இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோ.ச.க. தேர்தல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் இணையவழி தேர்தல் பிரசாரத்தை பார்வையிட்டவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு உற்சாகமான கருத்துக்களை அனுப்பியுள்ளனர்.

ருச்சிர மாதவ

கொழும்பைச் சேர்ந்த ஒப்பந்த ஆசிரியரான ருச்சிர மாதவ கூறியதாவது: “தனிச் சொத்துடமையின் அடிப்படையில் எதையும் தீர்க்க முடியாது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதையே நிரூபித்துள்ளது. இந்த அழிவுகரமான சூழ்நிலையில், முதலாளித்துவ வர்க்கம் இலாப அமைப்பை பாதுகாத்துக்கொள்ள தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது," எனக் கூறினார்.

"முதலாளித்துவ உலகம் தேவையான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தாலும், அதற்கான போதுமான செல்வத்தை விட அதிகமாக வைத்திருந்தாலும், மக்களின் உயிரைக் காப்பாற்ற அதனால் ஏன் முடியவில்லை? எல்லாமே முதலாளித்துவ வர்க்கத்தின் இலாப நலன்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதால் தான்... இதை விளக்கும் பல கட்டுரைகளை WSWS வழங்கியுள்ளது. நான் சோ.ச.க. முன்னோக்குடன் உடன்படுவதால் இன்று அதன் தேர்தல் கூட்டத்தில் இணைந்துகொண்டேன்."

"பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையுடன் இணைந்திருக்கும் ஊடகங்கள், மக்கள் மீது விரல் நீட்டுகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி எந்த வார்த்தையும் பேசுவதில்லை. வெகுஜனங்கள் பூட்டப்பட்டு அடைத்து வைக்கப்படுவதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் மூலம் ஒரு பயனுள்ள போராட்டத்தை ஏற்படுத்த ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.”

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி தினேத் ஜயகொடி, “இந்த தொற்றுநோய் தேசிய அரசு அமைப்பு முறை இனி சாத்தியமானது அல்ல என்பதை நிரூபித்துள்ளது எனக் கூறினார். “தனி தேசிய கொள்கைகள் உலகமயமாக்கலுடன் மோதுகின்றன. உலகின் அனைத்து நாடுகளும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் செலவழித்த பணம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க போதுமானது. WSWS ஐப் படிக்கும்போது இது எங்களுக்கு மிகவும் தெளிவாகிறது.

இந்த தொற்றுநோயை சமாளிக்க நாம் ஒரு விஞ்ஞான வழியில் செயல்பட வேண்டும், அது உலகளவிலானதாக இருக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொரு நாடும் இப்போது தோல்வியுற்ற தேசிய முயற்சியை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றன. அதற்கு பதிலாக, நான்கம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்குகளின்படி, உலக ஐக்கிய சோசலிச ஒன்றியமே அவசியமானது. இதுவே தொழிலாள வர்க்கத்தின் மேம்பாட்டிற்காக செயற்படும் அரசாகும்.”

சமீர சமரகோன்

அளவு கணக்கெடுப்பாளரான சமீர சமரகோன் கருத்துத் தெரிவிக்கையில், “முதலாளித்துவ நாடுகள் பாரிய அபிவிருத்திகள் செய்வதில் பெருமை கொள்ளலாம், ஆனால் கொரோனா வைரஸ் பேரழிவு தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த அபிவிருத்திகளை அனுபவிப்பதில்லை என்பதைக் காட்டுகிறது, ஏன்றார்.

“அவ்வப்போது ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீக்குகிறது, எனவே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும். ஆனால் இரண்டு நாட்களுக்கு கூட உணவு வாங்க போதுமான பணம் இல்லாத குடும்பங்கள் எத்தனை? செய்ய வேண்டியது எல்லாம் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தீவு முழுவதும் பரி சோதனை நடத்துவதே. எவ்வாறாயினும், முதலாளித்துவ அமைப்பின் கீழ் அத்தகைய ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது.

"உணவு, மருந்து மற்றும் பிற அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தொழிலாளர்களால் தயாரிக்கப்படுகின்றன, அவர்களுக்கே அது சொந்தமானது ஆனால் முதலாளிகள், அவர்கள் சிக்கலில் இருக்கும்போது, எதையும் இலவசமாக கொடுக்கத் தயாராக இல்லை. இது முதலாளித்துவத்தின் பொருத்தமின்மை ஆகும்.”

கண்டியைச் சேர்ந்த குடும்பப் பெண் பிரசாந்தி கூறியதாவது: “நான் சோ.ச.க. கூட்டத்தைப் பார்த்தேன், ஏனென்றால் நிகழ்ந்த அழிவை துல்லியமாக விவரிக்கும் வேறு எந்த இயக்கமும் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உயிர்களை தியாகம் செய்வதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இந்த வைரஸ் நெருக்கடியிலிருந்து விடுபட முயற்சிக்கின்றனர்.

“சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளில் மருத்துவர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் செய்த தியாகங்களால் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. ஆனால் முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள செல்வத்தை சமூகத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கான சக்தி அவர்களிடம் இல்லை. அதற்காக தொழிலாள வர்க்கம் போராட வேண்டும்.”

பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ மார்ச் 24 அன்று நடத்திய கட்சித் தலைவர்களின் உச்சி மாநாடு குறித்து அவர் குறிப்பிடுகையில், “இந்த சூழ்நிலையில், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியும் வெகுஜனங்களின் பெருகிவரும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சுகிறார்கள். இதன் விளைவாக, முதலாளித்துவ அமைப்பைக் காப்பாற்ற கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன,” என்றார்.

இலங்கையிலிருந்து இத்தாலிக்கு குடிபெயர்ந்த சொஹான் திசேரா என்ற இளம் தொழிலாளி தற்போது லொம்பார்டியில் உள்ள தனது குடியிருப்பில் உள்ள ஏனைய ஐந்து தொழிலாளர்களுடன் அடைத்து வைக்கப்பட்டு கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்கிறார். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒட்டுமொத்த தேசிய-அரசு அமைப்பினதும் பகைமையை தான் நேரில் அனுபவித்ததாக அவர் கருத்து தெரிவித்தார்.

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள சுவிட்சர்லாந்து, அதன் எல்லையை மூடிய முதல் நாடு. பிராந்தியத்தில் எந்த நாட்டிலிருந்தும் இத்தாலிக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியமோ, இந்த பகுதியில் உள்ள வேறு எந்த அமைப்போ இத்தாலி மீது எந்த அக்கறையும் காட்டவில்லை. நிலைமை குறித்து தொழிலாளர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர், பெரிய போராட்டங்களுக்கான திட்டங்களும் உள்ளன. எதிர்காலத்தில் நிறைய புரட்சிகர எழுச்சிகள் இருக்கும்.”

எஸ். சந்திரிபாலன்

வட இலங்கையின் வவுனியாவைச் சேர்ந்த எஸ். சந்திரிபாலன் , “விஜே டயஸின் உரை கொரோனா வைரஸின் பரவலை மையமாகக் கொண்டது. வேறு எந்த அரசியல் கட்சியும் அத்தகைய முன்னோக்கை முன்வைக்கவில்லை, முதலாளித்துவம் சமூகத்தின் மீது ஒரு போரை நடத்துகிறது என்று டயஸ் விளக்கினார்" என எழுதியிருந்தார்.

"உலக முதலாளித்துவம் போர் செய்வததற்கும் இராணுவத்தை வலுப்படுத்துவதற்கும் பெரும் தொகையை செலவிடுகிறது, ஆனால் சுகாதாரப் பாதுகாப்புக்கு தேவையான நிதியை ஒதுக்க அது தயாராக இல்லை. இதன் விளைவாக கொரோனா வைரஸ் போன்ற பேரழிவுகளை கட்டுப்படுத்த அது இலாயக்கற்றுள்ளது. முதலாளித்துவ அரசுகள் இப்போது நிலைமையை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அனைத்து முதலாளிகளும் அக்கறை காட்டுவது இலாபத்தின் மீதாகும்.”

Loading