கொரோனா வைரஸ் இறப்புகள் எண்ணிக்கை 20,000 ஐ எட்டுகையில் பிரெஞ்சு பிரதமர் தனிமைப்படுத்தலை முடிப்பதற்கான தனது விளக்கத்தை முன்வைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோன் (Olivier Véran) ஆகியோர், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் நாடு தழுவிய தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக் காட்டினர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, பிரெஞ்சு அரசாங்கத்தின் சொந்த பேரழிவு மற்றும் குற்றவியல் அலட்சியக் கொள்கைகள் குறித்த தொடர்ச்சியான பொய்கள், ஏய்ப்புகள் மற்றும் சுய திருப்தி அறிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் மேலும் 395 COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன, பிரான்சில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,718 ஆக உள்ளது. இவற்றில், 7,469 இறப்புகள் வயதான பராமரிப்பு இல்லங்களில் பதிவாகியுள்ளன, அங்கு உண்மையான இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. குறைந்தது 45 சதவீத வயதான பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்களிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,900 க்கும் அதிகமானோர் மருத்துவமனை அவசர படுக்கைகளில் தங்கியுள்ளனர், தொற்று நோய் பரவல் வெடிப்பதற்கு முன்னர் அதிகாரபூர்வமாக கிட்டதட்ட 5,000 அவசர படுக்கைகளுக்கு மேல் இருந்தன.

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மே 11 அன்று பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதாக அறிவித்ததற்கு, பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது பிலிப்போ அல்லது வெரோனோ ஒரு விஞ்ஞானபூர்வ அல்லது மருத்துவ அடிப்படை நியாயங்கள் எதையும் வழங்கவில்லை. ஏற்கனவே நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வழங்கி தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து கார்ப்பரேட் மற்றும் நிதி உயரடுக்கின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்துள்ள நிலையில், அரசாங்கம் சர்வதேச அளவில் அதன் சகாக்களைப் போலவே தொழிலாளர்களை பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விரைவாக வேலைக்கு திரும்புவதற்கு தள்ளுகின்றன.

மக்கள் "இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பிலிப் அறிவித்தார். நடைமுறையில் இதன் அர்த்தம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து இறந்து கொண்டிருப்பார்கள், இது வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும், இதனால் நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து தொடர்ந்து இலாபத்தைப் பெற முடியும் என்பதாகும்.

பிலிப்பின் கருத்துக்களில் பெரும்பகுதி வைரஸுக்கான அரசாங்கத்தின் சொந்த நடவடிக்கைகளை பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதத்திற்கான சமீபத்திய CEVIPOF கருத்துக் கணிப்பு, 39 சதவீத மக்கள் மட்டுமே அரசாங்கம் "இந்த நெருக்கடியை நன்றாக நிர்வகித்துள்ளனர்" என்று நம்புவதாக தெரிவிக்கிறது. Gala என்ற வலைத்தளம் வெள்ளிக்கிழமை அன்று பெயரிடப்படாத அமைச்சக ஆலோசகரின் கூற்றினை, “இந்த நெருக்கடிக்குப் பின்னர் ஒரு மோசமான dégagiste [அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கோருகிற] டெகாஜிஸ்ட் இயக்கம் எழ இருக்கிறது. இது நம் அனைவருக்குமான முடிவாக இருக்கும்” என மேற்கோள் காட்டியது. டெகாஜே [இராஜினாமா] என்ற சொல் 2011 இன் துனிசிய புரட்சியின் முக்கிய முழக்கமாக இருந்தது.

அவர் கூறிய பொய் ஒன்றில், தொற்றுநோய்க்கு முன்னர் அரசாங்கம் 107 மில்லியன் பாதுகாப்பு முகமூடிகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் இது 20 வாரங்களுக்கு சுகாதார அமைப்பு பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என்றும் பிலிப் கூறினார். இவை அனைத்தும் கிட்டத்தட்ட மருத்துவ ஊழியர்களுக்காக வடிவமைக்கப்படாத தரம் குறைந்த முகமூடிகள் என்றோ, இருந்தும் நோய் பரவாமல் தடுக்க பொது மக்கள் உபயோகப்படுத்த மட்டுமே இவை பொருத்தமானவை என்றோ அவர் குறிப்பிடவில்லை.

2009 ஆம் ஆண்டில், மருத்துவ வல்லுநர்களால் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட 460 மில்லியனுக்கும் அதிகமான உயர்தர FFP2 முகமூடிகளை அரசாங்கம் இருப்பில் பராமரித்து வந்தது, இது ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் 90 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று அரசாங்கம் கணக்கிட்டிருந்தது. சுகாதார செலவினங்களைக் குறைப்பதற்கான அரசியல் ஸ்தாபகத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக, 2011 ஆம் ஆண்டில், சார்க்கோசி அரசாங்கம் FFP2 முகமூடிகளை இருப்பில் வைத்து பராமரிக்கும் திட்டத்தை முழுமையாக இரத்து செய்தது. பிரான்சில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்ட நேரத்தில், FFP2 முகமூடிகளின் மையப்படுத்தப்பட்ட இருப்புகள் ஏதும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

தனிமைப்படுத்தலை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது என்பது குறித்து அரசாங்கம் சில விவரங்களை வழங்கியுள்ளது, மேலும் அதற்கான விவரங்கள் இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களின் சில நாட்களில் மட்டுமே அறிவிக்கப்படும் என பிலிப் கூறினார்.

இன்று முதல், வயதானவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களை பார்வையிட ஊனமுற்றோருக்கான வசதிகள் மற்றும் உடல்ரீதியான தொடர்பு இல்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு மேல் இருக்காத பார்வையிடுவதற்கான வருகைகள் அனுமதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் வெரோன் அறிவித்தார்.

மே 11 ஆம் தேதி தொடங்கி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும், ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் திறக்கப்படாது. பிராந்தியங்கள் வாரியாக அவை படிப்படியாக மீண்டும் திறக்கப்படும், அல்லது முதல் வாரத்தல் பாதி மாணவர்களும் ,அடுத்த வாரத்தில் ஏனைய பாதி மாணவர்களும் வகுப்புகளில் கலந்துகொள்வார்கள் என பிலிப் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியக் கூறுகளை சுட்டிக்காட்டினார்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதை சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆசிரியர்கள் பரவலாக எதிர்க்கின்றனர். தொற்றுநோயின்போது பணியாற்றி விட்டு வூஹானில் இருந்து திரும்பத் தயாராகும் ஒரு பிரெஞ்சு மருத்துவர் பிலிப் கிளான் (Philip Klein) ஐரோப்பா 1, தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டபோது, “தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தால்… கடைசியாக நீங்கள் செய்ய வேண்டியது பாடசாலைகளை மீண்டும் திறப்பதுதான்” என்று கூறினார். குழந்தைகள் "பெரும்பாலும் அறிகுறியற்ற நோய்த் தாங்கிகளாக இருக்கின்றனர், எனவே அவர்கள் தொற்றுநோயைக் கொண்டு செல்வோர்களாக இருக்கின்றனர்" என்று கிளான் கூறினார், மேலும் பள்ளிகளை விரைவாக மீண்டும் திறப்பது "மிகப்பெரிய ஆபத்து" என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, பள்ளிகளை மீண்டும் திறப்பதுதான் ஊழியர்கள் வேலைக்குத் திரும்புவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தலின் போது நோய்த்தொற்றின் இனப்பெருக்க விகிதம் 0.65 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக பிலிப் தெரிவித்தார், அதன் அர்த்தம், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 பேரும் சராசரியாக மேலும் 65 பேரை பாதிக்கிறார்கள். தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் நோக்கம் இந்த விகிதத்தை “ஒன்று அல்லது அதற்கு கீழே” அதாவது 100 பேர் பாதிக்கப்பட்டால் ஒருவரை அல்லது பாதிப்பில்லாத முறையில் பராமரிப்பதாக இருக்கிறது.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் முடிவுக்கு வருவது தொற்றுநோயின் பரவலின் உடனடி மற்றும் பேரழிவு எழுச்சிக்கு வழிவகுக்காது என்ற கூற்றுக்கு அரசாங்கம் எந்த விஞ்ஞானபூர்வ அடிப்படைகளையும் வழங்கவில்லை. பிரான்ஸ் முழுவதும் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை அறியப்படாது இருக்கின்றன. அதிகாரபூர்வமான கொள்கையின் படி, மிகவும் ஆபத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். குடும்ப மருத்துவர்கள் சோதனைகளைச் செய்ய இயலாது, மேலும் COVID-19 அறிகுறிகளை கொண்டிருக்கும் நபர்கள், சுவாசிப்பதற்கான பிரச்சனைகள் இல்லாவிட்டால், வீட்டிற்குச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வாரத்திற்கு 125,000 ஆக இருந்து வரும் மொத்த சோதனைகளின் எண்ணிக்கையை மே 11 க்குள் 500,000 ஆக உயர்த்த அரசாங்கம் முயற்சிக்கும் என்று வெரோன் கூறினார்.

ஊடகங்களின் முழு ஆதரவு இருந்தபோதிலும், தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதானது பெரும்பான்மை பிரெஞ்சு மக்களால் எதிர்க்கப்படுகிறது, மீண்டும் வேலைக்குப் போக நிர்ப்பந்திப்பது நோய் பரவலை உண்டாக்கி தங்களையும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கொல்ல அனுமதிக்கும் என்பதால் அவர்கள் விரும்பவில்லை. Huffington Post க்கான மிகச் சமீபத்திய Yougov கருத்துக் கணிப்பு, 51 சதவீத மக்கள் இன்னமும் முழு தனிமைப்படுத்தலை ஆதரித்துவருவதாக காட்டியிருக்கிறது, அதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரசாங்கம் இதற்கு முன்னரே முழு தனிமைப்படுத்தலை விதித்திருக்க வேண்டும் என்று நம்புகின்றனர்.

தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து போதிய ஆதரவை வழங்க மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு தடியாக பயன்படுத்தி மக்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்வதற்கு மக்ரோன் அரசாங்கம் முயல்கிறது - துன்பியலானது என்னவென்றால் தொற்றுநோய்களின் நிலைமைகள் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமையின் நிலைமைகளை மேலும் மோசப்படுத்தியுள்ளதாகும்.

புதன்கிழமை, பாரிஸின் வடக்கே Saint-Denis புறநகரில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் நடத்தும் இலவச உணவு விநியோகத்திற்காக நூற்றுக்கணக்கான மக்கள் — சிலர் காலை 8:00 மணிக்கே, அதாவது விநியோகம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே வந்து, எப்படியாவது அவைகளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முந்தைய எட்டு நாட்களில் இந்த தொண்டு நிறுவனம் மூன்று உணவு விநியோகங்களை ஏற்பாடு செய்திருந்தது, முதல் வினியோகத்தில் 190 பேர் கலந்து கொண்டனர், இரண்டாவதில் 490 பேரும், மூன்றாவதில் 750 பேரும் கலந்து கொண்டனர். அதில் பல தொழிலாளர்கள் லு மொன்ட் பத்திரிகையுடன் பேசினர், இதில் 42 வயதான செவிலியர் உதவியாளர், அவரது கணவரைப் பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வாழும் ஒற்றைத் தாய், தனிமைப்படுத்திலின் போது அவரால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியவில்லை என தெரிவித்திருந்தார். உணவக தொழிலாளியும், 7 குழந்தைகளின் தந்தையுமான இன்னொருவர், வேலையின்மைக்கான கொடுப்பனவில் வாழ்பவர், அவர் தான் பெறும் மாதக் கொடுப்பனவால் குழந்தைகளுக்கான உணவுச் செலவினை ஈடுசெய்ய முடியவில்லையாம், பாடசாலை நாட்களில் அரசு மானிய திட்டங்களின் கீழ் ஒரு நாளைக்கு 1 ஈரோவுக்கு பாடசாலை கன்டீனில் குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது எனது குழந்தைகள் முழுநாளும் பட்டினியுடன் இருக்கிறார்கள், மாதாந்தம் எனக்கு கிடைக்கும் கொடுப்பனவு போதாததாக இருக்கிறது என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வறுமையை ஆழமாக்குவதில் நீண்டகாலமாக தனிமைப்படுத்தப்படுவதற்கும், பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் வேலைக்கு திரும்புவதற்கும் இடையில் அரசாங்கம் முன்வைத்த மாற்று தவறானது. சுகாதார ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முக்கிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பான நிலைமைகளை வழங்குவதற்கும், மீதமுள்ள மக்களை ஒழுங்கான வாழ்க்கை நிலைமைகளுடனும், தனிமைப்படுத்தலுடனும் பராமரிப்பதற்கு, உற்பத்தியை ஒழுங்கமைத்து பொதுவளங்களை பெருமளவில் திரட்டுவதுதான் உண்மையான மாற்றீடாகும்.

நிதி தன்னலக்குழுவின் மோசமான செல்வத்தை பறிமுதல் செய்து, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சமூகத்தின் செல்வத்தை பகுத்தறிவுடன் ஒழுங்கமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அணிதிரட்டல் மூலம் மட்டுமே இத்தகைய கொள்கையை மேற்கொள்ள முடியும்.

Loading