ஊதியங்கள் மற்றும் இலவச கல்வியை வெல்ல சர்வதேச சோசலிச திட்டத்திற்காகப் போராடுங்கள்!

நாடு முழுவதும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெப்ரவரி 26 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஊதிய உயர்வு, சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் பொதுக் கல்விக்காக ஆகக் கூடிய ஒதுக்கீட்டுக்காகப் போராடுகிறார்கள்.

முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், சர்வதேச ரீதியில் எழுச்சி பெற்றும் வர்க்கப் போராட்டத்தின் புதிய கட்டத்தில், ஆசிரியர்களின் போராட்டங்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

மேற்கூறிய கோரிக்கைகளுக்காக 200,000 இற்கும் மேற்பட்ட இலங்கை பாடசாலை ஆசிரியர்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நான்கு முறை, ஒரு நாள் மற்றும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு பெப்ரவரி 14 அன்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொழும்பில் போராட்டம் நடத்தினர்.

ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் தொழிலாளர்களை இனரீதியில் பிளவுபடுத்துவதற்கு மேற்கொள்ளும் ஆத்திரமூட்டல்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அந்த போராட்டங்களை மட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கும் மத்தியில், தீவு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், இன வேறுபாடுகளைக் கடந்து போராட்டத்திற்கு வந்துள்ளனர்.

இலங்கையில் ஆசிரியர் சேவையின் ஆரம்ப சம்பளம் சுமார் ரூ. 28,000 ரூபாயாக இருக்கும் அதே வேளை, எல்லா கொடுப்பனவுகளும் சேர்த்து ஆசிரியர்களுக்கு 35,000 ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது. 20 வருட சேவையுடன் கூடிய ஒரு ஆசிரியருக்கு கூட மொத்த சம்பளம் 60,000 ரூபாய் மட்டுமே. கடன் தவணைகளை வெட்டிக்கொண்ட பிறகு, பெரும்பாலான ஆசிரியர்களின் கையில் கிடைப்பது அற்பத் தொகையே. உயரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஊதியங்களின் உண்மையான மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது..

மாணவர்களால் நிறைந்து வழியும் வகுப்பறைகளில் ஓய்வற்ற உழைப்புடன், நூற்றுக்கணக்கான விடை தாள்களை திருத்துவதில் களைத்துப் போகும் ஆசிரியர்கள் மீது, செயல்திறன் என்று அழைக்கப்படுவதன் பெயரிலான பல்வேறு எழுத்து வேலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு நிதி திரட்டுவதற்கான பல்வேறு திட்டங்களினதும் சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன. வேலைக்கு வரும் வழியில் மணித்தியாலங்களை பயணத்தில் செலவழித்துவிட்டு ஆசிரியர்கள் சோர்ந்து போகின்றார்கள்.

ஒழுக்கமான வாழ்க்கைக்கு போதுமான ஊதியம் மற்றும் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட இலவச கல்விக்கான உரிமைக்காக போராடுவதில் ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர்.

ஆனால் அதற்கான உறுதிப்பாடு மட்டும் போதாது. இந்த போராட்டம் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களை நாம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்வதும், அவற்றைக் கடக்க ஒரு மூலோபாயத்தை உருவாக்குவதும், அதைச் செயல்படுத்தத் தேவையான புதிய நிறுவன வடிவங்களை உருவாக்குவதும் கட்டாயமாகும்.

தொழிற்சங்கங்களின் பிற்போக்கு வகிபாகம் இதற்கு அடிப்படை தடையாக உள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் (இ.ஆ.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (இ.ஆ.சே.ச.) மற்றும் போலி-இடது முன்நிலை சோசலிஸ்ட் கட்சி (மு.சோ.க.) சார்ந்த ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கம் (ஒ.ஆ.சே.ச.) ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இவற்றின் இலக்கு, அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்குள் ஆசிரியர்களின் போர்க்குணத்தை நீர்த்துப்போகச் செய்வதே ஆகும்.

ஊதிய முரண்பாடுகளை அகற்றுமாறு கோரி 23 ஆண்டுகளாக ஆசிரியர் சங்கம் முன்னெடுக்கும் “போராட்டத்தின்” பயனற்ற தன்மை, அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வெல்லும் தொழிற்சங்க முன்னோக்கின் வரலாற்று திவால்நிலைக்கு ஒரு சான்றாகும்.

ஆசிரியர்களின் போராட்டமானது ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைவதைத் தடுக்க இந்த தொழிற்சங்கங்கள் நனவுடன் செயல்படுகின்றன.

ஆசிரியர்-அதிபர் சேவையை "மூடிய சேவையாக" மாற்றுமாறு ஆசிரியர் சங்கங்கள் முன்வைக்கும் யோசனைகளிலும் இது அடங்கியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், "கோடாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையின்படி ஆசிரியர்-அதிபர் சேவையை ஒரு மூடிய சேவையாக ஆக்க வேண்டும்" என்று அறிவித்தார்.

“ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிப்பதானது ஏனைய துறைகளிலும் சிக்கல்களை (போராட்டங்களை) உருவாக்கக் கூடும், ஆதலால், ஆசிரியர் சேவையை "மூடிய சேவையாக" ஆக்குவதோடு, அது செய்யப்படும் வரை "இடைக்கால சம்பளம்" வழங்கப்படும் என்ற, கடந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை துணைக்குழு அளித்த மோசடி வாக்குறுதியின் அடிப்படையில், தொழிற்சங்கத் தலைவர்கள் அக்டோபர் 7-12 வரை திட்டமிடப்பட்ட ஐந்து நாள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடிக்கும் போது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்கொண்டு செல்லப்படும் "மூடிய சேவைகள்" மற்றும் "ஊதிய முரண்பாடுகள்" ஆகியவற்றின் வலையில் ஆசிரியர்கள் சிக்கக்கொள்ளக் கூடாது.

உயரும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொண்டுள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும், ஒழுக்கமான வாழ்க்கையை வாழ ஒரு நல்ல ஊதிய உயர்வைக் கோர வேண்டும் என்று நாங்கள் பிரேரிக்கின்றோம். தொழிலாள வர்க்கமே தனது சொந்த ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும்.

முன்நிலை சோசலிசக் கட்சியின் தலைமையிலான ஓன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கமானது, ஆசிரியர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் நோக்குடன், இந்த "மூடிய சேவைகள்" மற்றும் "இடைக்கால ஊதியம்" என்ற பிரேரணைகள் சம்பந்தமாக தீவிரவாத பாசாங்கை காட்டி வருகின்றது. “23 ஆண்டுகளின் சாபத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம், வெற்றி போராட்டத்துடன் அணிதிரள்வோம்” என்ற தலைப்பில் அது வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில், “மூடிய-சேவை என்ற பொறி மற்றும் இடைக்கால சம்பள திட்டங்கள் என்று அழைக்கப்படும் பிரேரணைக்காக பின்வாங்காத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்,” எனக் கூறுகின்றது:

"போராட்டத்தை" முன்னெடுத்தால், "வெற்றி" கிடைக்கும் என்று ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் கூறும் கதையின் குறிக்கோள், முதலாளித்துவத்தின் நெருக்கடியை மூடிமறைத்து, சோசலிசத்திற்கான போராட்டத்தின் தேவையை நசுக்குவதே ஆகும். ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் அதன் துண்டுப் பிரசுரத்தில், "போராட்டத்தை" சூழ "ஏனைய சக்திகளையும் அணிதிரட்டிக்கொள்வது" மற்றும் "அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடுவது" என்பதற்கு, சைட்டம் தனியார் பட்டப்படிப்பு நிறுவனத்திற்கு எதிரான "போராட்டத்தை" “வெற்றிகரமானதாக” எடுத்துக்காட்டுகின்றது.

முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் அது தலைமை தாங்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), பத்து ஆண்டுகளாக "சைட்டத்தை இரத்துச் செய்" என்ற கூச்சல் நிறைந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், அதே காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிக்கன நடவடிக்கைகளும் தனியார்மயமாக்கலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்திற்கு முற்றிலும் விரோதமானவை ஆகும். அவர்கள் "சைடம் விரோத மாணவர்-மக்கள் எதிர்ப்பு போராட்டம்" என்பதற்கு, அப்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய ராஜபக்ஷ அரசாங்க அமைச்சர்கள், பல்வேறு மத்தியதர வர்க்க அமைப்புகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (யுஎஸ்பி) போன்ற பல போலி இடது கட்சிகளையும் அணிதிரட்டிக் கொண்டனர். ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் “சூழவுள்ள சக்திகளில்” இவ்வாறான ஒரு தொகை முதலாளித்துவ சார்பு அமைப்புகளும் அடங்கும்.

நாட்டுக்கு நாடு இடம்பெறும் ஆசிரியர்களின் ஊதிய வெட்டு, அவர்களின் வேலைப் பளு அதிகரிப்பு மற்றும் பொதுக் கல்வியில் ஏற்படுத்தப்பட்டள்ள பெரும் பேரழிவு மூலம், மனித தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக முதலாளித்துவ முறைமையின் முழு இலாயக்கற்ற நிலைமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கத்தின் கடன் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடன் தவணை மட்டும் 6 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான பிரமாண்டமான தொகை ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக உள்ள பாதீட்டு பற்றாக்குறையை பாதியாக குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு வாக்குறுதியளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், இலவச கல்வி, சுகாதாரம், நலன்புரி சேவைகள், தொழில்கள் மற்றும் ஊதியங்களை மேலும் வெட்டித்தள்ளும் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

உலக முதலாளித்துவ முறைமையின் அமைப்பு ரீதியான நெருக்கடியால் உருவாகும் இத்தகைய தாக்குதல்களை தோற்கடிக்க வேண்டுமெனில், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக மட்டுமன்றி, உலக முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசுவதற்கான ஒரு அரசியல் போராட்டம் அவசியமானதும் மற்றும் கட்டாயமானதுமாகும்.

முதலாளித்துவ முறைமையுடன் இயல்பாகவே பிணைக்கப்பட்டுள்ள கருவியாக இருக்கும் தொழிற்சங்கங்களிலிருந்து முற்றிலுமாக விலகி, ஆசிரியர்கள் தங்களது சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை பாடசாலைகளில் உருவாக்கிக்கொள்வதோடு அவற்றுக்கு பெற்றோர் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு பலப்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைக் குழுக்கள், சூழவுள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியத்தை ஸ்தாபித்து உழைக்கும் மக்களின் பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் மேற்கொள்ளும் முக்கியமான முன்நடவடிக்கை ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கின்ற சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்கள் என்ற நிலைப்பாட்டை குழப்புவதற்காக ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கமானது தனது துண்டுப்பிரசுரத்தில் ஒரு சிறப்புக் குழுவையும் முன்மொழிகிறது. "செயலூக்கமான ஆசிரியர்களை" உள்ளடக்கிய இந்த குழுக்கள், பாடசாலைகளிலும் வலய மட்டங்களிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அது கூறுகின்றது.

இந்த குழுக்களுக்கும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இது முதலாளித்துவ முறைமைக்கு எதிராக ஆசிரியர்களையும் ஏனைய தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதற்கு எதிராக, அவர்களை முதலாளித்துவ முறைமைக்குள்ளேயே அடக்க வைப்பதற்கான மற்றொரு கொடிய பொறி ஆகும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக, தங்களது போராட்டத்தை அபிவிருத்தி செய்துகொண்டால் மட்டுமே, ஆசிரியர்கள் உட்பட முழு தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

முதலாளித்துவ தாக்குதல்களையும் அதற்கு எதிராகத் தோன்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களையும் அடக்குவதற்கான எதிர் புரட்சிகர திட்டங்களை தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் அவசியமாகும். தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொள்வதும், உலகப் பொருளாதாரத்தை இலாபத்துக்காக அன்றி, சமூக தேவைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பதும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் புறநிலை அவசியமாகும்.

இத்தகைய சர்வதேச சோசலிச உற்பத்தி பொருளாதார முறைமை மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் அபரிமிதமான செல்வத்தை, வெகுஜனங்களின் பொருளாதார மற்றும் கலாச்சார நிலைமைகளை உயர்த்தவும், அனைவருக்கும் இலவசமான மற்றும் தரமான கல்வியை உறுதிப்படுத்தவும் பயன்படுத்துவதோடு வறுமை, சுரண்டல் மற்றும் போரிலிருந்தும் வெகுஜனங்களை காப்பாற்ற முடியும்.

அந்த அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் சுயாதீனமான ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம்; இந்திய துணைக் கண்ட சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும் போராடுகின்றன. இந்த வரலாற்றுப் போராட்டத்தில் விழிப்புணர்வுடன் பங்கேற்க ஆசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading