போரிஸ் ஜோன்சனின் கோரோனா தொற்று நோய்கான நடவடிக்கைகள்: பத்தாயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் அரசியல் குற்றமாகும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“இந்த தொற்று நோயின் அதிகரிப்பை நிறுத்த நாட்டின் பாரிய தேசிய முயற்சி இல்லாமல், உலகில் எந்தவொரு சுகாதார சேவையும் சமாளிக்க முடியாத ஒரு கணம் வரும்; ஏனெனில் போதுமான செயற்கை சுவாசக் கருவிகள், போதுமான தீவிர சிகிச்சை படுக்கைகள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள்” என்று பழமைவாத பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்களன்று அறிவித்தார்.

27 மில்லியன் பார்வையாளர்கள் நாட்டிற்கான அவரது உரையை நேரடியாகப் பார்த்தார்கள். இணையத் தளங்களின் ஊடாக பார்ப்பதன் காரணமாக, இது பிரிட்டிஷ் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட ஒளிபரப்பாக இருக்கும். ஆனால் அரசாங்கத்திடம் வழிகாட்டுதலை தேடும் அந்த மில்லியன் கணக்கானவர்களுக்கு, இந்த செய்தி கணக்கிடப்பட்ட அவமதிப்புகளில் ஒன்றாகும்.

“ஒரே நேரத்தில் அதிகமான மக்களுக்கு தீவிரமான உடல்நிலை பாதிப்பு அடைந்தால் தேசிய சுகாதார சேவையால் (NHS) இதை கட்டுப்படுத்த முடியாது. இதன் அர்த்தம் கொரோனா தொற்றுநோயிலிருந்து மட்டுமல்ல, பிற நோய்களிலிருந்தும் அதிகமான மக்கள் இறக்க வாய்ப்புள்ளது,” என்று ஜோன்சன் கூறினார். ஆகையால், நோய்யின் வேகத்தை குறைக்க அவர் “பிரிட்டிஷ் மக்களுக்கு மிகவும் எளிமையான அறிவுறுத்தலான நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று .” கூறினார்.

இப்பொழுது முடக்கப்பட்ட அனைத்து இடங்களும் காவல் துறையினரால் அமுலாக்கப்பட்டு வருகிறது. இந்த அடக்குமுறை நடவடிக்கையைத் தவிர, வேறு எதுவும் வழங்கப்படவில்லை.

மற்றும் ஜோன்சனின் “எளிய அறிவுறுத்தலில்” எச்சரிக்கைகள் குவிக்கப்பட்ட போது, மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வீட்டில் தங்குவதை தவிர வேறு சாத்தியம் எதுவும் இல்லை என்பது தெளிவாகின்றது.

“வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத நிலையில் மற்றும் இது முற்றிலும் அவசியமாக இருக்கிறது என்ற பட்சத்தில், வேலைக்கு போய் வருகின்ற பிரயாணங்களை” தவிர உடல்நலம் குன்றிய நபர்களுக்கு கவனிப்பை வழங்குதல், உடற்பயிற்சி செய்ய குறைந்தளவில் வெளியே செல்வது மற்றும் கடைகளுக்கும் போய் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது ஆகியவை வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களுடன் இப்பட்டியல் முடிவடைகின்றது.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக குறைக்கப்பட்ட இரயில் சேவையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், நேற்றைய செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் லண்டனில் சுரங்க இரயில்கள் மற்றும் நடைபாதைகளின் நிரம்பிவழியும் படங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

அவர்களில் செவிலியர்கள் மற்றும் நோய்தொற்றின் அபாயத்தைக் கொண்டிருக்கும் பிற மருத்துவ ஊழியர்கள், மேலும் கூடுதலாக கட்டுமானம், உணவு உற்பத்தி, சில்லறை விற்பனை தொழிலாளர்கள், உள்ளூர் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், விநியோக சேவைகளில் பணியாற்றுபவர்களும் அடங்குவார்கள். விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், பத்திரிகைகள் விற்பனையிடம், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வாகனம் பழுதுபார்க்கும் இடங்கள், வீட்டுவளர்ப்பு பிராணிகளின் கடைகள், வங்கி ஆகிய தொழிலாளர்களும் உள்ளடங்குவார்கள்.

வேலை செய்ய மறுக்கும் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கப்படமுடியும். மற்றவர்கள் சுயதொழில் செய்பவர்கள், அவர்கள் வேலை செய்யாவிட்டால் எதுவுமே பெறமுடியாது. இதில் பாரிய சிறுவனங்களில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்களும் உள்ளடங்கும். நேற்றையதினம் பொதுமக்களின் ஒரு எதிர்ப்பு குரலுக்கு பின்னர் இவற்றில் சில மட்டுமே வேலைகளை இடைநிறுத்தம் செய்தனர்.

COVID-19 நோய்தொற்றைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரும் 2.5 மக்களுக்கு பரவுதலை ஏற்படுத்துவார்கள் என்பதால், ஜோன்சன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவசியமாகிறது. அதாவது ஒரு மாதத்திற்குப் பிறகு 406 நபர்கள் நோய் தொற்றை கொண்டிருப்பார்கள். 1.25 மக்களுக்கு, நோய் தொற்றின் வீச்சை 50 சதவீதமாக கட்டுப்படுத்தினால், 2.5 மக்களுக்கு 75 சதவீதமாக, இந்த மாத மொத்தத்தில் 15 ஆக குறைக்கலாம். ஆனால் “நோய்தொற்று வீடுகளுக்கு இடையில் பரவுவதை தடுப்பதே நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம்” என்ற அவரது கூற்று தவறானது. ஏனெனில் பெரும்பாலான நோய்த்தொற்றுகள் வீடுகளுக்குள்ளேயே ஏற்படுகின்றன.

நோய் பரவுவதை தடுப்பதற்கான ஒரேயொரு வழி ஒரு கட்டுப்பாடான தனிமைப்படுத்தல் திட்டத்துடன் நோயின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை பரிசோதிக்கும் முறையையும் ஒன்றிணைந்து செயற்படுத்துவதேயாகும். சீனா, தென் கொரியா, மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போலவே, -தொண்டையில் உமிழப்பட்ட எச்சில், மூக்குதுவார சளி மாதிரிகளை எடுத்து மற்றும் ஆய்வு கூட பரிசோதனைகளை ஆரம்பத்திலேயே செய்யும் ஒரு நடைமுறையுடன் முன்கூட்டியே எல்லா இடங்களிலும் உடல் வெப்ப அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது போல் செய்யப்படவேண்டும்.- தனிமைப்படுத்தலின் கடுமையான திட்டம் ஒரு பரிசோதனை செய்யும் அதிகாரத்துடன் இணைந்து இருந்தால் யாருக்கு நோய்த்தொற்று உள்ளது என்பதை முதல் தருணத்திலேயே நிறுவலாம்.

ஜோன்சன் “ நாள்தோறும் நாங்கள் எங்கள் அற்புதமான (NHS) தேசிய சுகாதார சேவையை பலப்படுத்துகிறோம்”, “எங்கள் உபகரணங்களின் கையிருப்பை அதிகரிப்பது” மற்றும் இதையும் சேர்த்து “இந்த கண்ணுக்குத் தெரியாத கொலையாளி மீது அலைகளைக் திருப்புவதற்கு எங்களை இயக்கப்போவது நாங்கள் வாங்கும் பரிசோதனை சாதனங்கள்” என்று பெருமையடித்தார். ஆனால் COVID-19 கான பரிசோதனையை ஒரு நாளைக்கு 4,000 முதல் 25000 வரை “உயர்த்துவதற்கான” உறுதிமொழிகளின் பின்னணியில் உள்ள உண்மை, பொலிடிகோவிற்கு (Politico) கசிந்த உள் அரசாங்க ஆவணங்களால் அப்பட்டமாக அம்பலப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் “மூத்த டவுனிங் தெரு உதவியாளர் ஐக்கிய இராச்சிய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் COVID-19 தொற்றுநோய்கான ஆய்வு கூட பரிசோதனை சாதனங்களை கடனாக தரும்படி கேட்டது. ஏனெனில் “இந்த இயந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகமே உள்ளதால் நெருக்கடி நீளும் காலம்வரை உங்கள் இயந்திரங்களை எங்களுக்கு வழங்குவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுக்கிறார்.” இணைக்கப்பட்ட ஜோன்சனின் கடிதம் “வாங்குவதற்கு எந்த இயந்திரங்களும் இல்லை” என்று ஒப்புக்கொள்கிறது,” மேலும் கூடுதலாக “இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் அனுபவம் வாய்ந்த எந்த ஊழியர்களும் உங்களிடம் இருந்தால் அதுவும் மிகவும் உதவியாக இருக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்றைய நிலவரப்படி, ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக 280 பேர் மட்டுமே ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், வெறும் 90,436 பேர் சாதாரணமாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இப்போதும் கூட, மருத்துவ ஊழியர்கள் தங்களுக்கு அதிக ஆபத்து இருந்தாலும் மற்றும் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றை அதிகமாக பரப்புவதற்கு வாய்ப்பு இருந்தும் பரிசோதிக்கப்படுவதில்லை. செயற்கை சுவாச இயந்திரங்கள் இல்லாததால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. கடந்த வாரந்தான் இதன் உற்பத்தியை பெருக்குவதற்கான உற்பத்தியாளர்களுக்கு பேச்சுவார்த்தையை தொடங்கியது. அத்துடன் உற்பத்தி செய்ய வேண்டிய தரமுள்ள முழு FFP3 சுவாச முகமூடிகள் மற்றும் சத்திர சிகிச்சைக்கான நீண்ட சட்டைகள், பிற அத்தியாவசிய தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் உள்ளடங்கும்.

இது ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ( WHO) இயக்குனரான Hans Henri Kluge இன் அறிக்கை “மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையை ஒருபோதும் சந்தையின் இயக்கவியலால் மட்டுமே தீர்க்க முடியாது” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் அவரதும் மற்றும் முந்தைய பழமைவாதக் கட்சி மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்கள் சமூக செலவினங்களை வெட்டவும் மற்றும் தனியார் மருத்துவத்தை ஊக்கிவிப்பதையும் நாடியதால், ஜோன்சனின் “அற்புதமான NHS (தேசிய சுகாதார சேவை)” பல தசாப்தங்களாக முறையான நிதி வழங்கல் இல்லாமலும் மற்றும் தரங்களை குறைத்ததின் தாக்கத்தையும் இது மேலும் அம்பலப்படுத்தியது.

எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் global health இன் தலைவரான தேவி ஸ்ரீதர், கார்டியனில் எழுதுகையில், ஜோன்சனின் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது மற்றும் என்ன செய்யவில்லை என்பது பற்றி பேரழிவுகரமான கண்டனத்தை வழங்குவதுடன், இது “பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும்” என்று அப்பட்டமாக கூறுகிறது.

கொரோனா நச்சுயிரி நெருக்கடி விரிந்து பரவுவதை விவரித்த பின்னர், ஸ்ரீதர் வலியுறுத்தினார்: “ஐக்கிய இராச்சியத்தில் நாங்கள் கேட்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மற்றும் தயார் செய்வதற்கும் ஒன்பது வாரங்கள் இருந்தது. ஒரு நோய்வெடிப்பை பாவனை செய்து பார்ப்பதற்கும், போதுமான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் (PPE) மற்றும் செயற்கை சுவாச இயந்திரங்களை உறுதிப்படுத்துக்கொள்வதற்கும், விநியோக சங்கிலிகளை அமைப்பதற்கும், விரைவான, மலிவான பரிசோதனைகள் கிடைப்பதை நடைமுறைபடுத்த எங்களுக்கு ஒன்பது வாரங்கள் இருந்தது. தொடர்பு தடமறித்தலை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளை நிறுவுவதற்கும், மேலும் கை கழுவுதல் பற்றி மட்டுமல்லாமல், அனைத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் நச்சுயிரி (virus) சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தும் அபாயங்களை பற்றி வெகுஜன விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்குவதற்கு எங்களுக்கு ஒன்பது வாரங்கள் இருந்தது.

அதற்கு பதிலாக, ஜோன்சன் “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை -herd immunity-” வளர்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக நோய் பரவ அனுமதிக்கும் கொள்கையை பின்பற்றினார். நூறாயிரக்கணக்கானவர்களை இறக்க அனுமதித்த தனது திட்டங்களில் பின்னடைவை எதிர்கொண்டபோதுதான், அவர் தனது மட்டுப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட தலைகுத்துக்கரணமான திருப்பத்தை மேற்கொண்டு, பாடசாலைகள், உணவு, தேனீர், மதுபான கடைகளை மூடுவதற்கும் மற்றும் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தும் அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீதரின் விமர்சனம், மிகவும் கடுமையாக இருந்தாலும், அது போதுமானதற்கு கிட்டக்கூட செல்லவில்லை. ஜோன்சன் கடந்த ஒன்பது வாரங்கள் மட்டுமே எச்சரிக்கைகளை புறக்கணிக்கவில்லை ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக புறக்கணித்துவருகிறார். தீவிர பராமரிப்பு சேவைகளுக்கான தேவை “அதிகபட்ச பரவலின்போது கூட அதனால் வழங்கக்கூடிய நிலையை தாண்டிச்செல்லும்” சமயத்தில் நோய்த்தொற்றின் உச்ச வாரங்கள் முழுவதும் முக்கியமாக இறப்பு எண்ணிக்கை 210,000 மற்றும் 315,000 இடையில் இருக்கும் நிலையில், மற்றும் “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு தொற்று நோய்யின் வீச்சு (அலை) 15 வாரங்கள் நீடிக்கும்” நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் மிக மோசமான சூழ்நிலைக்கு உள்ளாவார்கள் என்பதை உணர்ந்து 2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சுகாதார திணைக்களம் (DoH) இன்ஃப்ளூயன்சா (influenza) நச்சுயிரி பெரும் பரவலுக்கான தயார்நிலை மூலோபாயத்தை உருவாக்கியது.

இந்த சவாலை எதிர்கொள்ளும் திறனை விரிவாக்குவதற்கு பதிலாக, உலகெங்கிலும் உள்ள சுகாதார சேவைகள் மற்றும் தேசிய சுகாதார சேவையின் (NHS) திறனை விரிவாக்குவதற்கு பதிலாக பெரும் செல்வந்தர்களின் பணப்பெட்டிக்குள் பணம் செலுத்தப்பட்டது. அந்த கொள்கை இன்னும் தொடர்கிறது.

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜோன்சனின் நடவடிக்கைகள் எப்பொழுதும் மிக சிறியதும், மிக தாமதமாகவும் இருந்தது. ஆனால் ஆளும் உயரடுக்கு இந்த அற்ப நடவடிக்கைகள் கூட ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. திங்கள்கிழமை டோரியின் முன்னாள் தலைவர் வில்லியம் ஹேக் (William Hague) டெய்லிடெலிகிராப்பில் எச்சரித்தார், “தீவிர சோசலிஸ்டுகளைப் பொறுத்தவரை, ஊதியம் செலுத்துவதையும், முக்கிய வணிகங்களை வழிநடத்துவதையும், கட்டுப்பாடில்லாமல் பணத்தை உருவாக்குவதையும் அரசு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான ஆதாரமாக பல தசாப்தங்களாக அவர்கள் எப்போதும் நம்பியிருக்கும் கருத்துக்களுக்கு இது ஒரு சான்றாக இருக்கும்."

கூடிய விரைவில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் சந்தையின் சர்வாதிகாரத்தை வலுப்படுத்த ஆளும் வர்க்கம் நகரும். கொரோனா நச்சுயிரி நெருக்கடி வங்கிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் குறைந்த பட்சம் 350 பில்லியன் பவுண்டுகள் கிடைக்கும்படி செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இது 2008 ஆம் ஆண்டின் வங்கிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து பிணை எடுக்கப்பட்ட தொகையை சிறிதானதாக ஆக்குவதுடன், சமூக செல்வத்தை அவர்களுக்கு மறுபங்கீடு செய்கின்றது.

ஆனால் இந்த எதிர்பார்க்கப்பட்ட நோயின் “எழுச்சி” முடிந்தவுடன், அரசாங்கம் அதன் புதிய அரச அடக்குமுறை அதிகாரங்களை பெருகிய முறையில் கட்டுக்கடங்காத மற்றும் நம்பிக்கை இழந்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தும். காவல்துறையினர் இப்போது முடங்குதல்களை விதிக்கின்றனர், இராணுவம் வீதிகளுக்கு கொண்டுவரப்படுவதால், வேலையில்லாமல் ஆக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களிடையே அதிகரித்து வரும் சமூக அதிருப்தியை அடக்குவதற்கு தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும். “தேசிய அவசரகால” நிலை தொடர்ந்து இருக்கும் நிலையில், அவர்கள் ஒரு அற்ப தொகைக்கு வேலை செய்ய ஏனைய தொழிலாளர்கள் கட்டாயப்படுத்துவார்கள்.

Loading