இலங்கையில் ஊரடங்கில் சிக்குண்ட பெருந்தோட்ட இளைஞர்கள் தலைநகரில் நிர்க்கதி நிலையில் விடப்பட்டுள்ளனர்

இலங்கை அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 19 அன்று திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முழு அடைப்பு அமுல்படுத்தபட்ட பின்னர், மத்திய மலையக மாவட்டங்களில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடுகளுக்கு போகமுடியாமல் தலைநகர் கொழும்பில் சிக்கிக்கொண்டனர்.

பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி போன்றவற்றின் தலைவர்களின் வாய்ச்சவடால்களுக்கு மத்தியிலும் இந்த இளைஞர்கள் இரண்டு வார காலமாக பசி பட்டினியோடு, ஒரே ஆடைகளை அணிந்துகொண்டு தண்ணீர் வசதிகள் கூட இல்லாமல் நடைபாதைகளில் துன்புறத் தள்ளப்பட்டனர்.

இந்த இளைஞர்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு மாறாக, ஊரடங்கை மீறி தெருவில் திரிவதற்காக பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளனர். பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஹட்டனுக்கு தெருக்கள் வழியாகவும் ரயில் பாதைகள் வழியாகவும் நடந்து செல்வதற்காக இந்த இளைஞர்கள் புறப்பட்ட போது, பொலிசாரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்கள் தெருவில் கிடந்த பின்னரும், இந்த இளைஞர்களால் தோட்டப் பிரதேசங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றக் கூடும் என்ற சாக்குப் போக்கில் அவர்களுக்கு இருப்பிட, போக்குவரத்து அல்லது தனிமைப்படுத்தல் வசதிகளோ செய்துகொடுக்கப்பட்டிருக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்களைப் பிரதநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்ட அரசியல்வாதிள் யாரும் இந்த இளைஞர்களை சென்று பார்வையிடவில்லை. பல்லாயிரக்கணக்கான தோட்டப்புற இளைஞர்கள் ஏற்கனவே வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒரு தலைவரான மனோ கனேசன், மலையக இளைஞர்களை ரயில்களிலும் பஸ்களிலும் வீடுகளுக்கு அனுப்புவதற்கு திட்டமிடுவதாக முகநூலில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம், கொழும்பில் உள்ள இளைஞர்கள் மலையகத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வது ஆபத்தானது. அங்குள்ள லயன் வீடமைப்புகள் இருப்பதால் வைரஸ் பரவலை வேகப்படுத்தும். ஆகவே அவர்கள் கொழும்பிலேயே இருக்கவேண்டும்,’’ எனக் கூறினார்.

இ.தொ.கா. மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் இந்த இளைஞர்களை நடுத்தெருவில் விட்டிருந்தது ஒரு புறம் இருக்க, அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய சர்வகட்சி மகாநாட்டில் பங்குபற்றி, இராணுவத்தின் தலைமையில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தையும், அவசரத் தேவைகளுக்காக வெளியில் வருவோரை ஆயிரக்கணக்கில் கைதுசெய்து தடுத்து வைப்பதையும் மௌனமாக ஆதரித்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கொவிட்-19 வைரஸ் வேகமாக பரவுகின்ற நிலைமையில், எந்தவித சுகாதார பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி அரசாங்கத்துடன் சேர்ந்து பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த தலைமைகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளைப் பெற்று சுகபோகத்தை அனுபவித்து வரும் அதே வேளை, பெருந்தோட்டக் கம்பனிகளுடன் சம்பள கூட்டு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டும், ஆதரவளித்தும் தோட்டத் தொழிலாளர்களை 750 ரூபா என்ற வறிய மட்ட ஊதியத்திலேயே வைத்திருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட இளைஞர்கள் வருமானம் தேடி கொழும்பில் இடுப்பு உடைய வேலை செய்யத் தள்ளப்பட்டிருப்பதற்கு இந்த தொழிற்சங்கங்கள் பொறுப்பாகும்.

இந்த இளைஞர்களின் நிர்க்கதி நிலை பல இளம் ஊடகவியாலளர்களின் முயற்சியால் செய்திகளிலும் முகநூலிலும் அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், பெயர் போட்டுக்கொள்வதற்காக அங்கு விரைந்த ஒரு இ.தொ.கா. தலைவரான செந்தில் தொண்டமான், சுமார் 25 இளைஞர்களை ஊடகவியாலளர்களின் உதவியுடன் ஒரு மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவம் செய்யும் பல இளைஞர் அமைப்புகள் இந்த இளைஞர்களுக்கு உணவளித்து பராமரித்து வருகின்றன. இன்னமும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த டசின் கணக்கானவர்கள் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் அனாதரவாக தங்கியிருக்கின்றனர்.

ஏனைய இளைஞர்கள் எப்படியோ வீடு செல்ல வழி தேடிக்கொண்டுள்ளனர் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம்புகத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு சிக்குண்டுள்ள இளைஞர்கள் கொழும்பு புறநகர் பகுதிகளில் வேலை செய்துவிட்டு, ஊரடங்கிற்குப் பின்னர் வீடு செல்லும் எதிர்பார்ப்பில் கொழும்பு கோட்டையை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து இன்றி தவிப்பவர்களாவர்.

தோட்டப்புறத்தில் இருந்து கொழும்பிலும் அதன் புறநகர் பகுதியிலும் வேலை செய்யும் இந்த இளஞர்கள், பெருந்தோட்டப் பகுதியில் காணப்படும் வறுமை காரணமாக பெற்றோர்களுக்கு பொருளாதார உதவி செய்யவும், தங்களுக்கென்று ஒரு எதிர்காலத்தை தேடிக்கொள்ளவும் வந்தவர்களாவர். இவர்களில் அநேகமானோர் தமது கல்வியைத் தொடர முடியாமல் இடை நடுவில் கைவிட்டவர்களாவர். இந்த இளைஞர்கள் தொழிற்சாலைகள் ஹோட்டல்கள், கட்டிட வேலைகள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளும் மோசமான வேலை நிலைமைகளின் கீழ் சம்பாதிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் பத்து மணித்தியாலங்களுக்கும் மேலாக கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர்.

இளைஞர்களைப் போன்று ஆயிரக்கணக்கான யுவதிகளும் கொழும்பிலும் புறநகர் பகுதியிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் வீடுகளிலும் வேலை செய்கின்றனர். இவர்களும் கிடைத்த வாகனங்களில் ஏறி வீடு சென்றிருந்தனர். சில பெண்கள் கொழும்புக்கு மரக்கறி ஏற்றிவந்த லொரிகளில் எந்தப் பாதுகாப்பும் இன்றி ஏறிச் சென்றுள்ளனர்.

இந்த இளைஞர்களுக்கும் மேலாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதாமையினால் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி கொழும்பில் உள்ள வீடுகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் ஓய்வூதிய வயதைக் கடந்த முதியவர்களும் அடங்குவர்.

கொழும்பில் இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள இளைஞர்கள் தாங்கள் எதிர்கொண்ட துன்பங்களைப் பற்றியும் தமது வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றியும் உலகசோசலிசவலைத்தளத்துடன் பேசினர்.

ஹட்டனைச் சேர்ந்த உமா மகேஸ்வரன், கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துரையில் மேசன் வேலை செய்கின்றார். “நாங்கள் புறக்கோட்டையில் சிக்கிக்கொண்டோம். தோட்டப்புற இளைஞர்கள் இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ளனர் என்று தெரிந்தும் அரசாங்கம் எங்களுக்கு போக்குவரத்தை ஏற்பாடு செய்திருக்கவில்லை. நாங்கள் 14 நாட்கள் புறக்கோட்டை பஸ் நிலையப் பகுதியில் இருந்தோம். சில அமைப்புகள் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தன. காலைக் கடன் கழிப்பது எல்லாமே சிக்கலாகிவிட்டது. வாரக்கணக்காக குளிக்கவில்லை. குடிக்க தண்ணீர் இருக்கவில்லை. சாப்பாட்டுடன் கிடைத்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொண்டோம். ஹோட்டல் ஒன்றில் முகம் கழுவ வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதையும் மூடிவிட்டார்கள். முதலில் சுமார் 30 பேர் இருந்தார்கள், பின்னர் சுமார் 70 பேர் வரை கூடினர். பொலிசார் விரட்டியதால் அநேகம் பேர் எங்கெங்கோ போய்விட்டனர். நடைபாதையில் கடந்த எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை,” என மகேஸ்வரன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “2,000 ரூபா சம்பளத்துக்கு காலையில் 8 மணியில் இருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணிவரை எடுத்த வேலை முடியும் வரை வேலை செய்ய வேண்டும். கட்டிடத் தொழில் மிகவும் கடுமையானது மற்றும் நிரந்தரமானதும் இல்லை. திரும்பவும் வேலை கிடைக்குமா என்பது நிச்சயம் இல்லை, போய் பார்த்தால்தான் தெரியும். ஏனெனில் முதலில் வருபவர்களை வேலைக்கு சேர்த்துத்கொள்வார்கள். மீண்டும் வேலை கிடைக்கும் வரை எங்களுக்கு வருமானம் கிடையாது. திண்டாட்டம் தான்.”

கண்டி, ரங்கல பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், வேலை தேடி வந்த அன்றே ஊரடங்கில் மாட்டிக்கொண்டுள்ளார். “கண்டியில் இருந்து இரண்டு பஸ்களில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் எங்கள் தோட்டத்துக்கு பயணிக்க வேண்டும். அவ்வளவு தூரம் பயணித்து வந்து எனக்கு வேலையும் கிடைக்கவில்லை கையில் பணமும் இல்லாமல் திரிய வேண்டி ஏற்பட்டது. பொலிசில் முறைப்பாடு செய்தோம் ஆனால் அவர்கள் கணக்கெடுக்கவில்லை. வாரியபொல பகுதியில் பண்ணை ஒன்றில் வேலை செய்தேன் சம்பளம் போதாது. அதனால் கொழும்புக்கு வந்தேன். எனக்கு அம்மா மட்டும்தான். அம்மா தேயிலை மலையில் கொழுந்து எடுக்கும் போது வழுக்கு விழுந்து கை முறிந்து போயுள்ளது. அவருக்கும் இப்போது வேலை இல்லாமல் இருக்கின்றார்.”

வத்தளைப் பகுதியிலும் பல இளைஞர்கள் தமது வீடுகளுக்கு போகமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர். அரசாங்கம் கூறியவாறு பொலிசில் பதிவு செய்த பின்னர் ஒரு வராமாகியும் எந்தப் பலனும் இருக்கவில்லை என தலவாக்கலையை சேர்ந்த முரளிதரன் தெரிவித்தார். “இப்பொழுது ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் பொலிஸ் நிலையத்திற்கு போகமுடியாமல் இருக்கின்றோம். தொண்டமான் இந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதனால் அவரது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்டோம். எங்களை வீடுகளுகளுக்கு அணுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆரம்பத்தில் கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் இப்பொழுது தொலைபேசி அழைப்பு எடுத்தால் பதில் அளிப்பதாகவும் இல்லை. எனது பெற்றோர் இது சம்பந்தமாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவர்கள் நாம் இப்பொழுது தங்கியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட (வத்தளை) பொலிஸ் நிலையத்திலேயே முறையிட வேண்டும், தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள்.”

மாடாய் உழைத்து 50,000 முதல் 75,000 வரை சம்பாதித்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இப்போது தொழில் இன்றி வருமானம் இன்றி தோட்டத் தொழிலாளர்களின் 750 ரூபா நாளந்த சம்பளத்தில் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்து வரும் மாதங்களில் அவர்களுக்கு அதே தொழில் மீண்டும் கிடைப்பது நிச்சயமில்லாத நிலையில், தொழிலாளர் குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளன.

Loading