கோவிட்-19 இறப்புக்கள் பெரிதும் அதிகரித்து வரும் மிகக் கொடிய நிலைமைகள் குறித்து பிரேசிலிய செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகி நோயுக்குள்ளாவதற்கும், சிலர் இறப்பதற்கும் காரணமாகவுள்ள தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண (PPE) பற்றாக்குறை காரணமாக பல பிரேசிலிய நகரங்களில் செவிலியர்களும் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்களும் வேலைநிறுத்தங்களையும் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வாரம் முழுவதுமாக நோய்தொற்று அதிரடியாக அதிகரித்ததன் பின்னர், பிரேசிலில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30,425 ஐ எட்டியது, அதேவேளை இறப்பு எண்ணிக்கை அப்படியே 1,924 ஆக இருந்தது. என்றாலும், சுகாதார புலனாய்வு மற்றும் செயல்பாட்டு மையம் (Health Intelligence and Operations Center – NOIS) மேற்கொண்ட ஒரு ஆய்வு, மிகக் குறைவாக பதிவு செய்யப்படுவது மற்றும் பரிசோதனை பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக, உண்மையான நோயாளிகளின் எண்ணிக்கை, அறிக்கை செய்யப்பட்டதைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது, அதாவது, 350,000 க்கு மேலானோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மேலும், பல கோவிட்-19 இறப்புக்களும் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பித்ததிலிருந்தே கொரோனா வைரஸ் நெருக்கடி, பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோவின் நடவடிக்கைகளால் சூழ்நிலை மிகவும் மோசமாக்கப்பட்டிருந்தது. அதாவது உடனடி இலாப நலன்களுடன் மோதலை உருவாக்கும் நோய்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நாசப்படுத்தும் வகையிலான குற்றகரமான பிரச்சாரத்தையே அவர் மேற்கொண்டு வந்தார்.

பெலேமில் உள்ள பாதுகாப்பற்ற நிலைமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் செவிலியர்கள் வீதியை முற்றுகையிடுகின்றனர் [WhatsApp]

இந்த சூழ்நிலை பிரேசிலிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையின் சீர்குலைவிற்கு இட்டுச்சென்றது. நாட்டில் இந்த தொற்றுநோய் வெடிப்பு ஏற்பட்டதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் வேலை ஆகிய இரண்டின் ஆபத்தான நிலைமைகள் குறித்து சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த வாரம் பிரேசிலின் பல்வேறு பகுதிகளில், வேலைகள் நிறுத்தப்பட்டது உட்பட, மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளன.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான மரான்ஹாவோவின் (Maranhao) தலைநகரான சாவோ லூயிஸில் (Sao Luis), “சொகோரோ 1” (“Socorrao 1”) என்றழைக்கப்படும் Djalma Marques நகராட்சி மருத்துவமனையின் (Djalma Marques Municipal Hospital) சுகாதார வல்லுநர்கள், திங்களன்று திடீர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்தினர். மிக அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படாத நிலையில், கோவிட்-19 நோய்தொற்றால் சக ஊழியர்கள் இரண்டு பேர் இறந்துபோனதன் பின்னரே இந்த ஊழியர்கள் கடும் சீற்றமடைந்தனர்.

“Socorrao 1 இல் என்ன நடந்து கொண்டிருக்கிறது??? ஏற்கனவே நோய்தொற்றின் மூல அடையாளம் காணப்பட்ட இரண்டு இறந்த ஊழியர்களையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது… தரிப்பிடங்கள் எங்கு கழுவப்படுகிறது அல்லது பிரிவுகள் எங்கே தடுக்கப்பட்டுள்ளன, கோரென் (Coren) (பிராந்திய செவிலியர் குழு) எங்கே?, Sindhosp (மருத்துவமனைகள், மருத்துவகங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களின் ஒன்றியம்) எங்கே?, மேலும் நகராட்சி செயலர்… என எவரும் இது பற்றி பேசமாட்டார்களா?! கடவுளுக்காக, ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே நடவடிக்கை எடுங்கள்,” என்று ஊழியர் ஒருவர் முகநூலில் எதிர்ப்பு தெரிவித்தார்.

அடுத்த நாள், மற்றொரு பிரிவான, “Socorrao 2” இல், அதே நிலைமைகளின் கீழ் 40 வயதான கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் செர்ஜியோ கோஸ்டா (Sergio Costa) வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறந்தார்.

மரன்ஹாவோவில் உள்ள 797 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில், 79 பேர் மாநிலத்தின் சுகாதாரப் பாதுகாப்பு வலையமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த துறையில் பாதிக்கப்பட்ட பணியாளர்களின் உண்மையான எண்ணிக்கை, வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் செயலாற்றும் மற்ற துறைகளை விட மிக அதிகம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உதாரணமாக, சாவோ லூயிஸில், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மூன்று பெரிய தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

அட்டைகள் குறிப்பிடுகின்றன: “எங்களுக்கு PPE வேண்டும், தொழில் வல்லுநர்கள் உதவி கேட்கிறார்கள்!”

மரன்ஹாவோவில் இருந்து தெற்கே 2,500 கிலோமீட்டருக்கும் கூடுதலான தொலைவில், மினாஸ் ஜெராய்ஸ் மாநில அறக்கட்டளை மருத்துவமனையில் (Minas Gerais State Hospital Foundation – Fhemig) பணிபுரியும் செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உடலியல் பயிற்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர் புதன்கிழமை காலையில் வேலைநிறுத்தம் செய்தனர்.

பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு கூடுதலாக, பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையுடன் பணியாற்றும் ஊழியர்கள், மாநில அரசாங்கம் தங்களைத் தவிர்த்து மருத்துவர்களுக்கு மட்டும் தற்காலிக மேலதிக கொடுப்பனவு வழங்க அனுமதித்திருப்பதற்கு எதிராக போராடிக் கொண்டிருந்தனர்.

“நுழைவாயில் காவலாளி முதல் மருத்துவமனையில் அனைவரும் உள்ளனர் என்றாலும், மருத்துவ நிபுணர்களுக்கு மட்டும் நலன்களை வழங்குவது மிகவும் எரிச்சலூட்டியது… இது அபத்தமானது, ஏனென்றால் நாங்களும் அவர்களைப் போலவே மனிதாபிமானமற்ற வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தான் வேலை செய்கிறோம், ஆனால் நாங்கள் இங்கே இருக்கிறோம்,” என்று Fhemig தொழிலாளி ஒருவர் தொலைக்காட்சி பதிவில் கூறினார்.

மற்றொருவரும் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது, ஒரு வகையான தொழிலாளர்களுக்கு மட்டும் வெகுமதி ஏன் வழங்கப்படுகிறது? மன அழுத்தத்தைத் தவிர, எங்களுக்கும் வீட்டில் உறவினர்கள் இருப்பதால் நிரந்தர பயம் உள்ளது, எங்களது வேலை குறைந்த மதிப்புள்ளதா?”

Minas Gerais ஆளுனர் Romeu Zema, “சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொழில் வல்லுநர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை, இந்த மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது”, என்ற நிலையில், ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் “புரிந்துகொள்ள முடியாததாக,” இருந்தது என்று கூறி விடையிறுத்தார்.

புதன்கிழமை இரவு வடக்கு பிரேசிலில் உள்ள Belem do Para இல் சுகாதார ஊழியர்களின் மற்றொரு ஆர்ப்பாட்டம் நடந்தது. Mário Pinotti அவசர சிகிச்சைப் பிரிவின் செவிலியர்கள், அவர்களுக்கும் மற்றும் அவர்களது நோயாளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் கொடிய நிலைமைகளுக்கு எதிராக, வேலையை புறக்கணித்து மருத்துவமனை முன்பகுதியை முற்றுகையிட்டனர்.

Rede Liberal தொலைக்காட்சி நேர்காணலில் செவிலியர் Socorro Brito பின்வருமாறு தெரிவித்தார்: “இது நாம் சந்தித்துள்ள மிக மோசமான நெருக்கடியாக உள்ளது, ஏனென்றால் இந்த வைரஸ் இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளே இருக்கிறது என்றாலும் இந்த மக்களுக்காக வேலை செய்ய எந்தவித திட்டமும் இன்னும் வகுக்கப்படவில்லை. மேலும் குழந்தைகள் உட்பட, மருத்துவமனைக்கு பிற நோயாளிகளாக வரும் நோயாளிகளும் அதே வாசல் வழியாக உள்ளே வருகின்றனர். இது மோசமாக உள்ளது.”

மற்றொரு செவிலியரான Nauza Araujo இவ்வாறு தெரிவித்தார்: “முகக்கவசங்களும், மேலாடைகளும் இல்லாமல் பணிபுரிகின்றோம். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிற்குள் நுழைவது என்பது உறுதியான தூய்மைகேட்டை விளைவிக்கும் என்றும், தொழில் வல்லுநர்கள் வெளியேறுகிறார்கள் என்றும் அர்த்தம், அது நடக்காது. சில நாட்களில் நோயாளிகளை கவனித்துக் கொள்ள உங்களுக்கு எவரும் இருக்க மாட்டார்கள். நாங்கள் கண்ணியத்துடன் வேலை செய்யவும், எங்களது வேலையைச் செய்யவும் நாங்கள் விரும்புகிறோம்.”

வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து ஏற்கனவே ஒரு சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர் நீக்கப்பட்டுள்ளார் என்றாலும், அதிகளவு ஆபத்துள்ள குழுக்களில் உள்ள தொழில் வல்லுநர்கள் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். “ஜூன் மாதத்தில் எனக்கு 70 வயதாகிறது, எனக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது… எனது உடல்நிலை சரியில்லை என்றாலும் நான் அங்கு வேலை செய்கிறேன்”, என்று Maria das Graças தெரிவித்தார்.

Belém செவிலியர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்காக போராடுகிறார்கள் [Twitter/Joao Paulo Guimaraes]

அடுத்த இரவில், வியாழக்கிழமை அன்று, Belém இல் உள்ள மற்றொரு சுகாதாரப் பிரிவின் வல்லுநர்கள் வேலையை முடக்கினர். ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியில், சாக்ரமென்டா சுற்றுப்புறத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும் என்று கோரும் சுவரொட்டிகளை கைகளில் ஏந்தியிருக்கிறார்கள். இரவு நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது போன்ற, மிகவும் ஆபத்தான நிலைமைகளுக்கு மேலாக, தங்கி பணியாற்றும் 15 தொழில் வல்லுநர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதுடன், அவர்கள் உதவி ஏதுமின்றி இருக்கிறார்கள் என்ற உண்மை குறித்து அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

“எங்களது கோரிக்கை கேட்கப்பட வேண்டும் மற்றும் எங்களுக்கு குறைந்தபட்ச வேலை நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்,” என்று எட்டு ஆண்டுகளாக நிரந்தர ஊழியராக பணியாற்றி வரும் ஒரு செவிலியர் முறையிட்டார். “என்னை அறிந்தவர்களுக்கு எனது பணியின் மீது நான் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு புரியும், மேலும் எங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது, அத்துடன் வீட்டிலுள்ளவர்களுக்கும் நாங்கள் நோயை பரவ விட்டுவிடக் கூடாது என்பதற்காக குறைந்தபட்ச வேலை நிலைமைகளையே நாங்கள் விரும்புகிறோம்.”

பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சியைச் (Brazilian Social Democratic Party - PSDB) சேர்ந்த Belém நகர மேயர் Zenaldo Coutinho இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ட்விட்டரில் இவ்வாறு விடையிறுத்தார்: “PSM da 14 முன்பு நேற்று ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடனும் மற்றும் சீருடையிலும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தது கடுமையான தவறாகும் என்று நான் கூற விரும்பினேன். மேலும், நாம் புலம்புவதும் தவறாகும்.”

Jornal Liberal தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளிக்கையில் ஜெனால்டோ, மருத்துவமனைகளில் நிலவும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண பற்றாக்குறை என்பது உலக சந்தையில் உள்ள பொருட்களின் பற்றாக்குறையால் ஏற்பட்டது என்று தெரிவித்தார். என்றாலும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு குறைந்தபட்சம் அடுத்த வாரம் வரை தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும் என்பது உத்தரவாதமானது என்று கூறினார்.

பிரான்டோ-சோகோரோ மரியோ பினோட்டி, அல்லது PSM da 14 மருத்துவமனையில் பணிபுரியும் அநாமதேய மருத்துவர் ஒருவர் G1 க்கு அளித்த பேட்டியில், மேயரின் கூற்றுக்களை முற்றிலும் மறுக்கிறார். அவரைப் பொறுத்தவரை, அடிப்படை வேலை நிலைமைகள் கூட இல்லாத நிலைமை, உண்மையில் கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு மிக முன்னதாகவே ஏற்பட்டது என்கிறார்.

“ஒரு மாதத்திற்கு முன்னர், Belém இல் கொரோனா வைரஸ் நோயாளிகள் தோன்றிய உடனேயே, மருத்துவர்களாகிய நாங்கள் குறைந்தபட்ச வேலை நிலைமைகளுக்கு ஏற்பாடு செய்யும்படி கோர ஆரம்பித்தோம்: ஆனால் துரதிருஷ்டவசமாக PSM da 14 இன் பிரச்சினைகளோ கட்டமைப்பு ரீதியானவை, ஏனென்றால் சமூக இடைவெளி தேவைப்படும் ஒரு நோய்க்கு அங்கு இடமில்லை. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண பற்றாக்குறை மட்டுமல்ல, மாறாக பிராணவாயு குழாய்கள் போன்ற மருத்துவ உபகரணங்களும் அங்கில்லை.

“நான் இரண்டு ஆண்டுகளாக இந்த பிரிவில் இருக்கிறேன், இதுபோன்ற சூழ்நிலை எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. நோயாளிகளின் நிலைமை துயரகரமானது. இங்கு தூக்கு படுக்கைகள் இல்லை, போதுமான பிராணவாயு இணைப்புகளும் இல்லை. எனவே, இங்குள்ள நிலைமை ஒரு உண்மையான போர்க்கள காட்சியாகவே தோன்றுகிறது. நான் சமீபத்தில் பார்த்ததைப் போல பிராணவாயு மற்றும் மூச்சுக்குழலுக்குள் குழாய் செருக வேண்டிய அவசியம் பலருக்கும் இருப்பதான இந்தவொரு சூழ்நிலையை நான் முன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக, Belém இல் பொது சுகாதார அமைப்புமுறை ஏற்கனவே சீர்குலைந்துவிட்டது.”

Loading