இந்தியாவில், ஊரடங்கு உத்தரவினால், பட்டினி சாவிற்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது என்ற பேரில், நரேந்திர மோடி தலைமையிலான இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) அரசாங்கத்தினால் நாடு முழுவதும் மார்ச் 24 லிருந்து எந்த விதமான முன் தயாரிப்பும் இன்றி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், தற்போது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேலையின்மை, வறுமை மற்றும் போதிய மருத்துவப் பாதுகாப்பு போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி, நாடுபூராகவும் வாழத்தள்ளப்பட்டுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், இந்த ஊரடங்கினால், மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மட்டுமின்றி, உணவின்றி கடுமையான சோர்வு, பசி, பட்டினி, மருத்துவ உதவிகளின்மை மற்றும் தற்கொலை போன்றவற்றிற்கு முகம் கொடுக்க தள்ளப்பட்டுள்ளார்கள்.

மருத்துவ நிபுணர்களிடமிருந்து அதிகரித்தளவில் எச்சரிக்கை குரல்கள் எழுந்த போதிலும், முறையான பரிசோதனை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க பிஜேபி அரசாங்கம் மறுத்துவிட்டது, பரந்தளவில் பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க அனைத்து அரசாங்கங்களுக்கும் உலக சுகாதார அமைப்பு (WHO) விடுத்திருந்த உத்தரவை பின்பற்றுவதற்கு பிடிவாதமாக அது மறுத்து வருகிறது.

இந்தியாவின் மருத்துவர்-மக்கள்தொகை விகிதம் 1 க்கு 1,457 ஆகும், இது WHO பரிந்துரைத்த 1 க்கு 1,000 என்பதை விட குறைவாக உள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை நம்பியுள்ள கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு, இந்த விகிதம் 1 க்கு 10,926 வரை வீழ்ச்சியடைகிறது என்று 2019, தேசிய சுகாதார விவரம் கூறுகிறது. “கிராமப்புறங்களில் தகுதிவாய்ந்த சுகாதார நிபுணர்களின் பற்றாக்குறை உள்ளது,” என டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் கூறினார்.

இந்தியாவில் 1.34 பில்லியன் மக்கள் உள்ளனர், இது இரண்டு மில்லியனுக்கும் சற்று கூடுதலான (2,048,979) பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவத்தாதிகள் மட்டுமே உள்ளனர். மேலும், அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் போன்ற காற்றில் பரவும் நோய்த்தொற்றுகள் உள்ள நோயாளிகளைப் பராமரிக்க தொற்று கட்டுப்பாட்டு பயிற்சி தேவைப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்க இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் போதுமான தீவிர சிகிச்சைப் பிரிவு (ICQ) வசதிகள் இல்லை. "இந்தியாவில் போதுமான ICQ படுக்கைகள் இல்லை…" என கர்நாடகாவின் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி இயக்குனர் டாக்டர் ஜி. அருண்குமார் கூறினார்.

இதுவரை தற்கொலைகளால், 53 பேர்கள் இறந்துள்ளனர். ஆம்புலன்ஸ் கிடைக்காததால், பீகாரில் ஒரு தாயார் தனது 3 வயது குழந்தையை வைத்தியசாலைக்கு கையில் சுமந்த சென்றபோது வழியிலேயே பறிகொடுத்துள்ளார். தற்போது, போதிய மருத்துவ வசதிகளின்றி கொரோனா நோய்க்கு முகம் கொடுக்கும் உழைக்கும் மக்களைப் போலவே, பட்டினி சாவிற்கு முகம் கொடுக்கும் மக்களின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றது.

இந்த வைரஸ் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ் நாட்டின் பா.ஜ.க வின் எடுபிடி ஆட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, வேலையை இழந்து வருமானமின்றி தவிக்கும் பெரும்பான்மையான வறிய மக்களிடம் ஊரடங்கு விதிகளை மீறினார்கள் என்ற பேரில் அபராதம் போட்டு பெரும் பணம் வசூல்களை செய்து வருகிறதே அன்றி, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இலாயக்கற்றிருக்கிறது.

தமிழ்நாட்டு போலீசார் ஒரு தமிழ் நாளிதழுக்கு தெரிவித்த கருத்தின்படி, ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சென்ற 2,28,823 இலட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக இதுவரை 2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, மத்தியிலுள்ள பா.ஜ.க அரசினால், தமிழ் நாட்டின் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு, ‘’கொரோனா ஒழிப்புக்கு’’ வழங்கப்பட்ட தொகை வெறும் 800 கோடி ரூபாய்களாகும். அதாவது, 7.7 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்த மாநிலத்திலுள்ள ஒருவருக்கு வெறும் 103 ரூபாய்கள் ஆகும். இத்தொகை, ஒரு நாள் கஞ்சிக்குகூட ஒரு குடும்பத்திற்கு போதாது.

தற்போது வெளிவந்த செய்திகளின்படி, தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக பா.ஜ.க அரசாங்கம் அறிவித்துள்ளது. அவற்றுள் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் ஆபத்து மிகுந்த பகுதிகளாகவும், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஆபத்து மிகுந்த பகுதிகளாக மாறலாம் என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதே நேரம், வேறு மாநிலங்களிலிருந்து வந்து தமிழ் நாட்டில் மலிந்த கூலிக்கு சுரண்டப்பட்டுவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தமிழ் நாட்டின் இதர மாவட்டங்களிலிருந்து வந்து சென்னையில் தங்கி வேலை செய்து வரும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள அற்ப நிவாரண உதவிகள் கூட கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அவர்களிடம் ரேஷன் அட்டைகள் கிடையாது, அவை கிராமங்களில் வாழும் அவர்களின் குடும்பங்களின் கைகளில் உள்ளன.

ஏப்ரல் 15 அன்று காலை சுமார் 11 மணியளவில், சென்னை அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தின் முன்னாள் சுமார் 100 ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த ஆண் மற்றும் பெண் கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, தங்குவதற்கு இடமில்லை, மருத்துவ வசதிகள் மற்றும் உணவு இல்லை என்று போராட்டம் நடத்தினார்க்ள். ஒப்பந்ததாரர்களும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்று ஆத்திரத்துடன் கூறினார்கள்.

அந்த இடத்தில் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) சி.பி.எம் கொடியுடன் காரில் சில கட்சி நிர்வாகிகள் இருந்தார்கள். ஆனால், அந்த போராட்டத்தில் அவர்கள் தலையிடவில்லை. நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் போலீசார் கட்டிட சங்க நிர்வாகிகளுடன் பேசி 12.30 மணியளவில் சில மளிகை பொருட்கள் அரிசி மற்றும் பருப்பு வகைகள் என்பனவற்றை அவர்களுக்கு வழங்கத் தள்ளப்பட்டார்கள்.

இந்த நிலைமையில், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சென்னை ஓட்டேரி பகுதியிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுடன் பேசினார்கள்.

செந்தில் வயது 30, இதுபற்றி குறிப்பிடும்பொழுது ”நான் ஒரு பூ வியாபாரி. எங்களுடைய வீட்டில் மொத்தம் 5 பேர். எனக்கு திருமணம் ஆகவில்லை. என்னுடைய தினசரி வருமானம் 500 ரூபாய். என்னுடைய குடும்பத்தில் என் அண்ணனும் வேலைக்கு செல்கிறார். வீட்டு வாடகைக்கு மட்டும் 8000 செலவிடுகிறோம். 25 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இந்த கொரோனோவுக்கு எந்த பாதுகாப்பு கருவிகளும் எமக்கு கிடையாது. அரசு மக்களிடம் நிதி கேட்கிறது. ஆனால், மக்களை பாதுகாக்க எந்தவித மருத்துவ முகாம்களும் அமைக்காமல் மக்களை பரிசோதனை செய்யாமல் மக்களை பாதுகாக்கவில்லை. இந்த நோய் உலகளவில் உள்ளது. எந்த கட்சியும் இது சம்பந்தமாக அக்கறை செலுத்தவில்லை. 2021 தேர்தலுக்காகதான் அம்மா உணவகத்தில் இலவச உணவும், 1000 ரூபாயும், ரேசன் பொருட்களையும் இலவசமாகவும் கொடுத்தனர். ஆனால், ரேசன் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. இந்த நோய் ஜாதி மதம் பார்க்காமல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தலமைச் செயலக குடியிருப்புகளில் இருவர் இறந்தனர். அந்த பகுதியை தனிமைப்படுத்திவிட்டனர். ஆனால், மற்ற அந்த பகுதியைச் சேர்ந்த யாரையும் முகாமிட்டு பரிசோதிக்கவோ மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவோ இல்லை.

“அன்றாட தேவைக்கு இந்த ரேசன் போதுமானதில்லை. எங்களைப் போன்ற தொழிலாளர்கள் உணவு கூட இல்லாமல் கஷ்டப்படுகின்றோம். அரசியல் கட்சிகள், அந்த கட்சி நிர்வாகிகள் மூலம்தான் யார் யாருக்கு கிடைக்கணும் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கின்றனர். அனைவருக்கும் இந்த உதவி சென்றடையவில்லை. கட்சி உறுப்பினர்களுக்கு தான் இந்த உதவிகள் செல்கின்றன. இந்த நிலைமையில், எந்த அமைப்பும், கட்சியும் நல உதவி செய்யக்கூடாது என்று மத்திய மற்றும் மாநில அரசாங்கம் அறிவித்துவிட்டது. பொதுவாக எந்த கட்சிகளும் அரசாங்கமும் மக்களுடைய நலனை கண்டுகொள்ளவில்லை.’’

அசோக் வயது 39, பால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி குறிப்பிடும்பொழுது ”நான் பால் பண்ணையில் தினக்கூலியாக சம்பளம் 700 ருபாய் பெற்று வந்தேன். எங்களுடைய குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளுடன் நான்கு பேர் உள்ளோம். தற்பொழுது எந்தவித வருமானமும் இல்லாமல் தினசரி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வாடகை வீட்டில் 6500 ரூபாய் குடியிருப்பில் வசித்து வருகின்றோம். குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளேன். நான்தான் படிக்கவில்லை. பிள்ளைகளாவது நன்றாக படிக்கவேண்டும் என்று தனியார் பள்ளியில் சேர்த்தேன். இதே நிலைமை தொடருமானால் நோய் வந்து இறக்கும்முன்பாக உணவின்றி நாங்கள் அனைவரும் இறக்க நேரிடும்.’’

முரளி வயது 50, காய்கறி வியாபாரி குறிப்பிடும்பொழுது ”இந்த மாதிரி நிலைமையை இதுவரை பார்த்ததில்லை. இந்த ஊரடங்கு போடப்பட்டதன் பின்பு கெடுபிடிகள் அதிகம். நாங்க வியாபாரம் பண்ணுவது இலாபத்திற்கு அல்ல. நாங்கள் ஏற்கனவே வியாபாரம் பண்ணித்தான் உயிர் வாழ்ந்து வருகிறோம். இந்த நெருக்கடியான காலத்தில் மக்களுக்காக, எங்களுக்கு இலாபம் இல்லாவிட்டாலும் ஒரு சேவையாக செய்து வருகிறோம். என் பெயரைக்கூட போடுங்கள் பரவாயில்லை யாரும் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை. காலையில் 7 மணிக்கு துவக்கி 12 மணிக்குள்ளாக முடிக்கவேண்டும். இந்த நோய் வருவதற்கு முன்பு வியாபாரம் நன்றாக இருந்தது. தற்பொழுது நெருக்கடியான சூழலில் கடினமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இந்த ஊரடங்கிற்குப் பிறகு காய்கறிகள் விலைகள் உயர்ந்துள்ளது. அத்தோடு, போக்குவரத்து வாகனம் இல்லாமல் அதிக செலவில் காய்கறிகள் வாங்கி வரவேண்டியுள்ளது. அதேநேரத்தில் மக்களிடம் அதிக விலைக்கு விற்க முடியாத சூழலில்தான் இருக்கிறோம். போட்ட முதலே எங்களுக்கு கிடைக்கவில்லை. நஷ்டத்தில்தான் வியாபாரம் நடக்கிறது.”

முருகம்மா வயது 45, துப்புரவு தொழிலாளி குறிப்பிடும் பொழுது ”நான் ஒரு நிரந்தர தொழிலாளி. என்னுடைய சம்பளம் 20,000. காலையில் 6.30 மணிக்கு வேலைக்கு வந்து பகல் 2 மணிக்கு ஆபீசில் போய் கையெழுத்து இடவேண்டும். எங்களுக்கு மருத்துவ பரிசோதனை பண்ணப்படவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த ஊரடங்கிற்கு பிறகு 5000 தருவதாக கூறினார்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஊரடங்கிற்கு பின்னர் எங்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இந்த நேரத்தில் உயிருக்கு பயந்து சில தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. சாதாரணமாக துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் வேலை நோய் தொற்று ஏற்படும் ஆபத்தில்தான் நாங்கள் வேலை செய்கிறோம். ஆனால், இந்த கொரோனா நோயினால் மேலும் சுலபாமாக தொற்று ஏற்படும் அபாயத்தில்தான் வேலை செய்கிறோம். நான் ஒரு நிரந்தர தொழிலாளி ஆனால் என்னோடு ஒப்பிடும்பொழுது ஒப்பந்த தொழிலாளிக்கு 11,000 சம்பளம். அதைத்தவிர எந்தவித சலுகையும் அவருக்கு கிடையாது. இந்த நோய்க்கு பயந்து ஒப்பந்த தொழிலாளிகள் வேலைக்கு வரவில்லை.’’

குமார் வயது 46, ஆட்டோ தொழிலாளி. ஒரு தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு பற்றி கேட்டவுடனே அவர் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘’25 நாட்களாக வேலையில்லை. தினம் 800 ரூபாய் வருமானம். ஆட்டோ வங்கி லோன் மூலம் எடுத்தது. ஆனால், அந்த லோனை சி.ஐ.டி.யு வாங்கி தருவார்கள். அதில் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால்தான் லோன் வாங்கி தருவார்கள். தற்போது ஆட்டோ ஓடாததால் 5000 அரசாங்கம் தருவதாக கூறிய பணம் கிடையாது. அதற்கு காரணம் நலவாரியத்தில் பதிவு செய்தால் மட்டுமே இந்த பணம் கிடைக்கும். இதுவரையில் யாருக்கும் பணம் கிடைக்கவில்லை.

“ஓட்டேரியில் முஸ்லீம், இந்து, கிறிஸ்தவர்கள் என நாங்கள் சமூகமாக ஒன்றாகத்தான் வாழ்ந்து வருகிறோம். முஸ்லீம்களால்தான் இந்த நோய் பரவியது என்று பிரச்சாரம் பண்ணி முஸ்லீம்கள் வாழும் பகுதியை தனிமைப்படுத்தி விட்டார்கள். அதேபோன்று சீனாவால்தான் நோய் பரவியது என்று கூறுகின்றனர். இதுவரையில் எந்த அரசாங்கம் வந்தாலும் தொழிலாளர் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. மேலும் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் மலையாளிகள் என்று எங்களை இந்த கட்சிகள் பிரித்து வைத்துள்ளது. நீங்கள் குறிப்பிட்டவாறு தொழிலாளர்கள் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். தற்போது, தி.மு.க, அ.தி.மு.க கட்சி போன்றுதான் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் வித்தியாசம் இல்லாமல் உள்ளனர்.’’

Loading