முன்னோக்கு

2020 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட்டின் பெரிய திருட்டு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 தொற்றுநோயிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் பெரும்பான்மையான. மக்களுக்கு தொடர்ந்து பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது, புதிய மாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அதாவது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணம் செலுத்த வருமானம் இல்லாததால் வாடகை மற்றும் அடமான கடன்களை செலுத்த முடியாதிருக்கும்.

கடந்த ஐந்து வாரங்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையின்மை நலன்களுக்காக மனு தாக்கல் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில், தாக்கல் செய்தவர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஏதேனும் கொடுப்பனவுகளை பெற்றனர். மில்லியன் கணக்கானவர்கள் எந்தவொரு உதவிக்கும் தகுதியற்றவர்களாக உள்ளனர்.

1,200 டாலர்கள் கூட்டாட்சி பணஉதவி உட்பட மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் எதையும் பெறவில்லை. மேலும் அவர்கள் தமது வறுமையைத் தடுக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். உணவு வங்கிகள் தேவையால் அதிகமாகி, அங்குள்ள பிரதான பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தின் கூற்றுப்படி, வேலை இழந்த 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் தங்கள் உடல்நலக் காப்பீட்டையும் இழந்துவிட்டனர். அடுத்தடுத்த வாரங்களில் மில்லியன் கணக்கானவர்கள் இதனை இழக்க உள்ளனர்.

எவ்வாறாயினும், இங்கு இரண்டு யதார்த்தங்கள், இரண்டு அமெரிக்காக்கள் உள்ளன. பரவலான தொழிலாளர்களின் பொருளாதார வறுமையை எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர்களை வேலைக்குத் திருப்புவதற்கான முயற்சியாகப் பயன்படுத்தப்படுகையில், பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு அதனது செல்வத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பார்க்கின்றது.

பல பாரிய பணத்தை பதுக்கி வைத்துள்ள பிரமாண்டமான நிறுவனங்கள், தொடர்ந்து நிர்வாகிகளுக்கு ஊதியம் கொடுக்கும் போது ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. பொழுதுபோக்கு நிறுவனமான Disney சமீபத்தில் அதன் நிர்வாகிகளுக்கான இழப்பீட்டுத் திட்டத்தைப் பராமரிக்கும் போது 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு விலக்க முனைந்தபோது பொது கண்டனத்திற்கு உட்பட்டது. ஆனால் இது பொதுவான விதியாக உள்ளது.

அமெரிக்க பில்லியனர்கள், மார்ச் நடுப்பகுதியில் இருந்து தங்கள் செல்வத்தை 282 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளனர். வோல் ஸ்ட்ரீட்டில் பங்கு மதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த 614 தனிநபர்களின் கூட்டு செல்வம் திங்களன்று மீண்டும் அதிகரித்து 3.2 டிரில்லியன் டாலர் ஆகியது.

ஜேர்மனிய செய்தி ஏடு Der Spiegel இல் நேற்று ஒரு தலைப்பு பொருளாதார நிலைமையை படம்பிடித்துக் காட்டியது: "அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதேபோல் சந்தைகளும் அதிகரிக்கின்றன." Der Spiegel எழுதுகின்றது: “அமெரிக்க வரலாற்றில் ஒரு போதும் காணப்படாதமாதிரி வணிகங்கள் மூடப்பட்டு வேலையின்மை அதிகமாக இருக்கும்போது, அடிப்படை பொருளாதார தரவு உண்மையில் கொள்வனவு செய்வதற்கு மிகக் குறைந்த ஊக்கத்தொகையை வழங்கினால், ஏன் அதற்கு பின்னால் செல்லவேண்டி இருக்கிறது? இந்த புதிருக்கு தீர்வு மூன்று எழுத்துக்களைக் கொண்டுள்ளது: அதாவது Fed” ஆகும்.

மத்திய வங்கி, அதாவது அமெரிக்க பெடரல் ரிசர்வ், வோல் ஸ்ட்ரீட்டை ஆதரிப்பதற்கு தனது அதிகாரத்தில் அனைத்தையும் செய்யும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதன் விளைவாக, சந்தைகள் அதை தொடர்ந்து செல்கின்றன. "நீங்கள் விலை இழப்புகளுக்கு பந்தயம் கட்ட விரும்பினால், நடைமுறையில் எல்லையற்ற நிதியை கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திற்கு எதிராக நீங்கள் பந்தயம் கட்ட வேண்டும்" என்று Der Spiegel குறிப்பிடுகின்றது.

மார்ச் மாதத்தில் தொடங்கி, ட்ரம்ப் நிர்வாகமும் ஊடகங்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்தை குறைத்து மதிப்பிடுகையில், பெடரல் ரிசர்வ் சந்தைகளில் பணத்தை செலுத்தத் தொடங்கியது. முதலில் வட்டி விகிதங்களை பூஜ்ஜியமாக குறைப்பதன் மூலமும், பின்னர் சொத்துக்களை வாங்குவதற்கான திட்டங்களைத் தொடங்கியதன் மூலமும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து பங்குகளை வாங்குவதற்கு அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.

பெடரல் ரிசர்வ் செயல்பாட்டிற்கு மார்ச் மாத இறுதியில் அமெரிக்க காங்கிரஸ் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அது "CARES சட்டம்" ஐ நிறைவேற்றி, 454 பில்லியன் டாலர்களை 4 டிரில்லியன் டாலர் வரை சொத்து வாங்குவதற்கு நிதியளித்தது. ஒவ்வொரு செனட்டரும் CARES சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் வெர்மான்ட் இன் முன்னாள் "ஜனநாயக சோசலிஸ்ட்" ஆன பேர்னி சாண்டர்ஸ் உம் உள்ளடங்குவார்.

மத்திய வங்கி ஒவ்வொரு நாளும் 80 பில்லியன் டாலர் அளவில் செலவழிக்கிறது. 2008 க்கு முன்னர் 1 ட்ரில்லியன் டாலருக்கும் குறைவாகவும் பின்னர் கடந்த ஆண்டு 4 ட்ரில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்த மத்திய வங்கியின் இருப்புநிலை கணக்கு, 11 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய வங்கியின் மொத்த சொத்துக்களின் மதிப்பை அமெரிக்காவின் மொத்த வருடாந்திர பொருளாதார உற்பத்தியின் கிட்டத்தட்ட பாதியளவிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருவர் விஷயங்களை சரியான பெயர்களால் அழைக்க வேண்டும். “சொத்து கொள்முதல்” மற்றும் “பணத்தை அச்சடித்தல்” போன்ற சொற்கள் என்ன நடக்கிறது என்பதை மறைக்க முனைகின்றன. இது முன்னோடியில்லாத அளவில் பகற்கொள்ளை, திருட்டு, கொள்ளை. பங்கு உரிமையானது பணக்காரர்களிடையே பெருமளவில் குவிந்துள்ளதால், பணக்காரர்கள்தான் இதிலிருந்து பயனடைகின்றார்கள்.

2020 ஆம் ஆண்டின் பெரிய வோல் ஸ்ட்ரீட் திருட்டிற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் உதவுகின்றன. பிரதான ஊடகங்கள் உட்பட அரசின் பல்வேறு நிறுவனங்கள், தங்களை வோல் ஸ்ட்ரீட்டின் ஊதியம் பெறும் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களைத் தவிர வேறொன்றுமில்லை என்று வெளிப்படுத்தியுள்ளன. மற்றவர்களுக்கு இன்னும் இதைப்பற்றி இன்னும் வெளிப்படையான சொற்கள் இருக்கலாம்.

2008 நெருக்கடிக்குப் பின்னர், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுப்பதை திட்டமிட்டன. செலுத்தப்படாத கடன்களை, குறிப்பாக அடமான ஆதரவுடைய பத்திரங்களில் வாங்கின. அவை ஏகப்பட்ட ஊகங்களுக்கு வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, சமூக சமத்துவமின்மை சாதனை அளவிற்கு அதிகரித்தது. பெருநிறுவன ரொக்கப் பத்திரங்கள் 2 ட்ரில்லியன் டாலராக உயர்ந்தன. சில 4 ட்ரில்லியன் பங்குகளை திரும்ப வாங்குவதற்கு செலுத்தப்பட்டது.

இந்த தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் பிணை எடுக்கப்பட்டுள்ளன. இந்தமுறை மிகப்பெரிய அளவில் மீண்டும், இந்த நெருக்கடியானது பணக்காரர்களின் நலன்களுக்காக வர்க்க உறவுகளை மறுசீரமைக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட்டிற்கு மாற்றப்பட்ட அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் அதாவது சிக்கன நடவடிக்கை மூலம், சமூக திட்டங்களை மேலும் அழித்தல் மற்றும் தீவிரமான சுரண்டல் மூலம் தொழிலாள வர்க்கத்தால் வழங்கப்படும். எனவே அனைவரையும் மீண்டும் பணிக்குத் திருப்புவதற்கான இடைவிடா பிரச்சாரம், தொற்றுநோயின் ஒரு புதிய அலை மற்றும் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களை அபாயப்படுத்துகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் "பொருளாதாரத்தை காப்பாற்ற" அவசியம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் “அமெரிக்க மக்கள்” போன்ற “பொருளாதாரம்” என்பது ஒரு கருத்துருவாக்கமாகும். காப்பாற்றப்பட்ட “பொருளாதாரம்” பணக்காரர்களின், முதலாளித்துவத்தின் பொருளாதாரமாகும். எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் சமூகத்தின் இழப்பில் நிதியதன்னலக்குழுவின் நலன்களைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு கொள்கையும் வர்க்க நலன்களால் வழிநடத்தப்படுகின்றன.

ஒரு சோசலிச பதில், அதாவது, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்று, முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டது. ட்ரில்லியன் கணக்கான தொகை ஒதுக்கப்பட வேண்டும், வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுப்பதற்காக அல்ல, மாறாக சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், அனைத்து அத்தியாவசிய தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து வங்கிகளின் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடன்கள் மற்றும் பிற வழிமுறைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும். மாணவர் கடன் (1.5$ ட்ரில்லியன்), கார் கடன்கள் (1.3$ ட்ரில்லியன்) மற்றும் கிரெடிட் கார்டு கடன் (1.08$ ட்ரில்லியன்) அனைத்தும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு மாற்றப்பட்ட பணத்தினால் இல்லாது செய்யப்படலாம், இன்னும் ட்ரில்லியன்கள் மிச்சமாக இருக்கும்.

அனைத்து தொழிலாளர்களும் தொற்றுநோய்க்கான காலத்திற்கு தங்கள் முழு வருமானத்தையும் தொடர்ந்து பெற வேண்டும். மிக உயர்ந்த தரமான சுகாதாரப் பாதுகாப்பு அனைவருக்கும் இலவசமாகவும், முற்றிலும் சமமான அடிப்படையிலும் கிடைக்க வேண்டும்.

மேலும், சிறு வணிகங்களுக்கு உண்மையான உதவியாக இருக்க வேண்டும். சிறு வணிகங்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸால் இயற்றப்பட்ட காசோலை பாதுகாப்பு திட்டம் -Paycheck Protection Program- என்று அழைக்கப்படுவது, உணவகச் சங்கிலிகள், ஹோட்டல் கூட்டமைப்புகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதிகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கான மற்றொரு மிகப்பெரிய செலுத்துமதியாக மாறியுள்ளது.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் பிற அவசர நடவடிக்கைகள், தற்போதுள்ள அரச அமைப்புகளின் கட்டமைப்பிற்குள் பாதுகாக்க முடியாது.

எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் ஒழுங்கமைக்கத் தவறியதிலிருந்து அச்சுறுத்தலை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிடுவதிலிருந்து, தொற்றுநோய்க்கான முழு பிரதிபலிப்பும், வோல் ஸ்ட்ரீட்டிற்கு பாரிய கையளிப்பும் மற்றும் தொற்றுநோய் அதிகரிக்கையிலும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதற்கான தற்போதைய பிரச்சாரமும் அரசு தொடர்பான மார்க்சிச தத்துவத்திற்கான சான்றாக உள்ளது. அரசு என்பது ஒரு நடுநிலையான அமைப்பு அல்ல. நிதிய தன்னலக்குழுவே ஆட்சிசெலுத்துகின்றது. அது அவர்களின் அரசாகும். இந்த அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல்வாதிகள் ஆவர். இந்த ஊடகங்கள் அவர்களின் ஊடகங்களாகும்.

முதலாளித்துவ அமைப்பின் மீது ஒரு நேரடி தாக்குதல் இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. நிதிய தன்னலக்குழுக்களின் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பிரம்மாண்டமான வங்கிகள் மற்றும் நிறுவனங்களை பொது சொத்தான பயன்பாடுகளாக மாற்றுவதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் மீதான அவர்களின் பிடியை உடைக்க வேண்டும்.

விநியோகங்கள், உணவு உற்பத்தி, சுகாதாரப் பாதுகாப்பு, எரிசக்தி, உற்பத்தி மற்றும் பிற அடிப்படைத் தொழில்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவதற்காக மறுசீரமைக்கப்பட வேண்டும். வோல் ஸ்ட்ரீட்டின் பாரிய பிணையெடுப்புக்கள் பின்வாங்கப்பட வேண்டும். அத்துடன் சமூக வளங்கள் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரரீதியான நல்வாழ்வையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக திருப்பி விடப்படவேண்டும்.

இத்தகைய கொள்கைகளை தற்போதுள்ள அரசியல் அமைப்பினுள் யதார்த்தமாக்க முடியாது. இது தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டி அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான அவசியத்தை எழுப்புகின்றது. அதாவது தொழிலாளர்களுக்கான தொழிலாளர்களாலான ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபித்து, மனிதகுலத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

Loading