COVID-19 தொடர்பாக சீனா மீதான தாக்குதல்களை அமெரிக்கா அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகசுகாதார அமைப்புக்கு (WHO) நிதிவழங்குவதை இடைநிறுத்துவதென்ற அவரின் குற்றவியல்தனமான முடிவைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பத்தாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துள்ள உலகளாவிய COVID-19 தொற்றுநோய்க்குச் சீனா மீது பழிச்சுமத்தி அதற்கு எதிராக ஒருதலைபட்சமான தாக்குதலைத் தொடுத்து வருகிறார்.

ட்ரம்பின் கருத்துக்கள் இப்போது உலகிலேயே அதிகபட்ச நோயாளிகளையும் மரண எண்ணிக்கையையும் கொண்டுள்ள அமெரிக்காவில் அந்த வைரஸ் பரவுவதற்கு அனுமதித்த அவர் நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகும். மிகவும் அடிப்படையாக, ட்ரம்ப் இந்த COVID-19 தொற்றுநோயை அடியிலிருக்கும் சீனா உடனான வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதல் திட்டநிரலை அதிகரிப்பதற்காக சாதகமாக்கி வருகிறார்

ட்ரம்ப் அவரின் புதன்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில், சீனா வெளிப்படைத்தன்மையை மறைத்ததாக குற்றஞ்சாட்டினார். COVID-19 நோயாளிகளும் மரணங்களும் சீனாவை விட அமெரிக்காவில் ஏன் அதிகமாக உள்ளன என்று வினவிய போது, “சீனா என்றழைகப்படும் அந்த பரந்த நாட்டின் அந்த எண்ணிக்கையை நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா. … உண்மையில் யாராவது அதை நம்புவாரா?” என்றார்

President Donald Trump speaks during a news conference with Finnish President Sauli Niinisto at the White House in Washington (AP Photo/Carolyn Kaster)

COVID-19 சீனாவின் வூஹானில் உள்ள ஈரமான சந்தை (wet market) இல் தோன்றியதல்ல, மாறாக அதே நகரில் உயர் தொழில்நுட்ப வைரஸ் ஆய்வு ஆய்வுக் கூடத்தில் தோன்றியது என்ற அதிவலதின் சூழ்ச்சி தத்துவத்திற்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார். இந்தவைரஸ் ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை என்று அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) உட்பட விஞ்ஞான வல்லுனர்களால் திட்டவட்டமாக இந்த வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தத்துவத்தைக் குறித்து வினவியபோது, ட்ரம்ப் அதை கைவிடவில்லை மாறாக "மேலும் மேலும் நாம் இது போன்ற கதைகளைக் கேள்விப்படுகிறோம்… பார்ப்போம்,” என்று அறிவித்ததுடன், “ஆனால் நடந்துள்ள இந்த பயங்கர நிலைமையை நாங்கள் மிகவும் முழுமையாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். 

பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர் Fox News உடன் பேசிய வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ இன்னும் வெளிப்படையாக, இவ்வாறு அறிவித்தார்: “அவர்களிடம் இந்த ஆய்வகம் இருப்பதை நாங்கள் அறிவோம். ஈரமான சந்தைகளைப் பற்றி எங்களுக்குத் தெரியும். வைரஸ் வூஹானில் இருந்து தோன்றியது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றிணைகின்றன”.

பெருவாரியாக விஞ்ஞானத்துறை கருத்துகள் அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு முரணாக இருக்கின்ற போதினும், பொம்பியோவும் சரி ட்ரம்பும் சரி அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக ஒரேயொரு துளி ஆதாரமும் வழங்கவில்லை. 

ட்ரம்பின் தாக்குதல்கள் பிரதான இலக்கு சீனா என்பதை தெளிவுபடுத்துகிறது. பெய்ஜிங்கின் ஒரு உடமை என்று அவர் குற்றம் சாட்டிய WHO அல்ல. மேலும், இது சீனாவின் பெயரை இழிவாக்குவதற்கான ஒரு பரந்த தாக்குதலுக்கான சமிக்ஞையாகும்.

தொற்றுநோயை தவறாகக் கையாண்டதற்காக சீனாவைத் தண்டிக்கும் நோக்கில் இரண்டு குடியரசுக் கட்சி செனட்டர்கள் இந்த வாரம் சட்டவரைவை முன்வவைத்துள்ளனர். வைரஸ் பற்றிய தகவல்களை அடக்கியதாகக் கூறப்படும் சீன அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க "2020 ஆம் ஆண்டின் சீன மருத்துவ தணிக்கை மற்றும் Cover Ups சட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான" தனது விருப்பத்தை செனட்டர் டெட் க்ரூஸ் அறிவித்தார்.

அதேநேரத்தில், செனட்டர் ஜோஷ் ஹவ்லி (R-MO) "COVID-19 சட்டத்தின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்கல்" ஒன்றை முன்மொழிந்தார். இது தகவல்களை நிறுத்தி வைத்ததற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்குத் தொடர உதவும். "சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்கள், வஞ்சகம் மற்றும் திறமையின்மை ஆகியவை COVID-19 இனை ஒரு உள்ளூர் நோய் வெடிப்பிலிருந்து உலகளாவிய தொற்றுநோயாக மாறியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன," என்று ஹவ்லி கூறினார்.

இந்த வாதங்கள் அனைத்திலும் என்ன சம்பந்தப்பட்டுள்ளது என்றால் மலைப்பூட்டும் அளவிற்கு பொய்கள், திரித்தல்கள் மற்றும் பாசாங்குத்தனமுமாகும்.

உடனடியாக புரிந்து கொள்ளமுடியாதிருந்த தன்மைகளுடன் ஓர் அறியப்படாத நோயைக் குறித்து சீன ஆட்சிஎன்ன தான் மூடிமறைப்பை வைத்திருந்தாலும், அந்த நோயின் அபாயங்களை அது உணர்ந்த உடனேயே பொதுமக்களையும் உலகையும் எச்சரிக்க அது விரைவாகவே நடவடிக்கை எடுத்தது. ஓர் அறியப்பட்ட அபாயம் மீது—உயிராபத்தான எளிதில் பரவக்கூடிய இந்தநோய்க்கு— உலகளவில் அரசாங்கங்கள், அதுவும் குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகம், நடவடிக்கை எடுக்கத் தவறியதே இந்த உலகளாவிய உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கான நிஜமான காரணமாகும். 

இன்றுவரை பெரும்பாலும் சீன எதிர்ப்பு தீவிர வலதுசாரிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இக்கருத்தானது குறிப்பிடத்தக்க வகையில் இப்போது அமெரிக்காவில் உள்ள ஸ்தாபக ஊடகங்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு பெருப்பிக்கப்பட்டுள்ளது.

Associated Press இந்த வாரம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. சீன அதிகாரிகள் ஜனவரி 14 முதல் ஜனவரி 20 வரை ஆறு நாட்களுக்கு வைரஸ் பற்றிய தகவல்களை அடக்கியதாகக் கூறி, நோய்த்தொற்றுகள் விரைவாக பரவ வழிவகுத்தது. இந்த அறிக்கை சீன ஆட்சி நோயைப் பற்றிய முக்கியமான தரவுகளை மறைத்து வைத்ததற்கான ஆதாரமாக எடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் வேகமாக பரவக்கூடியதாக தெரிந்த மற்றும் ஜனவரி 9 இல் முதல் உயிரிழப்பு ஏற்படுத்திய, முதன் முதலில் டிசம்பரில் தோன்றிய ஒரு நோயின் இயல்பைப் புரிந்து கொள்ள ஓர் அரசாங்கம் போராடிக் கொண்டிருந்தது என்பதே அந்த அறிக்கையிலிருந்து வெளிப்படுகிறது. COVID-19 இன் உயிரணு வடிவம் ஜனவரி 13 இல் பிரசுரிக்கப்பட்டதுடன், ஆய்வு முன்னேற்றங்களைக் குறித்து WHO தொடர்ந்து பாராட்டி வந்தது. 

Associated Press அறிக்கை விளக்கியது போல, ஜனவரி 15 ம் திகதி பெய்ஜிங்கில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நிதிகளைப் பெறுவதற்கும், சுகாதாரப் பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பணிக்குழுக்களை அமைக்கும் மிக உயர்ந்த அளவிலான அவசரகால நடவடிக்கையை தொடங்கியது. காய்ச்சல் மருத்துவமனைகள் அமைக்கவும், சந்தேகத்திற்கிடமான தொற்றுக்களை அடையாளம் காணவும், மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கருவிகளுக்காகவும் தேசிய சுகாதார ஆணையம் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியது.

ஜனவரி 20 அன்று, ஜனாதிபதி ஜி ஜின்பிங் நோயின்வெடிப்பை மிகக்கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். AP அறிக்கை ஒப்புக் கொண்டபடி, ஆறு நாட்களுக்கு முன்னர் அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கக்கூடும் என்ற மதிப்பீடுகள் “பின்னோக்கிப் பார்க்கக்கூடியவையே”. அதாவது, பின்னோக்கிப்பார்க்கையில் அவை பயனுள்ளதாகவே இருக்கும்.

மேலும், கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளபடி, அவர் அமெரிக்காவை தயாரிப்புச்செய்ய இரண்டு மாதங்கள் இருந்தது. “ட்ரம்ப் தனது சொந்த ஊழியர்களின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, நோயைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்று நிராகரித்தார். அதே நேரத்தில் அரசாங்கம் மருத்துவப் பொருட்களின் விநியோகங்களை அதிகரிக்கவோ அல்லது பற்றாக்குறையாக இருந்த சோதனை கருவிகளை தேடிக்கொள்ளவோ இல்லை”.

இன்னும்கூட குறிப்பிடத்தக்க வகையில், இந்தCOVID-19 வூஹானின்ஒரு வைரஸ் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்ற சூழ்ச்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு கருத்துரை கட்டுரையை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்தது. மீண்டுமொருமுறை இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களை விட திணிப்பதை அடித்தளமாக கொண்டுள்ளன — 2018இல் அந்த ஆய்வகத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தலாம் என்றும், அமெரிக்காவின் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளுக்கும் பரிந்துரைத்தனர், ஆனால் அவை பின்னர் வந்து சேரவே இல்லை. 

இவ்வாறிருக்கையிலும்கூட அது விமர்சனபூர்வமற்ற முறையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி கூறியதை மேற்கோளிடுகிறது: “அது [COVID-19] முற்றிலும் இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு என்ற கருத்து சூழ்நிலையைச் சார்ந்துள்ளது. அந்த ஆய்வகத்திலிருந்து அதை கசியவிட்டதற்கான ஆதாரமும் சூழ்நிலையைச் சார்ந்துள்ளது. இப்போதைக்கு, அந்த ஆய்வகத்திலிருந்து கசியவிடப்பட்ட அதன் தரப்பில் உள்ள கணக்கு முக்கிய புள்ளிகளைக் கொண்டிருப்பதுடன், மற்ற தரப்பில் ஏறத்தாழ எதுவுமே இல்லை,” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதாவது, அந்த வைரஸ் பற்றிய ஓர் ஆய்வே அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என்ற விஞ்ஞானத்துறை வல்லுனர்களின் கருத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. “முடிவான ஆதாரம் இனிமேல் தான் வரவிருகிறது,” என்பதை ஒப்புக் கொள்ளுமாறு அந்த கட்டுரை நிர்பந்திக்கிறது. “முடிவான ஆதாரம்" என்பது மட்டுமல்ல, மாறாக மொத்தத்தில் எந்த ஆதாரமுமே இல்லை.

சீனா மீதான ட்ரம்பின் குரூரதாக்குதல்கள் பரந்த ஊடகங்களில் இப்போது மதிப்பளிக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மை, COVID-19 நெருக்கடியால் வெளிவந்துள்ள அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவை பெய்ஜிங் ஆதாயமாக்கிக்கொள்ள அனுமதிக்க கூடாது என்பதில் வாஷிங்டனில் நிலவும் பரந்த உடன்பாட்டின் மற்றொரு அறிகுறியாகும்.

தொற்று நோய்க்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பிலிருந்து அப்பாற்பட்டு, உலகளாவிய பொருளாதாரம் மந்தநிலைமையை நோக்கி மூழ்குகையில் இந்த வெடிப்புக்கு முன்னரே அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்த புவிசார் அரசியல் விரோதங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. பெருமந்தநிலைமைக்குப் பிந்தைய மிக மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய அந்தஸ்தின் மீது சீனாவினது எந்தவொரு சவாலையும் தடுக்க கிடைக்கும் அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்த தீர்மானகரமாக உள்ளது. 1930 களைப் போலவே, இது வர்த்தகப் போர் மற்றும் போருக்கான பாதையாகும்.

Loading