிகை கடை தொழிலாளர் குறிப்பிட்டதை மேற்கோளிட்டது: “நாங்கள் டைட்டானிக்கில் மூன்றாம் வகுப்பில் உள்ளோம். எச்சசொச்சங்களுக்காக நாங்கள் எங்கள் வாழ்வை அபாயத்திற்குட்படுத்தி வருகிறோம். நாங்கள் விற்கப்படுகிறோம்.”

மிகவும் திரண்ட வறுமை மட்டங்களைக் கொண்ட நாடுகளும் பிராந்தியங்களும் மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அகதி முகாம்கள் வழியாக அந்த வைரஸ் பரவும் போது, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவில் சேரிகளிலும் கூட்ட நெரிசலான தொழிலாள வர்க்க அண்டைப்பகுதிகளிலும் அந்த வைரஸ் செல்லும் போது விளைவுகள் பேரழிவாக இருக்கும்.

இந்த தொற்றுநோய் வளர வளர வர்க்க போராட்டமும் வெடித்து கொண்டிருக்கிறது, அமசன், மளிகை கடைகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் அதிகரித்து வரும் இயக்கம் அவர்கள் இந்நோயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென கோரி வருகின்றன. தொழிலாளர்களுக்கு கொரொனா வைரஸ் இருப்பது பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், கடந்த மாதம் வெடித்த வாகனத்துறை தொழிலாளர்களின் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள், ஆலைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு UAW மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளுக்கு மத்தியிலும், வட அமெரிக்காவில் பெரும்பாலான வாகன உற்பத்தி அலைகளையும் வெற்றிகரமாக மூட நிர்பந்தித்தது.

இந்த அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க இயக்கம் ஒரு தெளிவான முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்துடன் நனவுப்பூர்வமான தலையீட்டில் வழிநடத்தப்பட வேண்டும்.

தொடர்ந்து செயல்பட்டு வரும் பல சேவை-தொழில்துறை நிறுவனங்கள் உள்ளடங்கலாக அத்தியாவசியமல்லாத அனைத்து உற்பத்தியையும் உடனடியாக நிறுத்துமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் முழு சம்பளம் பெற வேண்டும். வாடகைகள், சேவை கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களில் இடைநிறுத்தம் வழங்கப்பட வேண்டும்.

வருமானம் அல்லது காப்பீட்டைப் பொறுத்து இல்லாமல், முற்றிலும் சமத்துவ அடிப்படையில் அனைவரும் அணுகக்கூடிய வகையில் மருத்துவச் சிகிச்சை இலவசமாக இருக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் பெறுவதைப் போலவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அதே உரிமைகளையும் அதே சலுகைகளையும் பெற வேண்டும்.

செல்வந்தர்கள் குவித்து வைத்துள்ள செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த தொற்றுநோயின் போது தொடர்ந்து வேலை செய்து வரும் இன்றியமையா தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றவும், சுவாசக் கருவிகள் மற்றும் தேவையான இதர சாதனங்களை உற்பத்தி செய்யவும், வீடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பவர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றுவதை நோக்கமாக கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மொத்த சமூக பலத்தையும் அமைப்புரீதில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அவற்றை நடைமுறைப்படுத்த முடியும். முதலாளித்துவ சமத்துவமின்மையை சோசலிச சமத்துவத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

Loading