பிரான்சில் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று பிற்பகல், ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்) வியாழக்கிழமை அதன் உச்சிமாநாட்டில் ஒரு பொது தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவரும் கொள்கையை அறிவித்த பின்னர், பிரான்சின் பிரதமர் எட்வார்ட் பிலிப் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த திட்டம் மே 11 அன்று பள்ளிகளை மீண்டும் திறக்கவும், நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு அவசியமில்லாத உற்பத்தி மற்றும் பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்மொழிகிறது. சட்டசபை இந்த திட்டத்திற்கு சார்பாக 368 வாக்குகளையும், இந்த திட்டத்திற்கு எதிராக 100 வாக்குகளையும் அளித்துள்ளன, அதில் 103 வாக்குகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஐரோப்பா முழுவதிலும் குறிப்பாக பிரான்சிலும் அறிவிக்கப்பட்ட முன்கூட்டியே தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதானது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்த இருக்கிறது. கோவிட் -19 இன் முதல் மையமாக இருந்த வூஹானின் தனிமைப்படுத்தலை சீனா ஏப்ரல் 8 ம் தேதிதான் முடிவுக்கு கொண்டுவந்தது. அந்த நகரத்தை தனிமைப்படுத்த தொடங்கி இரண்டரை மாதங்களுக்குப் பின்னரே, மேலும் அங்கு புதிய தொற்றுகளுக்கான அறிகுறிகள் எதுவும் அடையாளம் காணப்படாதபோதுதான் முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால் இந்த தனிமைப்படுத்தலை பிரான்ஸ் ஆறு வாரங்கள் மட்டுமே கடைப்பிடித்திருக்கிறது. பிரான்சில் 2,638 உட்பட ஐரோப்பாவில் நேற்று 23,786 பேர் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் தொற்றுநோய் ஐரோப்பாவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.

French Prime Minister Edouard Philippe, second left, presents his plan to exit from the lockdown at the National Assembly in Paris, Tuesday, April 28, 2020. (David Niviere, Pool via AP)

COVID-19 இன் வைரசின் தீவிரத்தினைக் கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதானது, புதிய நோய் தொற்றுக்கான வெடிப்பினை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஜேர்மன் நச்சுயிரியல் நிபுணர் Christian Drosten பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய பத்திரிகைகளில் நேர்காணல்களை வழங்கியிருந்தார், இந்த நேர்காணல், ஏற்கனவே நெரிசலான மருத்துவமனைகளை மூழ்கடிக்கும் புதிய தொற்றுநோயின் அபாயத்தினை எச்சரித்தது. "சில நாட்களாக இங்கே இடம்பெற்று வரும் நிகழ்வுகளை இட்டு நான் வருந்துகிறேன்." இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான, அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்"தினால் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முன்னேற்றத்தினை நாங்கள் முற்றிலுமாக இழந்துவிடும் அபாயத்தின் விளிம்பில் இருக்கிறோம்" என்று வருத்தத்துடன் Drosten கூறினார்.

Drosten மேலும் கூறுகையில், "திரும்பபெருகும் விகிதம் புதிதாக அதிகரிக்க இருக்கிறது, அத்துடன் இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டாகவேண்டிய நிலையில் இருக்கிறோம் என நான் அஞ்சுகிறேன். … கிருமிநாசினிகளால் நிரப்பப்பட்ட டேங்கர்கள் தெருக்களை சுற்றிவரவிருக்கின்றன, ஏனெனில் இவை வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அவநம்பிக்கையான நடவடிக்கைகளாக மட்டுமே இருக்கும்”.

Toulouse இல் இருக்கும் CHU ஆய்வகத்தின் உயிரியலாளர் Chloé Dimeglio ஆல் தொற்றுநோயை மாதிரியாகக் கொண்டுள்ள பகுப்பாய்வு மூலம் இந்த அச்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தலானது பிரான்சில் 100,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று அவர் கூறுகிறார்: “தற்போதுவரை, 22,000 இறப்புகளை நாங்கள் கணக்கிடுகிறோம். முதலாவதாக, உண்மையான இறப்பு எண்ணிக்கை வைத்து எங்கள் மாதிரியைப் பயன்படுத்தி ஒப்பிட்டுப் பார்த்தோம், அவை ஒப்பிடத்தக்கவையே. ஆகவே, எமது மாதிரியை பயன்படுத்தி தனிமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை என்னவாக இருந்திருக்கும் என்பதைப் பார்த்தோம். எங்கள் மாதிரியின் படி, தனிமைப்படுத்தப்பட்டதால் மட்டும் மேலும் 100,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை நாங்கள் காப்பாற்றியுள்ளோம்”.

COVID-19 போன்ற மிகவும் தீவிரமான தொற்று நோய்களுக்கு முகங்கொடுக்கும் வேளை, உடனடி நடவடிக்கை அல்லது ஒரு மூலோபாயத்தை செயல்படுத்துவதில் நீண்ட கால தாமதம் செய்தல் தொற்றுநோயின் அதிகரிப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என அறியப்பட்டிருக்கும்போது, தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதானது மனித உயிர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஸ்வீடனின் சோல்னாவில் உள்ள ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் Andrea Ammon, மாட்ரிட்டை தளமாகக் கொண்ட மருத்துவ ஏடான El Pais இடம் கூறினார்: "ஜனவரி மாதத்தில், சீனர்கள் வூஹான் மற்றும் சுற்றியுள்ள நகரங்களை தனிமைப்படுத்தி வைத்தனர் என்பது எனக்குத் தெரியும். ஐரோப்பாவில் அது போன்று செய்வது சாத்தியமற்றது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஜரோப்பாவில் 20 பேருக்கு மட்டுமே தொற்றுக்கள் இருந்தன. அந்த நேரத்தில், நாங்கள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருந்தால், நோய் பரவுவதை நாங்கள் தடுத்திருக்க மாட்டோம், ஆனால் இப்படி ஒரு உச்சநிலையை அடைந்திருப்பது மிகவும் குறைவாக இருந்திருக்கும்.”

இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் பிலிப் காலில் போட்டு மிதித்து விட்டு, வேலைக்கு விரைவாக திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். "ஆபத்தானது என எதிர்பார்க்கப்பட்ட தனிமைப்படுத்தலின் முடிவினை" தொடங்கினார் என்றும், "கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இல்லை" என்றும் ஒப்புக் கொண்ட அதே வேளையில், "நமது பொருளாதாரத்தின் முழு உற்பத்தியையும் நீண்டகாலமாக நிறுத்துவது" பிரான்ஸ் இன் பொருளாதாரத்துக்கு "சரிவின் ஆபத்து" இனை முன்வைக்கிறது என அவர் கூறினார்.

உண்மையில், தனிமைப்படுத்தல் தொழிலாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியிருப்பதற்கு காரணம், அது ஐரோப்பிய ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட பிற்போக்குத்தனமான கொள்கை மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மற்றும் பொய்களால் ஆகும். ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய மத்திய வங்கியும் 2.290 பில்லியன் யூரோக்களை பிணை எடுப்பு திட்டங்களுக்கு வழங்கியுள்ளன, ஆனால் 2008 இன் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த தொகைகள் அனைத்தையும் வங்கிகளுக்கு கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள், அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் SME -சிறு வணிகங்களுக்கு- சிறிதாகவே கொடுக்கப்படுகிறது அல்லது ஒன்றுமே கொடுக்கப்படவில்லை, அத்துடன் தொழிலாளர்களோ பட்டினி ஆபத்துக்கு முகம்கொடுக்கும் நிலையில் உள்ளனர். மக்ரோன் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தொற்றுநோய்க்கு முன் உத்தரவிட மறுத்த முகமூடிகளின் பற்றாக்குறையை அது நீண்ட காலமாக மூடிமறைத்து வருவதுடன், மேலும் COVID-19 என்பது ஒரு காய்ச்சல் தொற்று மட்டுமே என்று கூறியது.

மார்ச் நடுப்பகுதியில் தொழிலாளர்களால் விரும்பப்பட்ட இந்த தனிமைப்படுத்தல்கள், குறிப்பாக இத்தாலி மற்றும் அமெரிக்காவில், கட்டுக்கடங்கா வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புகளின் சர்வதேச அலையை எதிர்கொண்டதால் மட்டுமே கடைப்பிடிக்கத் தள்ளப்பட்டனர். இப்போது அரசாங்கங்களும் அவர்களுக்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வளங்கப்பட்ட சமூக பொது நிதியில் மூழ்கிக்கிடக்கும் நிதிப் பிரபுத்துவமும், மனித உயிர்களை புறக்கணித்து ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் மீண்டும் பணியைத் தொடங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

தனிமைப்படுத்தலின் முடிவில், வைரஸ் இன்னும் இருக்கும் என்று பிலிப் வலியுறுத்தினார்: "நாங்கள் வைரஸுடன் தான் வாழ வேண்டியிருக்கும், […] இது மகிழ்ச்சி அளிக்கவில்லை, ஆனால் அது ஒரு உண்மை". "பாதுகாத்தல், சோதனைசெய்தல், தனிமைக்குள்ளாக்குதல்" மூன்றுவரி சொல்லின் அடிப்படையில் ஒரு மூலோபாயத்தை அவர் அறிவித்தார். இந்த மூன்றுவரி சொல்லடுக்கின் ஒவ்வொரு கூறுகளும் ஒரு அரசியல் மோசடியாகும்.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வழக்கமான தடை சைகைகளில் "சில சூழ்நிலைகளில் முகமூடி அணிவது" பாதுகாப்பிற்காக சேர்க்கப்படும் என்று பிலிப் அறிவித்தார். எவ்வாறாயினும், தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து அரசாங்கம் முகமூடி அணிவது பயனுள்ளதாக இல்லை என்றே கூறுவருகிறது, ஏனென்றால் பணக்காரர்களுக்கு அதன் வரி குறைப்பு பரிசுகளை வழங்க முகமூடிகளின் மூலோபாய பங்குகளை வெளியேற்றுவதற்கு அது விட்டுவிட்டது. இப்போது, அவர் துணி முகமூடிகளை உருவாக்க தனிநபர்களுக்கு முன்மொழிகிறார், இது வைரஸ் தொற்றுக்கு எதிரான உகந்த தடைக்கு உத்தரவாதம் அளிக்காத ஒன்று, ஏனெனில் வைரசினை எதிர்கொள்ள மிகவும் தரமான FFP2 முகமூடிகளை தொழிலாளர்களால் வாங்க முடியாது.

முதல் தொற்று தொடங்கியதை அறிவித்தபோதே, தொற்றுநோயின் தொடக்கத்திலே தனது அரசாங்கம் பெருமளவில் சோதித்தது என்று பிலிப் நேர்மையற்ற முறையில் கூறினார். உண்மையில், குறைந்த சோதனை செய்த நாடுகளில் பிரான்ஸ் உம் ஒன்றாகும்: ஒரு மில்லியன் மக்களுக்கு 7,103 சோதனைகள் மட்டுமே செய்துள்ளது, அமெரிக்காவை விட 2.5 மடங்கு குறைவாகவும் மற்றும் ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மனியை விட 4 மடங்கு குறைவாகவே செய்துள்ளது. மக்கள்தொகையை பெருமளவில் சோதிப்பதற்கான WHO இன் அவசர அழைப்புக்களை மக்ரோன் புறக்கணித்துள்ளார். ஆனால் ஒரு பரிசோதனையின் மூலோபாயமானது, பொதுச்சேவை ஆய்வகங்களை அணிதிரட்டி அவர்களுக்கு சோதனைகளைச் செய்ய உதவ அரசாங்கம் அங்கீகாரம் வழங்க வேண்டும், அத்துடன் பரிசோதித்து கண்டுபிடிக்கும் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான ஒரு மூலோபாயத்துடன் கைகோர்த்துக் கொள்ளாவிட்டால் அது பயனற்றது.

அரசாங்கத்தின் தற்போதையை அழிவுகரமான திட்டங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதிய தொற்றுக்கள் ஏற்படுமானால் மற்றும் நோயுற்றவர்களை தனிமைக்குள்ளாக்கவதை ஒழுங்கமைப்பது சாத்தியமில்லை என்பதை குறிக்கிறது. பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்த பிரெஞ்சு மக்கள் அச்சப்படுகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்ட அதே வேளையில், அங்கு தடை சைகைகளைச் செயல்படுத்த முடியும் என்று பிலிப் கூறினார். ஆனால் அரசாங்கம் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவந்து பணிக்குத் திரும்ப ஏற்பாடு செய்தால், போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலால் பயணிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 2 மீட்டர் தூரத்தைத் தக்கவைக்கும் எந்தவொரு முயற்சியும் பயனளிக்கப்போவதில்லை.

COVID-19 க்காக சோதிக்கப்பட்டு தொற்று உறுதிப்படுத்தப்ட்டவர்கள், பிலிப்பின் கூற்றுப்படி, தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கு இடையே தேர்வு செய்ய வேண்டும், ஒன்றில் "வெளிப்படையான காரணங்களால், முழு வீட்டையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும்", அல்லது எடுத்துக்காட்டாக அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட விடுதி ஒன்றில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய இடத்தில் இருக்கவேண்டும்.

குழந்தைகள் வைரஸ் காவிகளாக இருப்பதை ஒப்புக் கொண்ட அரசாங்கம், மே 11 அன்று பள்ளிகளை மீண்டும் திறக்கவிருக்கிறது. பிலிப் கருத்துப்படி, மே 11 முதல் நாடு முழுவதும் தன்னார்வ அடிப்படையில் "மீண்டும் திறக்கப்படும்". வகுப்புகள் அதிகபட்சமாக 15 மாணவர்களாக இருக்கும், மேலும் கிருமிநாசினி ஜெல் வழங்குவது உட்பட பல சுகாதார நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுமாம். குழந்தைகள் காப்பகம் 10 குழந்தைகள் வரையிலான குழுக்களுடன் மீண்டும் திறக்கப்படும். ”உணவகங்கள் மற்றும் கபேக்கள் தவிர அனைத்து கடைகளும் 11 அன்று மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்”.

தனது அரசியல் திட்டங்கள் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை பிலிப் மீண்டும் வலியுறுத்தினார்.

பணக்காரர்களுக்கு பரிசுகள் வழுங்கும் மற்றும் அடக்குமுறை, பொய்களை கட்டவிழ்த்துவிடும் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அரசியல் மீது தொழிலாளர்கள் எந்தவொரு நம்பிக்கையையும் கொண்டிருக்க முடியாது. இரண்டாவது தொற்றுநோய் அலையை தவிர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்க வேண்டுமானால், நாம் தனிமைப்படுத்தலை நீடிக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு தனிமைப்படுத்தலை தாங்குவதற்கு தேவையான நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக வங்கிகளுக்கு நிதியைக் கொட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் திருடப்பட்ட பெரும் தொகையை பறிமுதல் செய்ய தொழிலாளர்கள் அணிதிரண்டாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் முதல், நோய் பரவும் சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுதை தவிர்ப்பதற்கு, தொழிலாளர்களின் அமைப்புக்கு அவசியமாக இருப்பது என்னவெனில், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, பாரிய அளவில் வேலை வெளிநடப்பு செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவதே.

Loading