பாரிஸின் செயின்-செண்ட்-டெனிஸ் புறநகரில் உள்ள போலீசார் அதிபர் பட்டினி கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய COVID-19 தொற்றுநோயானது, தொழிலாளர்களை, பரந்துபட்ட மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்ய இயலாத நிதி பிரபுத்துவத்திலிருந்து பிரிக்கும் வர்க்க இடைவெளியை அம்பலப்படுத்தியுள்ளது. ஏகாதிபத்திய நாடுகள் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை நிதிச் சந்தைகளில் செலுத்துவதால், உலக உணவுத் திட்டம் 265 மில்லியன் மக்கள் உலகளவில் பட்டினிக்கு ஆளாகுவது இரட்டிப்பாகும் என கணித்துள்ளது. ஆபிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும், கேப் டவுன் முதல் கராகஸ் வரை பட்டினிக் கலவரங்கள் உருவாகிவருக்கின்றன, அத்துடன் ஏகாதிபத்திய மையங்களையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

செயின்-சென்-டெனிஸ் மாவட்டத்தின் பொலீஸ் அதிபரான Georges François Leclerc, இல் து பிரான்ஸ் மாநிலத்தின் பொலீஸ் அதிபரான Michel Cadot க்கு எழுதிய மின்னஞ்சலில், இந்த மாவட்டத்தின் ஏழ்மையான பெருநகரத்தில் பட்டினிக் கலவரங்கள் வளர்ச்சியைக் காண்கிறது என்ற தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். நையாண்டி செய்தித்தாளான Le Canard Enchaîné, Leclerc இன் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தியது: "அடுத்த பதினைந்து நாட்களில் எனது முக்கிய ஆபத்து என்னவென்றால், சுகாதார அபாயத்தைத் தவிர்த்து, உணவு ஆபத்தாகும்."

இன்னும் முன்னுரிமையின் படி, "ஆபத்து" Val d’Oise ஐ அச்சுறுத்துகிறது என்றால், அது அவருடைய மாவட்டத்தில் "அதிகபட்சம்" ஆக இருக்கிறது, ஏனெனில் "15,000 முதல் 20,000 பேர் வரை சேரிகள், அவசரகால தங்குமிடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விடுதிகளுக்குள் வாழ்கின்றனர், இவர்கள் அனைவரும் சாப்பாட்டுக் கஸ்ட்டத்தினை முகம்கொடுக்கின்றனர். பதிவுசெய்யப்படாத பொருளாதாரம், திருட்டு, ‘ஊபெர்-பொருளாதாரம்’ (Uber-economy) மற்றும் தற்காலிக வேலைகளின் சரிவு அனைத்தும் செயிண்ட்-டெனிஸில் தொழிலாளர்களின் வருவாயில் ஆபத்தான பெரும், திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன”.

பாரிஸின் வடக்கே Hauts-de-Seine இல் உள்ள Villeneuve-la-Garenne (வில்லெனுவு-லா-கரேன்) ஐ சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, 30 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கடந்து சென்றபோது தனது காரின் கதவைத் திடீரென திறந்ததால் அந்த இளைஞர் காயப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து பாரிஸ் பிராந்தியத்தில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காயப்பட்ட 30 வயது இளைஞன் கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

அப்போதிருந்து, காவல்துறையினரை இலக்காகக் கொண்டு எரிபொருள் மற்றும் தீச்சுவாலை ஏற்படுத்தும் ஏறிகணை சாதனங்கள் வீசப்பட்டுள்ளதாக வழக்கமான அறிக்கைகள் வந்துள்ளன, அவை Villeneuve-la-Garenne, Gennevilliers மற்றும் Nanterre போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன அத்துடன் Bagneux என்ற இடத்தில் கார்கள் எரிக்கப்பட்டுளன. பிராந்திய உளவுத்துறையால் "உணர்ச்சிவசப்படக் கூடிய" இடம் என வகைப்படுத்தப்பட்ட 700 நகரங்களில் 65 இடங்கள் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாரிஸின் வடக்கே அமைந்துள்ள செயின்ட்-டெனிஸ் மாவட்டமானது புலம்பெயர்ந்த பின்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் அடர்த்தியாக வாழும் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற வேலைகளை செய்துகொண்டு வாழ்கின்றனர், இங்கே வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட இரு மடங்காகும், அத்துடன் 15 முதல் 24 வயதுடையவர்களில் மூன்று பேரில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளனர்.

சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லாத நிலையில், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்தற்கு தனிமைப்படுத்தல் மட்டுமே ஒரே வழிமுறையாக இருக்கிறது. எவ்வாறாயினும், பகுதி வேலையின்மை குறித்து மக்ரோன் அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகள் மற்றும் குடும்பங்களுக்கு CAF செலுத்திய சில நூறு யூரோக்கள் தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்வதற்கு போதுமானதாக இல்லை. ஆனால் இதற்கு மாறாக வங்கிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளன. உலகளாவிய தொற்றுநோய், முதலாளித்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையையும் "பிரெஞ்சு சமூக மாதிரி" என்று அழைக்கப்பட்டதன் திவால்நிலையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இன்னும் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு 1,000 யூரோ வரியற்ற போனஸ் வழங்குமாறு மக்ரோன் தனியார் நிறுவனங்களை கேட்டுக்கொண்டாலும், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அந்த போனஸ் கிடைக்கவில்லை. "1,000 யூரோ போனஸை, பெற்றுக்கொள்ள எனக்கு உரிமை இல்லை!" என குப்பை சேகரிப்பாளராக தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் Stéphane Lafeuille, உணவு விநியோகத்திற்காக வரிசையில் காத்திருப்பதன் ஆபத்து குறித்து ஊடகங்களுக்கு புகார் அளித்தபோது தெரிவித்தார்: “தற்காலிக பணியாளர்களான நானும் எனது சகாக்களும் மிக கடினமான நிலையில் வாழ்கிறோம், நாங்கள் எமது குளிர்சாதன பெட்டியை நிரப்பினால், கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நிலையில்தான் இருக்கிறோம்”. இதன் அர்த்தம், உணவுப் பொருட்களை வாங்குவதற்காக பாதுகாப்பற்ற முறையில் பணிபுரிவதால் தொற்று நோய்க்குள்ளாகும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதாகும்.

“பீதி எங்கும் நிரந்தரமானதாக உள்ளது. எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், என்னிடம் எதுவுமே இல்லை, எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

தங்களின் ஒரே சீரான சத்துள்ள உணவுக்காக பள்ளியில் மதிய உணவை நம்பியுள்ள பல குழந்தைகள், பள்ளிகள் மூடப்பட்டு, மக்கள் உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்க அரசு எதுவும் செய்யாததால் பசியுடன் உள்ளனர். செயின்ட்-டெனிஸின் மாவட்ட கவுன்சில், Clichy sous Bois உள்ள ஒரு கல்லூரியின் கேண்டீனில் 1,500 பேருக்கான உணவை தயாரிக்க கோரியபோது, 3,000 பேருக்கான உணவு தயார் செய்ய வேண்டியிருந்தது தெரியவந்தது, ஆகையால் இரண்டாவது பள்ளிக் கேண்டீனையும் உணவு தயாரிக்கும்படி கோரவேண்டும்.

தனது மின்னஞ்சலில், காவல்துறை தலைவரான Leclerc எச்சரித்தார், "ஒரு மாத தனிமைப்படுத்தலில் செய்யக்கூடியதாக இருந்தது, இரண்டு மாதத்திற்கு முடியாத காரியமாகும் ... 15,000 முதல் 20,000 பேர் வரை சாப்பிடவேண்டியுள்ள நிலையில், நாங்கள் பதினைந்து நாட்களுக்குள் 9,500 பேருக்கு மட்டுமே டிக்கெட்டுகளை விநியோகிக்க முடியும். அதேசமயம் நாம் 15,000 முதல் 20,000 மக்களுக்கு உணவளிக்க வேண்டிய தேவையுள்ளது. "எல்லோருக்குமான சூப் பரிமாறும்போது மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கிறார்கள், இந்த சூப்பு கொடுக்கும் நிகழ்வினை மாவட்ட காவல்துறை நிர்வாகம் "தொழிலாளர்கள்" என்ற தலைப்பில் பதிவுசெய்திருக்கிறது.

தொழிலாளர்கள்தான், குறிப்பாக செயிண்ட்-டெனிஸில் உள்ள தொழிலாளர்கள், இந்த தொற்றுநோயை எதிர்கொள்வதில் மிகப் பெரிய விலையைச் செலுத்துகிறார்கள்: வேலையில் ஈடுபடும்போது அவர்களை வைரஸ் தொற்றுக்கு தம்மை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள், அதே நேரத்தில் உள்கட்டமைப்பின் பற்றாக்குறை சமூக விலகல் நடவடிக்கைகளை மதிக்கவிடாமல் தடுக்கிறது. மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரை கிடைக்கப்பெற்ற சமீபத்திய அரசாங்க தகவல்களின் படி, கொரோனா வைரஸ் முதன்முதலில் குவிந்திருந்த கிழக்கு பிரான்சிற்குப் பின்னர் - செயின்ட்-டெனிஸ் இறப்பு விகிதத்தில் மிகப் பெரிய அதிகரிப்பினை சந்தித்தது, இது நாட்டின் எந்தப் பகுதியிலும் கடந்த ஆண்டு இருந்ததைவிட 101.8 சதவீதமாகும்.

இந்த மாவட்டத்தில் உள்ள செவிலியர்கள், பொதிகளை விநியோகிப்பவர்கள், பிராந்திய முகவர்கள் மற்றும் மருத்துவ மற்றும் சுகாதார உதவியாளர்கள் அனைவரும், தொலைவில் இருந்து பணிகளை செய்யும் 57 சதவீத நிர்வாகிகளைப் போல பணிசெய்ய முடியாது, மற்றும் நடுத்தர வர்க்க செல்வந்தர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியைப் போல கிராமப்புறங்களில் உள்ள இரண்டாவது குடியிருப்புகளுக்கு தப்பிச் செல்ல முடியாத நகரங்களை விட்டு வெளியேற முடியாத நிலையில்தான் வாழ்கிறார்கள்.

செயின்ட் டெனிஸின் தொழிலாளர்கள் COVID-19 தொற்று இலகுவாக பற்றிக்கொள்ள தம்மை வெளிப்படையாக வைத்திருக்கும் இயலாத நிலையில் வாழ்பவர்கள் மட்டுமல்ல, உணவினை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும், உணவு பாதுகாப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அத்துடன் செயிண்ட்-டெனிஸில் 10,000 மக்களுக்கு 0.5 மருத்துவமனை படுக்கைகள் மட்டுமே உள்ளன, அல்லது தோராயமாக பாரிஸின் சரியான சதவீதத்தின் மூன்றில் ஒரு பங்கு எனக்கூறலாம், இது முற்றிலும் போதிய படுக்கை அமைப்பைக் கொண்டிருக்காததுடன், தொற்றுநோய் பரவலால் விரைவாக மூழ்கும் நிலையில் உள்ளது.

பொண்டி நகர மேயர் Sylvine Thomassin தான் நாளொன்றுக்கு இவ்வளவு இறப்புச் சான்றிதழ்களில் ஒருபோதுமே கையெழுத்திடவில்லை எனக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அதிகப்படியான இறப்புகள் கஸ்ட்டமான வாழ்நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்: "அரசினால் அளிக்கப்பட்ட சமூக உதவி வீடுகள், பெரும்பாலும் மிகச் சிறியவை, எனவே எமது வீட்டினினுள்ளே ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளாமல் கடப்பது கடினம் ... இது வெளிப்படையாக, மரண எண்ணிக்கையை அதிகரிக்கிறது."

இந்த மாவட்டத்தின் அவசர சிகிச்சைத்துறையின் (Samu) இன் தலைவரான Frédéric Adnet கூறுகிறார்: “செயின்ட்-டெனிஸில், அதிக இறப்புக்கள் உள்ளன, ஏனெனில் மிக சாதரணமாக கூறலாம், பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவுள்ளனர், வைரஸ் மற்ற இடங்களை விட மிக எளிதாக பரவுகிறது. எங்களைப் போன்ற பின்தங்கிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் சிக்கலானதாக இருக்கிறது, ஏனெனில் இங்கே புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விடுதிகள் மற்றும் சேரிகள் என சிறிய குடியிருப்புகளில் பல பெரிய குடும்பங்கள் உள்ளன. தொற்று நோயால் பெரும்பாலும் மிகவும் கஸ்ட்டத்தில் உள்ளவர்களே பாதிப்புக்குள்ளாவர் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் இப்படியான நிலையில் தொற்று பரவுதல் எளிதானதாக இருப்பதுடன், மேலும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவது மிகவும் கடினமாக இருக்கும்”.

ஒட்டுமொத்தமாக மக்களை மீட்டெடுக்கவும், உணவளிக்கவும், பராமரிக்கவும் "அத்தியாவசிய" தொழிலாளர்கள் வாழும் நகரங்களில், எண்ணற்ற ஆயிரக்கணக்கானோர் பசியுடன் அல்லது நோய்வாய்ப்பட்டு, சரியான கவனிப்பு இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த முதலாளித்துவ சமூக ஒழுங்கின் மீதான மறுக்க முடியாத கண்டனமாகும். பெரும் செல்வந்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் பரந்த வங்கி மற்றும் கார்ப்பரேட் பிணை எடுப்புக்களுக்காக கொட்டப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த பரந்த சமூக வளங்கள் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களை சரியாக பராமரிக்க பயன்படவேண்டும்.

Loading