மிருசுவில் படுகொலை இராணுவ அதிகாரியின் விடுதலையும் தமிழ் தேசியவாதிகளின் போலிக் கண்டனங்களும்

இலங்கையில் எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோடாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக பாரிய கோபத்தையும் உருவாக்கியிருந்தது. பரந்துபட்ட தமிழ் வெகுஜனங்களின் கோபங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் கொழும்பு ஆட்சியை பாதுகாக்கவும் தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளின் தலைவர்கள், எந்த சிரமமுமின்றி வெற்றுப் பத்திரிகை அறிக்கைகளை தாராளமாக வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்த காலத்தில் 2000 ஆண்டு டிசம்பர் மாதம், யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுனில் ரத்னாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, மார்ச் 26 அன்று ரத்னாயக்கவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தார்.

நீதிமன்றத்தால் கொலைகாரன் என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை, ஜனாதிபதி விடுதலை செய்தமை இலங்கையிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒரு மரண எச்சரிக்கையாகும்.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில், தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மற்றும் வாழ்க்கை நிலைமையையும் குற்றவியல்தனமாக அலட்சியம் செய்துள்ளமை சம்பந்தமாக வெகுஜனங்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பு, எந்த நேரத்திலும் வெடிக்கும் என்ற அச்சத்தில் உள்ள இராஜபக்ஷ அரசாங்கம், தமிழ் தேசியவாத கட்சிகள் உட்பட ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பினரதும் ஆதரவுடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் செயற்பாடுகளை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்த நடவடிக்கை, அதிகாரத்திற்கு வந்தது முதலே தனது நிர்வாகத்தின் பிரதான பகுதிகளை இராணுவமயப்படுத்துவதற்கு இராஜபக்ஷ எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பாகமாகும்.

இலங்கை இராணுவத்தின் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் அனைத்தும் குற்றங்களல்ல மாறாக “தேசத்தினை” பாதுகாக்க “தேசபற்றாளர்களால்” செய்யப்பட்ட தீரமான செயல்களாக கருத்தில் கொள்ளப்படும் எனவும் கடந்தகால படுகொலைகள் மட்டுமல்ல எதிர்கால அடக்குமுறைகளும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் என்றாலும் கூட நீதித்துறையால் கட்டுப்படுத்த முடியாது என்பதையுமே இராஜபக்ஷ குறிப்பு காட்டியுள்ளார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் விடுதலையானது, பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கொழும்பு அரசாங்கத்தை வெளிப்படையாகவே பாதுகாத்துவரும் தமிழ் தேசியவாதிகள் அனைவரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டது. இந்திய, இலங்கை இராணுவத்துடன் கூலிப்படையாக சேர்ந்து இயங்கிய கட்சிகளும் கூட ரத்னாயக்கவின் விடுதலையை கண்டனம் செய்ய தள்ளப்பட்டிருந்தனர்.

தமிழ் முதலாளித்துவத்தின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, “கொலை குற்றத்திற்காக இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இது கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் அச்சத்தை விட அதிகளவிலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பல எதிர்ப்புக்கள் எழுந்திருக்கும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ இவ்வாறு செயற்பட்டிருப்பது தவறாகும்...” என தனது கண்டனத்தை வெளிப்படுத்திருந்தார்.

இந்த படுகொலை குற்றவாளியின் விடுதலை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்..சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், “மிருசுவில் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட செய்தி உண்மையாயின் அது கடுமையாக கண்டிக்கப்படத்தக்கது” என்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரன் பொன்னம்பலம், “நாம் எல்லோரும் கொரோனாவைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கையில் சிங்கள அரசு மிருசுவிலில் 8 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததாக ஸ்ரீலங்கா நீதிமன்றத்தாலேயே தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சிப்பாயை சத்தம் சந்தடியின்றி விடுதலை செய்துள்ளது. இச்செயலை மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்”. என தனது இணைய பக்கத்தில் எழுதியிருந்தார்.

“இலங்கை அரசாங்கத்தினுடைய தமிழ் மக்கள் விரோத செயல்பாடுகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், அரசாங்கத்தின் இப்படியான செயல்பபாடுகளை உலக நாடுகளும் புரிந்துகொள்ளவேண்டும் என கோருகின்றோம்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், “ரத்நாயக்காவின் மன்னிப்பும் விடுவிப்பும் எமது அதிகார மையத்தின் தரத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன. முறையாக விசாரித்து, விளங்கி, குற்றவாளியாகக் காணப்பட்ட அதாவது தமிழருக்கெதிரான இலங்கையின் யுத்த குற்றவாளிக்கெதிரான இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதே அரசின் நோக்கம். இதை சர்வதேச சமூகம் கவனத்திற்கு எடுத்துள்ளது. அதன்படி இராஜபக்ஷ அரசாங்கத்துடன் உரியவாறு அது நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்”. என தெரிவித்திருந்தார்.

“...தமிழ் மக்களை படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கே இராணுவத்திலும் பாதுகாப்பு அமைச்சிலும் உயர் பதவிகளும் கௌரவங்களும் வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக தொடர்ந்தும் தமிழின அழிப்பை இலங்கை அரசு தூண்டுகின்றதா?” என கேள்வியெழுப்பி, “சுனில் ரத்நாயக்காவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் வாயிலாகவும் இத்தகைய ஒரு செயலிலேயே ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிக்கிறார்.

படுகொலை செய்த மரண தண்டனை கைதியை பாதுகாத்தவரும் படுகொலைக்கு தலைமை வகித்தவரும் யார் என்பதையும், படுகொலைகளுக்கு அங்கீகாரம் வழங்கிய சர்வதேச சமூகங்கள் எவை என்பதையும், கோட்டாபய இராஜபக்ஷ ஆட்சி இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் முன்னெடுக்கிறது என்பதையும் தமிழ் தேசியவாதிகள் நன்கு அறிவார்கள் என்பதற்கான வாக்குமூலமாகவே ஒருவர் இவற்றை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் தேசியவாதிகளால் தேனொழுக “சர்வதேச சமூகம்” என அழைக்கப்படும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ யுத்தக் கிரிமினல்களால், ஈராக்கில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை தைரியமாக அம்பலப்படுத்திய உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் க்கு ஜாமீன் மறுக்கப்பட்டு கொரோனா தொற்று அபாயத்தின் மத்தியில் பிரிட்டிஷ் சிறையில் இறப்புக்காக விட்டுள்ள இந்த சர்வதேச யுத்தக் கிரிமினல்களோடு கூடி இலங்கை யுத்தக் கிரிமினல்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்போவதாக ஏமாற்றுத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

தமிழ் தேசியவாதிகள் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய சார்பு, தொழிலாள வர்க்க அரசியல் தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களுக்கு வலியுறுத்தி வந்தது மீண்டுமொருமுறை இந்த சம்பவத்திலும் சரியென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே முதலாளித்துவத்தின் கீழ் இதுவரை தீர்க்கப்படாத ஜனநாயக கடமைகள், தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச புரட்சியின் பாகமாக சர்வதேச மட்டத்திலேயே தீர்க்கப்பட முடியுமென வலியுறுத்தி வந்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் தீவில் “சுதந்திர அரசு” உருவாக்கப்பட்டதில் இருந்து தமிழ் தேசிய வாதிகளின் இந்த பிற்போக்கு வரலாறும் தொடர்கிறது.

1948 பிரஜா உரிமை சட்டத்தின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட 1949 இந்திய பாகிஸ்தானிய வதிவிடச் சட்டம், 1949 தேர்தல்கள் திருத்தச் சட்டம் ஆகியன இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பான மலையக தொழிலாளர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழக்கச் செய்தன.

தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதில் ஆரம்பித்து தொழிலாள வர்க்கத்தை பிரித்து ஒற்றையாட்சியை பாதுகாக்க சிங்கள ஆளும் தட்டு முன்னெடுத்த அனைத்து ஜனநாயக விரோத ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலும் தமிழ் ஆளும் தட்டின் மாறுபட்ட கன்னைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றிணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றன.

இலங்கை இராணுவத்துடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் கூட இதற்கு விதிவிலக்கல்ல, 1988-90ல் தெற்கில் எழுந்த நெருக்கடியின் போது 60 ஆயிரம் சிங்கள கிராமப்புற இளைஞர்களை யூஎன்பி அரசாங்கம் படுகொலை செய்துமுடிப்பதற்கான, தமது அரசியல் ஆதரவினை பிரேமதாசாவுக்கு வழங்கினர்.

30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த பின்னர், 2010 ஏப்பிரல் மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. பாரிய படுகொலைகள் நடந்து முடிந்து ஒரு வருடம் கூட முழுமையாக ஆகியிராத நிலையிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையில் தமிழ் தேசியவாதிகள் எந்த சங்கடமும் இன்றி, 1983ம் ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்த யூ.என்.பி. உடனும் 2009ம் ஆண்டு அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய பயங்கரங்களுக்கு இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக தலைமை வகித்த சரத்பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணியுடனும் கூடி தேர்தலில் போட்டியிட்டனர்.

இறுதியில், 2015 ஜனவரியில் மகிந்த இராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்றி எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக நியமித்த அமெரிக்க-இந்திய திரைமறைவு ஆட்சி மாற்ற சதி நடவடிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆச்சாணியாக பாத்திரம் வகித்ததை அண்மைய பிரச்சார கூட்டங்களில் பெருமையாக அறிவித்தனர்.

2019 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் இராஜபக்ஷவின் (தற்போதைய ஜனாதிபதி) தோல்விக்காக பிரச்சாரம் செய்த பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான M.A. சுமந்திரன், கடந்த மாதம் 24ம் திகதி, கொரோனா வைரசை ஒழிப்பதென்ற பேரில், பிரதமர் மகிந்த இராஜபக்ஷ கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், 40,000 க்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த இராணுவத்தின் தளபதியான சவேந்திர சில்வாவுடன் “தேசிய ஐக்கியம்” என்ற பெயரில் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு அப்பால் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியோ என்னென்ன அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்பது பற்றியோ எந்த தெளிவான அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை, “கட்சித் தலைவர்கள் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டி, அவர்களின் ஆதரவுக்கு உறுதியளித்தனர் என்றும் “COVID-19 பேரழிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பிரதமர் கூறினார் என்றும் தெரிவிக்கிறது.

சுமந்திரன் உட்பட கலந்துகொண்ட தமிழ் தேசியவாதிகளின் “ஆதரவுடன்” மீண்டும் பாதுகாப்பு படைகள் வடக்கு, கிழக்கின் சிவில் நடவடிக்கைகள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

ஏற்கெனவே இன, மத, மொழி பேதமற்று சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு முகங்கொடுக்ககும் தீவின் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள் கொரோனா தொற்று நோயுடன் மேலும் பொருளாதார பேரழிவுகளை சுமக்க தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் இலங்கையின் கடன் நெருக்கடியையும் தீவிரமாக்கியுள்ளது. மார்ச் மாத இறுதியில், அபிவிருத்தி பங்குப்பத்திரங்களை விநியோகிப்பதன் மூலம் 220 மில்லியன் டாலர்களை நிதிய சந்தையிலிருந்து திரட்ட அரசாங்கம் முயன்றது. அதனால் 12 மில்லியனுக்கும் குறைவாகவே வசூலிக்கக்கூடியதாக இருந்தது, சர்வதேச முதலீட்டாளர்கள் நாட்டின் முதலீடுகளில் இருந்து பின்வாங்கியமையால் மேலும் கடன்களை திரட்ட இயலாமல் போனதானது கொழும்பின் ஸ்திரமின்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கை தனது வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 2.8 பில்லியன் டாலரும், மேலும் ஆண்டுக்கு மொத்தமாக 4.8 பில்லியன் டாலரும் திரட்டவேண்டியுள்ளது.

இந்த நிலைமையில் தமிழ் தேசியவாதிகள், தமது நலன்கள் பிணைந்திருக்கும் திவாலாய்போன ஒற்றையாட்சியை பாதுகாக்க கொழும்பு ஆளும் வர்க்கத்தின் இந்த அல்லது அந்த கன்னையின் பின்னால் அணிதிரள்வதுடன், எந்த நிலமையிலும் தமிழ் உழைக்கும் மக்கள், வறியவர்கள் மீதான இராணுவ அடக்குமுறைக்கு ஆதரவளிப்பார்கள் என்பதையே முழு வரலாறும் ரத்னாயக்கவின் விடுதலைக்கு பின்னான அவர்களது ஒத்துழைப்புகளும் உழைக்கும் மக்களுக்கு கற்பித்துள்ளது.

மேலதிக வாசிப்புக்கு

இலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்

Loading