உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் நிதியுதவியை நிறுத்துகிறார்: “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்"

18 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 மற்றும் ஏனைய தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதில் மிக முக்கிய உலகளாவிய அமைப்பான உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக செவ்வாய்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

ட்ரம்பின் நடவடிக்கை, வெளி எதிரிகள் மீது, சீனா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவக் கவனிப்பு அமைப்பின் மீது பழிசுமத்துவதன் மூலமாக COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அவரின் சொந்த நிர்வாகத்தினது தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகும். இப்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ள இந்த தொற்றுநோய் உலகெங்கிலும் 134,000 க்கு அதிகமானவர்களைப் பலி கொண்டுள்ளது, இதில் அமெரிக்காவில் மட்டுமே 644,000 நோயாளிகளும் 28,500 இக்கு அதிகமான உயிரிழப்புகளும் உள்ளடங்கும்.

ட்ரம்பின் முடிவு அடித்தளத்தில் குரூரமான மற்றும் பிற்போக்கான அரசியல் கணக்கீடுகளைக் கொண்டுள்ள அதேவேளையில், அது நிஜமான மற்றும் நாசகரமான பாதிப்பைக் கொண்டிருக்கும். COVID-19 தொற்றுநோய் உலகெங்கிலும் பரவி வருகின்ற நிலையில், WHO இக்கு நிதியுதவிகளை நிறுத்துவதென்ற ட்ரம்பின் முடிவு, உலக சுகாதார அமைப்பின் சாதனங்கள், பணியாளர்கள் மற்றும் வல்லுனர்களின் ஒத்துழைப்பு பெறும் மருத்துவக் கவனிப்பு அமைப்புகளைக் கொண்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் எண்ணற்ற மக்களின் உயிரிழப்பை அர்த்தப்படுத்தும்.

President Donald Trump speaks about the coronavirus in the Rose Garden of the White House, Wednesday, April 15, 2020, in Washington. (AP Photo/Alex Brandon)

“உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவியை நிறுத்துவதென்ற ஜனாதிபதி ட்ரம்பின் முடிவு இது தான் — மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம்,” என்று Lancet மருத்துவ இதழின் தலைமை பதிப்பாசிரியர் ரிச்சர்ட் ஹோர்டன் தெரிவித்தார். “ஒவ்வொரு விஞ்ஞானியும், ஒவ்வொரு சுகாதார தொழிலாளரும், ஒவ்வொரு குடிமக்களும் உலகளாவிய நல்லிணக்கம் மீதான இந்த திகைப்பூட்டும் காட்டிக்கொடுப்பை எதிர்க்க வேண்டும் மற்றும் கிளர்ச்சி செய்ய வேண்டும்,” என்றார்.

உலக சுகாதார அமைப்பின் ஆதாரவளங்களில் பெரும்பான்மை ஆபிரிக்காவுக்கும் மத்திய கிழக்கிற்கும் செல்கின்றன. இந்த பிராந்தியங்கள் இதுவரை முறையே COVID-19 ஆல் 910 மற்றும் 6,815 இறப்புகளை சந்தித்துள்ளன, இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இவை உலகிலேயே மிகவும் பாதிக்கப்படும் சில பகுதிகளாகவும் உள்ளன, இவை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏகாதிபத்திய சக்திகளால் வறுமைக்கு ஆளாக்கப்பட்டு சுரண்டப்பட்டுள்ளன. ஈராக், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் மற்றும் யேமென் போன்ற நாடுகளின் மருத்துவமனைகளும் மருத்துவ உள்கட்டமைப்பும் கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் நினைவில் மறவாதளவில் குண்டுவீசப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. இந்த தொற்றுநோய் விகிதம் சிறியளவில் அதிகரித்தாலும் கூட பெரிதும் நடப்பில் இல்லாத மருத்துவக் கவனிப்பு முறைகள் கூட்ட நெரிசலில் நிறைந்து, நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளில் வேகமான அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் Tedros Adhanom Ghebreyesus நேற்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டதைப் போல, இந்த கொரொனா வைரஸிற்கு எதிராக முன்வரிசையில் நிற்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக "போலியோ, தட்டம்மை, மலேரியா, இபோலா, எச்ஐவி, காசநோய் … இன்னும் பல நோய்கள் மற்றும் நிலைமைகள்" உட்பட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் பெருமளவில் இல்லாத நோய்கிருமிகளுக்கு எதிராகவும் நிற்கிறது. இத்தகைய தொற்றுநோய்களுக்கு எதிராக போராட தசாப்தங்களாக அந்த அமைப்பு மில்லியன் கணக்கிலான தடுப்பூசிகளை வழங்கி உள்ளது, இந்த திட்டங்கள் இப்போது நிதியுதவியின்றி ஒரு பொறிவை முகங்கொடுக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த COVID-19 தொற்றுநோய்க்கான விடையிறுப்பில் மேற்கத்திய அரசாங்கங்களின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அதை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் 11 இல், டாக்டர் டெட்ரொஸ் குறிப்பிடுகையில் COVID-19 க்கு விடையிறுப்பதில் அரசாங்கங்களின் பாகத்தில் "எச்சரிக்கையூட்டும் மட்டத்திற்குச் செயலின்மை" இருப்பதாக எச்சரித்தார்.

“மக்களிடையே மொத்தமாக எதிர்ப்புசக்தியை" (herd immunity) உருவாக்குவதற்காக மக்களின் கணிசமான பாகங்களில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதை அனுமதிப்பதென்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு விடையிறுத்தும், ஏனைய மேற்கத்திய அரசாங்கங்களினது அறிவிக்கப்படாத கொள்கைக்கு விடையிறுத்தும், டாக்டர் டெட்ரொஸ் ஒரு "தார்மீக சீரழிவை" குறித்து எச்சரித்தார்.

“வயதானவர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் உயிரிழப்புகளை தீவிர பிரச்சினையாக எடுக்காமல் இருப்பது தார்மீக சீரழிவுகளில் ஒன்று. எந்தவொரு தனிநபரும், அவரின் வயது என்னவாக இருந்தாலும், எந்தவொரு மனித உயிரும் கருத்திக் கொள்ளத்தக்கதே,” என்றார்.

முரணானரீதியில், இந்த தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ட்ரம்பின் மூலோபாயம், பெரிதும் மறுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்த நோய்தொற்று ஏற்பட்ட நாடுகள் "நோயாளிகளை முன்னுரிமைப்படுத்துவதும், விரிவாக நோயாளிகளைக் கண்டறிவதிலும் மற்றும் உடனடியாக பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் செய்வதிலும், நோயின் சிக்கலான சுவடுகளைக் கண்டறிவதும் மற்றும் நெருக்கமான தொடர்புகளைக் கடுமையாக தனிமைப்படுத்தி வைப்பும்" அவசியம் என்று ஜனவரியிலேயே சீனாவிடமிருந்து எச்சரிக்கைகள் வந்திருந்த போதினும், அல்லது சீனாவுக்கான WHO இன் திட்டங்களில் இருந்து பெப்ரவரி 24 இல் அதிக அவசரமான அறிக்கைகள் வந்திருந்த போதினும், ட்ரம்ப் நிர்வாகம் மார்ச் மாத மத்திய காலம் வரையில் பாரிய பரிசோதனைகள் எதையும் செய்யவில்லை. அதற்குள், அந்த வைரஸ் முக்கியமாக பரிசோதனை செய்யப்படாத இரண்டு மாதங்களில் பரவி இருந்தது.

இதன் விளைவாக, அமெரிக்காவின் நோயாளிகள் சீனாவை விட ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகமாகவும், உயிரிழப்புகள் ஏறத்தாழ ஒன்பது மடங்கு அதிகமாகவும் உள்ளது. நேற்று மீண்டும் ட்ரம்ப் குறிப்பிடுகையில், “நமது ஆக்ரோஷமான மூலோபாயம் செயல்பட்டு வருகிறது,” என்றதுடன் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை முறையே பதிவான 2,407 மற்றும் 2,482 உயிரிழப்புகளைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு தீவிர நடவடிக்கைகளும் எடுக்காமல், ட்ரம்ப் இந்த வைரஸை ஒரு வெளிநாட்டு படையெடுப்பு என்று சித்தரிக்க முயன்றுள்ளதுடன், இந்த புதிய கொரொனா வைரஸை மீண்டும் மீண்டும் "சீன வைரஸ்" என்றும் அல்லது "வெளிநாட்டு வைரஸ்" என்றும் அழைத்து வருகிறார். மேலும் இந்த வெடிப்பை "குங்க் காய்ச்சல்" என்று குறிப்பிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் பாதுகாக்கிறார்.

நிதியுதவி வெட்டை அறிவிக்கையில், “WHO உரிய நேரத்தில் வெளிப்படையான முறையில் தகவல்களைப் போதுமானளவுக்குப் பெறுவதையும், கூர்ந்து ஆராயவும் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டதாக,” ட்ரம்ப் வாதிட்டார். “WHO சீனாவின் வெளியீடுகளைச் சார்ந்திருப்பது உலகளவில் நோயாளிகளின் எண்ணிக்கையை இருபது மடங்கு அதிகரிக்க செய்திருக்கலாம்" என்பதையும் "அவர்களின் தவறுகளாலேயே இந்தளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சீன-விரோத பிரச்சாரத்தால் வர்ணமடிக்க தொடங்குவதற்கு முன்னர் வெளியான இந்த வெடிப்பைக் குறித்த ஆரம்ப அறிக்கைகள் மீது எந்தவொரு மீளாய்வும் இத்தகைய வாதங்களைப் பொய்களாக அம்பலப்படுத்துகின்றன.

சீன அரசாங்கம், ஜனவரி 6 இல், ஒரு புதிய நிமோனியா-போன்ற நோய் குறித்து உலக சுகாதார அமைப்பையும் உலகின் ஏனைய பகுதிகளையும் எச்சரிக்கைப்படுத்தியது. ஜனவரி 11 வாக்கில், புதிய வகையான சுவாச தொற்றைக் கையாள்வது குறித்து WHO எச்சரிக்கைகளைப் பிரசுரித்ததுடன், அதற்கு மறுநாள் சீனாவினால் அந்த கிருமியின் உயிரணு வடிவம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்நேரத்தில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த தொற்றுநோய் வேறெங்கேனும் கண்டறியப்படலாமென அதன் எச்சரிக்கை மட்டத்தை அதிகரித்தது.

அமெரிக்க பிரதிநிதிகள் உட்பட ஒரு சர்வதேச குழுவை WHO விரைவாக சீனாவுக்கு அனுப்பியது, அவர்கள் அனைவருமே அவர்களின் நகர்வுகள் மீது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர்.

ஒரு நூற்றாண்டிலேயே மிகவும் அபாயகரமான இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு ட்ரம்ப் அரை பில்லியன் டாலர் ஒதுக்குகின்ற அதேவேளையில், அவர் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிரதான பெருநிறுவனங்களுக்கான பிணையெடுப்புக்கு இன்னும் நிறைய கிடைக்கும் என்ற உறுதிமொழிகளுடன் சேர்ந்து குறைந்தபட்சம் 5 ட்ரில்லியன் டாலரை ஏற்கனவே கையளித்துள்ளார். ஒரு வரி வெட்டும் இதில் உள்ளடங்கும், அது அமெரிக்காவின் மில்லியனர்களுக்கு 73.8 பில்லியன் டாலரை வழங்கும், இது கொரொனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக WHO கோரியுள்ள தொகையை விட 100 மடங்கிற்கும் அதிகமாகும்.

டாக்டர் டெட்ரொஸ் புதன்கிழமை சுட்டிக்காட்டிய, WHO இன் சாசனம், “மருத்துவத்தில் அதிகபட்சமாக எட்டக்கூடிய தரமுறைகளைப் பெறுவது, இனம், மதம், அரசியல் நம்பிக்கை, பொருளாதார அல்லது சமூக நிலைமைகளின்படி பாரபட்சமின்றி, ஒவ்வொரு மனித உயிர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்,” என்று குறிப்பிடுகிறது.

இந்த உயர்ந்த கருத்துக்கள், COVID-19 இக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலுமான அனைத்து மருத்துவர்களும், தொற்றுநோய் நிபுணர்களும் மற்றும் விஞ்ஞானிகளும் ஏற்றுள்ள விஞ்ஞான, பகுத்தறிவு மற்றும் நல்லிணக்க கோட்பாடுகளின் உருவடிவமாகும். ஆனால் ட்ரம்ப் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளிலும் உள்ள அவரின் சமதரப்பினர் உள்ளடங்கலாக ஆளும் வர்க்கத்திற்கும் மற்றும் அதன் பல்வேறு பிரதிநிதிகளுக்கும் இத்தகைய கருத்துக்களை முறையீடு செய்ய முடியாது என்பதில் உழைக்கும் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இத்தகைய கோட்பாடுகளைப் பாதுகாக்க கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். பாரியளவில் பரிசோதனைகளை விரிவாக்கியும், மருத்துவக் கவனிப்பை அதிகரித்தும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரித்தும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான இந்த போராட்டத்தில், இந்த தொற்றுநோய்க்கான எந்தவொரு தீர்வும் முதலாளித்துவம் சுத்தமாக தகைமையற்றுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் திட்டமிடல் மட்டங்கள் அவசியப்படுகின்றன என்பதைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பினைகள் பெற்றாக வேண்டும், அனைத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது பிரிக்கவியலாதவாறு சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

Bryan Dyne