சமூக இடைவெளி நடவடிக்கைகளை காலத்திற்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனா வைரஸ் நோய்தொற்று கடுமையாக பரவி வரும் நிலையில் கூட, உலக நாடுகள் அனைத்தும் தொழிலாளர்களை தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு எவ்வாறு வேலைக்கு திரும்பச் செய்வது என்று வெளிப்படையாக விவாதித்து வருகின்ற நிலையில், உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO), காலத்திற்கு முன்னரும் போதுமான தயாரிப்பு இல்லாமலும் சமூக இடைவெளி நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதானது தற்போதைய பொது சுகாதார நெருக்கடியை மேலும் விரைவாக முடுக்கிவிடக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

திங்களன்று WHO செய்தியாளர் கூட்டத்தின் போது, அதன் நிர்வாக இயக்குநரான டாக்டர் மிக்கேல் ரியான் (Dr.Michael Ryan), “மருத்துவமனைக்கு வந்து சேரும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அங்குள்ள படுக்கைகளை முழுமையாக நிரப்பும் அளவிற்கு கிட்டத்தட்ட நூறு சதவிகிதமாக ஏற்கனவே இருக்குமானால், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்நிலையில், கோவிட்-19 நோயாளிகளின் மிதமிஞ்சிய உள்வருகையை நிர்வகித்து சமாளிக்கும் வகையில் உங்கள் அமைப்பிற்குள் பயன்பாட்டிற்கு தயாராக படுக்கைகளை ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், “கொரியா போன்ற சில நாடுகளில், கோவிட்-19 நோய்தொற்று குறித்த மாதிரி பரிசோதனைகளில் 2-6 சதவிகிதம் அளவிற்கு நோய்தொற்று பரவியிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அதிலும் கடந்த வாரம் நியூ யோர்க்கில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் 37 சதவிகிதம் அளவிற்கு கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது” என்றும் கூறினார். அதாவது, நோய்தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் விகிதம் மிகஅதிகமாக இருப்பதானது கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பகுதியினர் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

A medical worker steps over bodies as they search a refrigerated trailer while wearing personal protective equipment due to COVID-19 concerns at Kingsbrook Jewish Medical Center, Friday, April 3, 2020, in the Brooklyn borough of New York. (AP Photo/John Minchillo)

செவ்வாயன்று ஐரோப்பாவின் நிலைமை பற்றிய சுருக்க விளக்கத்தின் போது இந்த கருப்பொருள்கள் மேலும் அதிகரித்தன, அப்போது WHO இன் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் (Christian Lindmeier) இவ்வாறு தெளிவுபடுத்தினார்: “மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று, மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுவிடாமலிருக்க மிக முன்னதாகவே நடவடிக்கைகளை கைவிட்டுவிடக் கூடாது என்பதாகும்.”

உலகளவில் கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 82,000 ஆகவும் மற்றும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1.4 மில்லியனாகவும் பெரும் வெடிப்பைக் கண்டு வரும் நிலையில், WHO கடும் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் அண்மித்து 400,000 கோவிட்-19 நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதுடன், ஏறத்தாழ 13,000 பேர் அதற்கு பலியாகியுள்ளனர், அதிலும் அங்கு கடைசி 24 மணிநேரத்திற்குள் இந்த நுண்கிருமி தொற்றால் 1,970 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியானும் லிண்ட்மியரும் பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும், நியூ யோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியோமோ (Andrew Cuomo) சமீபத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் “நாங்கள் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்கப் போகிறோம்” என்று அவர் கூறியதையே அவர்கள் குறிப்பிடுகின்றனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே பாணியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், “எங்களது மூலோபாயம் முற்றிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள்” காரணமாக “வளைவின் உச்சத்தைத் தொடும் நிலையை நாங்கள் எட்டக்கூடும்” என்று வலியுறுத்துவதன் மூலம் நியாயப்படுத்தி “[பொருளாதாரத்தை] நாங்கள் விரைவில் தொடங்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

ட்ரம்ப், கியோமோ மற்றும் அரசியல் ஸ்தாபகமும் முன்வைத்த இந்த கருத்து, தணிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, அதனால் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்ற நிலையில், தொழிற்சாலைகள், பள்ளிகள், பண்டகசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைவில் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களை வேலைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து நாடு சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறது. இறுதியில் ட்ரம்பும் நிதிய தன்னலக் குழுக்களும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இது பாரிய உயிரிழப்பு அல்ல, என்றாலும் “[சந்தைகளுக்காக] நோயை காட்டிலும் மோசமாக சிகிச்சையளிப்பது இருந்துவிடக் கூடாது.” அதாவது, பெருநிறுவனங்கள் தொடர்ந்து தொழிலாளர்கள் மூலம் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டுவதற்கு அவர்கள் மீண்டும் வேலைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதாகும்.

இத்தகைய தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான உத்தரவு தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவை விளைவிக்கும். முதலாவதாக, ட்ரம்பின் கருத்துக்கள் மிச்சிகனில் இதுபோன்ற சூழ்நிலைகளை நிராகரிக்கின்றன, அங்கு புதிய நோயாளிகளின் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்து தெளிவாக அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, ஏதேனும் புதிய நோயாளிகள் இருக்கும் வரை, நோய்தொற்று மீண்டும் வெடிக்கக்கூடும், நுண்கிருமி உயிர்ப்புடன் இருக்கும்போது மக்கள் மிக நெருக்கமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்களானால், அதன் தாக்கம் முன்பை காட்டிலும் மோசமாக இருக்கும். அதாவது, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலோ அல்லது புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே மாறினாலும் கூட முழு அடைப்பை முடிவுக்குக் கொண்டுவரக் கூடாது, மாறாக சில வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு புதிய நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை என்றால் மட்டுமே கட்டுப்பாடுகளை நீக்கலாம் என்ற வகையில், நோய்தொற்றுக்கள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிகவும் தெளிவாகவே உள்ளன.

WHO இன் டாக்டர் ரியான் கூறியது போல, “ஒரு பாதையை தீர்மானிக்க, ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு நீங்கள் வலுவான பொது சுகாதார திறனை கட்டமைக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்களை வீடுகளிலேயே அடைத்து வைத்து சமூகங்களை பிரிப்பதன் மூலமாக நோயைக் குறைக்க ஊரடங்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் ஒருமுறை நீங்கள் ஊரடங்கை நீக்குவீர்களானால் நோய்தொற்றை அழிப்பதற்கான மாற்றுமுறை உங்களிடம் இருக்க வேண்டும். அதற்கான மாற்றுவழி என்பது, நோய்தொற்று உள்ளவர்களை கண்டறிவது, அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது, அவர்களை தனிமைப்படுத்துவது, மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்காணித்தறிவது, அந்த தொடர்புள்ள நபர்களையும் தனிமைப்படுத்துவது, மற்றும் வலுவான சமூக கல்வி வழங்குவது என அனைத்து தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகும்.

இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை, இருந்தாலும் உலகிலேயே அதிகளவு எண்ணிக்கையில் பரிசோதனைகளை அமெரிக்க செய்து முடித்துள்ளதாக ட்ரம்ப் பெருமை பீற்றுகிறார். கடந்த சில வாரங்களுக்கு மட்டுமே இது பொருத்தமானதாக இருந்தது, ஏனென்றால் அதற்கு முன்னர் குற்றவியல்தனமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் நடத்தப்பட்டு பல வாரங்களாக மக்களிடையே கொரொனா வைரஸ் பரவ அனுமதிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்லது முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை, என்றாலும் விதிமுறைகளை மாற்றுவதன் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளபடி, போதுமான நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனைகளுக்கான வாய்ப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் உட்பொருள் என்னவென்றால், வைரஸின் உண்மையான உயிர்ப்பு கால அளவு இன்னும் அறியப்படவில்லை என்ற நிலையில், தணிக்கும் முயற்சிகளைத் தளர்த்துவது பொதுமக்களுக்கு பெரும் பேரழிவை விளைவிக்கும்.

கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட எண்ணிக்கையுடன் தொடர்புடையது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நியூயோர்க்கில், அரசு குறைவாக பரிசோதனைகளை நடத்திய முந்தைய நாட்களில், உறுதிப்படுத்தப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது. நோய் அறிகுறிகள் கொண்டவர்களை மட்டுமே பரிசோதனை செய்வது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் நோய்தொற்று இருப்பதற்கான சந்தேகத்திற்குரிய நபர்களையும் இன்னும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே குறிக்கிறது. இவ்வளவு பேர் இருக்கலாம் என்று முன்கணிக்கப்படுவதைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் நோய்தொற்று வெடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதையே இது குறிக்கின்றது.

தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான அடித்தளத்தை ஒருபக்கம் அமைப்பதோடு, தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் பதிலை ட்ரம்ப் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் என்பதுடன், “WHO உண்மையில் இதை ஊதி பெரிதாக்கியுள்ளது. இதுவரையிலும் சீனாவை தான் இது மையப்படுத்தியுள்ளது என்றாலும் சில காரணங்களுக்காக, பெரும்பாலும் அமெரிக்கா தான் நிதியளித்துள்ளது. நாங்கள் ஒரு நல்லவிதமான தோற்றத்தை வழங்குவோம். அதிர்ஷ்டவசமாக, சீனாவிற்கு எங்களது எல்லைகளை திறந்து வைத்திருப்பது குறித்த அவர்களது ஆலோசனையை ஆரம்பத்திலேயே நான் நிராகரித்தேன்” என்று சாடினார்.

நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்திலும், “இதற்கு தவறாக அவர்கள் அழைப்பு விடுத்தனர். சில மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அவர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அறிந்திருக்க வேண்டும், அநேகமாக அவர்கள் அறிந்திருக்கலாம். ஆகவே, நாம் அவர்களை மிகவும் கவனமாகப் பார்ப்போம். WHO இற்கு செலவு செய்யும் பணத்தை நாங்கள் நிறுத்தப் போகிறோம்.” என்று கூறி இத்தகைய கருத்துக்களை அவர் மேலும் தொடர்ந்தார்.

வோல்ஸ்ட்ரீட்ஜேர்னல் பத்திரிகை உட்பட முக்கிய செய்தி வெளியீடுகளில் இருந்து இது எடுக்கப்பட்டது, ஞாயிற்றுக்கிழமை இந்த இதழின் ஆசிரியர் குழு “பெய்ஜிங்கிற்கு WHO அடிபணிவது தொற்றுநோய்க்கான உளகளவிலான பதிலை பாதித்துள்ளது” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், இது “பெய்ஜிங்குடன் தொடர்புகொண்டுள்ளது” என்பதால் அதன் “தவறான தகவல்கள்” வைரஸை பல நாடுகளுக்கு பரவ” அனுமதித்தது என்று கூறி வலுவாக எதிர்த்தது. அதே நேரத்தில், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் முதல் பகுதியில் நிர்வாகம் கொண்டிருந்த செயலற்ற தன்மையின் விளைவாக உலகின் கொரொனா வைரஸ் தொற்றுநோயாளிகளில் நான்கில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது என்றாலும், சீனாவிற்கு எதிரான ட்ரம்பின் பயணத்தடை “வைரஸ் பரவுவதை மெதுவாக்குகிறது” என்று கூறியது.

ரூபர்ட் முர்டோக்கிற்கு சொந்தமான செய்தி வெளியீடு, WHO சீனாவை மையப்படுத்தும் கவனத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுவது முதல் தடவை அல்ல. பெப்ரவரி 13 ஆம் தேதிக்கு முன்னரே, இந்த செய்தியிதழ், ஜனவரி ஆரம்பத்திலேயே ஒரு பொது அவசரநிலையை அறிவிக்காமல் “சீனாவின் அழுத்தத்திற்கு WHO தலைவணங்குகிறது” என்று எழுதியது. உண்மையில், அமெரிக்கா தனது கொரோனா வைரஸ் பணிக்குழுவை கூட்டுவதற்கு முன்பும் மற்றும் தேசிய அவசரநிலையை ட்ரம்ப் அறிவிப்பதற்கு முன்பும், WHO ஜனவரி 29 அன்றே, சர்வதேச அக்கறை குறித்த பொது சுகாதார அவசரநிலையை (Public Health Emergency of International Concern) அறிவித்தது. என்றாலும், அமெரிக்காவிற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ட்ரம்புக்கு, அவரது உயர்மட்ட உதவியாளர்களில் ஒருவரான பீட்டர் நவரோவும் மற்றும் சுகாதார மற்றும் மனித சேவைகளின் தலைவரான அலெக்ஸ் அசாரும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

நிச்சயமாக, ட்ரம்போ அல்லது வோல்ஸ்ட்ரீட்ஜேர்னல் செய்தியிதழின் ஆசிரியர்கள் பணிபுரியும் பெரிய வங்கிகளோ இறுதியில் WHO இன் மருத்துவம் குறித்த பதிலைப் பற்றிக் கவலைப்படவில்லை. “சீனா அதன் பொருளாதாரம் வளர்ந்து வருகையில் தவிர்க்க முடியாமல் அதிகளவில் சர்வதேச செல்வாக்கைப் பெறுகிறது” என்ற அச்சத்தில் அவர்கள் ஒரு மரண அச்சுறுத்தலைக் காண்கிறார்கள். சீனாவின் பொருளாதாரம் ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டிருந்ததன் பின்னர் தற்போது மீண்டும் தொடங்கும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து அடிப்படையில் மூடப்பட்டுள்ளது என்பதால் இது குறிப்பாக உண்மையாக உள்ளது.

இவையே அமெரிக்க ஆளும் உயரடுக்கின் கணக்கீடுகளாக உள்ளன. அதாவது, தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஒரு வலுவான புவிசார் அரசியல் நிலைப்பாட்டுடன் சீனா எழுச்சிப் பெறுவதைப் பார்க்கையில், அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நோய்தொற்று பாதிப்பால் ஏற்கனவே இறந்த பல்லாயிரக்கணக்கானோர், பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கானோர், மேலும் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் கோடிக்கணக்கானோர் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. மேலும் குறிப்பாக, நோய்தொற்று மீண்டும் எழுச்சியுறுவதை எதிர்கொள்ளும் வகையில் தொழிலாள வர்க்கத்தை வேலைக்கு திருப்பியனுப்புவதற்கான அவர்களது நடவடிக்கைகளின் விளைவுகளையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

அதாவது, மனித உயிர்களை பாதுகாப்பது மற்றும் இன்னும் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்ப முடியாத அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் தனது சொந்த கணக்கீடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இது, தனியார் இலாபத்திற்கான உந்துதலில் பொருளாதார வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முதலாளித்துவ வர்க்கம் வகிக்கும் கட்டுப்பாட்டுக்கு எதிராக பரந்த போராட்டத்தை நடத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் வசம் விட்டுவைக்கப்பட்டுள்ள மூலவளங்கள், இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், உலக அளவில் மனிதகுலத்தின் நலன்களை அடிப்படையாக்கும் ஒரு சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கும் திருப்பிவிடப்பட வேண்டும்.

ஆசிரியர்பின்வரும்கட்டுரையையும்பரிந்துரைக்கிறார்:

COVID-19 இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கையில், ஆளும் வர்க்கம் காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப விரைவுபடுத்துகிறது.

[6 April 2020]

Loading