முன்னோக்கு

6.6 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மைக்கு பதிவு செய்வதால் சமூக மற்றும் பொருளாதார பேரழிவு தீவிரமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாகும் சுகாதார நெருக்கடி 1930 களில் இருந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக உருவாகுகையில் அமெரிக்க தொழிலாளர் துறையின் கூற்றுப்படி, கடந்த வாரம் 6.6 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்காக பதிவு செய்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களில், அமெரிக்காவில் மிகப் பெரிய மற்றும் வேகமான வேலை வெட்டு அலைகளில் மத்தியில் 16.8 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை கோரிக்கைகளுக்காக பதிவு செய்தனர். 44 வாரங்கள் அல்லது சுமார் 10 மாதங்கள் நீடித்த 2008-09 உலகளாவிய நிதி வீழ்ச்சியின் போதான தேசிய வேலையின்மைக்கான உதவிக்கோரிக்கைகளின் மட்டத்தை அடைவதற்கு இப்போது ஒரு மாதத்திற்கு குறைவாகவே எடுத்துள்ளது.

இந்த எண்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கையில், அவை பேரழிவின் முழு நோக்கத்தையும் குறைத்து மதிப்பிடும் தன்மை காணப்படுகின்றது. உணவகங்கள், கட்டுமானம், சேவைத் துறை மற்றும் பிற தொழில்களில் வேலை இழந்த மில்லியன் கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்கு தகுதி பெற முடியாதால் அவை புள்ளிவிவரங்களில் கணக்கிடப்படவில்லை.

லாஸ் வெகாஸ் One-Stop Career Center முன்னே வேலையின்மைக்கான உதவிக்காக பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள் (AP Photo/John Locher)

மேலும், கடந்த மூன்று வாரங்களாக விண்ணப்பதாரர்களின் அதிகரிப்பு மாநில வேலையின்மை அலுவலகங்களை மூழ்கடித்து, தொலைபேசி இணைப்புகளை பெறமுடியாமல் செய்து, வலைத் தளங்களை செயலிழக்கச் செய்ததுடன் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்ய முடியாமல் போனது.

கடந்த வாரம் புளோரிடாவில் 170,000 புதிய உரிமைகோரல்கள் இருந்தன. இது மூன்று வார மொத்தத்தை கிட்டத்தட்ட அரை மில்லியனாகக் கொண்டு வந்தது. நான்கு நாள் காலகட்டத்தில் 860,000 அழைப்புகள் வந்த பின்னர் மார்ச் மாத இறுதியில் மாநிலத்தின் தானியங்கி அமைப்பு செயலிழந்துபோனது. மியாமிக்கு அருகிலுள்ள ஹியாலியா Hialeah வில், பணிநீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் உடல்நலத்தை பணயம் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததுடன், மற்றும் காகித விண்ணப்பங்களைப் பெற உள்ளூர் நூலகத்திற்கு வெளியே வரிசையில் நின்றனர்.

கலிஃபோர்னியா கடந்த வாரம் 925,450 ஆரம்ப உரிமை கோரல்களைக் கண்டது. மார்ச் 28 இல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1.06 மில்லியன் உரிமை கோரல்களுக்கும், மார்ச் 21 இல் வாரத்தில் 186,000 உரிமைகோரல்களும் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலம் தழுவிய அடைப்பின் காரணமாக நாட்டின் பிற பகுதிகளைப் போலவே, பெரிய மற்றும் சிறு வணிகங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த வாரம், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா நிகழ்வு-ஏற்பாட்டு நிறுவனமான Eventbrite தனது பணியாளர்களை கிட்டத்தட்ட பாதியாக குறைப்பதாக அறிவித்தது. இணையத் தள மறுஆய்வு நிறுவனமான Yelp ஊழியர்களிடம் இது 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாகவும் 1,100 பேரை விடுமுறையில் அனுப்பியதாகவும் கூறியது. ஏனெனில் இது "கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தப்பிப்பிழைக்க "கடுமையான செலவுக் குறைப்புகளை விதிக்கிறது"என்று San Jose Mercury News வெளியிட்டுள்ளது.

ஏனைய பெரிய மாநிலங்களில், ஜோர்ஜியா 388,175 புதிய உரிமைகோரல்களை வெளியிட்டது, மிச்சிகன் 384,844, நியூ யோர்க் 345,246, டெக்சாஸ் 313,832 மற்றும் ஓஹியோ 272,129 பதிவுசெய்தது.

நியூ யோர்க் நகரில், ப்ரூக்ளினைச் சேர்ந்த 23 வயதான வியாபார தொழிலாளியான கோரின் சின், சில சமயங்களில் நியூ யோர்க்கின் தொழிலாளர் துறைக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான முறை தொலைபேசியில் அழைப்பதாகவும், ஆனால் மார்ச் நடுப்பகுதியில் இருந்து விடுமுறையில் அனுப்பப்பட்டதிலிருந்து ஒரு பைசா கூட பெற முடியவில்லை என்று வோல்ஸ்ட்ரீட்ஜேர்னலிடம் கூறினார்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நெருக்கடிக்கு முன்னர் ஒவ்வொரு மாதமும் சம்பள காசோலையை நம்பி வாழ்ந்து வந்தனர். கொரோனா வைரஸ் உதவி, நிவாரணம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு (CARES) சட்டத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு தடவை 1,200 டாலர் உதவி எப்போதாவது கிடைத்தாலும், அது பெரிதும் உதவப்போவதில்லை.

ஏறக்குறைய 1,500 வயது முதிர்ந்தவர்களிடம் ஒரு புதிய Bankrate.com மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, மூன்று அமெரிக்கர்களில் ஒருவருக்கு (31 சதவீதம்) உதவிப்பணம் ஒரு மாதத்திற்கு அவர்களைத் தக்கவைக்கவோ அல்லது அவர்களுக்கு எவ்விதத்திலோ உதவவோ மாட்டாது என்று எதிர்பார்க்கிறது. அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் ஏப்ரல் வாடகையை செலுத்த முடியவில்லை, மேலும் இந்த 1,200 டாலர், மாதாந்திர சராசரி வாடகையை விட குறைவாக உள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் பொருளாதார வறுமையை எதிர்கொள்கையில், வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபிவிருத்தி உதவித் தொகையானது ட்ரில்லியன்களை வழங்கும். புதிய வேலையின்மை புள்ளிவிவரங்கள் வெளியான அதே நாளில், வோல் ஸ்ட்ரீட் மற்றும் மாபெரும் நிறுவனங்களின் மோசமான கடன்களை வாங்க பெடரல் ரிசர்வ் கூடுதலாக 2.3 ட்ரில்லியன் டாலர்களை பயன்படுத்தும் என்ற செய்தியை அடுத்து Dow Jones மற்றும் S&P 500 புள்ளியால் அதிகரித்தது.

கடந்த இரண்டு வாரங்களில், கொரோனா வைரஸ் இறப்புகள் 550 இலிருந்து கிட்டத்தட்ட 17,000 ஆக உயரும்போது, Dow Jones 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வரலாற்றில் மிக விரைவான உயர்வாகும். நிதி தன்னலக்குழுவைப் பொறுத்தவரை, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பாரிய உதவிகளைகைப் பெறுவதற்கு எந்த வரிசையிலும் காத்திருக்க தேவை இல்லை. சிறு வணிகங்கள் கடன்களுக்குத் தகுதிபெற தாண்டமுடியாத தடைகளைக் கண்டறிகையில், மத்திய வங்கியின் சொத்துக்களும் மற்றும் அதன் பணம் அச்சிடும் நடவடிக்கைகளும் வோல் ஸ்ட்ரீடை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம் இழிந்த முறையில் வணிக மூடல்கள் மற்றும் அடைப்புகளால் ஏற்படும் பாரிய பொருளாதார கஷ்டங்களை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள முயல்கிறது. பணியிடங்கள் வழியாக தொற்றுநோய் வேகமாக பரவுகையில் வேலைக்கு முன்கூட்டியே திரும்புவதற்கான வாதமாக இக்கஷ்டங்களை பயன்படுத்துகின்றது.

தொற்றுநோய் மற்றும் அதன் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளிலிருந்து போதுமான பாதுகாப்பைக் கோருவதற்கு அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சமூக எதிர்ப்பின் அலை அதிகரித்து வருகிறது. சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு விடையளிக்க வழிகாட்ட வேண்டிய அத்தியாவசியக் கொள்கை என்னவென்றால், பணக்காரர்களின் செல்வம் மற்றும் இலாபங்களுக்கு மேலான தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் முன்னுரிமையை பெற வேண்டும்.

தொழிலாளர்களுக்கான பொருளாதார நெருக்கடியை தீர்க்க சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் அவசர நடவடிக்கைகளை கோருகிறது:

• அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் மற்றும் தொற்றுநோய் நீடிக்கும்வரை அனைத்து வாடகை, பயன்பாடு மற்றும் பிற கொடுப்பனவுகளை இரத்து செய்தல்.

• நிறுவனங்களுக்கானதும் வோல் ஸ்ட்ரீட்டிற்கானதுமான பிணை எடுப்பு இரத்து செய்யப்படவேண்டும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், சுகாதாரப் பாதுகாப்பு, சேவை மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குவதற்கும் நிதி மற்றும் தொழில்துறை வளங்களை உடனடியாக திருப்பி விடுதல்.

• வேலையில்லாதவர்கள் உட்பட அனைவருக்கும் இலவச மற்றும் உலகளாவிய சுகாதார பராமரிப்பு, பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் மற்றும் குடியுரிமை உரிமைகள் வழங்கப்படவேண்டும்.

• COVID-19 தொற்றுநோயை நிறுத்து! மருத்துவ பராமரிப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

• அரசாங்கத்தால் பிணை எடுக்கப்படும் அனைத்து தொழிற்துறைகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுச்சொத்துக்களாக மாற்றப்பட வேண்டும். மேலும் அவை முக்கியமான தேவைகளின் உற்பத்தியை நோக்கி திருப்பி விடவேண்டும்.

• பணக்காரர்கள் மீதான வரிகளில் பாரிய அதிகரிப்பும் மற்றும் பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுக்கள் பதுக்கி வைத்திருக்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் கைப்பற்றவும் வேண்டும்.

தொற்றுநோய் சமூகத்தில் அடிப்படை வர்க்க பிளவுகளை வெளிப்படுத்திக்காட்டியுள்ளது. தொழிலாள வர்க்கம் சமுதாயத்தில் இன்றியமையாத மற்றும் முற்போக்கான சக்தியாகும். உயிர்களைக் காப்பாற்றுதல், உணவு, மருந்து மற்றும் பிற தேவையான பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் கொண்டு செல்வது மற்றும் நவீன, வெகுஜன சமுதாயத்தின் உள்கட்டமைப்பை பராமரித்தல் ஆகியவை இந்த தொழிலாள வர்க்கத்தினாலேயே செய்யப்படுகின்றன. ஆளும் வர்க்கம், சுய-செல்வமயமாக்கிக் கொள்ளல் குறித்த அதன் வெறித்தனமான நிலைப்பாட்டினால், தொற்றுநோய்க்கான விஞ்ஞான மற்றும் மனிதாபிமானமான நடவடிக்கைக்கான மிகப்பெரிய தடையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக அது எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த தனது அவமரியாதையை நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் நிலைமைகள், ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் எழுகின்றன. ஆளும் உயரடுக்கினர் தங்களுக்கு ட்ரில்லியன்களை ஒப்படைக்க அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொள்கையில், தொழிலாளர்கள் மரணம், வேலையின்மை மற்றும் ஏழ்மையை எதிர்கொள்கின்றனர்.

சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தினை முழுமையாக மறுசீரமைப்பதன் அவசியத்தை நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் அணிதிரட்டுவதன் மூலமும், அரசியல் அதிகாரத்தை முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதன் மூலமும் மட்டுமே அவசர சமூகத் தேவைகளை நிறைவேற்ற முடியும். இந்த வேலைத்திட்டத்திற்காக போராட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவ கட்சியில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading