அமெரிக்க வேலையின்மை பெரும் மந்தநிலை மட்டங்களை எட்டுகையில், மில்லியன் கணக்கானவர்களால் இன்னமும் உதவி எதையும் பெற முடியவில்லை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெரும் மந்தநிலைக்குப் பின்னர் அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், கடந்த வாரம் 3.8 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். மார்ச் மாதத்தில் கொரொனா வைரஸ் நோய்தொற்றை எதிர்கொள்ளும் விதமாக தேசியளவில் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதிலிருந்து, 30 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க தொழிலாளர்கள் வேலையின்மை நலன்கள் வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த பொருளாதார மந்தநிலையின் முடிவில் நவம்பர் 2009 முதல் உருவாக்கப்பட்ட 22.4 மில்லியன் புதிய வேலைகளை காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.

கொடிய கோவிட்-19 வைரஸ் நோய்தொற்றால் நிகழும் இறப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 2,000 க்கும் அதிகமாக இருப்பதால், இந்த நோய்தொற்றால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து மேல்நோக்கிச் செல்கிறது. இன்றுவரை அமெரிக்காவில் இந்த நோய்தொற்றால் சுமார் 62,000 பேர் இறந்துள்ளனர், இது உலகின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் 27 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெருக்கடி அமெரிக்க வரலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களை கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது, அதாவது மொத்த தொழிலாளர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கினர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். மில்லியன்களுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர் என்றாலும் அனைவரும் வேலையின்மை நலன்களை கோரவில்லை, ஏனென்றால் அவர்களது குடியேற்ற நிலை காரணமாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லது அதற்கு பொதுவாக தகுதியற்றவர்களாக அவர்கள் இருப்பதாலோ விண்ணப்பிக்கவில்லை. மேலும், பொருளாதார கொள்கை நிறுவனம் (Economic Policy Institute - EPI), 12 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்மை நலன்கள் கோரி விண்ணப்பிக்கவில்லை என்று மதிப்பிட்டுள்ளது, ஏனென்றால் தேசிய வேலையின்மை நலன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அமைப்புமுறைகள் மிதமிஞ்சிய கோரிக்கைகளின் வருகையால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவிட்டன.

ஏப்ரல் 30, 2020, வியாழக்கிழமை, சிகாகோவில் இல்லினாய்ஸ் வேலைவாய்ப்பு பாதுகாப்புத் துறையின் முன்பாக ஒரு நபர் தகவல்களை சரிபார்க்கிறார் (AP Photo/Nam Y.Huh)

வாஷிங்டனில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு தொழிலாளி தனது வேலை நேரம் குறைக்கப்பட்டதால் உதவி நலன்களுக்கு விண்ணப்பிக்க பல வாரங்களாக அவர் மேற்கொண்ட பயனற்ற முயற்சிகளுக்குப் பின்னர் உதவி வழங்க மறுக்கப்பட்டது. “நான் அழைத்தபோது, அவர்கள் மிக அதிக எண்ணிக்கையிலான அழைப்புக்களை எதிர்கொண்டிருப்பதாக ஒரு குரல் பதிவு கூறியதால், பின்னர் அழைப்பதற்கு நான் காத்திருக்க நேரிட்டது,” என்று WSWS க்கு அவர் தெரிவித்தார். மேலும் “அதே குரல் பதிவை தொடர்ந்து மூன்று வாரங்களாக கேட்டேன், இதற்கிடையில் தொழில்நுட்ப ஆதரவு எண்ணையும் மற்றும் உரிமைகோரல் எண்ணெயும் வாரத்திற்கு குறைந்தது நான்கு முறை தொடர்பு கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், “வேலையின்மை சலுகைகள் கிடைக்காமல், மே மாதம் கடந்த பின்னர் இதை நாங்கள் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

அவரது நண்பர், தான் போதுமான மணித்தியாலங்கள் வேலை செய்யாததால், தன்னால் நலனுதவிகளைப் பெற முடியவில்லை என்று கூறினார். மேலும் அவர், “மீண்டும் வேலைக்குத் திரும்ப எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது, ஆனால், எனது மற்றும் என்னை சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் நான் வேலைக்குத் திரும்ப பயந்தேன்” என்றார்.

மிச்சிகனில் மார்ச் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஃபோர்ட் தொழிலாளி ஒருவர், “இதுவரை ஒரேயொரு காசோலையை நான் பெற்றுள்ளேன். இந்த மாதம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, வாடகை குறித்து நான் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

உண்மையான வேலையின்மை விகிதம் என்பது, பெரும் மந்தநிலை உச்சத்தை எட்டியபோது பதிவான 25.6 சதவிகிதத்தை கிட்டத்தட்ட விரைந்து எட்டுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

முதலாளித்துவ அமைப்புமுறையின் பகுத்தறிவின்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, நிலவும் பெரும் சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்கா முழுவதிலுமுள்ள சுகாதார அமைப்புக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்களை விடுப்பில் செல்ல வைத்துள்ளது.

அமெரிக்க அரசாங்க மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 4.8 சதவிகித வருடாந்திர வீதமாக சுருங்கியது. மேலும் ஒரு மதிப்பீட்டின்படி, முன்நிகழ்ந்திராத வீழ்ச்சியாக, இரண்டாவது காலாண்டில் இது 40 சதவிகித வருடாந்திர வீதமாக சுருங்கக்கூடும்.

நலன்கள் கோரி விண்ணப்பித்தவர்களில், 18 மில்லியன் பேருக்கான கோரிக்கைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அதாவது மில்லியன் கணக்கானவர்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர். நுகர்வோர் செலவினம் மார்ச் மாதம் 7.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது, இது இதுவரை ஒருபோதும் பதிவாகாத மிக மோசமான மாதாந்திர விகிதமாக இருந்தது. ஏப்ரல் மாத வீழ்ச்சி இன்னும் படுமோசமாக இருக்கும்.

கலிஃபோர்னியாவில் மட்டும், 3.78 மில்லியன் அல்லது 19.6 சதவிகித தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்கான கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த வாரம் முதல் முறையாக, தற்காலிக வேலை தொழிலாளர்கள், சுயாதீன ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் என்று அழைக்கப்படுபவர்களையும் வேலையின்மை நலன்களுக்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்க அரசு அனுமதித்துள்ளது.

இதற்கிடையில், பென்சில்வேனியாவில், ஏப்ரல் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 131,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்தனர். அது ஆறு வாரங்களில் தேசியளவிலான மொத்த எண்ணிக்கையை 1.6 மில்லியனுக்கு அல்லது நாட்டின் தொழிலாளர் சக்தியில் 24.7 சதவிகிதத்திற்கு மேலாக அதிகரிக்கச் செய்தது.

மிச்சிகன், அது கொண்டுள்ள தொழிலாளர்களின் அளவின் காரணமாக விகிதாசாரத்தில் பணிநீக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. வேலையின்மை நலன்கள் வழங்கக் கோரி 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளமை மாநிலத்தின் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியைக் குறிக்கும்.

நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக, 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுகாதார நெருக்கடியாக, நோய்தொற்றுக்கு மத்தியில் முதலாளிகளால் செலுத்தப்படும் மருத்துவ காப்பீட்டை 12.7 மில்லியன் தொழிலாளர்கள் இழந்துவிட்டதாக EPI மதிப்பிடுகிறது. எண்ணற்ற குடும்பங்கள், சிகிச்சையை தொடரவோ அல்லது முடங்கிய கடன்களை செலுத்தவோ இயலாத சூழ்நிலையை எதிர்கொள்கின்றன.

பெருநிறுவனங்கள் இந்த நோய்தொற்று நெருக்கடியை மேலதிக ஆட்குறைப்புக்கு பயன்படுத்துகிறது. 737 MAX குறித்த நெருக்கடியால் சூழ்ந்துள்ள, விமான உற்பத்தி நிறுவனமான போயிங் (Boeing) அதன் பணியாளர்களில் 10 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த வாரம் வாஷிங்டனில் அதன் சியாட்டில் நகரிலுள்ள (Seattle) தொழிற்சாலைகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்கியது. Ride hailing service Lyft நிறுவனம் 1,000 ஊழியர்களை, அதாவது அதன் தொழிலாளர்களில் 17 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக கூறுகிறது.

கொடிய நோய் தொடர்ந்து பரவி வரும் நிலையிலும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும்படி அச்சுறுத்தும் முயற்சியில், உடல்நலம் குறித்த கவலையினால் வேலைக்குத் திரும்ப மறுக்கும் தொழிலாளர்களுக்கு வேலையின்மை சலுகைகளை வழங்க மறுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தவர்கள் வேலைக்குத் திரும்ப மறுப்பார்களானால் அவர்கள், “வேலையின்மைக் காப்பீட்டு சலுகைகளைப் பெற உரிமைகோருவதற்கு தகுதியற்றவர்களாக்கப்படுவார்கள்,” என்று டென்னிசி மாநிலம் கூறியது. அயோவாவில், வாட்டர்லூவில் உள்ள ஒரு Tyson பன்றி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் 1,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ள நிலையில், மாநில அதிகாரிகள் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டனர்: “முதலாளிகளின் கவனத்திற்கு: நீங்கள் வேலைக்கான வாய்ப்பை வழங்கி, வேலைக்குத் திரும்ப உங்கள் ஊழியர்கள் மறுக்கும் பட்சத்தில், அவர்கள் குறித்து அயோவா தொழிலாளர் மேம்பாட்டு அமைப்பிற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.”

குறைந்தது இரண்டு தொழிலாளர்கள் இறந்துபோன, தெற்கு டக்கோட்டாவின் Sioux Falls நகரத்திலுள்ள Smithfield Foods pork தொழிற்சாலை உட்பட பன்றி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளை திறந்து வைப்பதற்கு நிர்ப்பந்திக்கும் நிர்வாக உத்தரவை ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாயன்று பிறப்பித்தது. தொழிலாளர்கள் நோய்வாய்படுவதற்கும், பலியாவதற்கும் எந்தவித சட்டபூர்வ பொறுப்பேற்காமல், மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கே நிர்வாகம் முயற்சிக்கிறது.

அமெரிக்க தொழில் துறையும் கூட, “அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர்த்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பக் கோரப்படுவது ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொருத்தமான வேலைவாய்ப்பாக இருக்கலாம்” என்று அறிவித்தது.

தொன்மையான அரசு வேலையின்மை தாக்கல் முறைகள் மிதமிஞ்சிய கோரிக்கைகளால் திணறிப்போயுள்ளன.

புளோரிடாவில் இந்த மாதத்தில் புதிய கோரிக்கைகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இது ஏப்ரல் 2019 காட்டிலும் 7,330 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 20 வாரத்தில், புளோரிடாவில் வேலையின்மை நலன்களுக்காக 432,465 கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, கடந்த ஆண்டு இதே வாரத்தில் 5,900 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஊரடங்கு ஆரம்பித்ததன் பின்னர் வேலையின்மை நலன்கள் கோரி ஒட்டுமொத்தமாக 1,592,236 புதிய கோரிக்கைகள் வந்துள்ளன, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 35,215 ஆக இருந்தது, அதாவது 4,521 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அரசு வலைத் தளத்தால் மிகப்பெரிய அதிகரிப்பை கையாள முடியவில்லை, உதவி கோருபவர்கள் தங்களது கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய முயற்சிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், சிலர் முயற்சியை கைவிடுகின்றனர். கடந்த வாரம், Associated Press பத்திரிகையின் அறிக்கையின்படி, மார்ச் மத்தியில் இருந்து ஏப்ரல் முற்பகுதி வரை புளோரிடா உரிமைகோருபவர்களில் 8 பேரில் 7 பேர் தங்கள் வேலையின்மை சலுகைகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யக் காத்திருந்தனர். கலிஃபோர்னியாவில் மூன்றில் இரண்டு பங்கு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன, அதேபோல நியூயோர்க்கில் 30 சதவிகிதம் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட மிகச்சிறிய தொகையான 1,200 டாலர் கூட்டாட்சி தூண்டுதலிலான கொடுப்பனவை இலட்சக்கணக்கானவர்கள் பெறவில்லை. ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதிக்கும் மேலான தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மேலும், நம்பிக்கையிழந்த குடும்பங்களுக்கு தேவைப்படும் வகையில் எவ்வளவு பணம் தக்க வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சிறிய விளக்கம் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது. சபை வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் (House Ways and Means Committee) கூற்றுப்படி, ஏப்ரல் 20 அன்று அரசாங்கம் 5 மில்லியன் குடும்பங்களுக்கு காகித காசோலைகளை வழங்கத் தொடங்கியது, ஒரு வாரத்தில் என்பது 20 வாரங்களாக நீடித்தது. ஒருசில மாநிலங்கள் கடனளிப்பவர்கள் பணம் வழங்குவதை தடுக்கும் என்று கூறியிருந்தாலும், ஊக்க மசோதா எந்த விதத்திலும் அதை தடுக்கவில்லை.

இதற்கிடையில், பெருவணிகங்கள் பணத்தை விழுங்குவதால், பல குடும்பங்களுக்குச் சொந்தமான சிறு வணிகங்கள், காசோலை பாதுகாப்பு திட்டத்தின் (Paycheck Protection Program) கீழ் கடன்களைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளன. உதவிகளை பெற்ற பலரும் இவ்வுதவியானது பல நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்தொற்றுக்கு எதிராக பகுத்தறிவு மிக்க மற்றும் மனிதாபிமான முறையில் பதிலளிக்க முடியாத தனது இயலாமையை முதலாளித்துவம் நிரூபித்துள்ளது. சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளவும், மற்றும் வேலையற்றோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான பில்லியன்களை வழங்குவதற்கு பதிலாக, வோல் ஸ்ட்ரீட்டுக்கு கிட்டத்தட்ட வரம்பற்ற வளங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது ஓய்வூதியங்களைக் குறைப்பதற்கும் மற்றும் ஊதியத்தை மேலும் குறைப்பதற்கும் கோரிக்கைகள் விடுப்பது உட்பட, சமூக உறவுகளை மேலும் மறுசீரமைப்பதன் மூலம் செல்வந்தர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை கட்டாயப்படுத்த பெருநிறுவனங்கள் தொற்றுநோயை காரணமாக பிடித்துக் கொண்டுள்ளன.

இறப்பு எண்ணிக்கை அதிகரித்தும் மற்றும் வேலையின்மை நிலைகள் மந்தநிலைகளை எட்டியும் உள்ள நிலையில், பங்குச் சந்தை நிலவரம் முன்நிகழ்ந்திராத வகையில் இந்த வாரம் தொடர்ந்து உயர்வு கண்டது என்பதால், டிரில்லியன் கணக்கான டாலர்களை தொடர்ந்து செலுத்தவிருப்பதாக மத்திய வங்கி உறுதியளித்தது, மேலும் இரு கட்சியினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்வதற்கு கட்டாயப்படுத்தவும் உறுதியளிக்கப்பட்டது.

ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற மற்றும் படுகொலை கொள்கைகளுக்கான ஒரே பதிலிறுப்பு, முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள வேண்டும் என்பதே. இதற்கு, தொழிலாளர்கள் பெரு வணிகங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் பெருவணிக சார்பு தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடனான உறவுகளை முறித்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைப்பதன் அடிப்படையில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Loading