“நாங்களும் மனிதர்கள் தான், இவ்விதத்தில் அவர்கள் எங்களை அவமதிக்கக் கூடாது"

தொற்றுநோய் அமெரிக்க உணவு வினியோக சங்கிலியைப் பாதிக்கின்ற நிலையில் இறைச்சி வினியோக தொழிலாளர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்

Jerry White
16 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோய் அமெரிக்காவில் இறைச்சி வெட்டும் ஆலைகள், இறைச்சி வினியோக ஆலைகள், பண்டகசாலைகள், பெருஅங்காடிகள் ஆகியவற்றுடன் அமெரிக்காவின் உணவு வினியோக சங்கிலியின் ஏனைய பிரிவுகளுக்கும் பரவி வருகின்ற நிலையில், உணவு பதப்படுத்தும் தொழிலாளர்கள் தமக்கு பாதுகாப்பு கோரி வருகின்றனர்.

In this April 9, 2020 file photo employees and family members protest outside a Smithfield Foods processing plant in Sioux Falls, S.D. The plant has had an outbreak of coronavirus cases according to Gov. Kristi Noem. (AP Photo/Stephen Groves File)

இந்த நெருக்கடியின் போது இறைச்சி வினியோக ஆலைகளின் மற்றும் மளிகை கடைகளின் தொழிலாளர்கள் "அத்தியாவசியமானவர்களாக" கருதப்படுகின்ற அதேவேளையில் முதலாளிமார்களோ அவர்களுக்கு மிகவும் அடிப்படை பாதுகாப்புகளை வழங்கவும் கூட மறுத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, பரிசோதனையில் 2,000 க்கும் அதிகமானவர்களுக்குப் இந்நோய் இருப்பது தெரிய வந்ததுடன் பலரும் உயிரிழந்தனர். கொலராடோ, பென்சில்வேனியா மற்றும் ஜோர்ஜியாவில் ஐந்து இறைச்சி வினியோக ஆலை தொழிலாளர்களும், மற்றும் தென்கிழக்கு மிச்சிகனில் நான்கு கிரோஜர் நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஒரு மெய்ஜர் நிறுவன தொழிலாளரும் இதில் உள்ளடங்குவர்.

அமெரிக்காவில் பன்றி இறைச்சி உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனமான Smithfield Foods, அதன் தெற்கு டகோடா, Sioux Falls ஆலையில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டிருப்பது தொடர்பாக போராட்டங்கள் வெடித்த பின்னர், “அடுத்த அறிவிப்பு வரையில்" அந்த ஆலையை மூடுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. தெற்கு டகோடா மாநிலத்தில் COVID-19 தொற்று ஏற்பட்டிருந்த 730 பேரில் 293 பேர் அந்த ஆலையில் பணியாற்றுவதாக ஞாயிற்றுக் கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் பல தொழிலாளர்களுக்கும் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியான பின்னர், அந்நிறுவனம் அந்த மிகப் பெரிய ஆலையைச் சுத்தப்படுத்துவதற்காக மூன்று நாள் மூடுவதாக உத்தரவிட்டதுடன், 3,700 தொழிலாளர்கள் பணியாற்றும் அந்த ஆலையில் "சமூக விலகலை" அதிகரிப்பதற்காக கண்ணாடி தடுப்பான்களை வைக்கவும், சவர்க்காரம் மற்றும் கை தொற்றுநீக்கிகள் வைப்பதாகவும் அறிவித்தது. ஆனால் அந்த ஆலை நிர்வாகிகள் ஆலையை மூட மறுத்ததுடன், “COVID-19 இருந்தாலும் கூட, நாம் உணவை உற்பத்தி செய்யப் போகிறோமா இல்லையா என்பதில் ஒரு தேசமாக நாம் ஒன்றை துணிவான தேர்ந்தெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்,” என்று ஸ்மித்ஃபீல்ட் தலைவரும் தலைமை செயலதிகாரியுமான கென்னத் சுலிவன் அறிவித்தார்.

Workers protest outside the plant

அந்த ஆலையின் தொழிற்சங்கமான உணவுத்துறை மற்றும் வர்த்தகத்துறையின் ஒருங்கிணைந்த தொழிலாளர் சங்கம் (UFCW) அந்த திட்டத்துடன் இணைந்து சென்றது. இந்த தற்காலிக மூடல் தொழிலாளர்களைக் கோபம் மட்டுமே மூட்டியது, அவர்கள் நிர்வாகத்தால் பழிவாங்கபடுமோ என்று அஞ்சி, “¿Que Pasa Sioux Falls?” என்ற ஓர் உள்ளூர் புலம்பெயர்ந்தோர் ஆலோசனை குழுவில் அந்த ஆலையின் பாதுகாப்பற்ற நிலைமைகளைக் கண்டித்து அழைப்புகளையும் சேதிகளையும் வெள்ளமென குவித்தனர்.

சில கருத்துரைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கி இருந்தன:

“அங்கே குளியலறைகளில் சவர்க்காரம் இல்லை, அவர்கள் உணவு உண்ணும் மேசைகளை நடைபாதையிலேயே வைத்துள்ளார்கள் இதனால் நடந்து செல்லும் எவரும் தடுக்கி விழக்கூடும் என்பதோடு அந்த மேசைகளில் தூசிகளும் நிரம்புகின்றன. உணவு அருந்தியதற்குப் பின்னர் அந்த உணவருந்தும் மேசைகள் மீது யாரும் கிருமிநீக்கிகள் தெளித்து சுத்தப்படுத்துவதை நான் பார்த்ததில்லை.”

“என் துறையில் அவர்கள் வழங்கிய முகக்கவசங்கள், தலையை மறைத்துக் கொள்ள அணியும் தலைக்கான வலையிலான கவசங்களாகும். அதை முகத்தில் முகக்கவசங்களாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.”

“ஏப்ரல் 9 வியாழக்கிழமை வரையில் என் துறையில் எனக்கு எந்த பாதுகாப்பு கவசங்களும் வழங்கவில்லை, மாறாக எங்களில் யாரும் பத்திரிகைகளுக்கும் பேச முடியாது ஏனென்றால் ஒவ்வொரு அலுவலக கூட்டத்திலும் பேசக் கூடாதென நாங்கள் எச்சரிக்கப்பட்டு [உள்ளோம்].”

“ஏப்ரல் மாதம் நாங்கள் ஒரு நாள் வேலையைக் கூட தவறவிடாமல் இருந்ததற்காக அவர்கள் 500 டாலர் கொடுப்பனவு வழங்கினார்கள். இது கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இருந்து ஆதாயம் எடுப்பதாக நான் உணர்கிறேன்.”

“நான் 3 நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன், COVID-19 தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகும் வரையில் என் வேலையிட மேற்பார்வையாளரால் நான் புறக்கணிக்கப்பட்டிருந்தேன்.”

“அங்கே முற்றிலும் சுத்தம் இல்லை என்பதால் வேலைக்குத் திரும்பவே இப்போது எனக்கு மிகவும் பயமாக உள்ளது. ஓய்வறையின் மேசைகளை யாரும் சுத்தப்படுத்துவதாக தெரியவில்லை. குளியலறைகளில் யாரும் கிருமிநீக்கி தெளிப்பதை நான் பார்த்ததில்லை. நாங்கள் இறைச்சிகளைக் கையாள்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வேலை செய்கிறோம் அங்கே கிருமிநீக்கி எதுவும் இல்லை! நாங்களும் மனிதர்கள் தான், தயவுசெய்து இவ்விதத்தில் அவர்கள் எங்களை அவமானப்படுத்தக் கூடாது. இந்த நிறுவனம் மறைக்கும் பல விடயங்கள் உள்ளன அதுமட்டுமல்ல அங்கே 190 க்கும் அதிகமானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.”

சனிக்கிழமை புலம்பெயர்ந்தோர் அமைப்பு அந்த ஆலைக்கு வெளியே ஒரு போராட்டத்தை ஒழுங்கமைத்தது, அதை மூடக்கோரி பல தொழிலாளர்களும் அவர்களின் கார்களுடன் அந்த ஆலையைப் சுற்றி வளைத்தனர். ஒரு வேலைநிறுத்தம் ஏற்படக்கூடும் என்கின்ற நிலையில், தெற்கு டகோடா ஆளுநர் கிரிஸ்டி நியோம் மற்றும் சியோக்ஸ் ஃபால் நகரத் தலைவர் பௌல் டென்ஹகென், தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவும் மற்றும் ஆலையில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்காகவும் 14 நாட்களுக்குச் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு நிறுவனத்தை வலியுறுத்தனார்.

அந்த வெடிப்புக்கு முன்னரே கூட, இறைச்சி மற்றும் கோழிக்கறி சுத்திகரிப்பு ஆலைகள் அபாயகரமான விபத்துக்களுக்கு இழிபெயரெடுத்து இருந்ததுடன், வழுக்கும் தரைத்தளங்கள், வேலை வேகம் மற்றும் அபாயகரமான வெட்டும் கருவிகளின் காரணமாக வேலையில் மீண்டும் மீண்டும் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன. கடந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு மையங்களுக்கான புதிய நெறிமுறைகளின் கீழ் இந்த மனித இழப்பு இன்னும் மோசமாகும். அந்த நெறிமுறை தொழிலாளர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லையென்றால் COVID-19 ஏற்படுவதற்கான வாய்ப்பிருந்தாலும் கூட நோய் தொற்று ஏற்படும் வரையில் வேலையிலேயே தொழிலாளர்களை வைத்திருக்க பணியாளர்களை அனுமதிக்கிறது.

இந்த தொற்றுநோய்க்கான குறிப்பிட்ட புதிய தரமுறைகளை அமுலாக்குவதற்குப் பதிலாக, மத்திய தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாண்மை (OSHA) தொழிலாளர்களைப் பாதுகாப்பதை முதலாளிமார்களின் விருப்பத்திற்கு விட்டு வைத்துள்ளது.

இத்தகைய நிலைமைகளை முகங்கொடுத்துள்ள இறைச்சி வினியோக தொழிலாளர்கள், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மருத்துவக் கவனிப்புத்துறை, வாகனத்துறை, பொது போக்குவரத்து துறை மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களைப் போலவே, தங்கள் உயிரைப் பாதுகாக்க விடயங்களைத் தங்கள் கரங்களில் எடுத்துள்ளனர்.

இந்த குழு போராட்டங்களுக்குக் கூடுதலாக, பல தொழிலாளர்களும் வெளிப்படையாக வேலை செய்ய மறுத்துள்ளனர். இது அமெரிக்காவிலும் கனடாவிலும் குறைந்தபட்சம் 10 ஆலைகளை மூட நிர்பந்தித்துள்ளது.

நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியின்படி, ஜோர்ஜியா தொழிலாளர்களில் ஒருவர் நோய்வாய்பட்டிருந்த போதினும் கூட வேலை வருமாறு கூறப்பட்டதால் உயிரிழந்தார்: “55 வயதான அன்னி கிரான்ட் இரண்டு இரவுகளாக காய்ச்சலாக இருந்தார். கொரொனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என கவலை கொண்டிருந்த அப்பெண்மணியின் வயதுவந்த குழந்தைகள், அண்மித்து 15 ஆண்டுகளாக அவர் பேக்கிங் பிரிவில் வேலை செய்து வந்துள்ள ஜோர்ஜியாவின் சீர்குலைந்த கோழிப்பண்ணை ஆலைக்குச் செல்வதை விட வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அவரிடம் மன்றாடினர்.

“ஆனால் மூன்றாவது நாளிலேயே அவர் நோய்வாய்பட்டார், அவர்களின் தாயாரிடம் இருந்து அவர்களுக்கு ஒரு சேதி கிடைத்தது. 'நான் வேலைக்கு வர வேண்டுமென அவர்கள் எனக்கு கூறுகிறார்கள்,” என்றது குறிப்பிட்டது. திருமதி. கிரான்ட் வீட்டுத் திரும்பிய பின்னர், ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாசக் கருவியில் அவர் உயிருக்குப் போராடி வியாழக்கிழமை காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜோர்ஜியாவின் காமிலாவில் அவர் வேலை செய்த டைசன் புட்ஸ் கோழிப்பண்ணையில் சமீபத்திய நாட்களில் இன்னும் இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.”

வேலையிட நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் மருத்துவ விடுப்பு எடுப்பதற்குமான வாக்குறுதிகளுடன் சேர்ந்து, இந்த நோய் வெடிப்பின் போது 40,000 UFCW உறுப்பினர்களுக்கு சிறிது கொடுப்பனவுகளை வழங்குவதற்கு, Pilgrim இன் Pride, Conagra Foods, Cargill, Hormel, JBS, Kraft Heinz, Olymel, மற்றும் Maple Leaf உட்பட இறைச்சி பதப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள ஓர் உடன்படிக்கையை UFCW புகழ்கிறது.

"நிஜமான தலைமைக்காக" நிறுவனங்களைப் பாராட்டியுள்ள UFCW தலைவர் Anthony Perrone மோசடியாக வாதிடுகையில், “இந்த கூலி மற்றும் சலுகை உயர்வுகள் கடுமையான உழைக்கும் இந்த ஆண்கள் பெண்களின் மருத்துவ மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் என்பது மட்டுமல்ல, அவர்கள் நமது நாடு முகங்கொடுத்துள்ள பொது சுகாதார நெருக்கடியை அனைத்து அமெரிக்க குடும்பங்களும் சமாளிப்பதற்குத் தேவையான உணவு அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த உதவுவார்கள்,” என்றார்.

உண்மையில், வருகை பதிவேட்டுடன் பிணைந்துள்ள பல கொடுப்பனவுகளும் தொழிலாளர்களை அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் வேலையில் நீடிக்க அழுத்தமளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019 இல் Perrone க்கு 340,684 டாலர் கிடைத்தது, ஆனால் தசாப்த காலமாக வேலைநிறுத்தங்களும் கூலி விட்டுக்கொடுப்புகளும் UFCW ஆல் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர், மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சித்தொழிலின் சராசரி தொழிலாளர் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலரோ அல்லது ஆண்டுக்கு 30,000 டாலருக்கும் குறைவாகவோ தான் சம்பாதிக்கிறார். தொழிலாளர் சக்தியில் மூன்றில் ஒரு பங்கினர் ஆவணமற்ற தொழிலாளர்கள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கும் நிலையில், பலரும் இதை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.

Sioux Falls ஆலையை மூட நிர்பந்திக்கப்பட்ட பின்னர், ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் ஸ்மித்ஃபீல்ட் தலைமை செயலதிகாரி சுலிவன் கூறுகையில், அந்த ஆலையையும் ஏனைய இறைச்சி பொதி செய்யும் ஆலைகளையும் மூடுவது என்பது "நமது இறைச்சி வினியோக அடிப்படையில் நமது நாடு அபாயகரமான விளிம்புக்கு நெருக்கத்தில் இருக்கும். நமது ஆலைகள் செயல்படவில்லை என்றால் நமது மளிகைக்கடைகளில் கையிருப்பு வைப்பு சாத்தியமில்லை,” என்றார்.

உணவு வினியோகம் உண்மையில் முக்கியமானது தான். ஆனால் மிகப்பெரும் உணவு பதப்படுத்தும் ஏகபோகங்கள் வாடிக்கையாளர்களின் நலன்களையோ அல்லது விவசாயிகளின் நலன்களையோ குறித்து அக்கறை கொண்டவை அல்ல—அவற்றில் பல உணவு விடுதிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து தேவை சரிந்து வருவதால் பாலை வீணாக்கி பயிர்களை நாசப்படுத்தும் பெருமந்தகால நடவடிக்கைளில் தஞ்சமடைந்துள்ளன. இதற்கு நேரெதிராக, அவை அவற்றின் இலாப நலன்களால் உந்தப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் உயிர் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை வேலை செய்விக்க விரும்புகின்றன.

2018 இறுதியில், அப்போது சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் பன்றிகளைக் கொன்று வந்த ஆபிரிக்க தொற்றுக் காய்ச்சல் வினியோகங்களை மட்டுப்படுத்தி, பன்றி விலைகள் அதிகரிப்பதற்கும் மற்றும் உலகின் மிகப்பெரிய பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் பன்றி உற்பத்தியாளர் ஸ்மீத்ஃபீல்ட் நிறுவனத்தின் 2019 இலாபங்களை அதிகரிப்பதற்கும் இட்டுச் செல்லக்கூடும் என்று சுலிவன் வர்த்தக பத்திரிகையான National Hog Farmer இல் பெருமைபீற்றினார்.

அமசன், இன்ஸ்டாகார்ட் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தொழில்சங்கம் சாரா தொழிலாளர்களது நடவடிக்கைகளுடன் சேர்ந்து, உலகெங்கிலுமான மருத்துவக் கவனிப்பு, வாகனத்துறை, பொது போக்குவரத்து மற்றும் துப்புரவு தொழிலாளர்களது ஏனைய வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலை நடவடிக்கைகளைப் போலவே, மாமிச பொதி செய்யும் துறையின் தொழிலாளர்களின் இந்த போராட்டங்களும் பாதுகாப்பற்ற வேலையிடங்களில் அவர்களை வேலையில் வைத்திருப்பதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்த்து, பிரதானமாக சாமானிய தொழிலாளர்களாலேயே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த இயக்கமானது, தொற்றுநோய் ஏற்பட்ட ஆலைகளை மூடுவதற்கும், வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முழுமையாக நஷ்டஈடு வழங்குவதற்கும் கோருவதற்காக ஆலையிடத்திலும் வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், இந்த குழுக்கள், மருத்துவக் கவனிப்பு தொழில் வல்லுனர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் அவசியமான பாதுகாப்பு சாதனங்களையும், பரிசோதனைகள் மற்றும் வேலை பாதுகாப்புக்குரிய சூழலையும் உறுதிப்படுத்தும் வரையில் வேலைக்குத் திரும்பக் கூடாது.

இது, மருத்துவக் கவனிப்பு மற்றும் ஏனைய அனைத்து சமூக உரிமைகள் போலவே உணவு வழங்குவதற்கும், மிகப்பெரும் உணவு பெருநிறுவனங்களை தேசியமயமாக்குவது உள்ளடங்கலாக, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவையின் அடிப்படையில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதுடன் இணைக்கப்பட வேண்டும்.

The author also recommends:

Trump’s campaign to reopen businesses risks hundreds of thousands of lives
[11 April 2020]