இலங்கை: நிவராணம் வழங்காமை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிராக அக்கரபத்தன பெல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்

By our correspondent
24 April 2020

மொழிபெர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா தொற்று நோய் காரணமாக வேலை இழந்து துன்பத்தில் சிக்கி இருக்கின்றவர்களுக்கு அரசாங்கம் கொடுப்பதாக கூறிய 5,000 ரூபா மற்றும் உணவு நிவாரணப் பொருட்கள் தங்களுக்கு வழங்கப்படாமையை எதிர்த்து, அக்கரபத்தன பெல்மோரல் தோட்டத்தில் ஏப்ரல் 13 அன்று தொழிலாளர்களும் இளைஞர்களும் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டம் கொழும்பு உட்பட தீவின் முக்கிய நகரங்களுக்கு வேலைக்காக குடிபெயர்ந்து, தொற்று நோய் காரணமாக மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ள தோட்டப்புற இளைஞர்களும் தொழிலாளர்களுமாக சுமார் 150 பேர் இந்த போராட்டத்தி பங்குபற்றினர்.

அப்பகுதியைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் கொடுத்த புகாரின்படி, போராட்டத்தில் முன்னணியில் இருந்த 50 பேரை பொலிசுக்கு வரவழைத்து, ஊரடங்கு உத்தரவின் போது எந்த போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். இது ஒரு எச்சரிக்கை என்பதை விட ஒரு அச்சுறுத்தலாகும். மின்னணு ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மூலமே போராட்டத்தின் செயற்பாட்டாளர்களை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் அர்த்தம் என்னவென்றால், தொழிலாள வர்க்க ஒடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தும் எந்தவொரு எதிர்ப்பையும் பொலிசும் புலனாய்வு அமைப்புகளும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன என்பதே ஆகும்.

இலங்கையில் கொரோனா பரவிய பின்னர் சில நாட்களை கடத்திய அரசாங்கம், திடீரென அறிவித்த முழு அடைப்பின் பின்னர், வேலை தேடி கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதாலும் போக்குவரத்து போதுமானதாக இல்லாத காரணத்தாலும் இவ்வாறு புலம்பெயர்ந்த இளம் தொழிலாளர்கள், ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சாப்பாடு இன்றியும் அடிப்படை வசதிகள் இன்றியும் பல சிரமங்களை எதிர்கொண்டு வீடு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோருக்கு மார்ச் மாத சம்பளம் கூட கிடைக்கவில்லை.

இந்த கடினமான சூழ்நிலைகளில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டங்களில் தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன.

பெல்மோரல் தோட்டத்தின் மறியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட தொழிலாளர்களும் ஆதரவளித்தவர்களும் தாம் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகளை பற்றி உலகசோசலிசவலைத்தள நிருபர்களுக்கு விவரித்தனர்.

நாற்பத்தொரு வயதான என். சிவகாந்தன் அந்த தோட்டத்தில் வசிப்பவர் ஆவார். அவருக்கு தோட்டத்தில் வேலை இல்லாததால், ஒரு மேசனாக வேலை செய்கிறார். "நான் மறியல் போராட்டத்தில் பங்குபற்றினேன். எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். நான் வேலை செய்தால் எனக்கு நாளொன்றுக்கு 2,300 ரூபா கிடைக்கும். இந்த மாதத்தில் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனது மனைவி சுகயீனம் காரணமாக தோட்டத்தில் வேலைக்குப் போவதில்லை. வீட்டில் இருந்த நகைகளை ஈடு வைத்தே ஒரு மாதம் வாழ்ந்தோம். வரும் நாட்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நாங்கள் அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது தோட்டத்திலிருந்தோ எந்த மானியத்தையும் பெற முடியாது. 70 வயது கடந்த சிலருக்கு மட்டுமே 5,000 ரூபா கொடுப்பனவு கிடைத்தது,” என்றார்.

"பொலிசுக்கு அழைக்கப்பட்டவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். ஆனால் எங்கள் சார்பாக எந்த தொழிற்சங்கமும் தலையிடவில்லை" என்று சிவகாந்தன் கூறினார்.

பெல்மோரல் தோட்டத்தில் ஒரு தொழிலாளியான ரூபாகரன், 30, அரசாங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமனும் ஏப்ரல் 10 அன்று 1,000 ரூபாய் சம்பளமாக வழங்குவதாக உறுதியளித்தார்கள். ஆனால் செய்யவில்லை, என்றார். "எங்களுக்கு நாளொன்றுக்கு 700 ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது. கொரோனா தொற்றுநோயால் 1,000 சம்பள உயர்வை தன்னால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்று தொண்டமன் கூறினார். அவர் மீண்டும் மீண்டும் எங்களை ஏமாற்றுகிறார். தோட்டத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கின்றது. சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதாது. எங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. தோட்டத்தில் எங்களுக்கு 5 கிலோ அரிசி கொடுத்தார்கள். அந்த அரிசியும் சாப்பிடக்கூடிய அரிசி அல்ல. ஆனால் அரிசிக்கான விலையை எங்கள் சம்பளத்தில் வெட்டிக்கொள்வார்கள்” என அவர் கூறினார்.

“நான் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். முகக் கவசமும் சவர்க்காரமும் கொடுத்தார்கள். ஆனால் எங்கள் வீடுகளின் நிலை மிகவும் மோசமானது. சிறிய லயன் அரைகளிலேயே நாங்கள் வாழ்கிறோம். அதனால் கொரோனா வைரஸ் எளிதில் பரவும் ஆபத்து உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நல்லது. ஆனால் வசதிகள் இல்லாததால், அன்றாட பொருட்களை வாங்குவது கடினம். நான் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். எனக்கு ஒரு பிள்ளை இருக்கிறது. பெற்றோரையும் நானே பார்த்துக்கொள்கின்றேன். நான் NUW உறுப்பினர். ஆனால் எந்த தொழிற்சங்கமும் எங்கள் பிரச்சினைகளை கவனிக்கவில்லை.” என ரூபாகரன் தெரிவித்தார்.

லட்சும், 42, அதே தோட்டத்தில் வேலை செய்யும் ஐந்து பிள்ளைகளின் தாய். வருமானத்துக்கு வேறு ஆதாரங்கள் இல்லாததால் தான் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறினார். கடுமையான வறட்சியினால் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து இல்லை. ஆனாலும் தோட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்து கேட்கின்றது, என்று அவர் கூறினார்.

"குறைந்தது 14 கிலோ கொழுந்து எடுக்காவிட்டால் அரை சம்பளம்தான் கொடுக்கின்றார்கள். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டும். கடந்த மாதம், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் பாதி மட்டுமே கிடைத்தது. இந்த அநீதிக்கு எதிராக எந்த தொழிற்சங்கமும் பேசவில்லை. கடந்த மாதம் நகையை அடமானம் வைத்துதான் வாழ்க்கையை ஓட்டினோம்” என அவர் கூறினார்.

அவளது மூத்த மகனும் மகளும் வருமானப் பிரச்சினைகள் காரணமாக கொழும்புக்கு வேலை தேடி சென்றிருந்தனர். மகனுக்கு 19 வயது. மகளுக்கு 18 வயது. வீட்டுக்கு திரும்பியுள்ள அவர்களுக்கு வருமானம் இல்லை. “அரசாங்கமும் தொண்டமானும் அவர்களுக்கு 5,000 ரூபாய் தருவதாகக் கூறினர். இதுவரை அது கிடைக்கவில்லை. அவர்கள் எல்லாம் சேர்ந்து கடந்த வாரம் ரூ. 5,000 கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர். நாங்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டாலும், யாரும் எங்களுக்கு உதவ மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

* டிக்கோயா என்ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோரி ஏப்ரல் தொடக்கத்தில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் சுமார் 150 தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தோட்ட நிர்வாகம் சம்பளத்தில் வெட்டிக்கொள்ளக் கூடியவாறு கூட்டுறவு சங்கத்தில் உணவுப் பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாத சம்பளத்தில் 1,500 ரூபா கழித்துக்கொண்டது.

* ஏப்ரல் 18 அன்று, டிகோயா வனராஜா தோட்டத்திலும் பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்திலும் தொழிலாளர்கள் 5,000 ரூபா கொடுப்பனவு கோரி போராட்டங்களை நடத்தினர்.

* தலவாக்கலை லிந்துலை தோட்டத் தொழிலாளர்கள் ஏப்ரல் 15 அன்று தினசரி வேலை இலக்கை 16 கிலோவாக குறைக்கக் கோரி போராட்டம் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து தோட்ட கமபனிகளால் தோட்டங்களில் வேலைகள் நிறுத்தப்பட்டன, ஆனால் அத்தியாவசிய சேவைகள் உத்தரவின் கீழ், அரசாங்கத்தின் அனுமதியுடனும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் தொழிலாளர்கள் சில நாட்களுக்குள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டனர்.

பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவரான சுனில் பொஹொலியத்த, ஏப்ரல் 17 அன்று டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த போது, "கோவிட் தொற்றுநோய் மோசமடைந்து மார்ச் 13 அன்று தோட்டங்களில் வேலை நிறுத்தப்பட்ட போதிலும், நான்கு நாட்களுக்குள் மீண்டும் வேலையைத் தொடங்க முடிந்ததைப்" பற்றி உட்சாகத்துடன் கூறினார். "அனைத்து தோட்டத் தொழிலாளர்களதும் மற்றும் பரந்த பெருந்தோட்ட சமூகத்தினதும் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் "அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் பொஹொலியத்த மேலும் கூறினார்.

ஆனால், பொஹொலியத்த சொல்வது போல், தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை அல்லது பிற அடிப்படைத் தேவைகளை வழங்கவில்லை.

மாறாக, வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. வறட்சி காரணமாக கொழுந்து குறைவாக இருந்தாலும் வேலை இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பளம் வெட்டப்படுகின்றது. அவர்களின் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மேலும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேலையற்ற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் கொடுப்பதாக கூறும் 5,000 ரூபாய் கொடுப்பனவு அல்லது அரசாங்கம் கொடுப்பதாக கூறிய தினசரி 1,000 ரூபாய் ஊதியமோ தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

முக கவசம் மற்றும் கை கழுவ சோப்பு தவிர வேறு எந்த சுகாதார திட்டமும் இல்லை. சில தோட்டங்களில், தொழிலாளர்கள் தமது சொந்த செலவில் முக கவசம் வாங்கியுள்ளனர். இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒன்றாக வாழ்கின்ற சிறிய அறைகளைக் கொண்ட லயன் வீடுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களிடையே கொவிட் 19 வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அவர்கள் பரிசோதிக்கவில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டங்கள், கொரோனா தொற்று நோய் நிலைமையில் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மை, கட்டாயமாக வேலைக்கு அனுப்புதல், தொழில் மற்றும் ஊதிய வெட்டுக்கள் மற்றும் கடினமான வேலை நிலைமைகளுக்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் வளர்ந்து வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாகும்.

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் நிறுவனங்களுடனும் கூட்டுச் சேர்ந்திருப்பதால், இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்கு புறம்பாக வெடித்துள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய, அவர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து விலகி ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற முறையில் கட்டாயமாக வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும், அரசாங்கம் மற்றும் தோட்ட கம்பனிகளால் கொரோனா தொற்றுநோய்க்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளையும் வழங்கப்பட வேண்டும், நியாயமற்ற வேலை இலக்குகளை நிராகரிக்க வேண்டும், ஒழுக்கமான மாத ஊதியம் மற்றும் சுத்தமான நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வீட்டு வசதி வேண்டும் போன்றவை நடவடிக்கைக் குழுக்களின் உடனடி கோரிக்கைகளாக இருக்க வேண்டும். அந்த போராட்டமானது தொழில், சம்பளம் மற்றும் சமூக நலன்களில் வெட்டுக்களை எதிர்கொள்ளும் அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

உலகளாவிய முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசி, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை ஒழித்து, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக போராடுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் இந்த அத்தியாவசிய அவசர கோரிக்கைகளை கூட வென்றெடுக்க முடியும்.