அமெரிக்க இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ கடந்து செல்லும் நிலையில், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,000 எனும் கடுமையான மைல்கல்லை கடந்து அதிகரித்தது. உலக மக்கள்தொகையில் வெறும் ஐந்து சதவிகிதத்தையே அமெரிக்கா கொண்டுள்ளது என்றாலும், உலக கோவிட்-19 இறப்புக்களில் நாலில் ஒரு பங்கு இறப்பு தற்போது அங்கு நிகழ்ந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர், அமெரிக்காவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,000 க்கு குறைவாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக, அன்றாடம் சராசரியாக 2,000 பேர் இறந்துள்ளனர். அதனால் அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை பத்து நாட்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரப் படி, கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை, அமெரிக்க புரட்சிகரப் போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போர் ஆகிய போர்களின் இறப்பு எண்ணிக்கைகளைக் காட்டிலும் இப்போது அதிகமாக உள்ளது. இன்னும் சில நாட்களில், இது இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த அமெரிக்க இறப்புக்களின் எண்ணிக்கையை விஞ்சிவிடும்.

அமெரிக்காவில் நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. அமெரிக்கா நோயதிகரிப்பின் “மேல்நோக்கிய அதிகரிப்பை வளைக்கிறது” என்று தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தாலும், வெள்ளியன்று மட்டும், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 38,000 என அங்கு பதிவாகியது.

பரிசோதனைகள் செய்தல், தொடர்புபட்டவர்களை கண்காணித்தறிதல், தனிமைப்படுத்தல் முறைகள் போன்ற நோய்தொற்று பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளத் தவறியது என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ட்ரம்ப் நிர்வாகம் அளித்த ஊக்கத்தின் பேரில், நாடு முழுவதிலுமாக மாநிலங்களில் ஆளுநர்கள் பொறுப்பற்ற வகையில் வணிகங்களை மீண்டும் திறந்து வருகின்றனர்.

ஜியோர்ஜியாவில் முடிதிருத்தும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நகம் திருத்தும் நிலையங்கள் மற்றும் பச்சைக் குத்துதல் நிலையங்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு நேற்று அனுமதிக்கப்பட்டது. மேலும், உள் அமர்ந்து உண்பதற்கான சேவையுடன் உணவகங்களைத் திறப்பதற்கும் இந்த மாநிலம் திங்களன்று அனுமதிக்கும்.

புளோரிடா அதன் கடற்கரைகளை கடந்த வெள்ளியன்று மீண்டும் திறக்கத் தொடங்கியது, மற்றும் தெற்கு கரோலினா திங்களன்று வணிகங்களை மீண்டும் திறக்கத் தொடங்கியது. ஒக்லஹோமா வெள்ளியன்று சில சில்லறை விற்பனையாளர்கள் வணிகங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதித்தது. டெக்சாஸின் லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் (Lr.Gov. Dan Patrick) “வாழ்வதை காட்டிலும் முக்கியமான விடயங்கள்” உள்ளன என்று அறிவித்த நிலையில், டெக்சாஸ் மற்றும் டென்னிசி போன்ற மாநிலங்களும் இதேபோல வணிகத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.

வணிகங்களை மீண்டும் திறப்பது குறித்து கூட்டாட்சி வழிகாட்டுதல்கள் குறிப்பிடுவதான கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளின் படி நோய்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்கள் தொடர்ந்து குறைந்துகொண்டே வர வேண்டும் என்ற நிபந்தனையை இந்த மாநிலங்களில் எதுவும் பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும், ஆளுநர்களின் நடவடிக்கைகள், நோய்தொற்று உண்மையில் எந்தளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளாமல், “பெருவெடிப்பு” உடன் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரத்துக்கு ஒத்துப்போகின்றன.

தொழிற்சாலைகள்தான் கோவிட்-19 பரவல் தோன்றுவதற்கான முக்கிய மூலகாரணங்களாக இருந்து வருகின்றன. அயோவாவில் உள்ள Tyson Foods ஆலை நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை நோய்தொற்று பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. மேலும், வாஷிங்டனில் உள்ள Tyson ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை நோய்தொற்று பாதித்துள்ளதுடன், ஜியோர்ஜியாவில் உள்ள ஆலையில் மற்றொரு நூறு பேருக்கும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், டெட்ராய்ட்டை தளமாகக் கொண்ட வாகன நிறுவனங்கள், மே மாத ஆரம்பத்தில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய இலக்கு வைத்துள்ளன என்பதுடன், ஃபியட் கிறைஸ்லர் மற்றும் டொயோட்டா நிறுவனங்களும் மே 4 அன்று நிறுவனங்களுக்கு ஆஜராவதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன. மேலும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தொழிலாளர்கள் தன்னார்வ அடிப்படையில் ஏப்ரல் 27 அன்று ஆஜராக வேண்டும் என்றும், மே 4 அன்று விரைந்து உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் முழுவதுமாக 26 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர் என்பதால், நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு திரும்புமாறு நிர்ப்பந்திக்க பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துகின்றன. அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டால் இது அவர்களை வேலையின்மை நலன்களை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக்கும்.

“கொரோனா வைரஸ் நோய்தொற்று தமக்கும் ஏற்பட்டுவிடும் என்று கவலையடைந்து வேலைகளுக்குத் திரும்ப மறுக்கும் அமெரிக்க தொழிலாளர்கள், வேலையின்மை சலுகைகளைப் பெறுவதை பற்றி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது.

தொழிலாளர்கள் வேலையின்மைக்கான உதவியை மறுப்பது என்பது தேசிய அளவிலான வேலைக்குத் திரும்புதல் உத்தரவுகளுக்கான முக்கிய உந்துதலாக உள்ளது என்று தொழிலாளர் நிபுணர்கள் குறிப்பிட்டனர். “[ஜியோர்ஜியா ஆளுநர்] டோம் கெம்பின் (Tom Kemp) இந்த முடிவின் பெரிய உந்துதல்களில் ஒன்றாக, வேலையின்மை பட்டியலில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதுடன், தனியார்துறைக்கு அவர்களை கொடுத்து, அதிலிருந்து அவர்களை உயிர்வாழ வைக்க அவர் நினைப்பதாக,” வேலைவாய்ப்பு வழக்கறிஞர் ஜேம்ஸ் ராட்ஃபோர்ட் (James Radford) ராய்ட்டர்ஸ் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

பங்கு சந்தையின் நலனுக்காக உயிர்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுப்பதில் முன்னணி வகிக்கும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நாளிதழ், வேலையின் போது கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட தொழிலாளர்களால் தொடுக்கப்பட்ட வழக்குகள் மூலம் வணிகங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

“முதலாளிகள் வணிகங்களை மீண்டும் திறப்பதால், தொழிலாளர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ நோய்வாய்ப்படுவார்களானால் வாதி தரப்பு நிறுவனங்களும் முதலாளிகளை குறிவைக்கின்றன,” என்று செய்தியிதழ்கள் தெரிவித்தன. “கட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் தொழிலாளர்கள் மத்தியில் எளிதாக வைரஸ் பரவக்கூடும் என்பதால், நோய்தொற்றுக்கள் சில இறைச்சிபொதியிடும் ஆலைகளையும், மற்றும் உணவகங்களையும் மூடுவதற்கு நிர்ப்பந்தித்துள்ளன… இந்நிலையில், மாநிலங்கள் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்.”

பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலைக்குத் திரும்பும்படி கூறும் முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பான பணியிடம் வேண்டும் என்ற தமது உரிமைகளை கோருகின்றனர்.

வெள்ளிக்கிழமை, 50 அமசன் நிறுவன கிளைகளைச் சேர்ந்த குறைந்தது 300 நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் பண்டகசாலைகளில் உள்ள பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்தனர். நோய்தொற்று காலம் முழுவதுமாகவே இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீபத்திய வாரங்களில், தொழிலாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிய ஆறு தொழிலாளர்களை அமசன் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு மாணவர்கள், இந்த நோய்தொற்று காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இடைக்கால வாடகைச் சலுகையும் மற்றும் பயிற்சி நிவாரண தொகையும் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வெள்ளிக்கிழமை, தெற்கு பிலடெல்பியாவில் உள்ள புனர்வாழ்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மருத்துவமனைக்கான புனித மோனிகா மையத்தில் (St. Monica Center for Rehabilitation & Healthcare nursing home) உள்ள 130 தொழிலாளர்கள், மையத்தை கோவிட்-19 அழிவிற்கு இட்டுச்செல்லும் வகையிலான பாதுகாப்பற்ற நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவர கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

டெட்ராய்ட்டில் உள்ள ஜெஃபெர்சன் வடக்கு ஒருங்கிணைப்பு ஆலையில் (Jefferson North Assembly Plant) உள்ள FCA தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம், “நான் வேலைக்குத் திரும்பிச் செல்வதை எதிர்க்கவில்லை, மாறாக வேலைக்குச் செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். எனக்கு கணவர் இருக்கிறார், குழந்தைகள் இருக்கின்றனர். நான் அவர்களுக்கு நோயை கொண்டு செல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

“சிறைச்சாலையில் சிறைப் பிரிவு பி இல் உள்ளது போன்ற அட்டவணைகளை நீங்களும் கொண்டிருப்பீர்கள். நாங்கள் இன்னமும் தோளோடு தோள் இணைந்து தான் செல்லப் போகிறோம். அதிலும், சிலர் உங்கள் முகத்திற்கு முன்பாகவே இருமுவார்கள்.

வாகன உற்பத்தியாளர்களை குறிப்பிட்டு, அவர் மேலும், “நாங்கள் பலியாவது குறித்து அவர்கள் கவலையும் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், ‘வேலையில்லாமல் இருப்பதற்கு போதுமான தொகை எங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றும், இப்போது எங்களை வேலைக்குத் திரும்பச் செய்து அதை ஈடுசெய்ய இது சரியான நேரம் என்றும்’ அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

விமான உற்பத்தியாளரான போயிங் (Boeing) நிறுவனம் இந்த வாரம் அதன் அமெரிக்க தொழிற்சாலைகளில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்தது என்பது, தொழில்துறை உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு சோதனை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏராளமான போயிங் தொழிலாளர்கள் இந்த வாரம் வேலைக்குத் திரும்புவதை புறக்கணித்தனர்.

ஜியோர்ஜியா ஆளுநர் மாளிகையின் முன்பு வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் “வீட்டிலேயே இருங்கள்! இது வணிகத்தைத் திறப்பதற்கான நேரம் அல்ல!” மற்றும் “ஜியோர்ஜியா சீக்கிரம் திறக்கப்படுகிறது!” என்பது போன்ற வாசகங்களைக் கொண்ட அட்டைகளுடன் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கடந்த வாரம் முழுவதுமாக, அரிசோனா, வேர்ஜினியா, மற்றும் பிற மாநிலங்களில் உள்ள செவிலியர்களும் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களும் பாதுகாப்பற்ற வேலைக்குத் திரும்புமாறு கோரும் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டனர்.

இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதிலும் நடந்து வருகின்றன.

மெக்சிக்கோவில் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை மறுதொடக்கம் செய்வதற்கு உள்ள தடை இன்னமும் தொடர்கின்ற நிலையில், Ciudad Juarez நகரில் வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிலாளர்கள் இந்த வாரம் வேலைநிறுத்தம் செய்தனர். இதில், Electrical Components International நிறுவனம் நடத்தும் ஆலைகளின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கக் கோருவதும் அடங்கும்.

பிரான்சில், மே மாதத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்பாக மக்ரோன் அரசாங்கம் தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தக் கோரி ஆசிரியர்கள் உத்தியோகபூர்வ வேலைநிறுத்த அறிவிப்பை தாக்கல் செய்துள்ளனர்.

பிரிட்டனில், லீட்ஸில் (Leeds) உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மனநல பிரிவுகளில் போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் மாற்றுப் பணிகளை ஏற்க மறுத்து வருகின்றனர். 46 வயது லீட்ஸ் மனநல பிரிவு செவிலியரான, Khulisani Nkala, கடந்த வாரம் கொரொனா வைரஸ் பாதிப்பால் இறந்தார். மேலும் YorkShire Post நாளிதழில் ஒரு செவிலியர், “அறுவை சிகிச்சைக்கான முகக்கவசங்களை அணிவது வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் எனக் கருதி அரசாங்கம் அவற்றை தயாரித்து வருகிறது. அது அப்படியல்ல. அதற்கு பதிலாக எனது முகத்தில் வெறும் ஒரு துணியை வைத்திருக்கலாம்” என்று கூறினார்.

ஆரம்பத்திலிருந்தே நிதிய தன்னலக்குழுவிற்காக பரிந்துபேசும் ட்ரம்ப் நிர்வாகம், கோவிட்-19 நோய்தொற்று குறித்து ஒரேயொரு கவலையை மட்டுமே கொண்டிருந்தது: அது, பங்கு சந்தை மதிப்புக்களையும் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களின் இலாப வரம்புகளையும் பாதுகாப்பதும் மற்றும் விரிவாக்கம் செய்வதும் ஆகும்.

ட்ரம்ப் நிர்வாகமும் மற்றும் முதலாளிகளும் விடுத்து வரும் பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைக்குத் திரும்புவதற்கான கோரிக்கைகள் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பானது, அநேகமாக நோய் எங்கும் கட்டுப்படுத்தப்படவில்லை என்ற நிலைமைகளின் கீழ் வணிகங்களை மீண்டும் திறப்பது பொறுப்பற்ற செயலாகும் என்று தெளிவுபடுத்திய முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களின் அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்திலிருந்தும், சமூகத்தின் சோசலிச மாற்றத்திலிருந்தும் பிரிக்க முடியாதது.

Loading