உலக கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனைக் கடந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவில் “முன்னர் தெரியாத காரணத்துடன் நிமோனியா” பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) முதலில் குறிப்பிட்ட நாளிலிருந்து, கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவ ஆரம்பித்து முதல் நூறு நாட்கள் முடிவடைந்ததை நேற்றைய தினம் குறித்தது. அப்போதிருந்து, உலகம் முழுவதிலுமாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் 1.6 மில்லியன் பேர் இருக்கிறார்கள் என்பதுடன், 95,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த வாரம் தொடங்கியதிலிருந்து மட்டும் 300,000 க்கும் மேலான புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறைந்தது 25,000 பேர் இறந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டுமே 462,000 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். இது இரண்டாவது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயினில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 152,446 ஐ போல மூன்று மடங்கிற்கும் மேலானது. அமெரிக்காவில் ஐந்தே நாட்களில் இந்த தொற்று நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 16,114 ஆக உயர்ந்துள்ளது என்ற நிலையில், இது, 18,279 அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை கொண்ட நாடான இத்தாலியை முந்திச்செல்வதற்கு தயாராக உள்ளது. மேலும், இந்த நோய்தொற்று, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்குள் நுழைவதற்கு ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவிற்குள்ளேயே, நோய்தொற்று பரவுவதிலும் மற்றும் இறப்புக்களிலும் எந்தவித வீழ்ச்சியும் ஏற்படவில்லை. நெருக்கடியின் மையப்பகுதியாக இருக்கும் நியூ யோர்க் பெருநகரப் பகுதியில், அண்மித்து 160,000 கோவிட்-19 நோயாளிகள் இருக்கின்றனர் என்பதுடன், 7,067 பேர் அதற்கு பலியாகியுள்ளனர், அதிலும் கடந்த இரண்டே நாட்களில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூயோர்க் நகரின் ஈமச்சடங்கு இல்லங்களும் மற்றும் கல்லறைத் தோட்டங்களும் சமாளிக்க முடியாத அளவிற்கு இறப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அந்நகரம் ஹார்ட் தீவில் பெரும் புதைகுழிகளை தோண்டத் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 9, 2020 வியாழக்கிழமை, கென்யாவின் நைரோபியில் மாலை முதல் அதிகாலை வரையிலான ஊரடங்கின் போது, மாவட்ட அதிகாரிகளுடன் பணிபுரியும் தனியார் நிதியுதவியில் இயங்கும் அரசு சாரா நிறுவனத்தின் உறுப்பினர்கள், புதிய கொரொனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவ ஒரு தெருவில் கிருமிநீக்கம் செய்கிறார்கள். (AP Photo/Brian Inganga)

நியூ ஜேர்சி மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை முறையே 1,700 மற்றும் 1076 ஆக உள்ளது, அதேவேளை இல்லினாய்ஸ், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மிச்சிகன், புளோரிடா, லூசியானா மற்றும் மேரிலாந்து ஆகிய மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை விரைந்து அதிகரித்து வருகிறது. மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை வைரஸ் தொற்று இல்லாமலிருந்த நாடெங்கிலுமான நூற்றுக்கணக்கான கிராமப்புற மாவட்டங்களும் கூட தற்போது நோய்தொற்று பரவல் மற்றும் இறப்பு குறித்து அறிவிப்பதாக New York Times செய்தியிதழ் தெரிவித்துள்ளது.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் தொற்றுநோய் அதன் இரத்தக்களரியான வெடிப்பைத் தொடர்கின்ற நிலையிலும், ட்ரம்ப் நிர்வாகம், பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும், “நம்பிக்கையளிக்கும் காரணங்கள்” இருப்பதாகவும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் “ஒரு திருப்பமெடுத்துள்ளதால்,” “நம்பிக்கை ஒளிவீசுவதை” காணமுடிவதாக அறிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துப்படி, “நாம் மலையின் உச்சியில் இருக்கிறோம், நிச்சயமாக, இப்போது நாம் கீழ்நோக்கி இறங்கி கொண்டிருக்கிறோம். சில விடயங்களில் நாம் ஏற்கனவே அந்த செயல்முறையை தொடங்கியுள்ளோம்.” என்கிறார்.

ஏப்ரல் 9, 2020 வியாழக்கிழமை, கென்யாவின் நைரோபியில் மாலை முதல் அதிகாலை வரையிலான ஊரடங்கின் போது, மாவட்ட அதிகாரிகளுடன் பணிபுரியும் தனியார் நிதியுதவியில் இயங்கும் அரசு சாரா நிறுவனத்தின் உறுப்பினர்கள், புதிய கொரொனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவ ஒரு தெருவில் கிருமிநீக்கம் செய்கிறார்கள். (AP Photo/Brian Inganga)

அதற்காக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (US Centers for Disease Control and Prevention) “இடைக்கால வழிகாட்டுதல்களை” வெளியிட்டுள்ளன. இது பல்லாயிரக்கணக்கான “முக்கிய உள்கட்டமைப்பு சார்ந்த தொழிலாளர்களை” மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்வது குறித்து நியாயம் வழங்குகிறது. இதில், சட்ட அமலாக்கத்துறை பணியாளர்கள், மற்றும் விவசாயம், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அடங்குவர்.

அமெரிக்காவில், 3 மில்லியன் புலம்பெயர்ந்த மற்றும் பருவகால விவசாயத் தொழிலாளர்கள், 12.85 மில்லியன் உற்பத்தி வேலைகள் சார்ந்த தொழிலாளர்கள், 2.5 மில்லியன் காவலாளிகள், 4.6 மில்லியன் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள், 5.2 மில்லியன் போக்குவரத்துத் தொழிலாளர்கள், 8.1 மில்லியன் போக்குவரத்து தொடர்பான தொழில்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், 6.4 மில்லியன் எரிசக்தி தொழிலாளர்கள் மற்றும் 10 மில்லியன் உள்ளூர், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்.

கொடிய மற்றும் அதிகளவு தொற்றும் தன்மையுடைய நோய்தொற்று நெருக்கடிக்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம், நாட்டில் உள்ள 18 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 3 மில்லியன் மளிகைக் கடை ஊழியர்களையும் சேர்த்து, குறைந்தது 73 மில்லியன் பேரை அவர்களது வேலைகளுக்குத் திரும்ப வேண்டும் அல்லது தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும், தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு “அத்தியாவசியமானவர்கள்” என்று கூறி மில்லியன்களுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமென உத்தரவிடப்படக்கூடியதாக இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக உள்ளன.

மேலும், முதலாளிகள் தங்களது பணியிடங்கள் சுகாதாரமனவை என்பதையும், அவர்களது தொழிலாளர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையும் “உறுதிப்படுத்த” வேண்டும் என CDC பரிந்துரைக்கிறது. அதாவது முழு ஆவணமும், பெருநிறுவனங்கள் அவர்களது தொழிலாளர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதில் ஒரு சதவிகிதம் கூட செலவு செய்யாமல் தங்களது தொழிலாளர்களை மீண்டும் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது.

தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திருப்பியனுப்புவதற்கு முன்னர் தேசியளவிலான பரிசோதனை முறையை மேற்கொள்வது அவசியமா என்று நேற்றைய கொரோனா வைரஸ் பணிக்குழு கூட்டத்தில் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் இடைமறித்து, “வேண்டாம். நம்மிடம் மிகச் சிறந்த பரிசோதனை முறை உள்ளது. உலகில் சிறந்த பரிசோதனை முறையை நாம் கொண்டுள்ளோம். நாட்டில் ஏற்கனவே சில பிரிவுகள் தனித்துவமான வடிவில் உள்ளன. பிற பிரிவுகள் தற்போது நடைமுறைக்கு வருகின்றன. மேலும் சில பிரிவுகள் குறைந்து செல்கின்றன” என்று கூறினார்.

ட்ரம்ப் மோசமான பாசாங்கில் ஈடுபட்டுள்ளார். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஒரே மாதிரியாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன, அதற்கு தொற்றுநோய் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல. அதற்கு முற்றிலும் மாறாக, கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 30,000 என்ற அளவிற்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தீவிர சமூக விலகல் நடவடிக்கைகள் இறுதியில் நிறுத்தப்படலாமா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. இத்தாலியில் பல வாரங்களாக முழு ஊரடங்கு நடைமுறையிலுள்ளது என்றாலும், கடந்த இரு நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதையே அந்நாடு காண்கிறது.

நியூ யோர்க் கவர்னர் ஆண்ட்ரூ கியோமோ அவரது தினசரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முன்வைத்ததான இந்த வாதத்தின் மற்றொரு வடிவம், தொற்றுநோய் குறைந்து வருவதற்கான அறிகுறியாக மருத்துவமனையில் சேர வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதை மேற்கோள் காட்டியது. இது, மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிவதன் பிரதிபலிப்பா, புதிய நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலையா அல்லது நோய்தொற்று இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுகிறார்களா என்பது குறித்து கியோமோவும் எதையும் கூறவில்லை, எந்த நிருபரும் அது குறித்து கேள்வி எழுப்பவும் இல்லை.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்புக்கள் மற்றும் நியூ யோர்க் நகரில் வீட்டிலேயே மக்கள் இறப்பதில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து ட்ரம்பிடமோ அல்லது கியோமோவிடமோ கேட்கப்படவில்லை. நகர சபையின் சுகாதாரக் குழுவின் உறுப்பினரா மார்க் டி. லெவின், தற்போது ஒவ்வொரு நாளும் 200-215 பேர் தங்கள் வீடுகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வருடத்திற்கு முன்பு 20-25 ஆக மட்டுமே இருந்தது என்று குறிப்பிட்டார். இது, கோவிட்-19 நோயால் இறந்துள்ள ஆயிரக்கணக்கானோரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே தெரிவிக்கிறது.

வாரத்திற்கு 750,000 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் 4-8 வாரங்களுக்கு இது நடக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், இலட்சகணக்கானவர்களுக்கு மேலாக நோய்தொற்று ஏற்படும், மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போவார்கள். பணக்காரர்களுக்கும் அவர்களது எடுபிடிகளுக்கும் மட்டுமே விரைவாக பரிசோதனைகள் செய்யப்படும்.

எவ்வாறாயினும், ட்ரம்பும் அமெரிக்க ஆளும் வரக்கமும் கவனம் செலுத்துகின்ற எண்ணிக்கை என்பது அவர்கள் குறைவாக கவனம் செலுத்தும் நோய்வாய்ப்பட்ட மற்றும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அல்ல. ஆனால், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (Dow Jones Industrial Average) எனும் பங்குச் சந்தை குறியீடும் மற்றும் பிற புள்ளிவிபரங்களும் அவர்களது செல்வமும் இலாபமும் தொடர்ந்து குவிக்கப்படுவதைக் குறிக்கின்றன.

மார்ச் 23 இல் காணப்பட்ட அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் 5,000 க்கு மேற்பட்ட புள்ளிகளால் Dow உயர்வடைந்தது. இந்த அதிகரிப்பு, பெருநிறுவனங்கள், நிதிச் சந்தைகள், அத்துடன் தொழிற்சாலைகளும் மற்றும் பணியிடங்களும் விரைவில் மீண்டும் திறக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு சக்தியில் இருந்து இலாபத்தை பிழிந்து எடுப்பதற்கான செயல்முறை முழு வீச்சுடன் மீண்டும் தொடங்கப்படவுள்ளது குறித்த முன்கணிப்புக்கள் ஆகியவற்றிற்குள் டிரில்லியன் டாலர்கள் பாய்ச்சப்படுவதற்கு தூண்டியது.

ட்ரம்ப் நிர்வாகமும் மற்றும் காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி வாதிகளும், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் வறுமையையும் பொருளாதார திவால்நிலையையும் எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு அன்றாட உணவு மானியம் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்து தடுமாறுகின்ற நிலையில், ஃபெடரல் ரிசர்வ் வங்கி இடைவிடாத டிரில்லியன்களை அவற்றின் நிலைகுலைவினுள் பாய்ச்சுவதைத் தொடரும் என்ற வாக்குறுதிகளால் வோல் ஸ்ட்ரீட்டும் ஊக்கம் பெற்று வருகிறது.

தொழிலாள வர்க்கம் சமாதானப்படுத்த முடியாத வர்க்க மோதலை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவி வருவதான இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது குறித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களையும், போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்த எதிர்ப்புத்தான் பெருநிறுவன சார்பு அமெரிக்காவை வாகன தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல பணியிடங்களை மூடுவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்தது. ட்ரம்ப் மற்றும் அவரது ஜனநாயகக் கட்சியின் முயற்சிகள், அமெரிக்காவை மீண்டும் “வணிகங்களுக்காக திறப்பதற்கு” அறிவிப்பதற்கான குற்றச் செயலுக்கு துணைபுரிகின்றன.

Loading