பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் நிதி உயரடுக்கின் நலன்களுக்காக தனிமைப்படுத்தப்படுதலின் முடிவினை முன்கூட்டி அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தனது அரசாங்கத்தின் பேரழிவுகரமான பதிலளிப்பினை பாதுகாக்க பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார். மக்ரோன் நாடு தழுவிய தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு சுகாதார அடிப்படையிலான நியாயத்தையும் வழங்காமல் இறுதி தேதியை அறிவித்தார்.

ஐரோப்பா முழுவதும், ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் பணிக்குத் திரும்புமாறு தொழிலாளர்களை அரசாங்கங்கள் கட்டாயப்படுத்துகின்றன. ஸ்பெயினிலும் ஆஸ்திரியாவிலும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும்போதும், வேலைக்குத் திரும்பவேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் உத்தரவுகளை எதிர்கொண்ட தொழிலாளர்களின் கோபங்கள் சமூக ஊடகங்களில் வெடித்தெளும்பின. தப்பிப்பிழைத்தவர்கள் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில், பெரும்பான்மையான மக்கள் இந்த நோய் பீடிப்புக்கு உள்ளாக வேண்டும் என்று பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிஷ் அரசாங்கங்கள் வெளிப்படையாக அறிவிக்கின்றன.

மத்திய வங்கிகளும் அரசாங்கமும் நிதிச் சந்தைகளில் ஊற்றிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைத் தக்கவைக்க வேலைக்குத் திரும்புவதற்கான தேவையை மக்ரோன் ஏற்கனவே எழுப்பியிருந்தார். திங்களன்று அவரது உரையும் இதைப் பாதுகாக்கும் கட்டமைப்பிற்குள்தான் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் தனிமைப்படுத்தலை பாதுகாப்பாக முடிவுக்கு கொண்டுவர என்ன மாற்றம் செய்யவேண்டும் என்பதைக் குறிப்பிடாமல், ஜனாதிபதி மே 11 வரை தாமதப்படுத்தி அதன் பின்னர் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளார்.

வாழ்வா சாவா என்ற கேள்வியுடன் தொழிலாளர்கள் "செல்வந்தர்களின் ஜனாதிபதியை" நம்ப முடியாது. பிரான்ஸ், ஸ்பெயின், பெரிய பிரித்தானியா மற்றும் அதற்கும் அப்பால் இத்தாலியிலும் பரவிய வேலைநிறுத்த அலைகளின் பின்னரே ஐரோப்பாவில் தனிமைப்படுத்தல் அவசியம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகளாவிய அளவில் தொற்றுநோய்க்கு ஒரு பகுத்தறிவான, திட்டமிடப்பட்ட மற்றும் விஞ்ஞான ரீதியான பதிலை நிர்ப்பந்திக்க தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கம் குறித்த கேள்வி முன்வைக்கப்படுகிறது.

ஒரு Odoxa கருத்துக் கணிப்பின் பிரகாரம், 70 சதவிகித மக்கள் அரசாங்கத்தை நம்பவில்லை என்பதையும், 88 சதவிகிதத்தினர் தனிமைப்படுத்தப்படலை முன்னதாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்றும் கருதுகின்ற நிலையில், மக்ரோன் இந்த வாரம் தனது உரையை தனது சொந்த அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களுடன் தொடங்கினார். "மருத்துவமனைகள் அங்கு வந்த அனைவருக்கும் சிகிச்சையளிக்க முடிந்தது" என்று அவர் தன்னைப் புகழ்ந்தார்.

உண்மையில், மக்ரோனின் சிக்கன செலவுக் குறைப்புக்கு உள்ளான மருத்துவமனைகள், தொற்றுநோய்க்கு உடனடியாக சிகிச்சையளிக்க முடிந்தததன் காரணம் என்னவெனில், அவர்கள் தொற்றுநோயினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே சிகிச்சையளிக்க ஒப்புக்கொண்டனர். பெரும்பாலான நோயாளிகள் தங்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி விடப்பட்டார்கள், அவர்களில் பலர் வீட்டிலே கிடந்து மாண்டனர், சிலர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இதில் அறியப்படாத எண்ணிக்கையிலான வயதானோர் ஓய்வு மனைகளில் இறந்தனர். பிரெஞ்சு மக்களிடையே இறப்பு விகிதத்தில் தற்போதைய 50 சதவீதம் அதிகரிப்பு மருத்துவமனையில் சேர்க்கப்படாத, வீடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் மரணத்தில் பிரதிபலிக்கிறது.

முகமூடிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஜெல்கள், மற்றும் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான கையுறைகள் மற்றும் பாதுகாப்பு மேலாடைகள் இல்லாததால் சர்வதேச அளவில் 119,000 மக்களையும் பிரான்சில் 15,000 க்கும் அதிகமானவர்களையும் கொன்றுள்ளதுடன், தொற்றுநோய் மேலும் மோசமான நிலையை உருவாக்க விடப்பட்டுள்ளது. பிரான்சில் 6,000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏழு மருத்துவர்கள் மற்றும் ஒன்பது சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளனர். பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் மற்றும் முன்னாள் ஒற்றுமை மற்றும் சுகாதார அமைச்சர் அநீயேஸ் பூஷின் மீது நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர், இதனால் இரண்டு அதிகாரிகளும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த பேரழிவுகளை "தவறான தகவல்கள்" என்று குறைமதிப்பீடு செய்ய முன்னர் அவற்றை கடந்து செல்ல மக்ரோன் முயன்றார். அத்ர்ச்சியூட்டும் அலட்சியத்துடன், பிரெஞ்சு ஜனாதிபதி: "தேவையான அனைத்து படிப்பினைகளையும் தகுந்த நேரத்தில் நாங்கள் பெறுவோம்" என மேலும் கூறினார்.

மருத்துவ சிகிச்சைகள், உபகரணங்கள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களைப் பெறுவதற்கான நேரம் தெளிவற்ற எதிர்காலத்தில் அல்ல, ஆனால் அவை இங்கே இப்போதே வேண்டும்.

ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள், நான்கு வாரங்களுக்குள் தனிமைப்படுத்தப்படல் முடிவுபெறுவதுடன் மற்றும் அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறப்பதாக மக்ரோன் அறிவித்தபோதும், மூன்றாம் நிலை மாணவர்கள் திரும்பி வருவது கோடை காலம் வரை தாமதமானது. தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களைப் போலவே வைரஸ் தொற்றுவதற்கான முக்கிய பரிமாற்ற காரணிகளாக இருக்கும்போது ஏன் மீண்டும், சிறுவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதை அவர் விளக்கவில்லை, ஆனால் உண்மையென்னவெனில், சிறிய மாணவர்களின் பெற்றோர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லவும் வணிகத்திற்கான இலாபத்தை உருவாக்கவும் இது அவசியமாக இருக்கும் என்ற வெளிப்படையான உண்மையைத் தவிர அதற்கு வேறொரு காரணமும் இல்லை. பள்ளிகளை மீண்டும் திறப்பது "சமூக பங்காளிகளான, தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தயாரிக்கப்படும்" என்று மக்ரோன் கூறினார்.

ஆயினும்கூட, மே 11 வேலைக்குத் திரும்புவதும் உறுதி செய்யப்படவில்லை என்று மக்ரோன் சுட்டிக்காட்டியதுடன், பேர்லினிலும் இலண்டனிலும் வாதித்த "கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி" என்ற மூலோபாயத்தை விமர்சித்தார். இந்த மூலோபாயத்தை கடைப்பிடித்து பெரும்பான்மையான மக்கள் நோயால் பாதிப்புக்குள்ளாக அனுமதிப்பதற்கு பதிலாக, மக்ரோன் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி மீது பந்தயம் கட்ட முன்மொழிந்தார்.

"இன்று, விரைவில் மேம்படுத்தப்படும் ஆரம்ப தரவுகளின்படி, பிரெஞ்சு மக்களில் மிகச் சிறுபான்மையினர் COVID-19 ன் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், இதன் பொருள் என்னவென்றால், வல்லுநர்கள் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைப்பதில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம், வைரஸ் அதன் சொந்த விருப்பப்படி பரவுவது நிறுத்தப்படுகிறது, ஏனெனில் நம்மில் போதுமானவர்கள் ஏற்கனவே அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உலகின் மிக திறமையான ஆராய்ச்சியாளர்கள் இப்போது இந்த பிரச்சினையில் பணியாற்றி வருகின்றனர், இந்த துறையில் பிரான்ஸ் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது” என ஜனாதிபதி வாதித்தார்.

மக்ரோனிடம் எந்த பதிலும் இல்லாத கேள்விகளை இது எழுப்புகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஒரு தடுப்பூசியின் வளர்ச்சிக்கு “பல மாதங்கள்” -12 முதல் 18 வரை ஆகும் என்று அவர் கூறினார். ஆனால் மே 11 க்கும் அந்த தடுப்பூசி எப்போது கிடைக்கக்கூடும் என்ற காலத்துக்கிடையில் என்ன செய்தாக வேண்டும் என்பதில் அவர் அமைதியாக இருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, "கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி" என்ற மூலோபாயத்தைப் பற்றிய தனது அணுகுமுறையை மக்ரோன் விளக்கவில்லை. இறப்பு விகிதத்தை ஒரு சதவிகிதமாகக் கருதினால் கூட, 70 சதவிகித மக்கள் தொற்றுநோய்க்குள்ளாக அனுமதிப்பது பிரான்சில் அரை மில்லியன் மக்களின் இறப்புகளுக்கு வழிவகுக்கும், மேலும் சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் பேர் இறப்பார்கள்.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு சமூக வெடிப்பு பற்றிய அச்சம் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கிறது-அது மக்ரோனின் கொள்கையில் அரிதாகவே குறிப்பிடப்பட்டாலும். இரண்டு ஆண்டுகால “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களால் பீதியடைந்தும், வாகனத் தொழில் நிறுத்தங்கள் மற்றம் ஐரோப்பிய அமெரிக்க அமசன் நிறுத்தப்பட்டதால் அதிர்ந்துபோயுள்ள அவர், கண்டத்தின் பிற இடங்களைப் போல அதே அரை-இனப்படுகொலைக் கொள்கையை வெளிப்படையாகக் கடைப்பிடிக்கக் கூடாது என்பதைத் தேர்ந்தெடுத்தார்.

வைரஸ் இன் புதிய பரவலைத் தொடர்ந்து, ஒரு தனிமைப்படுத்தலை மீண்டும் விதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட -ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்- சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பங்கு வகித்தது. ஆயினும்கூட, மக்ரோனின் கொள்கைக்கும் பிரிட்டனில் உள்ள போரிஸ் ஜோன்சன் அல்லது ஜேர்மனியில் அஞ்கேலா மேர்க்கலுக்கும் இடையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. நிதி உயரடுக்கின் இலாபத்தை அதிகரிப்பதற்காக, பாதுகாப்பான நிலைமைகளை உருவாக்காமல், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்ப அனைவரும் விரும்புகிறார்கள்.

இந்த மிருகத்தனமான வர்க்க யதார்த்தத்தினை மென்மையாக்க மக்ரோன் பாசாங்குத்தனமாக முயன்றார், 1789 ஆம் ஆண்டின் மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனத்தைத் தொடங்குவதற்கு முன், "எங்கள் நாடு முழுக்க முழுக்க ஆண்களையும் பெண்களையும் சார்ந்துள்ளது", "சமூக வேறுபாடுகள் பொதுவான நன்மையில் மட்டுமே நிறுவப்பட முடியும்" அவர் மேலும் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகள்," இன்று நம்மீது சுமத்தப்படுகின்றன," என அறிவித்தார். அத்துடன் ஆபிரிக்க நாடுகளின் கடனில் ஒரு பகுதி இரத்து செய்யப்படுவதற்கான பேரம் பேசல் இடம்பெறுகிறது என இணைத்துக்கொண்டார்.

இந்த வெற்று வாக்குறுதிகள் மீது தொழிலாளர்களுக்கு எந்த நம்பிக்கையும் இருக்க முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு அவர் அளித்த பேரழிவுகரமான பதிலுடன் கூடுதலாக, பல ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கை மற்றும் போரினால் மக்ரோன் மதிப்பிழந்துபோயுள்ளார். வர்க்க சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக வேறுபாடுகள் இன்று உலகில் பேரழிவு தரக்கூடிய மற்றும் அபாயகரமான பங்கைக் கொண்டுள்ளன என்பதை இந்த நெருக்கடி நிரூபித்துள்ளது. மக்ரோன் நிதி உயரடுக்கின் இரக்கமற்ற மற்றும் இரத்தவெறிகொண்ட பாதுகாவலனாக அறியப்படுகிறார். ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் பெறாத கூடுதல் நேரத்தை இல்லாதொழிக்க அவர் இப்போது வணிக கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவரும் எந்தவொரு நிபந்தனைகளையும் தொழிலாள வர்க்கம் மக்ரோனுடன் ஒத்துழைக்கும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து முழுமையான சுயாதீனத்துடன் தீர்மானிக்க வேண்டும். சுயாதீன சாமானிய தொழிலாளர்களின் பணியிடக் குழுக்கள் மற்றும் அண்டை அயலார் குழுக்களை உருவாக்குவதன் மூலம், தொழிலாளர்கள் தனிமைப்படுத்தலை பாதுகாப்பான முறையில் ஒரு முடிவுக்கு கொண்டுவர போராட முடியும், அத்துடன் அவசியமில்லாத பொருள் உற்பத்திக்கு வேலைக்கு திரும்பவேண்டிய அவசியமில்லை, அவசியமான தொழில்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வைரஸை எதிர்த்துப் போராட பாதுகாப்பான நிலைமைகள் உருவாக்கப்படவேண்டும் மற்றும் கைதிகள் மற்றும் அகதிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்படவேண்டும்.

முதலாளித்துவத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிராக போராடவும், மக்ரோனை வீழ்த்தி தொழிலாளர் அரசாங்கத்தினை நிறுவும் இந்த கோரிக்கைகளுக்காக போராட ஒரு சோசலிசத்துக்கான போராட்டம் அவசியமாக இருக்கிறது.

Loading