இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இணையவழி கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் ஆரம்பித்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) 2020 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் நேரடி இணையவழி கூட்டத்துடன் தொடங்கியது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்தம் 43 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது. சோ.ச.க. அதன் தேர்தல் அறிக்கையை, “போர், சமூகப் பேரழிவு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம்” என்ற தொனியில் மார்ச் 21 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்டிருந்தது.

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் சிங்களத்தில் ஆற்றிய உரை தமிழாக்கம் செய்யப்பட்டது. மூன்று நாள் கொவிட்-19 தேசிய ஊரடங்கு உத்தரவின் மத்தியில் மார்ச் 22 அன்று நடைபெற்ற நிகழ்வில் இலங்கையில் இருந்தும் சர்வதேச அளவிலும் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் 2,000 க்கும் மேற்பட்டோர் வீடியோவைப் பார்த்துள்ளனர்.

ஆரம்பத்தில் கூட்டத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதை தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். கூட்டத்தின் போது பலர் வாழ்த்துக்களை அல்லது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். மேலும் விரிவான இணையவழி கல்வி அமர்வுகளுக்கு கூட சிலர் கோரிக்கைகள முன்வைத்திருந்தனர். கலந்துகொண்டவர்களில் சிலர் சோ.ச.க.வின் கொள்கைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர். (பார்க்க: “இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோ.ச.க.வின் தேர்தல் வேலைத் திட்டத்தை ஆதரிக்கின்றனர்”).

விஜே டயஸ்

இலங்கையின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த டயஸ் கூட்டத்தில் கூறியதாவது: “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது சட்டபூர்வமானது என்றாலும், ஊரடங்கு உத்தரவு இப்போது சட்டவிரோதமாக அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது, பல்வேறு படைத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரத்துவத்தினர் மக்கள் மீது தங்கள் அதிகாரத்தை திணித்து வருகின்றனர்" எனக் கூறினார்.

"தற்போது இருப்பது பொலிஸ் ஊரடங்கு உத்தரவு. ஏனென்றால், ஜனாதிபதி இராஜபக்ஷ அவசரகால நிலையை அறிவிப்பதில் இருந்து அரசியலமைப்பு ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார். இது சட்டபூர்வமாக செல்லுபடியாகும் வகையில் ஒப்புதல் பெறுவதற்கு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை 10 நாட்களுக்குள் மீண்டும் கூட்ட வேண்டும். இப்போது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இந்த நடைமுறையைத் தவிர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மாறாக, இராஜபக்ஷ ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி தீவை எதேச்சதிகாரமாக பூட்டவும் இராணுவத்துக்கு பொறுப்புகளை வழங்கவும் பயன்படுத்திக்கொண்டர்.”

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் சாக்குப் போக்கில் இராணுவமும் பொலிசும் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டயஸ் கூறினார். 30 ஆண்டுகால தமிழர் விரோதப் போரை நினைவூட்டும் வகையில் பொலிஸ்-இராணுவ வீதித் தடைகள் நிறுவப்பட்டுள்ளன.

எந்தவொரு அரசியலமைப்பு அடிப்படையும் இன்றி, தேர்தல் ஆணையாளர் திடீரென "வைரஸ் ஒழிப்பிற்காக முழு சக்தியையும் குவிப்பதன் பேரில் நாட்டின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கோரியுள்ள போதிலும்", சோ.ச.க. தனது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் இணையவழி கூட்டத்துடன் முன்நகர்கின்றது.

இலங்கையின் பாரிய நெரிசலான சிறைச்சாலைகளில் ஒன்றில் ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகளை அண்மையில் பொலிசார் சுட்டுக் கொன்றதைப் பற்றி டயஸ் கவனத்தை திருப்பினார். "சில நாட்களுக்கு முன்பு ஒரு கைதியை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு ஒரு நபருக்கு அரசாங்கம் மட்டுப்படுத்தியது," என்று அவர் விளக்கினார்.

“இந்த ஆத்திரமூட்டும் உத்தரவு கைதிகள் மத்தியில் பதட்டத்தை அதிகரித்து, அனுராதபுரம் சிறையில் கைதிகளின் போராட்டத்திற்கு வழிவகுத்தது. பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.”

தற்போதைய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே 2013 இல் இலங்கையில் போராட்டக்காரர்கள் கடைசியாக பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த டிசம்பரில் சீனாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று அறிவிக்கப்பட்டதாக சோ.ச.க. பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். "உலகளாவிய பொருளாதார, வணிக மற்றும் சமூக நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவக்கூடும் என்பதை உணர்ந்துகொள்ள கடினமாக இருந்திருக்க முடியாது. எவ்வாறாயினும், எந்தவொரு நாட்டிலும் எந்த ஆளும் வர்க்கமும் பல வாரங்களாக இந்த ஆபத்து குறித்து எவ்விதமான கவனமும் செலுத்தவில்லை.

"ஜனவரி 7 அன்று, நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் ஒரு சீனப் பெண் சுற்றுலாப் பயணி, கொவிட்-19 நோயாளியாக கண்டறியப்பட்டபோதே இலங்கை ஆளும் வர்க்கத்தின் கண்கள் திறக்கப்பட்டன. இலங்கையில், தொற்றுநோயிலிருந்து அவர் முழுமையாக குணமடைந்து ஜனவரி 21 அன்று வீடு திரும்பினார்.

“எவ்வாறாயினும், அடுத்த 50 நாட்களில் இலங்கை அரசாங்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்ச் 12 அன்று ஒரு சுற்றுலா வழிகாட்டி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்படும் வரை, வைரஸ் அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் ஒரு பொது எச்சரிக்கையை கூட வெளியிடவில்லை,” என்று டயஸ் கூறினார்.

"இந்த தொற்று வைரஸால் ஏற்படும் ஆபத்துகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் அலட்சியமான போக்கு, பிரத்தியேகமானது அல்ல, சர்வதேச அளவில் முதலாளித்துவ அரசாங்கங்களின் போக்கிற்கு ஒத்ததாகும். எல்லா இடங்களிலும், முதலாளித்துவத்தின் ஒரே கவலை இலாபத்தை உற்பத்தி செய்வதைப் பற்றியதே அன்றி, உற்பத்தியாளர்களின் நல்வாழ்வு அல்ல.”

சமூகப் பரவல் தொடங்கவில்லை எனக் கூறி, கோவிட்-19 சம்பந்தமான உடனடி வெகுஜன பரிசோதனையை நிராகரித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலாம் பர்கவாவின் கருத்துக்களை, சோ.ச.க பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

"வெகுஜன சோதனையின் அவசியம் குறித்து ஆட்சியாளர்களை நம்ப வைக்க எத்தனை உயிர்களை தியாகம் செய்ய வேண்டும்?" என்று டயஸ் கேட்டார். COVID-19 ஆல் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவரின் எச்சரிக்கைகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

"முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்கு மிக மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மக்கள் மீதான அணுகுமுறையில் இருந்து வெளிப்படுகிறது" என்று டயஸ் கூறினார். அந்த நாட்டின் மீதான அமெரிக்கத் தடைகளால், ஈரானில் கொவிட்-19 தொற்றினால் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கின்றனர், என்று அவர் விளக்கினார்.

"இந்த துயரமான நிலைமை மிகவும் பொருத்தமான கேள்வியை எழுப்புகிறது: ஏகாதிபத்தியத்தின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு அரபு உலகின் ஆளும் உயரடுக்கின் பதில் என்ன?

"ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து ஈரானிய மக்களை மீட்க முதலாளித்துவ ஆட்சிகள் எதுவும் முன்வரத் தயாராக இல்லை. இது ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சி தத்துவத்தை தெளிவாக நிரூபிக்கின்றது -எந்தவொரு காலனித்துவ அல்லது அரைக் காலனித்துவ நாட்டினதும் எந்தவொரு தேசிய முதலாளித்துவமும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தங்கள் சொந்த நாட்டின் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இலாயக்கில்லாதவை என அது கூறுகின்றது. பல மில்லியன் கிராமப்புற ஏழைகளின் ஆதரவைக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் மாத்திரமே, அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக முடியும்.”

போர் மற்றும் பிற பேரழிவுகளின் நிலைமைகளின் கீழ், “உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வு முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்ப்பதற்கான மாற்று அரசியல் திட்டங்களை நாடச் செய்கின்றது, என டயஸ் கூறினார்.

"இந்த நிலைமையில் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் அனைத்து சமூகங்களின் இளைஞர்கள் மத்தியில் அரசியல் நனவினை அபிவிருத்தி செய்து முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிவதற்கான போராட்டத்துக்கு, சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு புரட்சிகர கட்சியின் தலையீடு அத்தியாவசியமானதாகும்."

இராஜபக்ஷ நிர்வாகம் பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுத்துள்ளது என விளக்கிய டயஸ், 200,000 ஆசிரியர்களின் மூன்று நாள் தேசிய வேலைநிறுத்தம், வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படாமையினால் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். இராஜபக்ஷ ஆட்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட ஆழமான நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா துறைகளில் பணிபுரிபவர்களாக இருந்த போதிலும், சாதாரண மக்களின் மோசமான நிலைமைகளை சரிசெய்வதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று டயஸ் கூறினார்.

அதன் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோ.ச.க., கொரோனா வைரஸிற்கான வெகுஜன சோதனைகளை உடனடியாக தொடங்க வேண்டும், அனைத்து வெளிநாட்டு கடன்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், புதிய பூரணத்துவமான உபகரணங்களை கொண்ட மருத்துவமனைகளை நிறுவுவதற்கு ஒரு பாரிய நிதிதிட்டம் தொடங்கப்பட வேண்டும். இலவச சுகாதார சேவைகளுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளுக்கும் கௌரவமான வாழ்க்கை நிலைமைகளுக்கு தேவையான வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும எனக் கோருகிறது.

இந்த கோரிக்கைகள் எதுவும் இலாப நோக்கு அமைப்பு முறையின் கீழ் நிறைவேற்றப்பட முடியாது என்று டயஸ் வலியுறுத்தினார். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த முதலாளித்துவத்தை தூக்கிவீசி அதற்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

சோ.ச.க.வின் முன்னோக்கின் அடித்தளம், தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா–ஈழம் சோசலிச குடியரசே ஆகும் என அவர் முடித்தார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் எமது கொள்கைகளை கற்று சோ.ச.க.வை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு டயஸ் கேட்டுக்கொண்டார்.

Loading