தெற்காசியா முழுவதிலுமாக கொரொனா வைரஸ் நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும் படி அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதிப்படையச் செய்ததும் மற்றும், 210,000 க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்டதுமான கொரொனா வைரஸ் நோய்தொற்று தெற்காசியா முழுவதிலுமாக விரைந்து பரவி வருகிறது. இந்த நெருக்கடிக்கு இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த அரசாங்கங்கள் காட்டிய பிரதிபலிப்பானது, இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களும் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளும் அவர்களது போட்டி தேசிய முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினால் அவமதிக்கப்படுவதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் மும்பை, புது தில்லி, சென்னை மற்றும் கொல்கத்தா; பாகிஸ்தானில் கராச்சி மற்றும் லாகூர்; பங்களாதேஷில் டாக்கா; மற்றும் இலங்கையில் கொழும்பு போன்ற இந்த பிராந்தியத்தின் மிகஅதிக மக்கள்தொகை கொண்ட நகர்புற மையங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், அவற்றின் பொது சுகாதார அமைப்புக்களின் அதிர்ச்சியூட்டும் நிலை, பரவலாக நிலவும் வறுமை, மற்றும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகல் இல்லாமை போன்ற நிலைமைகளால் இந்த நோய் தெற்காசியாவில் மட்டும் மில்லியன் கணக்கான, ஏன் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதற்கு அச்சுறுத்துகிறது.

இந்த உண்மையான ஆபத்து இருந்தாலும் கூட, இந்த தொற்றுநோயை எதிர்த்து திறம்பட போராடும் வகையில் எந்தவித கணிசமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தெற்காசியாவின் அரசாங்கங்கள் தவறிவிட்டன. அதாவது, முழு ஊரடங்கு மற்றும் பயணத் தடைகள் விதிப்பது உட்பட, சமூக இடைவெளி நடவடிக்கைளுக்கான அவர்களது பிரதிபலிப்பு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அனைத்து தெற்காசிய அரசாங்கங்களும் கோவிட்-19 பரிசோதனைகளை கடுமையான வரையறைக்குட்ப்படுத்தி மேற்கொள்வதால், நோய்தொற்று உண்மையில் பரவியுள்ள அளவு மூடிமறைக்கப்படுகிறது.

ஏப்ரல் 28, 2020 அன்று இந்தியாவில், பிரயாக்ராஜ் பகுதியில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்ய பேருந்திற்காக காத்திருக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிக்கித் தவிக்கும் மாணவர்கள்

நேற்றைய செய்திகளின் படி, இந்தியாவில் 29,451 உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா வைரஸ் நோயாளிகள் இருப்பதும், 939 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதும் பதிவாகியுள்ளது தெரிய வருகிறது.

மார்ச் 24 ஆம் திகதி முதல் ஒட்டுமொத்த இந்தியாவும் முற்றுமுழுதான ஊரடங்கில் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், இந்த முழு ஊரடங்கை முன்னெச்சரிக்கை இல்லாமலும் மற்றும் இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக உள்ள மிகவறிய மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குவதற்கான எந்தவித தீவிர முன்னேற்பாடுகள் இல்லாமலும் அமல்படுத்தியுள்ளது. முதலில் ஏப்ரல் 14 அன்று முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு, பின்னர் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மே 3 வரை அமலில் உள்ளது.

பெரு வணிகங்களும் மற்றும் முதலீட்டாளர்களும் தமது இலாப நலன்களை பாதுகாப்பதற்காக விடுக்கும் கோரிக்கைகளுக்கு ஒத்தூதும் வகையில் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கு தற்போது மோடி அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம், உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது, என்றாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், உள்துறை அமைச்சகம், “நோய்தொற்று தீவிரமாக பரவும் பகுதிகள்,” மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நகரங்கள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் சில்லறை வியாபாரக் கடைகளை மீண்டும் திறக்கலாம் என்று வெள்ளியன்று அறிவித்தது. என்றாலும், அவர்கள் தமது ஊழியர்களில் பாதி பேருடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதுடன், முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

மோடி அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட இந்த பொறுப்பற்ற மற்றும் திடீர் ஊரடங்கு இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை. ஊதியம் வழங்காமல் விடப்பட்டிருந்தவர்களும், மேலும் தற்போது பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுப்பவர்களுமான, முறைசாரா துறைகள் என்றழைக்கப்படும் துறைகளில் வேலை செய்யும் பெரும்பான்மையான தொழிலாளர்களை ஆதரிக்கும் வகையில் எந்தவித வழிமுறையும் முன்வைக்கப்படவில்லை. பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான தனது திட்டத்தை நியாயப்படுத்த இந்த தொழிலாளர்களின் அவல நிலையை மோடி இழிந்த முறையில் பயன்படுத்துகிறார்.

ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 36 மணித்தியாலங்களுக்குப் பின்னர், மோடி அரசாங்கம், வறிய 800 மில்லியன் இந்தியர்களுக்கு பயனளிப்பதாகக் கூறப்படும் 1.7 டிரில்லியன் ரூபாய் (22.5 பில்லியன் அமெரிக்க டாலர்) ஊக்க நிதி வழங்கப்படவிருப்பதாக அறிவித்தார் என்றாலும், அந்த நிதியில் பெரும்பகுதி திறம்பட மறுசுழற்சி செய்யப்பட்டது என்பதுடன், முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களுடன் அவை தொடர்புபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தனிநபருக்கு கிடைக்கக்கூடிய நிதியுதவி என்பது சுமார் 28.25 அமெரிக்க டாலர் அல்லது 2,150 ரூபாய் என்ற அளவில் அற்பமான தொகையாக இருந்தது, அதிலும் இத்தொகையில் பெரும்பகுதி அப்போதிருந்து வாரங்கள், ஏன் மாதங்கள் கழித்து கூட வழங்கப்படுவதாக இருந்தது. மேலும், பல்வேறு அதிகாரத்துவ தடைகள் மற்றும் அரசாங்கத்தின் இயலாமை காரணமாக, இலட்சக்கணக்கான ஏழை மக்கள் இந்த பஞ்ச-வகை நிவாரணத்தைக் கூட அணுக முடியவில்லை.

பரந்தளவிலான பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்த அழைப்புக்களை மோடி அரசாங்கம் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது என்பதுடன், சுகாதாரப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்த கணிசமானளவு கூடுதல் நிதியை வழங்கவும் தவறிவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் இவ்வரசாங்கம் மறுத்துவிட்டது.

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானும் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (PTI) அரசாங்கமும், அரை மனதுடன் மே 9 வரை முழு ஊரடங்கை விரிவுபடுத்தியுள்ளனர். மாகாண அரசாங்கங்கள் மற்றும் இராணுவம் என அனைத்தும் மத்திய அரசாங்கத்தை முழு ஊரடங்கை செயல்படுத்த கட்டாயப்படுத்தின என்றாலும், மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணித்து வந்துள்ள கான் அரசாங்கம், மக்கள் “பசியால் இறந்துவிடுவார்கள்” என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில் இழிந்த முறையில் முதலில் அதை எதிர்த்தது.

பாகிஸ்தான் “புத்திசாலித்தனமான ஊரடங்கை” இப்போது செயல்படுத்தியிருப்பதாக கூறினாலும், அரசாங்கத்தின் முதன்மை நோக்கம், அடுத்தடுத்த சீரமைப்புக்கள் மூலமாக, வணிக நடவடிக்கைகளை, குறிப்பாக ஏற்றுமதி தொழில்களை விரைந்து மறுதொடக்கம் செய்ய வேண்டும் என்பதே.

இங்கு 312 இறப்புக்கள் உட்பட, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வரை 14,612 ஆக உள்ளது. இந்த புள்ளிவிபரங்கள், தீவிர பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால், நோய்தொற்று உண்மையாக எந்தளவிற்கு பரவியுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி மூடிமறைக்கின்றன. 200 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் திங்கள் வரை வெறும் 150,756 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு முறைகளைப் போலவே, தீவிர சிகிச்சைக்கான பராமரிப்பு படுக்கைகள், உபகரணங்கள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் பாகிஸ்தானின் வெளிப்படையாக அணுகக்கூடிய சுகாதார சேவைகள் எப்பொழுதும் பிற ஆதரவை நம்பியுள்ளன.

மக்களுக்காக கான் முதலைக் கண்ணீர் வடிப்பது ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் சுகாதார நெருக்கடி மற்றும் அதன் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2 சதவிகிதத்திற்கு சமமான நிதியையே அவர் ஒதுக்கியுள்ளார். ஆயினும், பழமைவாத மதிப்பீடுகள் கூட, அண்ணளவாக 40 சதவிகித மக்கள் வறுமையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) 1.4 பில்லியன் டாலர் அவசரகால “கோவிட்-19 நோய்தொற்று எதிர்ப்பு” கடனை பெறுகின்ற நிலையில், கானும் அவரது PTI அரசாங்கமும் முதலீட்டாளர் சார்பு “சீர்திருந்தங்களுக்கு” என ஏற்கனவேயுள்ள 6 பில்லியன் டாலர் IMF கடன் தொகையில் இருந்து நிதி வழங்க மீண்டும் உறுதியளித்துனர்.

கானின் “புத்திசாலித்தனமான ஊரடங்கை” செயல்படுத்துவதற்கு உதவுவதற்கான ஒரு மூலோபாயத்துடன் இராணுவம் முன்வந்துள்ளது தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை என்பதே உண்மை. இராணுவத்தின் “பரிசோதனை செய்தல், கண்காணித்தறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல்” திட்டம் என்பது, பொருளாதாரம் இன்னும் ஆழமான நெருக்கடியில் மூழ்கிவிடாமல் தடுப்பதற்கான ஆளும் உயரடுக்கின் தீவிர முயற்சியாக, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு, குறிப்பாக ஏற்றுமதி தொழில்கள் சார்ந்த வேலைகளுக்கு திரும்ப செய்வதற்கான ஒரு மூடுதிரையை வழங்குகிறது.

இராணுவம் மற்றும் ஆளும் உயரடுக்கினரின் மத ரீதியான உரிமையை பல தசாப்தங்களாக சுரண்டி வரும் கான், ஆகஸ்ட் 2018 இல் “இஸ்லாமிய விழுமியங்களை” ஊக்குவிக்கும் “மறுபிறப்பு எடுத்த இஸ்லாமியராக” ஆட்சிக்கு வந்தார். மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, ரமலான் மாதத்தில் மதக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மறுத்துவிட்டார். ஒரு மதிப்பீட்டின் படி, இது மட்டுமே மே 15 க்குள் கூடுதலாக 70,000 கோவிட்-19 நோயாளிகளை அங்கு உருவாக்கக்கூடும்.

பங்களாதேஷில், உத்தியோகபூர்வ கோவிட்-19 நோயாளிகள் 6,462 பேர் இருப்பதுடன், 155 பேர் அங்கு இறந்துள்ளனர். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களில் கொரொனா வைரஸ் நோய்தொற்று போன்ற நோய் அறிகுறிகளைக் கொண்டிருந்த 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒருபோதும் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்று பங்களாதேஷ் ஊடகம் தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 165 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் அண்ணளவாக இந்தியாவைப் போல மூன்று மடங்கு அதிகரிப்புடன் 39,776 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார சேவைகள் அண்மித்து சீர்குலைந்து வருகின்றன என்பதுடன், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண பற்றாக்குறை இருப்பது, அதிலும் கிடைக்கும் உபகரணங்களும் பெரும்பாலும் குறைந்த தரத்துடன் இருப்பதால் மருத்துவ ஊழியர்களும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். குறைந்தது 156 மருத்துவர்களும் 180 செவிலியர்களும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மருத்துவர் இறந்துவிட்டார், மேலும், தோராயமாக 450 மருத்துவர்களும் 600 செவிலியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நாட்டில் ஊரடங்கு மே 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஞாயிறு முதல், ஆடைத் தொழில் முதலாளிகள், தங்களது வெளிநாட்டு கொள்முதல் உத்தரவுகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மற்றும் கொரொனா வைரஸ் தொடர்பான முகக்கவசங்கள் மற்றும் பிற தாயாரிப்புக்களை மேற்கொள்ளவும் அவர்களது தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தது 600 தொழிற்சாலைகள் இன்றுவரை உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. சாதாரண காலங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மற்றும் மலிவு உழைப்பு சுரண்டலுக்கு அரசாங்கமும் உடந்தையாக இருந்தது ஆகியவை குறித்து ஆலை முதலாளிகள் கொண்டிருந்த கொடூரமான முந்தைய பதிவுகளை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் பாதுகாப்பு பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதான ஒரு ஒப்புதல் கடிதம் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட வேண்டும்.

இலங்கையில், செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி, உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா வைரஸ் நோயாளிகள் 611 உள்ளனர் என்பதுடன், அங்கு ஏழு இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

சமீபத்திய நாட்களில் புதிய கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்சவின் அரசாங்கம் வாரக் கணக்கில் நீடித்து வரும் முடக்கத்தை (அல்லது இலங்கை மொழியில் முழு ஊரடங்கு உத்தரவு) இந்த வார தொடக்கம் வரை நீடித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மேற்கு மாவட்டங்களிலும் மற்றும் தீவின் வடமேற்கில் உள்ள புத்தளம் மாவட்டத்திலும் குறைந்தது மே ஆரம்பம் வரை இந்த ஊரடங்கு தொடரும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள ஆளும் உயரடுக்கைப் போல, இராஜபக்சவின் அரசாங்கமும் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க தீவிரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. பதினான்கு சுதந்திர வர்த்தக மண்டலங்கள் (Free Trade Zones - FTZs) குறைந்தளவு பணியாளர்களுடன், அதாவது வழமையான தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்களைக் கொண்டு ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தொற்றுநோயால் தீவிரப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதற்கு ஏற்ப, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புகையில் வேலை வெட்டுக்களை செயல்படுத்த நிறுவனங்கள் முற்படும் என்பதையே இது குறிக்கிறது. இதற்கிடையில், ஆடை உற்பத்தி மற்றும் பிற FTZ தொழில்களில் வேலைக்கு மீண்டும் திரும்பும் படி அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், தோட்டத் துறையும் மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

தனியார் மற்றும் அரசு துறைகள் சார்ந்த அலுவலங்கள் மற்றும் பிற பணியிடங்கள் மே 4 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதிரடியாக நோய்தொற்று பரவி வரும் நிலையில், ஊரடங்கை நீக்கும் முடிவு மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆபத்திற்குட்படுத்தும். நோய்தொற்று தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழிலாளர்கள் தாமாகவே ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கைவிடுகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியும் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளும், பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுகின்ற நிலையில், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால், மக்கள் தாமே சமூக இடைவெளி நடவடிக்கைகளை கடைபிடித்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். என்றாலும், பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு பயணிக்க பயன்படுத்தும் பொது போக்குவரத்து முறையின் படுமோசமான நிலையின் காரணமாக, இத்தகைய சுகாதார தேவைகளை பராமரிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதே.

தமது தொடர்ச்சியான சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு மூடிமறைப்பையும் சாக்குப்போக்கையும் வழங்கும் விதமாக கோவிட்-19 அவசரகால நிலையை ஜனாதிபதி இராஜபக்ச பயன்படுத்துகிறார். குறிப்பாக அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக, கொழும்புக்கு பெரும் இராணுவப் படையினரை அனுப்புவதற்கு அவர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையின் மூலம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட செய்தி, நோய்தொற்றைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளை திணிப்பதற்கான முயற்சியாக இருந்தாலும், அதன் உண்மையான நோக்கம், இந்த அரசாங்கத்தின், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்யும் பொறுப்பற்ற கொள்கை குறித்தும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை திணிப்பது குறித்தும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எழுச்சியுறும் தவிர்க்க முடியாத எதிர்ப்பை நசுக்குவதாகும்.

Loading