இலங்கை: புதிய தமிழ் கூட்டணி அமெரிக்க சார்பு நிகழ்ச்சி நிரலை பிரகடனப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (த.ம.தே.கூ.), போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோபத்தை திசைதிருப்பும் மற்றுமொரு பொறி மட்டுமன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் இந்தியாவினதும் ஆதரவாளனாக இருந்து அவற்றின் மூலோபாய நலன்களுக்கு சேவை செய்வதற்கான மற்றொரு வழிமுறையாகும்.

விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் (த.ம.கூ.) தலைவராவார். பெப்ரவரி 9 அன்று ஸ்தாபிக்கப்பட்ட இந்த கூட்டணியில் உள்ள ஏனைய குழுக்கள், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.), தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகியவை ஆகும்.

இந்த கூட்டணி தன்னை மதிப்பிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு "மாற்று" என்று கூறிக்கொண்டாலும், இந்த குழுக்கள் அனைத்தும் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டவை ஆகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2013 இல் விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக உயர்த்தியது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். உடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பின் (டெலோ) முன்னாள் தலைவர்களால், தமிழ் தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. தமிழர் சுயாட்சி கழகமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக தனது பதவியை வென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் உருவாக்கப்பட்டது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கொள்கை அறிக்கை, "சுயநிர்ணய உரிமையின்" அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வைக் கோருகிறது. இது பூகோள அரசியலில் மாற்றங்களுக்கு அமைய, வடக்கு-கிழக்கை ஒருங்கிணைத்து சமஷ்டி அடிப்படையில் அதிகபட்ச சுயாட்சி மற்றும் இறையாண்மையை" கோருகிறது.

பூகோள அரசியல் மாற்றங்களுக்கு அமைய என்பதன்படி, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளை ஆதரிப்பதும், அதற்கு பிரதியுபகாரமாக தமிழ் முதலாளித்துவத்தின் நலனைப் பாதுகாத்துக்கொள்ள வாஷிங்டனின் ஆதரவைப் பெறுவதையும் தவிர வேறொன்றுமில்லை.

வீரகேசரியில் ஒரு கட்டுரையில், தமிழ் மக்கள் தேசிய முன்னணியை உருவாக்குவதற்கான வழிகாட்டிகளில் ஒருவரான ஜோதிலிங்கம், "இலங்கை என்றுமில்லாதவாறு சர்வதேச நிகழ்ச்சி நிரலுடன் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது... தமிழ் அரசியலும் அதற்குப் பின்னால் செல்ல நிர்பந்திக்கப்படுவதோடு, சர்வதேச அரசியலைக் கையாள வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிலிங்கம் மேற்கோள் காட்டிய "சர்வதேச நிகழ்ச்சி நிரல்" என்பது அமெரிக்காவும் அதன் பிராந்திய நட்பு நாடான இந்தியாவும், சீனாவுக்கு எதிரான தமது பூகோள அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கும் கொள்கையே ஆகும்.

அதே பிற்போக்கு வழியைப் பின்பற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றவும், மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிக்கவும் அமெரிக்காவின் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்தது. பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராஜபக்ஷவின் இனவாதப் போரையோ அல்லது அவரது ஜனநாயக விரோத ஆட்சி முறையையோ வாஷிங்டன் எதிர்க்கவில்லை. மாறாக பெய்ஜிங்குடனான அவரது நெருங்கிய உறவுகளுக்கு விரோதமாக இருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இலங்கையை தனது சுற்றுப்பாதையில் கொண்டு வர முயல்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2015 இல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு மனிதராக சிறிசேனவை ஊக்குவித்து தமிழ் மக்கள் மத்தியில் மோசடி பிரச்சாரம் செய்தது. அவர் பதவிக்கு வந்த பின்னர், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்த் கூட்டமைப்பு ஆதரவளித்தது: இலங்கை இராணுவத்தை அமெரிக்க பசிபிக் கட்டளையகத்துடன் ஒருங்கிணைத்தல், போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் நசுக்குதல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டங்களை அமுல்படுத்துவதும் அவற்றில் அடங்கும்.

இப்போது தமிழ் மக்கள் கூட்டணியில் மீண்டும் அணிதிரண்டுள்ள இந்த அனைத்து கட்சிகளும் தனிநபர்களும் இந்தக் கொள்கைகளை ஆதரித்தவர்களே ஆவர். அது அரசியல் தீர்வு என்று கூறுவதன் குறிக்கோள், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை உள்ளூர் மற்றும் சர்வதேச மூலதனம் கூட்டாக சுரண்டும் ஒரு அமைப்பிற்குள் தமிழ் உயரடுக்கிற்கு அதிக அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரு வேண்டுகோலாகும்.

பல ஆண்டுகளாக இதை நேரடியாக ஆதரித்த பின்னர், அங்குராட்பன கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சலுகைகளை வழங்கியதாக சிடுமூஞ்சித்தனமாக குற்றம் சாட்டினார். "இலங்கை ஒரு பௌத்த நாடு சிறுபான்மை மக்கள் சிங்களவர்களால் விரும்பப்படாத தீர்வைக் கோரக்கூடாது" என்று சிங்கள தலைவர்கள் தைரியமாக அறிவிக்கும் ஒரு சூழ்நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது” எனக் அவர் குறிப்பிட்டார்.

நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவும் அவரது சகாக்களும், தங்களது சிங்கள-பௌத்த மேலாதிக்க பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ராஜபக்ஷவை சுட்டிக் காட்டிக்கொண்டு, விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர்களும், தமிழ் மக்கள் பேரவையை ஸ்தாபித்து, எழுக தமிழ் உட்பட தங்களது சொந்த பிற்போக்கு இனவாத பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

முன்னாள் முதல்வர், கடந்த வாரம், அமெரிக்காவால் இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை “வரவேற்றார்”. விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், "போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இலங்கை பாதுகாப்புப் படையினரின் இனப்படுகொலை போன்ற வழக்குகளை விசாரிக்க சர்வதேச நாடுகளின் இன்றியமையாத கடமையை இந்த நடவடிக்கை காட்டுகிறது," என்றார்.

ஜெனரல் மீதான பயணத் தடைக்கும், இலங்கை இராணுவத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்கா இந்த பூமியில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களைச் செய்துள்ள நாடு மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் ஓரங்கட்டுவதற்கு அது முந்தைய கொழும்பு அரசாங்கத்திற்கு உதவியது. சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அது மீண்டும் "மனித உரிமைகளை" பயன்படுத்திக்கொள்கின்றது.

போரின் இறுதிக் கட்டதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டமை, சரணடைந்த பின்னர் கொலை செய்யப்பட்டமை அல்லது காணாமல்போனமை உட்பட, 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது கொழும்பு அரசியல் தலைவர்களாலும் இராணுவத்தாலும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண, இந்தப் பயணத் தடை எதையும் செய்துவிடப் போவதில்லை.

விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவுக்கு உரையாற்றும் போது, “தென்னிந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் தங்கியிருக்கின்றது என்பதை இந்தியா புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்தியாவுடன் சுமூகமான உறவைப் பேணுவது அவசியம்…” எனக் கூறினார்.

இலங்கையில் ஒரு முஸ்லீம் பயங்கரவாதக் குழு கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை பகிரங்கமாக ஆதரித்தார். “இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர், காஷ்மீர் இன்னும் சிக்கலான சூழ்நிலையில் உள்ளது. இந்தியா இப்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இஸ்லாமிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது” என அவர் கூறினார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மற்றும் டெலோவும் புதுடில்லிக்கு விசுவாசமானவை ஆகும். இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 1987 இல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் அட்டூழியங்களில் இந்த இரு கட்சிகளும் பங்கேற்றன. இந்தியத் துருப்புக்கள் அமைதியை வளர்ப்பதற்கோ அல்லது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கோ அன்றி, புலிகளை நிராயுதபாணியாக்குவதற்கும் கொழும்பு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்குமே இலங்கைக்கு வந்திருந்தன.

முந்தைய அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு இப்போது ஜனாதிபதி ராஜபக்ஷவால் தொடரப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் எதிர்ப்பின் மத்தியிலேயே இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அவர்களது சகாக்களைப் போலவே, தமிழ் உயரடுக்கினரும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஐக்கியப்பட்ட இயக்கத்தையும் கண்டு பீதியடைவதோடு, அதற்கு விரோதமாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் துரோகங்களுக்காக மதிப்பிழந்துள்ள நிலையில், உழைக்கும் மக்களின் ஒருங்கிணைந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க இந்த அமைப்பில் இருந்து பிரிந்தவை ஒன்றன்பின் ஒன்றாக கூட்டணிகளை உருவாக்குகின்றன. இந்த கட்சிகள் எதுவும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு எதிராகவோ அல்லது சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான ராஜபக்சேவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளின் காட்டிக்கொடுப்பில் இருந்து தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தேவையான படிப்பினைகளைப் பெற வேண்டும். விடுதலைப் புலிகளின் தோல்வி ஒரு இராணுவ தோல்வி மட்டுமல்ல, "சர்வதேச சமூகத்திற்கு" முறையிடும் திவாலான முன்னோக்கின் விளைவாகும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தனி தமிழ் அரசை உருவாக்குவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அழைப்பு விடுக்கும் முன்நோக்கின் திவாலாகும். அதே சமயம், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் விடுதலைப் புலிகள், இலங்கையிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு அறைகூவல் விடுப்பதையும் இயல்பாக எதிர்த்தனர்.

முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் இன எல்லைகளை கடந்து உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையில், ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. தமிழ் கட்சிகளின் பிற்போக்குத்தன அரசியலை நிராகரித்து, இந்த வேலைத்திட்டத்திற்காக போராட அணித்திரளுமாறு உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்புவிடுக்கிறோம்.

Loading